தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் பதிவுத்தலைப்புகளை மட்டுறுத்தல்

தமிழ்மணம் ஒரு சமூக தளமாக பல்வேறு மக்களின் கருத்துகளை சுதந்திரமாக வெளியிடும் தளமாக இருந்து வருகிறது. அண்மையிலே தமிழ்மணம் நிர்வாகிகளின் தமிழகப் பயணத்தின் பொழுது புதுவை உள்ளிட்ட பகுதியில் உள்ள பதிவர்கள் சூடான சில இடுகை வார்த்தைகள் தமிழ்மணம் குறித்த தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து இருந்தார்கள். முழு கட்டுரையும் தமிழ்மணத்தில் இல்லாத நிலையில், வெறும் தலைப்பு மட்டுமே தமிழ்மணத்தில் வரிசையாக இத்தகைய சொற்கள் கொண்டவைகளாக உள்ள சூழ்நிலையில் தமிழ்மணம் குறித்த தவறான எண்ணம் ஏற்படுவது இயல்பானது.

அதனால், பரந்து பட்ட அளவிலே பதிவர்களிடையே தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் சொற்களைத் தலைப்பிற் கொள்ளும் இடுகைகளை மட்டுறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். தமிழ்மணம் திரட்டும் பதிவுகளின் தலைப்புகளில் உள்ள அப்படியான வார்த்தைகளை மட்டுறுத்தும் நுட்பத்தை தமிழ்மணம் தற்பொழுது கொண்டு வந்துள்ளது. அப்படியான சொற்களை மட்டுமே தமிழ்மணம் மட்டுறுத்தி உள்ளது. அவற்றினைக் கொண்ட இடுகைகளை தமிழ்மணம் நீக்கவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் வார்த்தைகளை கொண்ட இடுகைகள் மட்டுறுத்தப்பட்டு அண்மையில் எழுதப்பட்ட இடுகைகள் பகுதியில் வெளியாகும். ஆனால் சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரை, மறுமொழிகள் பகுதி போன்ற சிறப்பு பகுதியில் இந்த இடுகைகள் இடம்பெறாது. பெரும்பாலான இடுகைகளின் தலைப்புகள் இத்தகைய சிறப்பு பகுதியில் இடம் பிடிக்கவும், வாசகர்களை தொடர்ந்து இழுக்கவுமே வைக்கப்படுவதாக தமிழ்மணம் நம்புவதால் இந்த ஏற்பாட்டினை செய்துள்ளோம்.

தமிழ்மணம் தனது வாசகர் தளத்தை விரிவு படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கூகுள் மூலமாக தமிழ்மணம் தளத்தை விளம்பரம் செய்கிறோம். இது தமிழ்மணம், பதிவர்கள் இருவருக்குமே அதிக வாசகர்களை கொண்டு வரும். நிறைய புதிய பதிவர்களும், வாசகர்களும் தமிழ்மணம் தளத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளதை சமீபகாலங்களில் பார்த்து வருகிறோம்.

தமிழ் வலைப்பதிவு சூழல் குறித்து ஒன்றுமே தெரியாத நிலையில் புதியதாக தமிழ்மணத்திற்கு வரும் ஒரு வாசகர் வரிசையாக “காமக் கதைகள்” என்ற தலைப்புகளை பார்த்தால் தமிழ்மணம் குறித்து என்ன நினைப்பார் என்று எண்ணிப் பாருங்கள். அதனை எண்ணியே இப்படியான நடவடிக்கையினை மேற்கொண்டோம்.

எந்த தனிப்பட்ட பதிவருக்கும் எதிராக இந்த மட்டுறுத்தும் நுட்பம் செய்யப்படவில்லை. தமிழ்மணம் சமூகத்தின் சுமூகமான வளர்ச்சிக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த நுட்பமும் தமிழ்மணம் முகப்பில் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்மணத்தின் பிற பக்கங்களில் எந்த மட்டுறுத்தலும் செய்யப்படவில்லை

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி

நிர்வாகம்,
தமிழ்மணம்