முதற் கட்ட வாக்கெடுப்பு – தமிழ்மணம் விருதுகள் 2008

January 11, 2009 · Posted in அறிவிப்புகள் · 17 Comments 

Tamilmanam Blogger Awards  2008 - First Phase of Voting

அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த தமிழ்மணம் விருதுகள் 2008ன் முதற்கட்ட வாக்கெடுப்பு இன்று முதல் (சனவரி 12) தொடங்குகிறது. முதற்கட்ட வாக்கெடுப்பு தமிழ்மணத்தில் பதிவு செய்துள்ள பதிவர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வாகும். தற்சமயம் பதிவர்கள் வாக்கிடுவதற்கான சிறப்புத் தொடுப்பினை உள்ளடக்கிய மின்னஞ்சல் பதிவர்களுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாக்கெடுப்பு இன்றிலிருந்து சனவரி 18ம் தேதி வரை நடைபெறும்.

வாக்களிப்பது பற்றிய சில குறிப்புகள்:

1. பிரிவுக்கு ஒன்றாக 12 பிரிவுகளிலும் பதிவர்கள் வாக்களிக்க இயலும். குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு மட்டுமே கூட வாக்களிக்க முடியுமென்றாலும், அனைத்துப் பிரிவுகளிலும் வாக்களிப்பது சிறந்ததாக இருக்கும்.

2. முதன்மை வாக்களிப்புப் பக்கத்தில், ஒவ்வொரு பிரிவின் கீழேயும் அப்பிரிவிற்கான தொடுப்பு இணைக்கப்பட்டுள்ளது. இத்தொடுப்பின் மூலம் அப்பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இடுகைகளைப் பார்வையிட்டு வாக்களிக்கலாம்.

3. புதிதாக மேலெழும்பும் சன்னலின் வழியாக வாக்களித்தவுடன் மீண்டும் முதன்மை வாக்களிப்புப் பக்கத்திற்கு வந்து அடுத்தடுத்த பிரிவுகளுக்கு வாக்களிக்க வேண்டும்

4. அனைத்துப் பிரிவுகளுக்கும் வாக்களித்த பின்னர் முதன்மைப்பக்கதின் கடைசியில் உள்ள “வாக்கை உறுதி செய்கிறேன்” என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் உங்கள் வாக்கு தமிழ்மணத்திற்கு வந்து சேரும். இவ்வாறு உறுதி செய்யப்படாத வாக்குகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படாது.

5. அளித்த வாக்கினை வாக்கெடுப்பு நடக்கும் காலக்கெடுவுக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்ற இயலும். ஒவ்வொரு முறையும் தவறாமல் அளிக்கப்படும் வாக்கினை உறுதி செய்தல் வேண்டும்.

6. இவ்வாக்கெடுப்பு ரகசியமான ஒன்று. எனவே பதிவர்களின் தனிப்பட்ட வாக்கு விவரங்கள் வெளியிடப்படாது.

ஆர்வத்துடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்பிற்கும் பங்களிப்பிற்கும் நன்றி.

தமிழ்மணம் விருதுகள் 2008 – ஒருங்கமைப்புக் குழு