முதற்கட்ட மற்றும் கடைசிக்கட்ட முடிவுகள் – தமிழ்மணம் விருதுகள் 2008

February 26, 2009 · Posted in அறிவிப்புகள் · 29 Comments 

தமிழ்மணம் விருதுகள் 2008 நிகழ்வுகள் இரண்டு கட்டங்களில் நிகழ்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சில தாமதங்களுடன் தொடங்கப்பட்டாலும், பதிவர்களின் மிகச்சிறந்த பங்களிப்புடன் முதலாம் கட்ட வாக்கெடுப்பு நடைபெற்றது. அதற்குப்பின்னர் விரைந்து மாறிய தமிழ்ச் சூழலில் இந்நிகழ்வினை தொடர்ந்து கொண்டு செல்லும் சூழ்நிலையில் எவரும் இல்லை. இன்னமும் கேள்விக்குறியுடன் தொக்கி நிற்கும் நடப்புச் சூழலில், இவ்விருதுகள் நிகழ்வினை முற்றிலும் ஒத்தி வைப்பதே சரியான முடிவாயிருக்க முடியும். எனினும், முதற்கட்ட நிகழ்வுகள் ஏற்கனவே சிறப்புற முடிவுற்ற காரணத்தினால், முதற்கட்ட வாக்கெடுப்பை மட்டும் கணக்கில் கொண்டு ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பெற்ற இடுகைகள் வெற்றி பெற்றவையாக அறிவிக்கப்படுகின்றது. வெற்றி பெற்ற இடுகைத் தொடுப்புகளை விருதுகள் பதிவில் காணலாம்
மேலும் ஏற்கனவே அறிவித்திருந்ததைப் போல ஒவ்வொரு பிரிவிலும் முதல் பத்து இடங்களைப் பெற்ற இடுகைகள் தமிழ்மண முகப்பில் தனியானதொரு பக்கத்தில் முன்னிறுத்தப்படும். தற்சமயம் இச் சுட்டியில் இவ்விடுகைகளைப் பார்வையிடலாம். பல பிரிவுகளில், சமமான வாக்குகளின் காரணமாக பத்திற்கும் மேற்பட்ட இடுகைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. வெற்றி பெற்ற பதிவர்களுக்கு வாழ்த்துக்களையும் ஆவலுடன் பங்குபற்றிய ஏனைய பதிவர்களுக்கு எமது நன்றியையும் உரித்தாக்குகிறோம்.

இத்தருணத்தில் விருதுகள் நிகழ்வின் தொழில்நுட்ப சேவைகளை வடிவமைது வழங்கிய தமிழ்மணம் நிறுவனர் காசி ஆறுமுகம் அவர்களுக்கும், உறுதுணையாயிருந்த ஏனைய தொழில்நுட்பக் குழு நண்பர்களுக்கும், நிகழ்விற்கு உந்துதலாயிருந்து ஒத்துழைத்த அனைத்து தமிழ்மணம் குழு நண்பர்களுக்கும் எமது நன்றி.

தமிழ்மணம் விருதுகள் 2008
ஒருங்கமைப்புக் குழுவிற்காக
பாலு

குறிப்பு:
1. வெற்றி பெற்ற பதிவர்கள் தங்களது முகவரியை admin@thamizmanam.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
2. வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கங்கள் இவ்விணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தங்களது பதிவில் இட விரும்புபவர்கள் உபயோகித்துக் கொள்ளலாம்.

முதற்கட்ட வாக்குப்பதிவு நீட்டிப்பு

January 18, 2009 · Posted in அறிவிப்புகள் · 12 Comments 

Tamilmanam Blogger Awards 2008- Extending first phase polls
தமிழ்மணம் விருதுகள் 2008ற்கான முதற்கட்ட வாக்கெடுப்பில் இதுவரை ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாக்களித்த பதிவர்களுக்கு நன்றி. அதிக எண்ணிக்கையிலான இடுகைகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தும், பதிவர்களின் பங்களிப்பு எதிர்நோக்கப்பட்ட எண்ணிக்கையைத் தாண்டியுள்ளமை மகிழ்ச்சியை அளிக்கிறது.

நிற்க. முதற்கட்ட வாக்கெடுப்பில் எமது தரவுத் தளத்தில் ஏற்பட்ட வழுவின் காரணமாக சில வாக்குகளின் பிரிவுகள் தவறுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புபட்ட பதிவர்களுக்கு மட்டும் சிறப்பு மின்னஞ்சல் மூலம் தங்கள் வாக்கினை மீள அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிறப்பு மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றவர்கள் தங்களது வாக்கினை மீள அளிக்குமாறு இதன்மூலம் மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.

அதிக எண்ணிக்கையினையும், வழுவினையும் கருத்தில் கொண்டு முதற்கட்ட வாக்கெடுப்பு சனவரி 22ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

தொடரும் உங்களின் ஆர்வத்திற்கும், பங்களிப்பிற்கும் நன்றி.

தமிழ்மணம் விருதுகள் 2008 – ஒருங்கமைப்புக் குழு

முதற் கட்ட வாக்கெடுப்பு – தமிழ்மணம் விருதுகள் 2008

January 11, 2009 · Posted in அறிவிப்புகள் · 17 Comments 

Tamilmanam Blogger Awards  2008 - First Phase of Voting

அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த தமிழ்மணம் விருதுகள் 2008ன் முதற்கட்ட வாக்கெடுப்பு இன்று முதல் (சனவரி 12) தொடங்குகிறது. முதற்கட்ட வாக்கெடுப்பு தமிழ்மணத்தில் பதிவு செய்துள்ள பதிவர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வாகும். தற்சமயம் பதிவர்கள் வாக்கிடுவதற்கான சிறப்புத் தொடுப்பினை உள்ளடக்கிய மின்னஞ்சல் பதிவர்களுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாக்கெடுப்பு இன்றிலிருந்து சனவரி 18ம் தேதி வரை நடைபெறும்.

வாக்களிப்பது பற்றிய சில குறிப்புகள்:

1. பிரிவுக்கு ஒன்றாக 12 பிரிவுகளிலும் பதிவர்கள் வாக்களிக்க இயலும். குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு மட்டுமே கூட வாக்களிக்க முடியுமென்றாலும், அனைத்துப் பிரிவுகளிலும் வாக்களிப்பது சிறந்ததாக இருக்கும்.

2. முதன்மை வாக்களிப்புப் பக்கத்தில், ஒவ்வொரு பிரிவின் கீழேயும் அப்பிரிவிற்கான தொடுப்பு இணைக்கப்பட்டுள்ளது. இத்தொடுப்பின் மூலம் அப்பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இடுகைகளைப் பார்வையிட்டு வாக்களிக்கலாம்.

3. புதிதாக மேலெழும்பும் சன்னலின் வழியாக வாக்களித்தவுடன் மீண்டும் முதன்மை வாக்களிப்புப் பக்கத்திற்கு வந்து அடுத்தடுத்த பிரிவுகளுக்கு வாக்களிக்க வேண்டும்

4. அனைத்துப் பிரிவுகளுக்கும் வாக்களித்த பின்னர் முதன்மைப்பக்கதின் கடைசியில் உள்ள “வாக்கை உறுதி செய்கிறேன்” என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் உங்கள் வாக்கு தமிழ்மணத்திற்கு வந்து சேரும். இவ்வாறு உறுதி செய்யப்படாத வாக்குகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படாது.

5. அளித்த வாக்கினை வாக்கெடுப்பு நடக்கும் காலக்கெடுவுக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்ற இயலும். ஒவ்வொரு முறையும் தவறாமல் அளிக்கப்படும் வாக்கினை உறுதி செய்தல் வேண்டும்.

6. இவ்வாக்கெடுப்பு ரகசியமான ஒன்று. எனவே பதிவர்களின் தனிப்பட்ட வாக்கு விவரங்கள் வெளியிடப்படாது.

ஆர்வத்துடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்பிற்கும் பங்களிப்பிற்கும் நன்றி.

தமிழ்மணம் விருதுகள் 2008 – ஒருங்கமைப்புக் குழு