மதம் சம்பந்தமான அவதூற்று இடுகைகளை நீக்குதல்

May 5, 2012 · Posted in தமிழ்மணம் · 71 Comments 

மதம் சம்பந்தமான தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காகத் தமிழ்மணம் முற்றிலும் மதம் சார்ந்த பதிவுகளைச் சேர்க்காதிருப்பதை விதியாகக் கொண்டிருப்பதைத் தமிழ்மணம் பயனாளிகள் அறிவீர்கள். அதேநேரத்திலே, கருத்துச்சுதந்திரம் கருதி பொதுவான பதிவொன்றிலே வரும் மதம் சம்பந்தமான இடுகைகள் ஓரிரண்டைத் தமிழ்மணம் இணைக்கிறது.

ஆயினும், அண்மைக்காலத்திலே மதம் சம்பந்தமான இடுகைகளாலே சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரை, மகுடம் பிரிவுகள் தொடர்ச்சியாக, குழு அடிப்படையிலே வாக்கிடப்பட்டு நிரப்பப்படுவதாலே வேறு பல நல்ல இடுகைகள் தெரியாமலே மறைந்துபோவதைப் பலர் சுட்டிக்காட்டியிருந்தீர்கள். மேலும், கடந்த ஒரு வாரமாக, மதம் சார்ந்து இரு பிரிவினரிடையே ஏற்பட்டிருக்கும் சொந்தத்தகராறின் காரணமாக, தமிழ்மணம் வெறும் அவதூறுகளின் தொகுப்பாகக் காட்சியளிப்பதினை இனிமேலும் அனுமதிக்கமுடியாது. பதிவர்கள் சுயதணிக்கை செய்து பொறுப்புணர்வுடன் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையோடு சில நாட்கள் எதையும் மட்டுறுத்தாது தமிழ்மணம் நிர்வாகம் அவகாசமளித்துப் பொறுத்திருந்தது. ஆயினும், அவ்வண்ணம் இதுவரை நடக்காததின் காரணமாக உடனடியாக நிர்வாகம் கீழ்க்கண்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.

1. அவதூறான இடுகைகள் உடனடியாக நீக்கப்படும்
2. தொடர்ச்சியான அவதூறுகொண்ட இடுகைகளையிடும் பதிவுகள் மொத்தமாக நீக்கப்படும்

பதிவர்களையும் இப்படியான அவதூறான, மதம் சார்ந்த இடுகைகள் தமிழ்மணத்திலே தோன்றும்போது வரும் வாரத்திலிருந்து சுட்டிக்காட்டுமாறு வேண்டுகிறோம். ஆயினும், தமிழ்மணத்துக்கான அஞ்சல்கள், பின்னூட்டங்களுக்குத் தொடர்ச்சியாக விளக்கமளிப்பதற்கும் உடனடியாக விளக்கமளிப்பதற்கும் நிர்வாகத்தினாலே முடியாதென்பதையும் தெரிவித்துக்கோள்கிறோம்.

தொடர்ச்சியான புரிதலுக்கு நன்றி.

தமிழ்மணம் நிர்வாகம்