மதம் சம்பந்தமான அவதூற்று இடுகைகளை நீக்குதல்

May 5, 2012 · Posted in தமிழ்மணம் · 71 Comments 

மதம் சம்பந்தமான தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காகத் தமிழ்மணம் முற்றிலும் மதம் சார்ந்த பதிவுகளைச் சேர்க்காதிருப்பதை விதியாகக் கொண்டிருப்பதைத் தமிழ்மணம் பயனாளிகள் அறிவீர்கள். அதேநேரத்திலே, கருத்துச்சுதந்திரம் கருதி பொதுவான பதிவொன்றிலே வரும் மதம் சம்பந்தமான இடுகைகள் ஓரிரண்டைத் தமிழ்மணம் இணைக்கிறது.

ஆயினும், அண்மைக்காலத்திலே மதம் சம்பந்தமான இடுகைகளாலே சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரை, மகுடம் பிரிவுகள் தொடர்ச்சியாக, குழு அடிப்படையிலே வாக்கிடப்பட்டு நிரப்பப்படுவதாலே வேறு பல நல்ல இடுகைகள் தெரியாமலே மறைந்துபோவதைப் பலர் சுட்டிக்காட்டியிருந்தீர்கள். மேலும், கடந்த ஒரு வாரமாக, மதம் சார்ந்து இரு பிரிவினரிடையே ஏற்பட்டிருக்கும் சொந்தத்தகராறின் காரணமாக, தமிழ்மணம் வெறும் அவதூறுகளின் தொகுப்பாகக் காட்சியளிப்பதினை இனிமேலும் அனுமதிக்கமுடியாது. பதிவர்கள் சுயதணிக்கை செய்து பொறுப்புணர்வுடன் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையோடு சில நாட்கள் எதையும் மட்டுறுத்தாது தமிழ்மணம் நிர்வாகம் அவகாசமளித்துப் பொறுத்திருந்தது. ஆயினும், அவ்வண்ணம் இதுவரை நடக்காததின் காரணமாக உடனடியாக நிர்வாகம் கீழ்க்கண்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.

1. அவதூறான இடுகைகள் உடனடியாக நீக்கப்படும்
2. தொடர்ச்சியான அவதூறுகொண்ட இடுகைகளையிடும் பதிவுகள் மொத்தமாக நீக்கப்படும்

பதிவர்களையும் இப்படியான அவதூறான, மதம் சார்ந்த இடுகைகள் தமிழ்மணத்திலே தோன்றும்போது வரும் வாரத்திலிருந்து சுட்டிக்காட்டுமாறு வேண்டுகிறோம். ஆயினும், தமிழ்மணத்துக்கான அஞ்சல்கள், பின்னூட்டங்களுக்குத் தொடர்ச்சியாக விளக்கமளிப்பதற்கும் உடனடியாக விளக்கமளிப்பதற்கும் நிர்வாகத்தினாலே முடியாதென்பதையும் தெரிவித்துக்கோள்கிறோம்.

தொடர்ச்சியான புரிதலுக்கு நன்றி.

தமிழ்மணம் நிர்வாகம்

தமிழ்மணம் விருதுகள் 2008 – இடுகைப் பரிந்துரைகள் துவக்கம்

December 25, 2008 · Posted in அறிவிப்புகள் · 21 Comments 

தமிழ்மணம் பதிவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய விருதுகள் 2008 க்கான இடுகைப் பரிந்துரைகள் இன்றுமுதல் துவங்குகின்றன. உங்களது இடுகைப் பரிந்துரைக்கான சிறப்புத் தொடுப்பு, தமிழ்மணத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு இன்று அனுப்பப்படுகிறது. இம்மின்னஞ்சல் தானியங்கியாக அனுப்பப்படுவதால் அம்முகவரியை எவ்விதத்திலும் உபயோகிக்க இயலாது.

மின்னஞ்சல் பெறுவதற்கு உங்களது பதிவு 01-11-2008க்கு முன்னர் தமிழ்மணத்தில் இணைக்கப் பட்டிருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்டிருக்கும் மின்னஞ்சலை மாற்றுவதற்கான கோரிக்கைகள் தற்சமயம் ஏற்றுக்கொள்ளப் பட இயலாது. எனினும் மின்னஞ்சல் கிடைக்கப்பெறாதவர்கள் பின்னூட்டத்திலோ அல்லது admin@thamizmanam.com எனும் முகவரிக்கோ தொடர்பு கொள்ளலாம். இஃது விடுமுறைக்காலமாதலால் பதிலிறுப்பதில் அதிகமான காலதாமதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

இடுகைப் பரிந்துரைகள் இன்று தொடக்கம் 07-01-2009 வரையான கால இடைவெளியில் ஏற்றுக்கொள்ளப்படும். இடுகைப் பரிந்துரைகள் மற்றும் விருதுத் தெரிவு முறைகள் பற்றிய விரிவான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

பரிந்துரைகள் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது போல் கீழ்க்காணும் 12 பிரிவுகளுக்கு நடைபெறுகிறது. இதில் ஏதாவது 3 பிரிவுகளுக்கு மட்டுமே உங்களது இடுகைகளைப் பரிந்துரைக்க இயலும்.

1. படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)
2. காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், திரைப்படம்)
3. நூல், திரைப்படம் அறிமுகம்/திறனாய்வுகள்
4. அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பக் கட்டுரைகள்
5. பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
6. செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்
7. அரசியல், சமூக விமர்சனங்கள்
8. பெண்கள் பிரச்னைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள், தலித்திய சிக்கல்கள்
9. ஈழ மக்களின் சமூக-பொருளாதாரச் சிக்கல்கள்
10. தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல்
11. நகைச்சுவை, கார்ட்டூன்
12. சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம்.

ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பெரும் இடுகைகள் வெற்றி பெற்றவையாக கருதப்படும். வெற்றி பெரும் பதிவர்கள் உபயோகித்துக் கொள்ளும் வகையிலான மாதிரிப் பதக்கம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் 2008

விருதுகள் நிகழ்வுகள், வலைப்பதிவுகள் எனும் ஊடகத்தை மிகச்சிறந்த முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், பொதுவெளியில் வலைப்பதிவுகளின் தாக்கத்தினை அதிகரிக்கவுமான ஒரு ஆக்கப்பூர்வமான நிகழ்வு மட்டுமே. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்மணம் விருதுகள் 2008ல் ஒவ்வொரு பதிவரினதும் சிறந்த இடுகைப் பரிந்துரைகளை ஏனைய பதிவர்கள் போல் தமிழ்மணம் குழுவினரும் மிக்க ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.

தமிழ்மணம் விருதுகள் 2008 – ஒருங்கமைப்புக் குழு

தமிழ்மணம் விருதுகள் 2008

Tamilmanam Blog Awards 2008

1. தமிழ்மண விருதுகள் பதிவை எப்பப் போடலாம்னு நினைக்கறீங்க?
2. ஏன், இன்னைக்கே கூட போட்டுடலாம்.

1. முழுமையான அறிவிப்ப வெளியிடப் போறோமா, இல்லை முன்னோட்ட அறிவிப்பு மட்டும் தானா?
2. இப்போதைக்கு முன்னோட்ட அறிவிப்பு மட்டும் போதும்.

1. ஏற்கனவே விருதுகள் 2007 அறிவிச்சிட்டு, அப்படியே காணாம போயிட்டோம். அதனால…
2. அப்போ ஏற்பட்ட குழப்பங்கள் இந்த முறை இருக்காது. தெரிவை எளிமையாக்குறதுக்கான நிரல்கள் பாதி தயாரா இருக்கு. இன்னும் சில நாட்கள்ல முழுமையான சோதனைய நடத்திப் பார்த்திடலாம்.

1. அப்படின்னா முழுமையான அறிவிப்பையே வெளியிட்டுடலாமே?
2. வேண்டாம். முழுமையான அறிவிப்பை நிரல் சோதனைகள் முடிஞ்சபின்னாடி வெளியிடலாம். இப்போதைக்குப் பதிவர்களுக்கு இப்படி ஒரு திட்டம் இருக்குற தகவலை மட்டும் சொல்லிடலாம். சரியா?