தமிழ்மணத்தின் புதிய சேவைகள் : பதிவர் புத்தகம், மறுமொழிகளை புதுப்பிக்கும் வசதி

August 2, 2008 – 3:12 pm by தமிழ் சசி / Tamil SASI

மறுமொழிகளை புதுப்பிக்கும் வசதி

தமிழ்மணம் மறுமொழிகள் திரட்டியான ‘ம’ திரட்டி மூலமாக பல்வேறு வழிகளில் மறுமொழிகளை திரட்டுகிறோம்.

ப்ளாகர் தளங்களில் இயங்கும் பதிவுகளில் தமிழ்மணம் கருவிப்பட்டை மூலமாக மறுமொழிகள் நிலவரம் திரட்டப்படுகிறது. இது தவிர கருவிப்பட்டை இணைக்கப்பட்ட பதிவுகளின் செய்தியோடைகள் மூலமாக அனைத்து மறுமொழிகளையும் தமிழ்மணம் தானியங்கியாக திரட்டுகிறது. இதன் மூலம் அனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக்கும் வசதி உள்ளிட்ட பல வசதிகளை ‘ம’ திரட்டி வழங்குகிறது

தமிழ்மணம் பதிவுப்பட்டையை ப்ளாகர் பதிவுகளில் இணைக்கும் செய்முறை இந்தப் பக்கத்தில் உள்ளது

வேர்ட்பிரஸ்.காம் தளங்களில் இயங்கும் பதிவுகளில் கருவிப்பட்டையை இணைக்க முடியாத நிலை உள்ளதால் இந்தப் பதிவுகளின் மறுமொழி ஓடை மூலமாக மறுமொழி நிலவரத்தை தமிழ்மணம் தானியங்கியாக திரட்டுகிறது. வேர்ட்பிரஸ்.காம் பதிவர்கள் மறுமொழிகள் திரட்டுவதற்கு எந்த தனி வசதியும் செய்ய தேவையில்லை. தமிழ்மணத்தில் இணைந்தாலே போதுமானது.

இவ்வாறான வசதிகள் இருந்தும் பல பதிவர்கள் தங்கள் பதிவுகளின் மறுமொழிகள் நிலவரம் தமிழ்மணத்தில் தெரியவில்லை என்று தமிழ்மணத்திற்கு தெரிவித்து வருகிறார்கள். தமிழ்மணத்திற்கு வரும் பெரும்பான்மையான தொழில்நுட்ப சார்ந்த கேள்வியாக இந்தப் பிரச்சனையே இருந்து வருகிறது.

தமிழ்மணத்தின் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை ‘ம’ திரட்டியின் தொழில்நுட்பம் சரியாகவே செயல்படுகிறது.
blogspotல் இயங்கும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் கருவிப்பட்டையை சரியாக இணைத்து விட்டால் மறுமொழிகள் ”தானியங்கியாக” திரட்டப்பட்டு விடும். வேர்ட்பிரஸ்.காம் பதிவர்களின் மறுமொழிகள் நிலவரமும் தானியங்கியாக திரட்டப்படுகிறது.

தமிழ்மணத்தின் தொழில்நுட்பம் சரியாக செயல்பட்டாலும், தொடர்ந்து பல பதிவர்கள் இந்தப் பிரச்சனை குறித்து எங்களுக்கு அறியத்தருவதால் ஒரு மாற்று வழியினை ஏற்படுத்தி இருக்கிறோம்.

இந்த மாற்று வழி மூலமாக இடுகைகளை புதுப்பிப்பது போல மறுமொழிகளின் நிலவரத்தை தமிழ்மணத்திற்கு ping செய்யலாம். இதன் மூலம் உங்கள் பதிவின் மறுமொழி நிலவரத்தை தமிழ்மணம் திரட்டிக் கொள்ளும். இந்த வசதி ப்ளாகர், வேர்ட்பிரஸ்.காம் என்றில்லாமல் மறுமொழி ஓடை கொண்ட அனைத்து பதிவுகளுக்கும் செயல்படும்.

தற்போதைய நிலையில் இந்த வசதி தமிழ்மணத்தின் சோதனையில் உள்ளது. திரட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகளை எங்களுக்கு தெரிவியுங்கள்

இந்த வசதி மாற்று ஏற்பாடு மட்டுமே. உங்கள் மறுமொழிகளை தானியங்கியாக திரட்ட தமிழ்மணம் பதிவுப்பட்டையை பயன்படுத்துங்கள்

மறுமொழிகளை எப்படி புதுப்பிப்பது ?

1. தமிழ்மணம் “ம” திரட்டிக்கு செல்லுங்கள்
http://www.tamilmanam.net/m/thiratti.html

2. அங்கு ”மறுமொழிகளை புதுப்பிக்க” என்று காணப்படும் பெட்டியில் உங்கள் பதிவின் முகவரியை அளிக்கவும்
உதாரணமாக http://parthy76.blogspot.com என்ற பதிவின் மறுமொழி நிலவரத்தை தமிழ்மணத்திற்கு அளிக்க, பெட்டியில் கீழ்க்கண்ட படத்தில் உள்ளது போல அந்தப் பதிவின் முகவரியை http://parthy76.blogspot.com அளிக்கவும்

ping feedback

3. அளி என்ற பொத்தானை அழுத்தினால் தமிழ்மணம் உங்கள் பதிவின் மறுமொழி நிலவரத்தை திரட்டிக் கொள்ளும்

பதிவர் புத்தகங்கள்

பதிவர் புத்தகங்கள் என்ற புதிய பக்கத்தை தமிழ்மணத்தில் ஏற்படுத்தி உள்ளோம். வலைப்பதிவர்கள் எழுதும் புத்தகங்கள் குறித்த அறிமுகத்தை பிற பதிவர்களிடமும், வாசகர்களிடமும் கொண்டு செல்ல இந்த பக்கம் உதவும் என நம்புகிறோம்.

blogger_books

பதிவர் புத்தகங்கள் பகுதியில் தங்கள் புத்தகத்தை இணைக்க விரும்பும் பதிவர்கள் புத்தகம் குறித்த விபரங்களுடன் admin@thamizmanam.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

நன்றி,
தமிழ் சசி
தமிழ்மணம்

தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் பதிவுத்தலைப்புகளை மட்டுறுத்தல்

July 10, 2008 – 2:21 pm by தமிழ்மணம்

தமிழ்மணம் ஒரு சமூக தளமாக பல்வேறு மக்களின் கருத்துகளை சுதந்திரமாக வெளியிடும் தளமாக இருந்து வருகிறது. அண்மையிலே தமிழ்மணம் நிர்வாகிகளின் தமிழகப் பயணத்தின் பொழுது புதுவை உள்ளிட்ட பகுதியில் உள்ள பதிவர்கள் சூடான சில இடுகை வார்த்தைகள் தமிழ்மணம் குறித்த தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து இருந்தார்கள். முழு கட்டுரையும் தமிழ்மணத்தில் இல்லாத நிலையில், வெறும் தலைப்பு மட்டுமே தமிழ்மணத்தில் வரிசையாக இத்தகைய சொற்கள் கொண்டவைகளாக உள்ள சூழ்நிலையில் தமிழ்மணம் குறித்த தவறான எண்ணம் ஏற்படுவது இயல்பானது.

அதனால், பரந்து பட்ட அளவிலே பதிவர்களிடையே தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் சொற்களைத் தலைப்பிற் கொள்ளும் இடுகைகளை மட்டுறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். தமிழ்மணம் திரட்டும் பதிவுகளின் தலைப்புகளில் உள்ள அப்படியான வார்த்தைகளை மட்டுறுத்தும் நுட்பத்தை தமிழ்மணம் தற்பொழுது கொண்டு வந்துள்ளது. அப்படியான சொற்களை மட்டுமே தமிழ்மணம் மட்டுறுத்தி உள்ளது. அவற்றினைக் கொண்ட இடுகைகளை தமிழ்மணம் நீக்கவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் வார்த்தைகளை கொண்ட இடுகைகள் மட்டுறுத்தப்பட்டு அண்மையில் எழுதப்பட்ட இடுகைகள் பகுதியில் வெளியாகும். ஆனால் சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரை, மறுமொழிகள் பகுதி போன்ற சிறப்பு பகுதியில் இந்த இடுகைகள் இடம்பெறாது. பெரும்பாலான இடுகைகளின் தலைப்புகள் இத்தகைய சிறப்பு பகுதியில் இடம் பிடிக்கவும், வாசகர்களை தொடர்ந்து இழுக்கவுமே வைக்கப்படுவதாக தமிழ்மணம் நம்புவதால் இந்த ஏற்பாட்டினை செய்துள்ளோம்.

தமிழ்மணம் தனது வாசகர் தளத்தை விரிவு படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கூகுள் மூலமாக தமிழ்மணம் தளத்தை விளம்பரம் செய்கிறோம். இது தமிழ்மணம், பதிவர்கள் இருவருக்குமே அதிக வாசகர்களை கொண்டு வரும். நிறைய புதிய பதிவர்களும், வாசகர்களும் தமிழ்மணம் தளத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளதை சமீபகாலங்களில் பார்த்து வருகிறோம்.

தமிழ் வலைப்பதிவு சூழல் குறித்து ஒன்றுமே தெரியாத நிலையில் புதியதாக தமிழ்மணத்திற்கு வரும் ஒரு வாசகர் வரிசையாக “காமக் கதைகள்” என்ற தலைப்புகளை பார்த்தால் தமிழ்மணம் குறித்து என்ன நினைப்பார் என்று எண்ணிப் பாருங்கள். அதனை எண்ணியே இப்படியான நடவடிக்கையினை மேற்கொண்டோம்.

எந்த தனிப்பட்ட பதிவருக்கும் எதிராக இந்த மட்டுறுத்தும் நுட்பம் செய்யப்படவில்லை. தமிழ்மணம் சமூகத்தின் சுமூகமான வளர்ச்சிக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த நுட்பமும் தமிழ்மணம் முகப்பில் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்மணத்தின் பிற பக்கங்களில் எந்த மட்டுறுத்தலும் செய்யப்படவில்லை

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி

நிர்வாகம்,
தமிழ்மணம்

தமிழ்மணம் மறுமொழிகள் திரட்டி - ”ம” திரட்டி

May 25, 2008 – 10:17 pm by தமிழ் சசி / Tamil SASI

மறுமொழிகளுக்கு மென்நூல் வசதி, அச்சு வசதி, ஒரு பதிவர் எழுதிய அனைத்து மறுமொழிகளையும் ஒரே இடத்தில் வாசிக்கும் வசதி, அனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக்கும் வசதி என பல தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் தமிழ்மணத்தின் மறுமொழி திரட்டியான “’ம’ திரட்டியை” வெளியிடுகிறோம்.

ம திரட்டி - http://www.tamilmanam.net/m/thiratti.html

வேறு எந்த தளத்திலும் (ஆங்கில தளங்கள் உட்பட) இல்லாத வகையில் மறுமொழிகள் சார்ந்த பல தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த மறுமொழிகள் திரட்டி வெளியாகிறது. இது ஏற்கனவே PoC வடிவத்தில் இருந்த ம திரட்டியின் பீட்டா வடிவம்.

தமிழ் வலைப்பதிவுகளில் மறுமொழிகளுக்கு குறிப்பிடத்தகுந்த பங்கு உண்டு. ஒரு இடுகையை விட அதன் மறுமொழிகளுக்கே அதிக கவனம் பல நேரங்களில் ஏற்படுகிறது. ஆனாலும் இந்த மறுமொழிகளை சரியாக தொகுக்க முடியாத ஒரு நிலையே இருந்து வந்திருக்கிறது. வேர்ட்பிரஸ், cocomment போன்ற தளங்களில் சில சேவைகள் வழங்கப்பட்டாலும் மறுமொழிகளை முழுமையாக தொகுக்கக்கூடிய ஒரு வடிவம் இல்லை.

தமிழ்மணத்தின் மறுமொழிகள் திரட்டி வலைப்பதிவர்களுக்கு தேவையான பல வசதிகளுடன் வெளியாகிறது. இந்த வசதிகளை தொடர்ந்து கூகுள் ரீடர் போன்றவற்றில் மிகவும் இலகுவாக மறுமொழிகளை வாசிக்கும் வகையில் ‘ம’ திரட்டி செய்தியோடையையும் வழங்க இருக்கிறது.

ம திரட்டி பதிவுகளின் மறுமொழிகள் ஓடையை கொண்டு திரட்டுவதால் ப்ளாகர், வேர்பிரஸ்.காம் தளங்களை திரட்டுகிறது. மறுமொழிகள் 10 நிமிடத்திற்கு ஒரு முறை திரட்டப்படுகிறது. தற்பொழுது இந்த வசதி ப்ளாகர், வேர்ட்ஸ்பிரஸ்.காம் போன்ற பதிவுக்கு மட்டும் தான் செய்யப்பட்டுள்ளது. தனித்தளங்களில் இயங்கும் பதிவுகளுக்கு இந்த வசதி ஏற்படுத்தப்படவில்லை

”ம” திரட்டியின் தொழில்நுட்ப சிறப்பம்சங்கள்

- ஒவ்வொரு இடுகை பெறும் மறுமொழிகளின் எண்ணிக்கை மட்டுமே இது வரை தமிழ்மணத்தில் தெரிந்தது. இனி யார் எழுதினார்கள், பின்னூட்டங்களின் சாராம்சம் போன்றவையும் தெரியும்

- ஒருவர் இடும் மறுமொழிகளை ஒரே இடத்தில் பார்க்கும் வசதி. உதாரணமாக பதிவர் கானா பிரபா எழுதிய அனைத்து மறுமொழிகளையும் இங்கே வாசிக்க முடியும்
http://www.tamilmanam.net/comments/கானா பிரபா

- அவர் எழுதிய ஒவ்வொரு மறுமொழியையும் தனித்தனியாக மென்நூலாக பெற முடியும்.
http://www.tamilmanam.net/services/pdf/m_thiratti_single_pdf.php?id=7261&a.pdf

- அவர் எழுதிய அனைத்து மறுமொழிகளையும் ஒரே மென்நூலாகவும் பெற முடியும்
http://www.tamilmanam.net/services/pdf/m_thiratti_author_ebook.php?author=கானா பிரபா&a.pdf

- ஒரு இடுகை, அதன் மறுமொழிகள் என அனைத்தையும் மென்நூலாக பெற முடியும்
http://www.tamilmanam.net/m/thiratti.html

- மென்நூலைப் போலவே அச்சு வசதியும் அனைத்து மறுமொழிகளுக்கும் செய்யப்பட்டுள்ளது

- அதிகளவில் எழுதப்படும் மென்நூல்களை கொண்டு சூடான இடுகைகள் தொகுக்கப்பட்டுள்ளது.
இது ”ம” திரட்டிக்கான சூடான இடுகைகள் பகுதி ஆகும்

- அதிகளவில் மறுமொழிகள் எழுதும் பதிவர்களின் நிலவரம்

பல தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் வெளியாகும் இந்த புதிய ‘ம’ திரட்டி வலைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் ஒரு இனிய வலைப்பதிவு அனுபவத்தை கொடுக்கும் என நம்புகிறோம்

அன்புடன்,
தமிழ் சசி
தமிழ்மணம்

இணையத்தில் வளர்தமிழ் - திருநெல்வேலியில் கருத்தரங்கம்

May 22, 2008 – 9:55 pm by தமிழ்மணம்

வரும் ஜுன் மாதம் ஏழாம் தேதியன்று, நெல்லையில் ”இணையத்தில் வளர்தமிழ் - வலைப்பதிவின் வளர்ச்சியும் தமிழாய்வில் பயன்பாடும்” என்ற கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.

மாவட்டக் ஆட்சித்தலைவர் திரு. கோ. பிரகாஷ், இ.ஆ.ப அவர்கள் தலைமை வகிக்க, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் இரா. சபாபதிமோகன் “இணையத்தில் வளர்தமிழ்” என்னும் கருத்தரங்கைத் தொடங்கிவைக்கிறார். தமிழ்மணம் நிர்வாகத்தைச் சார்ந்த முனைவர்கள் நா. கணேசன், சொ. சங்கரபாண்டி, காசி ஆறுமுகம் அவர்களும் உரையாற்ற உள்ளனர்.

பேராசிரியர் தொ. பரமசிவன், எழுத்தாளர் பொன்னீலன், வழக்கறிஞர்கள் தீன், பிரபாகர் இன்னும் பலர் சொற்பொழிவாற்றுகிறார்கள். பல தமிழ் அறிஞர்களும், புரவலர்களும் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்மணம் போன்ற திரட்டிகளைப் பயன்படுத்தித் தமிழாய்வை மேலும் செழுமையாக்கும் வழிமுறைகளும் கணி சாராத பெருவாரித் தமிழ் மக்களுக்கு இணையத்தின் பயன்களைக் கொண்டு செல்தலும் பற்றிக் கலந்து ஆலோசிப்பது கருத்தரங்க நோக்கங்களாம்.

வலைப்பதிவர்களும், ஆசிரியர்களும், எழுத்தாளர்களும், கணிஞர்களும், தமிழ்க் கணிமை ஆர்வலர்களும் வருகைதந்து ஆதரவளிக்க அன்புடன் அழைக்கிறோம்.

கருத்தரங்க நிகழிடம்: விஜயா கார்டன்ஸ், தெற்கு புறவழிச் சாலை, திருநெல்வேலி - 5
நேரம்: மாலை 5 மணி, சனிக்கிழமை, ஜூன் 7 (07/06/2008)

இன்றைய அனைத்து இடுகைகளும், மறுமொழிகளும்

May 12, 2008 – 10:40 pm by தமிழ்மணம்

புதிய தமிழ்மணத்தில் இன்றைய அனைத்து இடுகைகள் பக்கமும், மறுமொழிகள் பக்கமும் லோட் ஆவதற்கு மிக அதிக நேரம் எடுப்பதாக பதிவர்கள் எங்களுக்கு தெரிவித்து இருந்தார்கள்.

இந்தப் பிரச்சனை இப்பொழுது சரி செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பக்கமாக பார்க்கும் வசதியும், ஒரே பக்கத்தில் பார்க்கும் வசதியும் உள்ளது. ஒரே பக்கத்தில் அனைத்து இடுகைகளும் லேட் ஆவதற்கு அதிக நேரம் எடுக்கும் பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது வேகமாக லோட் ஆகும் என நினைக்கிறோம்.

இன்றைய அனைத்து இடுகைகளும்
http://tamilmanam.net/tamil/blogs/today.html

இன்றைய அனைத்து மறுமொழிகளும்
http://tamilmanam.net/tamil/blogs/feedback.html

நன்றி…

நிர்வாகம்,
தமிழ்மணம்

புதிய தமிழ்மணம் - Problems in Slow Internet Connection

May 10, 2008 – 11:08 am by தமிழ் சசி / Tamil SASI

தமிழகம், இலங்கை போன்ற இடங்களிலும் மற்றும் Slow Internet Connection கொண்டவர்களுக்கும் புதிய தமிழ்மணம் லோட் (Load) ஆவதில் சில பிரச்சனைகள் இருந்தன. முகப்பு பக்கம் லோட் ஆவதற்கு 1:30 நிமிடத்திற்கும் மேல் எடுப்பதாக தமிழ்மணம் பயனர்களும், நண்பர்களும் எங்களுக்கு தெரிவித்து இருந்தார்கள்.

இந்தப் பிரச்சனை இப்பொழுது சரி செய்யப்பட்டுள்ளது.

அஜாக்ஸ் (Ajax) நிரலில் இருந்த ஒரு bug காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. இங்கே அமெரிக்காவில் இணையம் மிக அதிக Bandwidthன் இருப்பதால் இந்தப் பிரச்சனை எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் குறைந்த Bandwidth கொண்டவர்களுக்கு இந்தப் பிரச்சனை இருந்துள்ளது. அஜாக்ஸ் நிரலில் இருந்த சில பிரச்சனைகளால் உலாவி (browser) சில நொடிகள் உறைந்து போவது (freeze/stuck) போன்ற பிரச்சனைகளும் இருந்தன.

இந்தப் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு விட்ட நிலையில் புதிய தமிழ்மணம் பழைய தமிழ்மணம் போலவே மிக வேகமாக லோட் ஆகும். அது போலவே தமிழ்மணத்தின் முழு வடிவமும் (Full Version) வேகமாக லோட் ஆகும் என நிம்புகிறோம். என்றாலும் இன்னும் மேலதிக சோதனைகள் செய்யும் வரை தற்போதைய வடிவமே (Short Version) தொடரும். தொடர்ந்து பிரச்சனைகள் இருந்தால், பதிவர்கள் இந்தப் பதிவின் பின்னூட்டம் மூலம் எங்களுக்கு தெரிவிக்கலாம். பிரச்சனைகளை நிச்சயம் சரி செய்வோம்.

தமிழ்மணம் தற்பொழுது பீட்டா பதிப்பில் இருப்பதால் சில பக்கங்களில் பிரச்சனைகள் உள்ளன (இன்றைய அனைத்து பதிவுகளும், மறுமொழிகள் போன்ற பக்கங்களில்). விரைவில் இதனை சரி செய்து முழுமையான பதிப்பினை வெளியிடுவோம்.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

தமிழ் சசி,
தமிழ்மணம்

புதிய தமிழ்மணம் - பீட்டா வடிவம்

May 4, 2008 – 10:20 pm by தமிழ் சசி / Tamil SASI

புதிய தமிழ்மணத்தின் சோதனை வடிவத்தை (பீட்டா) தற்பொழுது வெளியிட்டுள்ளோம். இந்த புதிய தமிழ்மணம் மேம்படுத்தப்பட்ட் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உள்கட்டமைப்புடன் வெளியாகிறது.

புதிய தமிழ்மணத்தின் தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாடுகளை அடுத்த வரும் நாட்களில் தொடர்ச்சியாக இந்த வலைப்பதிவின் மூலமாக அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

தற்போதைய சில முக்கிய குறிப்புகள்

குறிச்சொல் சார்ந்த பல்வேறு வசதிகளை தமிழ்மணம் இந்த புதிய பதிப்பில் அறிமுகப்படுத்துகிறது. இது வரை இருந்த தமிழ்மணம் வகைப்படுத்தல் இனி முற்றிலுமாக நீக்கப்படும். பதிவர்கள் தங்கள் பதிவுகளுக்கு வழங்கும் குறிச்சொற்களை கொண்டே தமிழ்மணம் வகைப்படுத்தும். ஒரு குறிச்சொல் சார்ந்த தொடர்புடைய குறிச்சொல் போன்றவற்றை வழங்கும் வசதியையும் ஏற்படுத்தி இருக்கிறோம்.

மென்நூல், அச்சு வசதி போன்றவற்றை தமிழ்மணத்தின் முகப்பு பக்கத்தில் கொண்டு வந்திருக்கிறோம்

மேலதிக சேவைகள் என்ற புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது ஒரு பதிவரின் கடந்த சில இடுகைகளை வாசிக்கும் வசதியை இந்தப் பகுதியில் ஏற்படுத்தியிருக்கிறோம். படிப்படியாக மேலும் பல சேவைகளை இந்தப் பகுதியில் வழங்க இருக்கிறோம்.

செய்தியை அடிப்படையாக கொண்டு செயல்படும் பதிவுகளுக்கு தனி பக்கத்தை வழங்கியுள்ளோம். சுயமான எழுத்துக்களை முன்வைக்கும் பதிவுகள் மட்டும் முகப்பு பக்கத்தில் வெளியாகும்

தமிழ்மணத்தில் இணைக்கப்படாத பதிவுகளை கேளிர் திரட்டி மூலமாக தமிழ்மணம் தானியங்கியாக திரட்டுகிறது. கேளிர் திரட்டியால் திரட்டப்படும் பதிவுகளின் உள்ளடக்கத்திற்கு தமிழ்மணம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. கூகுள் (Google Blog search) மற்றும் பதிவுகளின் ஓடை (RSS feed) என்ற இரண்டையும் கொண்டு கேளிர் திரட்டி செயல்படுகிறது. இந்த திரட்டியில் இருந்து பதிவுகளை சேர்த்தல்/நீக்குதல் போன்றவற்றை தமிழ்மணம் ஊக்குவிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த திரட்டி கூகுளை கொண்டே செயல்படுகிறது.

துறை சார்ந்த பதிவுகளை தமிழ்மணம் ஊக்குவிக்கிறது. துறை சார்ந்த பதிவுகளுக்கு தனி பக்கத்தை தமிழ்மணம் வழங்குகிறது

பழைய தமிழ்மணம் சில உலாவிகளில் (browser) சரியாக தெரிவதில்லை என்ற பிரச்சனை இருந்தது. புதிய தமிழ்மணம் அனைத்து உலாவிகளிலும் - Firefox, Internet Explorer 7, Opera, Safari சரியாக தெரியுமாறு வடிவமைத்து உள்ளோம். IE6.0ல் வடிவமைப்பில் மட்டும் சில பிரச்சனைகள் இருக்கலாம். பதிவர்களை IE7.0, FireFox போன்றவற்றை பயன்படுத்த தமிழ்மணம் ஊக்குவிக்கிறது.

அது போலவே புதிய தமிழ்மணம் 1024×768 resolutionல் செயல்படுமாறு வடிவமைத்து இருக்கிறோம். இதை விட மேம்பட்ட resolutionல் தமிழ்மணம் இன்னும் சிறப்பாகவே தெரியும். குறைந்த resolutionல் Scroll செய்து பார்க்க வேண்டிய தேவை இருக்கலாம். என்றாலும் பழைய தமிழ்மணம் போல எழுத்துக்கள் மறைந்து போவது போன்ற பிரச்சனைகள் இருக்காது.

தமிழ்மணத்தில் அதிக பயன்பாடு உள்ள பக்கங்கள் மட்டும் தற்பொழுது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பிற பக்கங்களும் படிப்படியாக மாற்றப்படும். புதிய தமிழ்மணம் தற்பொழுது சோதனை வடிவத்தில் உள்ளதால், இதில் ஏற்படும் பிரச்சனைகளை, வழுக்களை (bugs) எங்களுக்கு அறியத் தாருங்கள். அதனை களைய முயற்சி எடுப்போம்.

புதிய தமிழ்மணம் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் ஒரு இனிய வலைப்பதிவு அனுபவத்தை கொடுக்கும் என நம்புகிறோம்.

நன்றி….

தமிழ் சசி,
தமிழ்மணம்

தமிழ்மணத்தில் புகைப்படங்களை Gravatar மூலம் மாற்றும் வசதி

April 10, 2008 – 8:00 pm by தமிழ் சசி / Tamil SASI

தமிழ்மணத்தின் முகப்பு பக்கத்தில் தெரியும் புகைப்படங்களை Gravatar மூலமாக திரட்டும் புதிய வசதியை தமிழ்மணத்தில் உருவாக்கியிருக்கிறோம். இதன் மூலம் தமிழ்மணம் கருவிப்பட்டையை இணைக்க முடியாத வேர்ட்பிரஸ்.காம் பதிவர்களும் தங்கள் புகைப்படத்தை தமிழ்மணத்தில் மாற்றிக் கொள்ள முடியும்.

இது தவிர தமிழ்மணம் கருவிப்பட்டை வாயிலாகவும் உங்கள் புகைப்படங்களை மாற்றிக்கொள்ள இயலும். அது குறித்த செய்முறைக்கு இந்த இடுகையை பார்க்கலாம் - http://blog.thamizmanam.com/archives/120

Gravatar என்றால் என்ன ?

நாம் ஒவ்வொரு தளங்களிலும் நம் Profile புகைப்படங்களை நுழைப்பது வழக்கம். உதாரணமாக வேர்ட்பிரஸ் தளத்தில் ஒரு படம், ப்ளாகர் தளத்தில் ஒரு படம், தமிழ்மணத்திற்கு ஒரு படம் என ஒரே படத்தை பல தளங்களில் தரவேற்ற வேண்டும். இதற்கு மாற்றாக வந்திருக்கும் தொழில்நுட்பம் தான் Gravatar - globally recognized avatar. ஒரே இடத்தில் புகைப்படத்தை வைத்து விட்டு பல்வேறு தளங்களிலும் அந்த புகைப்படங்களை பயன்படுத்தும் வசதி தான் Gravatar. நம்முடைய மின்னஞ்சலுடன் ஒரு புகைப்படத்தை Gravatar தளத்தில் நுழைத்து விட்டால், அந்த மின்னஞ்சலை கொண்டு அனைத்து தளங்களிலும் அந்த புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக நாம் பல வலைத்தளங்களில் மறுமொழிகளை இடும் பொழுது இது மிகுந்த உதவியாக இருக்கும்.

இந்த வசதி வேர்ட்பிரஸ் 2.5ல் உள்ளது. ப்ளாகரில் கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்.

இந்த தொழில்நுட்பத்தை இப்பொழுது தமிழ்மணத்திலும் ஏற்படுத்தியிருக்கிறோம்.

பதிவர்கள் செய்ய வேண்டியது

பதிவர்கள் தமிழ்மணத்தில் கொடுத்த அதே மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு http://en.gravatar.com/ என்ற தளத்தில் தங்கள் புகைப்படங்களை இணைத்துக் கொள்ளலாம். பதிவுகளை தமிழ்மணத்திற்கு அளிக்கும் பொழுது அந்த புகைப்படங்களை தமிழ்மணம் திரட்டிக் கொள்ளும்.

தமிழ்மணத்தின் கருவிப்பட்டையை பயன்படுத்தியும், Gravatar மூலமாகவும் தமிழ்மணத்தில் பதிவர்கள் தங்கள் புகைப்படங்களை மாற்றிக் கொள்ளலாம்.

பி.கு.

  • Gravatar நுட்பத்திற்கு மாற்றாக openvatar என்ற புதிய தொழில்நுட்பமும் உள்ளது. ஆனால் இது தற்பொழுது alpha பதிப்பில் உள்ளது.
  • Openid தொழில்நுட்பமும் விரைவில் தமிழ்மணத்தில் எதிர்பார்க்கலாம்.

வேர்ட்பிரஸில் Gravatar பயன்படுத்த இந்தச் சுட்டியை பார்க்கலாம் - Gravatars and WordPress 2.5

Gravatar யோசனையை அளித்த நண்பர் ரவிசங்கருக்கு நன்றி…

நன்றி…

தமிழ் சசி
தமிழ்மணம்

தமிழ்மணத்தில் மென்நூல் (PDF) வசதி

April 4, 2008 – 8:14 pm by தமிழ் சசி / Tamil SASI

தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட இடுகைகளை மென்நூலாக (PDF) பெறும் வசதி ப்ளாகரின் சமீபத்திய மேம்பாடுகளுக்கு பிறகு வேலை செய்ய வில்லை. ப்ளாகர் தமிழ் குறியீட்டு முறை காரணமாக இருந்த இந்தப் பிரச்சனைகள் இப்பொழுது சரி செய்யப்பட்டு விட்டன.

ப்ளாகர் தமிழ் குறியீட்டில் இருந்த சில பிரச்சனைகளை சரி செய்ய ஆலோசனைகள் வழங்கிய நண்பர் சுரதாவிற்கு எங்களது நன்றி…

பதிவர்கள் தங்கள் இடுகைகளை மென்நூலாக பெற தமிழ்மணத்தின் பதிவுப்பட்டையை (Toolbar) தங்கள் பதிவுகளில் இணைத்தால் போதுமானது. இதன் மூலம் ப்ளாகர், வேர்ட்பிரஸ் மென்பொருள் பயன்படுத்தும் பதிவர்கள் தங்கள் இடுகைகளை மென்நூலாக பெற முடியும். வேர்ட்பிரஸ்.காம் பதிவர்களுக்கு வேறு வசதி செய்யப்படும்.

தமிழ்மணத்திற்கு சமர்ப்பிக்கப்படும் செய்தியோடைகளில் இருந்து இடுகைகள் திரட்டப்படும் என்பதால் செய்தியோடைகளில் முழு இடுகையும் இருக்குமாறு அமைக்க வேண்டும் (Blog Posts Feed - Full Feed).

அன்புடன்,
தமிழ் சசி
தமிழ்மணம்

தமிழ்மணம்: இடுகைகளும் பதிவுகளும் நீக்கம்

March 26, 2008 – 6:24 am by தமிழ்மணம்

தமிழ்மணம் குழுவினரின் செயல்பாடுகள் முழுக்க வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று எண்ணி, அதன் முதற்கட்டமாக கூடுமான வரை எங்களுடைய மின்னஞ்சல்களும், இடுகைகளும் பணியாற்றுபவர்/எழுதுபவர் பெயர் தாங்கி இடப்படவேண்டும் என்று முடிவு செய்தோம். எடுத்துக்காட்டாக தொழில் நுட்பக் குழுவில் பணியாற்றுபவர்கள், அவர்கள் செய்து முடித்த பணி குறித்து நேரடியாக பதிவர்களுக்கு அவர்களுடைய பெயர் தாங்கியே இடுகை எழுத வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்சசி அண்மையில் இரண்டு இடுகைகளை எழுதியிருந்தார். அதுபோலவே இடுகை நிர்வாகப் பணிகுறித்த மின்னஞ்சல்களில் அப்பணியாற்றுபவர்கள் தங்கள் பெயரிட்டு அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். தங்களுடைய பெயர்கள் வெளியிடப்படுவதனால் போலிகள் தங்களை அவதூறு செய்யக் கூடும் என்ற தயக்கம் எங்களிடம் இருப்பதும் உண்மையே. அதைத்தான் இப்பொழுது அனுபவிக்கிறோம். இருப்பினும் இந்த இடுகையையும் என்னுடைய பெயரில் எழுதுகிறேன். சில விசயங்களை பதிவர்களின் முன்பு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நேற்று தமிழ்மணத்திலிருந்து சில இடுகைகளும் பதிவுகளும் நீக்கப் பட்டிருகின்றன. அவை நீக்கப்பட்டதற்கு தமிழ்மண நிர்வாகத்தில் பணிபுரியும் இரமணியுடன் எற்பட்ட தனிப்பட்ட பிரச்னைதான் காரணம் என்று ஒருசிலரால் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையைச் சொல்வதென்றால் நேற்று நீக்கப் பட்ட பதிவுகள் சில வாரங்களுக்கு முன்பே நீக்கப் படவேண்டும் என்று எங்கள் குழுவில் விவாதத்துக்கு வந்தபொழுது அப்பொழுது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்க வேண்டாம், காத்திருந்து புரிய வைக்கலாம் என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் ஒருவர் தற்பொழுது குற்றஞ்சாட்டப்படும் இரமணிதான். அதனாலேயே அப்பதிவுகள் இன்னும் சில வாரங்கள் நீடித்து நின்றன.

எங்கள் குழுவிற்குள் யார் என்ன கருத்துக் கொண்டிருந்தார் என்றோ என்ன விவாதம் நடந்தது என்றோ நாங்கள் இதுவரை பொதுவில் சொன்னது கிடையாது. அனைத்தும் தமிழ் மணம் குழுவினரின் ஒருமித்த முடிவாகத்தான் பொதுவில் வைக்கப்பட்டது. இப்பொழுதும் இது எங்களது ஒருமித்த முடிவுதான் என்றாலும், மேலே சொன்ன சிறுதகவலை மட்டும் நான் தற்பொழுது குறிப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இரமணியின் மீது சுமத்தப் படும் குற்றச்சாட்டினைக் மறுப்பது மட்டுமல்லாமல், தமிழ்மணம் ஒரு தனிப்பட்டப் பதிவரின் சொந்த விருப்பு-வெறுப்பின் படி இயங்குகிறது என்ற குற்றச்சாட்டை மறுப்பதே இதன் நோக்கம். ஒவ்வொரு சிக்கல் வரும் பொழுதும் எங்கள் குழுவில் உள்ள 12 பேரும் இது குறித்து பல முறை விவாதித்துத் தான் முடிவெடுத்து வருகிறோம். இதற்காக நாங்கள் செலவிடும் நேரமும் அதிகம். எனவே எடுக்கப் பட்ட எல்லா முடிவுகளுமே தமிழ்மணத்தின் முடிவுகள்தான். குற்றம் சொல்லுவதாயினும், பாராட்டுவதாயினும் தமிழ்மணத்திடமே அவற்றைச் சேர்க்கவும்.

தற்பொழுது நீக்கப் பட்ட பதிவுகள் நீக்கப் படுவதற்கான காரணங்கள் சில வாரங்களுக்கு முன்பே அறியப்பட்டு, அலசப்பட்டு அதைப் பற்றிய ஒரு முன்னறிவிப்பையும் செய்திருந்தோம். அப்பொழுதே அவை நீக்கப்பட்டிருக்கலாம் என்றாலும் ஒரு பதிவர் தன்னுடைய இடுகைகளில் எழுதுவதற்கான உரிமையை மதித்து அவராகவே சில நாட்களில் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்வார் என்று எதிர்பார்ப்புடன்
காத்திருந்தோம். எனவே இப்பொழுது அவை நீக்கப் பட்டதற்கும் இரமணியுடன் அப்பதிவர்களுக்கு நடந்த தனிப்பட்ட பிணக்குகளுக்கும் எந்த தொடர்புமில்லை. தனிப்பட்ட பதிவராய் இரமணியோ அல்லது தமிழ்மணம் குழுவைச் சேர்ந்த வேறு ஒருவரோ எழுதும் எந்த விசயத்துக்கும் தமிழ்மணம் பொறுப்பாவதில்லை. ஆனால் அவர்கள் எழுதும் இடுகைகளும் தமிழ்மணம் கடைப்பிடிக்கும் விதிகளுக்குள் வராவிட்டால் நீக்கப்பட்டிருக்கின்றன, எதிர்காலத்திலும் நீக்கப்படும்.

இறுதியாக, தமிழ்மணத்திலிருப்பவர்களாகிய எங்களுக்கும் அரசியல் மற்றும் கொள்கை நிலைப்பாடுகள் உண்டு. ஆனால் அதன் அடிப்படையில் பதிவுகளைத் தமிழ்மணம் திரட்டுவதும், நீக்குவதும் கிடையாது. எனவே பெண்ணியம், பெரியாரியம், இந்துத்துவம், பார்ப்பனியம் என்ற அடிப்படைகளில் தமிழ் மணத்தின் நிலைப்பாட்டை அலச வேண்டாம். வழக்கமாக ஊடகங்கள் செய்யும் இந்த அரசியல் கருத்துத் தணிக்கையிலிருந்து விடுபட்ட ஊடகமாக வலைப்பதிவுகள் வளரவேண்டும் என்று தமிழ்மணம் கருதுகிறது, அதற்காக உழைக்கிறது.

தமிழ்ச்சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் மாறுபட்ட கொள்கைகளின் அடிப்படையில் தங்களுடைய கருத்துக்களை சுதந்திரமாகப் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று தமிழ்மணம் கருதுகிறது. அதற்குத் தடையாக இருக்கும் சிலருடைய தனிநபர் விளம்பர விளையாட்டுகளை, அவை கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்படவேண்டும் என்று புரிந்து கொள்ளப்பட்டாலும் தமிழ் மணத்தில் அனுமதிக்க இயலாது என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி – சொ. சங்கரபாண்டி
தமிழ் மணம்