தமிழ்மணத்தில் இருந்து சில பதிவுகள் நீக்கம்

தமிழ்மணத்தில் சேர்த்திருக்கும் சில பதிவுகளைத் திரட்டுவதில் இருந்து விலக்கி வருகிறோம். பிற செய்தித்தளங்கள், இணையதளங்களில் இருந்து பெரும்பாலும் வெட்டி ஒட்டிய இடுகைகளைக் கொண்டவற்றையும், பிறரின் காப்புரிமையை மதிக்காதவற்றையும், வெறும் அவதூறு மற்றும் வதந்தி பரப்பும் பதிவுகளையும், தமிழ்மணத்தின் சூழலை மாசுபடுத்துபவையையும் காலப்போக்கில் இனியும் விலக்கி விட முடிவு செய்திருக்கிறோம். அதோடு தமிழ்மணத்தில் இணைந்த தளங்கள் இப்போது தொழிற்படாமல் இருப்பின் (தளமே இல்லாதிருத்தல் போன்றன) அவற்றையும் நீக்க எண்ணியுள்ளோம். இது வாசகர்கள் பதிவர்கள் அனைவருக்கும் நன்மையையே தரும் என்பதோடு, தமிழ்மணத்தின் வழங்கிச் சுமையையும் குறைத்து நுட்ப அளவிலும் பயனுள்ளதாய் அமையும் என நம்புகிறோம்.

இம்முடிவைச் செயல்படுத்துகையில் தவறுதலாக ஏதேனும் பதிவு நீக்கப்பட்டால், மறுபரிசீலனை செய்து ஏற்றுக் கொள்ளவோ தொடர்ந்தும் விலக்கவோ உரிமையைத் தமிழ்மணம் தக்க வைத்துக் கொள்கிறது. இந்தச் செயற்பாட்டின் காரணமாகக் காலதாமதம் ஏற்பட நேரிட்டால் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறோம். முகப்புப் பக்கத்திலும் சில மாற்றங்களைச் சோதித்துப் பார்க்க எண்ணியிருக்கிறோம்.

பதிவர்கள் மற்றும் வாசகர்களுக்கு நல்ல வாசிப்பனுபவம் ஏற்படவும், தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளச் சுதந்திரமான ஒரு தளத்தை அமைத்துப் பேணுவதிலும் தொடர்ந்து தமிழ்மணம் ஈடுபடும்.

புரிந்துணர்வுடன் தொடரும் உங்கள் அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றி.

செய்திகளைத் தனியே திரட்டுதல்

September 7, 2008 · Posted in அறிவிப்புகள் · 3 Comments 

வலைப்பதிவுகளின் பெரிய வலிமை யாதெனில், அது சுயமான எழுத்து வெளிப்பாட்டிற்கு உதவுவது ஆகும். ஆரோக்கியமான சமூக மாற்றங்களுக்கு வழி வகுக்கும் வகையில் தமது சொந்த அனுபவங்களையும், கருத்துக்களையும் பகிர்வது வலைப்பதிவுகளின் நோக்கமாக இருப்பது சிறந்தது. இதனை ஊக்குவிக்கும் பொருட்டு, வேறு இணைய/அச்சுப் பக்கங்களிலிருந்து வெட்டி ஒட்டி வெளிவரும் பதிவுகளைத் தனியே திரட்ட தமிழ்மணம் விரும்புகிறது.

இவை பெரும்பாலும் செய்திகளாக இருப்பதால், செய்திகள் என்ற பட்டியின் கீழே இவை தொகுக்கப்பட்டிருக்கின்றன. இப் பிரிவின் கீழ் வரத் தகுந்த பதிவுகள் ஏதேனும்
விடுபட்டிருந்தால், அப்பதிவுகளை அறியத் தருமாறு பதிவர்களை வேண்டுகிறோம். செய்திகளை மட்டும் தேடி வாசிப்பவர்களுக்கும் இந்த ஏற்பாடு உதவிகரமாக இருக்கும்
என நம்புகிறோம்.

புரிந்துணர்வுடன் தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி

அன்புடன்,
தமிழ்மணம்