தமிழ்மணம் விருதுகள் 2009 - இடுகைகள் பரிந்துரைகளுக்கான காலக்கட்டம்

December 1, 2009 – 2:02 am by தமிழ்மணம்

தமிழ்மணம் விருதுகள் 2009ம் ஆண்டுக்கான இடுகைகளைப் பரிந்துரை செய்வதற்கான காலக்கட்டம் வரும் சனிக்கிழமை, டிசம்பர் 5ம் தேதி நள்ளிரவு (அமெரிக்க நேரம்) தொடங்க இருக்கிறது என்பதை பதிவர்களுக்கு நினைவுறுத்துகிறோம்.

பதிவர்களுக்கு அனுப்ப்படும் மின்னஞ்சலைக் கொண்டு தங்களுடைய இடுகைகளை பதிவர்கள் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யலாம். பரிந்துரை தொடங்கும் நேரத்தில் அது குறித்த அறிவிப்பும் தமிழ்மணத்தில் வெளியாகும்.

பரிந்துரைக்கான காலக்கட்டம் - டிசம்பர் 5 முதல் டிசம்பர் 12 வரை (அமெரிக்க நேரம் - EST)

கலந்து கொள்ளும் பதிவர், தனது பதிவினை 30-11-2009க்கு முன்னர் தமிழ்மணத்தில்
இணைத்திருத்தல் வேண்டும். சனவரி 2009 முதல் நவம்பர் 30 2009 வரை எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே விருதுகள் தேர்வுக்கு இடம்பெறும்

தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் - 2009 - விரிவான அறிவிப்பு

பதிவர்கள் அனைவரையும் இந்த விருது நிகழ்வில் பங்கு பெற அழைக்கிறோம்…

-தமிழ்மணம் விருதுத் தேர்வு ஒருங்கமைப்புக் குழு

தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் - 2009 - விரிவான அறிவிப்பு

November 10, 2009 – 9:32 pm by தமிழ்மணம்

இவ்வாண்டின் மிகச்சிறந்த இடுகைகளை தெரிவு செய்யும் பதிவுத் திருவிழா

tm awards 2009

தமிழ் வலைப்பதிவுகள் எண்ணிக்கையிலும் தரத்திலும் வளர்வதற்கும், அவை பரவலான வாசகர்களைச் சென்றடையவும் தேவையான கட்டமைப்பை அளிப்பதையும், வழமையான ஊடகவெளிக்கு வெளியே வலைப்பதிவுகளில் எழுதப்படும் தரமான படைப்புகள் உரிய அங்கீகாரம் பெறவும், அதன் மூலம் அத்தகைய படைப்புகள் மேலும் அதிகரிக்க தன்னாலானதைச் செய்வதையுமே தமிழ்மணம் தன் அடிப்படையான பணிகளாகக் கொண்டுள்ளது.

தமிழ்மணத்தின் அடிப்படை நோக்கங்களின் மீது நம்பிக்கை வைத்து இயங்கும் வலைப்பதிவர்களுக்கு நன்றி செலுத்துமுகமாக தமிழ் வலைப்பதிவுகளுக்கென்று விருதுகளை தமிழ்மணம் சென்ற ஆண்டு முதன் முறையாக வழங்கியது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்-சனவரி மாதத்தில் இந்த விருது நிகழ்வுகள் நடைபெறும். 2009ம் ஆண்டுக்கான விருதுகளுக்கான தேர்வுகள், வாக்களிப்பு போன்றவற்றை வரும் டிசம்பர், சனவரி மாதங்களில் நடத்த திட்டம் வகுத்துள்ளோம்.

விருதுகள் தேர்வு முறை

ஒவ்வொரு பதிவரும் தன்னுடைய பதிவே சிறந்தது எனப் பெருமிதம் கொள்ளும் உரிமையைப் பெற்றிருந்தாலும், இடுகைகளுக்கு உடனுக்குடன் கிடைக்கும் சக பதிவர்கள்/வாசகர்களின் பின்னூட்டங்கள் மூலமான அங்கீகாரமும் பதிவர்களை மேலும் ஊக்குவிக்கும் சக்தியாகத் திகழ்கிறது. அப்படிப்பட்ட இடுகைகளை வாசகர்கள் மீண்டுமொருமுறை திரும்பிப் பார்க்க வைத்து அங்கீகரிப்பதே இந்த விருதுத் தேர்வுக்கான அடிப்படை. அறிவிக்கப்பட்ட போட்டிகளுக்காக எழுதப்படும் படைப்புகளாக அல்லாமல், தன்னெழுச்சியாக வெளிப்பட்ட படைப்புகளே இந்தத் தேர்வுகளுக்கு கணக்கிலெடுக்கப்படுவதால் இதில் போட்டியோ, ஏமாற்றமோ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்குமென்றே நம்புகிறோம்.

இவ்வாண்டின் தேர்வுகள் கீழ்காணும் பிரிவுகளில் இருக்கும்:

1. படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)
2. காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், குறும்படங்கள்)
3. நூல், திரைப்படம் அறிமுகம்/விமர்சனம்/திறனாய்வுகள்
4. அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள்
5. பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
6. செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்
7. அரசியல், சமூக விமர்சனங்கள்
8. பெண்கள் பிரச்னைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள்
9. தலித் மக்களின் பிரச்சனைகள், மனித உரிமை, நிறவெறி (Racism) தொடர்பான கட்டுரைகள்
10. ஈழ மக்களின் வாழ்வியல், மனித உரிமை, சமூக, பொருளாதாரச் சிக்கல்கள்
11. தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல்
12. நகைச்சுவை, கார்ட்டூன்
13. சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம்
14. பொருளாதாரம், வணிகம் தொடர்பான கட்டுரைகள்
15. தமிழ்க்கணிமை, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையம் தொடர்பான கட்டுரைகள்
16. விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள்

தேர்வு நடைமுறை:

1. தனிப்பட்ட இடுகை (post) அல்லது இடுகைத் தொடர்களே விருதுக்கு தேர்வு
செய்யப்படும். வலைப்பதிவு முழுமைக்குமான விருது என்று எதுவும் இல்லை.

2. கலந்து கொள்ளும் பதிவர், தனது பதிவினை 1-11-2009க்கு முன்னர் தமிழ்மணத்தில்
இணைத்திருத்தல் வேண்டும். சனவரி 2009 முதல் நவம்பர் 30 2009 வரை எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே விருதுகள் தேர்வுக்கு இடம்பெறும்

3. எந்தவொரு இடுகையையும் எழுதிய பதிவரே பரிந்துரை செய்யவேண்டும். ஒரே பதிவர்
அதிகபட்சமாக இரண்டு வெவ்வேறு பிரிவுகளுக்குப் பரிந்துரை செய்யலாம். ஆனால் ஒரு பிரிவுக்கு ஒரே ஒரு இடுகையை மட்டுமே பரிந்துரை செய்ய முடியும். மேலும்
குறிப்பிட்ட இடுகையை ஒரு பிரிவுக்கு மட்டுமே பரிந்துரை செய்யலாம்.

4. உங்களது பரிந்துரைகளை அளிப்பதற்கென ஒரு சிறப்புத்தளம் ஏற்படுத்தப்
பட்டுள்ளது. அதற்கான சிறப்புத் தொடுப்பும் வழிமுறைகளும் தமிழ்மணத்தில்
பதியப்பட்டுள்ள பதிவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

5. பரிந்துரைக்கப்படும் படைப்புகள் 2009 ஆம் ஆண்டில் முதல் முறையாகப்
பதிவுகளில் எழுதப்பட்டிருக்கவேண்டும். பரிந்துரைகள் 2009 ஆண்டில் வெளியிடப்பட்ட
முந்தைய ஆண்டுகளின் படைப்புகளின் மீள்பதிவுளாகவோ அல்லது வேறு அச்சிதழ் அல்லது
இணைய தளங்களில் வெளியிடப்பட்ட படைப்புகளின் மீள்பதிவுகளாகவோ இருத்தலாகாது.

6. விருதுத் தேர்வுக் குழு (நடுவர் குழு) என்று எதுவும் இல்லை.தமிழ்மணத்தில்
இணைந்துள்ள அனைத்துப் பதிவர்களும் முதற்கட்ட நடுவர்களே. ஒரு பதிவருக்கு ஒரு
பிரிவுக்கு ஒரு வாக்கு என்னும் அடிப்படையில் வாக்குரிமை இருக்கும்.

7. முதற்கட்ட வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்கள் பெறும்
இடுகைகள் இரண்டாம் கட்டப் பொது வாக்கெடுப்புக்குத் தெரிவு செய்யப்படும்.
இரண்டாம் கட்டத்தில் அனைத்து வாசகர்களும் (பதிவு இல்லாதவர்களும்)
வாக்களிக்கலாம்.

8. பதிவர் வாக்குகளும் வாசகர் வாக்குகளும் 2:1 என்ற விகிதத்தில் முக்கியத்துவம்
அளிக்கப்பட்டு மொத்த வாக்குகள் கணக்கிடப்படும். இதில் முதலிடம் பெறும் இடுகை
அந்தந்தப் பிரிவில் 2009-இன் சிறந்த இடுகையாக அறிவிக்கப்படும்.

9. ஒவ்வொரு பிரிவிலும் முதல் கட்ட வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்படும் முதல் 10
இடுகைகளும் (மொத்தம் 160 இடுகைகள்), தமிழ்மணம் தளத்தில் புதிதாக
உருவாக்கப்படும் சிறப்புப் பக்கத்தில் நிரந்தரமாக இடம் பெறும். தமிழ்மணம் புகழ்
அரங்கு (Hall of Fame) என்ற இந்தப் பக்கம் ஒவ்வொரு வருடமும்
தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த இடுகைகளை நிரந்தரமாக முன்னிறுத்தும். கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 120 இடுகைகளும், இவ்வாண்டு தேர்வு செய்யப்படும் 160 இடுகைகளும் இணைந்த புகழ் அரங்கு வரும் ஆண்டு சனவரியில் (2010) உருவாக்கப்படும்.

10. தமிழ்மணத்தில் இணைந்துள்ள பதிவர்களுக்குப் பரிந்துரைகள் அனுப்புவதற்கான
வேண்டுகோள் வெளியிடப்படுவதுடன் விருது தெரிவுப் பணி தொடங்கும்.

11. கிழ்க்கண்ட தேதிகளை பதிவர்கள் குறித்துக் கொள்ளலாம்

- இடுகைகள் பரிந்துரைகளுக்கான காலக்கட்டம் - டிசம்பர் 5 - டிசம்பர் 12
- முதல் கட்ட வாக்கெடுப்பு - டிசம்பர் 16 - டிசம்பர் 30
- இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு - சனவரி 2 - சனவரி 12
- விருதுகள் முடிவுகள் அறிவிப்பு - சனவரி 16

12. ஒவ்வொரு கட்டத்திலும் விரிவான அறிவிப்புகள் தமிழ்மண முகப்பில் வெளியிடப்படும். மின்னஞ்சலிலும் பதிவர்களுக்கு அறிவிக்கப்படும்.

பரிசு:
வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் அதிக வாக்குப் பெற்று முதலிடம் பெறும் பதிவுகளுக்குத் தலா ரூ.1000ம் (ஆயிரம் ரூபாய்), இரண்டாம் இடம் பெறும் பதிவுகளுக்குத் தலா ரூ.500ம் (ஐநூறு ரூபாய்) வழங்கப்படும். பரிசுத்தொகை நூல்களாகவே வழங்கப்படும். பதிவர்கள் தமிழ்மணம் வழங்கும் கூப்பனைக் கொண்டு சென்னை நியூ புக்லாண்ட்ஸ் புத்தகக்கடையில் தாங்கள் விரும்பும் நூல்களைப் பெற்றுக் கொள்ளலாம்

-தமிழ்மணம் விருதுத் தேர்வு ஒருங்கமைப்புக் குழு

தமிழ்மணம் விருதுகள் 2009

October 28, 2009 – 9:20 pm by தமிழ்மணம்

தமிழ்மணம் ஆண்டு விருதுகளை இந்த ஆண்டும் வழங்க தமிழ்மணம் முடிவு செய்துள்ளது. 2008 இல் தமிழ்மணம் விருதுகளைத் தேர்ந்தெடுக்கக் கடைப்பிடிக்கப்பட்ட தேர்வு முறை பதிவர்களிடம் இருந்து பரவலான வரவேற்பினைப் பெற்றதால் அதே தேர்வு முறையை இந்த ஆண்டும் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.

tm awards 2009

தமிழ்மணம் விருதுகள் குறித்த மேலும் விரிவான அறிவிப்புகள் அடுத்த சில வாரங்களில் வெளியாகும். டிசம்பர்-சனவரி மாதங்களில் விருதுக்கான தேர்வுகள், வாக்களிப்பு போன்றவை நடைபெறும். பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தில் விருது பெற்றவர்களின் விபரங்கள் அறிவிக்கப்படும்.

கடந்த ஆண்டு தமிழ்மணம் விருதுகளை முதன் முறையாக நடத்தியதாலும், அப்பொழுது ஈழத்தில் நிலவிய அசாதாரணமான சூழலாலும் தமிழ்மணம் விருது நிகழ்வு காலதாமதமானது. இவ்வாண்டு எத்தாமமுதம் இல்லாமல் குறித்த நாட்களுக்குள் விருது நிகழ்வு நடக்குமென உறுதி அளிக்கிறோம்.

கடந்த ஆண்டினைப் போலவே பதிவர்களின் ஒத்துழைப்பினை இந்த ஆண்டும் வேண்டுகிறோம்

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

நிர்வாகம்,
தமிழ்மணம்

தமிழ்மணம் ஐந்தாண்டுகள்

August 23, 2009 – 3:22 pm by தமிழ்மணம்

‘தமிழ்மணம்’ திரு. காசி ஆறுமுகத்தால் உருவாக்கப் பட்டு இன்றுடன் ஐந்தாண்டுகள் நிறைவாகி்ன்றன. இணைய மென்பொருள் தொழில் நுட்ப ரீதியில் தமிழ்மணம் தமிழுக்கு மட்டுமல்லாமல் வலைப்பதிவுலகிற்கே ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஒரு முக்கிய பங்களிப்பு. வலைப்பதிவுகளையும், மறுமொழிகளையும் திரட்டி வகைப்படுத்தி வாசகர்களுக்கு அளிப்பதில் தமிழ்மணம் தன்னால் இயன்றவரை முயற்சி செய்கிறது.

தமிழ்மணத்தை உருவாக்கி முதல் இரண்டாண்டுகள் நடத்திய திரு. காசியும், தொடர்ந்து தொழில் நுட்பத்தில் மேம்படுத்தி கடந்த மூன்றாண்டுகளாக நடத்தி வரும் தமிழ் மீடியா இண்டர்நேசனல் குழுவினரும் இதை தன்னார்வத்தொண்டாகக் கருதி நேரத்தையும் பொருளையும் செலவழித்து வருகிறோம். ஏற்கனவே நாங்கள் சொல்லி வந்துள்ளது போல் தமிழ்ச்சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் தங்களுக்குள்ளே மாறுபட்ட கொள்கைகளும், நோக்கங்களும், செயல்பாடுகளூம் உடையவர்களாக இருந்தாலும் தங்களுடைய கருத்துக்களை சுதந்திரமாகப் பரிமாறிக்கொள்ளக் கூடிய தளமாக இருக்க வேண்டும் என்று தமிழ்மணம் கருதுகிறது. இந்த நோக்கத்தில் உறுதியாக இருந்து தொடர்ந்து செயல்படுவோம் என்று மீண்டும் உறுதியளிக்கிறோம். தொடர்ந்து புரிந்துணர்வுடன் எங்களுடன் ஒத்துழைத்து தமிழ் வலைப்பதிவுலகினைச் செழுமைப்படுத்தி வரும் வலைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.

தமிழ்மணம் நிர்வாகம்

பதிவர் சிந்தாநதிக்கு அஞ்சலி

July 8, 2009 – 11:45 pm by தமிழ்மணம்

பதிவர் சிந்தாநதி சூலை திங்கள் 2 ஆம் நாள் மாரடைப்பால் காலமாகி விட்டார் என்ற செய்தி நம்மையெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

சிந்தாநிதி வலைப்பதிவராக மட்டுமில்லாமல் தமிழ் வலைப்பதி்வுலகைச் சார்ந்த பல்வேறு முயற்சிகளில் தன்னை ஈடுபடு்த்திக் கொண்டார். வலைச்சரம், தமிழ்க் கணிமை, தமிழ்ப் புத்தக்ச் சந்தை போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை. அவரது மறைவு தமிழ் வலைப்பதிவு உலகிற்குப் பேரிழப்பு ஆகும். அவரின் நினைவுகளுக்குத் தமிழ்மணம் தன்னுடைய அஞ்சலியை செலுத்துகிறது. அவரின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சிந்தாநதிக்கு அஞ்சலிப் பதிவுகள்
http://msathia.blogspot.com/2009/07/blog-post.html
http://blog.ravidreams.net/சிந்தாநதி/

நிர்வாகம்
தமிழ்மணம்

தமிழ்மணம் மகுடம், வாசகர் பரிந்துரை மாற்றங்கள்

June 5, 2009 – 9:07 pm by தமிழ்மணம்

தமிழ்மணம் மகுடத்திற்கும், வாசகர் பரிந்துரைக்கும் ஒரு இடுகையைத் தேர்ந்தெடுக்கப்படும் விதத்தில் சில மாற்றங்களை தமிழ்மணம் கொண்டு வந்துள்ளது. தற்பொழுது அதிக வாக்குகளைப் பெறும் இடுகைகளே தமிழ்மணம் மகுடத்தில் இடம்பெறுகிறது. இந்த முறை தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது.

தற்போதைய புதிய Algorithm ஒரு இடுகைக்கு எவ்வாறு ஓட்டளிக்கப்படுகிறது (Weightage of Votes, Negative votes, frequency of same openid voting for a blog) என்பதையும் கருத்தில் கொண்டு தமிழ்மணம் மகுடத்திற்கு இடுகையை தேர்ந்தெடுக்கிறது. இவை தவிர முகப்பில் இடம் பெறும் இடுகைகளும் அவை பெறும் வாக்குகளை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் அவை பெறும் வாக்குகள் எவ்வாறு அளிக்கப்படுகிறது என்பதையும் கருத்தில் கொண்டே இயங்கும். இந்தப் புதிய நிரலி(Program) தற்பொழுது சோதனையில் உள்ளது.

இந்த Algorithm தமிழ்மணத்தில் வாசகர்கள் வழங்கும் வாக்குகளை அலசி தேவைக்கேற்ப மாற்றப்படும்.

தமிழ்மணம் வாசகர் பரிந்துரை பக்கம் எந்த மாற்றமும் இல்லாமல் செயல்படுகிறது.
http://tamilmanam.net/readers/choice

நிர்வாகம்,
தமிழ்மணம்

தமிழ்மணம் பரிந்துரை : வாக்களிப்பு முறையில் மாற்றம்

May 31, 2009 – 6:41 pm by தமிழ்மணம்

தமிழ்மணத்தில் இருந்த வாக்களிப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இனி வாக்களிப்பதற்கு OpenIDஐ பயன்படுத்த வேண்டும். OpenIDஐ பயன்படுத்தும் அதே நேரத்தில் முன்பு போலவே சுலபமாக வாக்களிக்கும் வகையிலும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதன் முறையாக ஒரு இடுகைக்கு வாக்களிக்கும் பொழுது மட்டுமே தங்களது OpenIDஐ வாசகர்கள்/பதிவர்கள் தமிழ்மணத்திற்கு அளிக்க வேண்டும். அடுத்த சில வாரங்களுக்கு எத்தனை பதிவுகளுக்கு ஒட்டளித்தாலும் நீங்கள் உங்கள் openidஐ அளிக்க வேண்டிய தேவை இருக்காது. இந்த புதிய தொழில்நுட்பம் மூலமாக இடுகைகளுக்கு விழும் வாக்குகள் நேர்மையானதாகவும், அதன் தரத்தைச் சார்ந்ததாகவும் மட்டுமே இருக்கும் என நம்புகிறோம்.

எவ்வாறு வாக்களிப்பது ?

தமிழ்மணத்தில் வாக்களிப்பதற்கு உங்கள் OpenIDஐ பயன்படுத்த வேண்டும்

OpenID என்றால் என்ன ?

உங்கள் ப்ளாகர், வேர்ட்பிரஸ், யாகூ முகவரிகளே OpenID முகவரி ஆகும். இது குறித்த மேலதிக விபரங்கள் OpenID தளத்தில் உள்ளது .

எப்படி வாக்களிப்பது ?

வாக்களிக்க நுழையும் பொழுது OpenId பெட்டியில் உங்களது ப்ளாகர்/வேர்ட்பிரஸ் முகவரியை இவ்வாறு அளிக்க வேண்டும் - username.blogspot.com அல்லது username.wordpress.com. யாகூ முகவரியை username@yahoo.com என அளிக்க வேண்டும்

அவ்வாறு அளித்தவுடன் ப்ளாகர்/வேர்ட்பிரஸ்/யாகூ தளத்திற்கு நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். அங்கு உங்கள் பயனர்பெயரையும், கடவுச்சொல்லையும் அளிக்க வேண்டும். ப்ளாகர்/வேர்ட்பிரஸ்/யாகூ அதனை சோதித்து அது ஒரு சரியான முகவரியே என்ற தகவலை மட்டும் தமிழ்மணத்திற்கு வழங்கும்

ஒவ்வொரு முறை வாக்களிக்கும் பொழுதும் என்னுடைய OpenID அளிக்க வேண்டுமா ?

இல்லை. முதல் முறை வாக்களிக்கும் பொழுது மட்டுமே OpenIDஐ அளிக்க வேண்டும். தமிழ்மணம் அதனை நினைவில் வைத்துக் கொள்ளும். அடுத்த சில வாரங்களுக்கு எத்தனை பதிவுகளுக்கு ஒட்டளித்தாலும் நீங்கள் உங்கள் openidஐ அளிக்க வேண்டிய தேவை இருக்காது.

என்னுடைய யாகூ, ப்ளாகர், வேர்ட்பிரஸ் பயனர் பெயர், கடவுச்சொல் தமிழ்மணத்திற்கு தெரியுமா ? தமிழ்மணம் அதனை சேமிக்கிறதா ?

உங்கள் பயனர் பெயரோ, கடவுச்சொல்லோ தமிழ்மணத்திற்கு தெரியாது. உங்களது OpenID முகவரி மட்டுமே தமிழ்மணத்திற்கு தெரியும். தமிழ்மணம் உங்களது OpenID தவிர வேறு எந்த விபரங்களையும் கோருவதில்லை. சேமிப்பதும் இல்லை.

இந்த தொழில்நுட்பம் தற்பொழுது சோதனை வடிவத்தில் உள்ளது. சில பிரச்சனைகளை (Bad signature) பதிவர்கள் தமிழ்மணத்திற்கு தெரிவித்திருந்தார்கள். அது சரி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நுட்பத்தில் வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் தமிழ்மணம் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த கேட்டுக் கொள்கிறோம். பதிவர்கள் மற்றும் வாசகர்களின் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம்

Vote

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

தமிழ் சசி,
தமிழ்மணம்

தமிழ்மணத்தில் இருந்து சில பதிவுகள் நீக்கம்

May 29, 2009 – 12:02 am by செல்வராஜ்

தமிழ்மணத்தில் சேர்த்திருக்கும் சில பதிவுகளைத் திரட்டுவதில் இருந்து விலக்கி வருகிறோம். பிற செய்தித்தளங்கள், இணையதளங்களில் இருந்து பெரும்பாலும் வெட்டி ஒட்டிய இடுகைகளைக் கொண்டவற்றையும், பிறரின் காப்புரிமையை மதிக்காதவற்றையும், வெறும் அவதூறு மற்றும் வதந்தி பரப்பும் பதிவுகளையும், தமிழ்மணத்தின் சூழலை மாசுபடுத்துபவையையும் காலப்போக்கில் இனியும் விலக்கி விட முடிவு செய்திருக்கிறோம். அதோடு தமிழ்மணத்தில் இணைந்த தளங்கள் இப்போது தொழிற்படாமல் இருப்பின் (தளமே இல்லாதிருத்தல் போன்றன) அவற்றையும் நீக்க எண்ணியுள்ளோம். இது வாசகர்கள் பதிவர்கள் அனைவருக்கும் நன்மையையே தரும் என்பதோடு, தமிழ்மணத்தின் வழங்கிச் சுமையையும் குறைத்து நுட்ப அளவிலும் பயனுள்ளதாய் அமையும் என நம்புகிறோம்.

இம்முடிவைச் செயல்படுத்துகையில் தவறுதலாக ஏதேனும் பதிவு நீக்கப்பட்டால், மறுபரிசீலனை செய்து ஏற்றுக் கொள்ளவோ தொடர்ந்தும் விலக்கவோ உரிமையைத் தமிழ்மணம் தக்க வைத்துக் கொள்கிறது. இந்தச் செயற்பாட்டின் காரணமாகக் காலதாமதம் ஏற்பட நேரிட்டால் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறோம். முகப்புப் பக்கத்திலும் சில மாற்றங்களைச் சோதித்துப் பார்க்க எண்ணியிருக்கிறோம்.

பதிவர்கள் மற்றும் வாசகர்களுக்கு நல்ல வாசிப்பனுபவம் ஏற்படவும், தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளச் சுதந்திரமான ஒரு தளத்தை அமைத்துப் பேணுவதிலும் தொடர்ந்து தமிழ்மணம் ஈடுபடும்.

புரிந்துணர்வுடன் தொடரும் உங்கள் அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றி.

தமிழ்மணம் ஈழம்

May 18, 2009 – 1:25 am by தமிழ்மணம்

இறுதிப் போர் என சிறீலங்கா அரசால் அறிவிக்கப்பட்டு நடந்த ஈழப் போரில் பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். விமானத்தாக்குதல், ஆர்ட்டிலரி, செல் என பலவகையான கனரக ஆயுதங்களுக்கு பலியான தமிழர்களுக்கு தமிழ்மணம் தனது அஞ்சலியை செலுத்துகிறது. இந்த ’தமி்ழ்மணம் ஈழம்’ தளம் போரில் பலியான மக்களுக்கும், போராளி்களுக்கும் சமர்பிக்கப்படுகிறது
eelam

தொடரப் போகும் ஈழத்தின் அரசியல் போராட்டத்தை இந்த தளம் பதிவும் செய்யும்
eelam

தேர்தல் திரட்டி

March 29, 2009 – 7:23 pm by தமிழ்மணம்

தேர்தல் சார்ந்து பல கட்டுரைகளும், நல்ல தரமான அலசல்களும்
வலைப்பதிவுகளில் தொடர்ந்து எழுதப்படுகின்றன. இதனை ஒரே இடத்தில்
வாசிக்கும் வகையில் தமிழ்மணம் ஒரு தனி திரட்டியை உருவாக்கி இருக்கிறது.

http://therthal.tamilmanam.net

தேர்தல் என்ற குறிச்சொல்லுடன் எழுதப்படும் இடுகைகள் இந்த பக்கத்தில்
திரட்டப்படும்.

நன்றி…

நிர்வாகம்,
தமிழ்மணம்