முதற்கட்ட மற்றும் கடைசிக்கட்ட முடிவுகள் – தமிழ்மணம் விருதுகள் 2008

February 26, 2009 · Posted in அறிவிப்புகள் · 29 Comments 

தமிழ்மணம் விருதுகள் 2008 நிகழ்வுகள் இரண்டு கட்டங்களில் நிகழ்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சில தாமதங்களுடன் தொடங்கப்பட்டாலும், பதிவர்களின் மிகச்சிறந்த பங்களிப்புடன் முதலாம் கட்ட வாக்கெடுப்பு நடைபெற்றது. அதற்குப்பின்னர் விரைந்து மாறிய தமிழ்ச் சூழலில் இந்நிகழ்வினை தொடர்ந்து கொண்டு செல்லும் சூழ்நிலையில் எவரும் இல்லை. இன்னமும் கேள்விக்குறியுடன் தொக்கி நிற்கும் நடப்புச் சூழலில், இவ்விருதுகள் நிகழ்வினை முற்றிலும் ஒத்தி வைப்பதே சரியான முடிவாயிருக்க முடியும். எனினும், முதற்கட்ட நிகழ்வுகள் ஏற்கனவே சிறப்புற முடிவுற்ற காரணத்தினால், முதற்கட்ட வாக்கெடுப்பை மட்டும் கணக்கில் கொண்டு ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பெற்ற இடுகைகள் வெற்றி பெற்றவையாக அறிவிக்கப்படுகின்றது. வெற்றி பெற்ற இடுகைத் தொடுப்புகளை விருதுகள் பதிவில் காணலாம்
மேலும் ஏற்கனவே அறிவித்திருந்ததைப் போல ஒவ்வொரு பிரிவிலும் முதல் பத்து இடங்களைப் பெற்ற இடுகைகள் தமிழ்மண முகப்பில் தனியானதொரு பக்கத்தில் முன்னிறுத்தப்படும். தற்சமயம் இச் சுட்டியில் இவ்விடுகைகளைப் பார்வையிடலாம். பல பிரிவுகளில், சமமான வாக்குகளின் காரணமாக பத்திற்கும் மேற்பட்ட இடுகைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. வெற்றி பெற்ற பதிவர்களுக்கு வாழ்த்துக்களையும் ஆவலுடன் பங்குபற்றிய ஏனைய பதிவர்களுக்கு எமது நன்றியையும் உரித்தாக்குகிறோம்.

இத்தருணத்தில் விருதுகள் நிகழ்வின் தொழில்நுட்ப சேவைகளை வடிவமைது வழங்கிய தமிழ்மணம் நிறுவனர் காசி ஆறுமுகம் அவர்களுக்கும், உறுதுணையாயிருந்த ஏனைய தொழில்நுட்பக் குழு நண்பர்களுக்கும், நிகழ்விற்கு உந்துதலாயிருந்து ஒத்துழைத்த அனைத்து தமிழ்மணம் குழு நண்பர்களுக்கும் எமது நன்றி.

தமிழ்மணம் விருதுகள் 2008
ஒருங்கமைப்புக் குழுவிற்காக
பாலு

குறிப்பு:
1. வெற்றி பெற்ற பதிவர்கள் தங்களது முகவரியை admin@thamizmanam.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
2. வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கங்கள் இவ்விணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தங்களது பதிவில் இட விரும்புபவர்கள் உபயோகித்துக் கொள்ளலாம்.

இறுதிப் பரிந்துரைகளும், தவறான பரிந்துரைகளைச் சரி செய்தலும்

January 7, 2009 · Posted in அறிவிப்புகள் · 6 Comments 

Tamilamanam Blog Awards 2008 Nomination Last Date

தமிழ்மணம் விருதுகள் 2008க்கான பரிந்துரைகள் நாளை(சனவரி 8 ) இரவோடு நிறைவு பெறுகின்றன. இதுவரை பரிந்துரை செய்யாதவர்களும், தங்களது முன்னைய பரிந்துரைகளை மாற்ற விரும்புபவர்களும் இக்கடைசி வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனைய பதிவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட இடுகைகள் பரிந்துரைகள் பக்கத்தில் காணக்கிடைக்கின்றன.

விருதுப் பரிந்துரையின் ஆரம்பத்தில் ஏற்பட்ட சிறு வழுவினால் 2008க்கு முன்னர் எழுதப்பட்ட இடுகைகளும் பரிந்துரைப் பக்கத்தில் தெரிந்தது. அஃது விரைந்து சரி செய்யப்பட்டு விட்டாலும் சில பதிவர்கள் தங்களது பழைய இடுகைகளையும் இவ்வாண்டு விருதுக்குப் பரிந்துரைக்க அவ்வழு ஏதுவாக அமைந்துவிட்டது. எனினும் விருதுகள் 2008ன் நெறிமுறைகளின் படி அவ்விடுகைகளை ஏற்றுக் கொள்ள இயலாது. மாற்றப்படாத இடுகைகள் விருதுப் பரிந்துரையின் முடிவில் தானியங்கியாக நீக்கப்பட்டுவிடும். எனவே பழைய இடுகைகளைப் பரிந்துரைத்த பதிவர்கள், இக்கடைசி வாய்ப்பினைப் பயன்படுத்தி அவ்விடுகைகளுக்குப் பதிலாக இவ்வாண்டு (2008) இடுகைகளைப் பரிந்துரைக்க வேண்டுகிறோம்.

தமிழ்மணம் விருதுகள் 2008ல் பங்குபற்றும் அனைத்துப் பதிவர்களுக்கும் எமது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் விருதுத் தெரிவுகள் பற்றிய தகவல்கள் உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

தமிழ்மணம் விருதுகள் 2009 – ஒருங்கமைப்புக் குழு