தமிழ்மணம் பதிவர்களுக்கு சில விளக்கங்கள்

October 17, 2011 · Posted in தமிழ்மணம் · 101 Comments 

தமிழ்மணம் இணையத்தளம் 2004ல் இருந்து கடந்த ஏழு ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்மணத்தை தொடர்ந்து பயன்படுத்தி வரும் வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் தமிழ்மணம் எவ்வாறு தனது கொள்கை முடிவுகளை அறிவிக்கிறது என்பதை நாங்கள் விளக்க வேண்டியதில்லை. என்றாலும் அண்மைக்காலங்களில் தமிழ்மணத்தில் இணைந்திருக்கும் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நாம் இதனை தெரிவிக்க வேண்டியுள்ளது.

தமிழ்மணம் தளம் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இந்நிறுவனம் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு அமெரிக்க அரசாங்கத்தின் சட்டதிட்டங்களின் படி நடத்தப்படும் தொண்டு நிறுவனம். எனவே, தமிழ்மணம் தளம் என்பது ஒரு தனிநபரின் தளம் அல்ல. ஒரு நிறுவனத்தின் தளம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்மணம் தளம் தன்னுடைய கொள்கை முடிவுகளை எப்பொழுதும் தமிழ்மணத்தின் அதிகார்வப்பூர்வமான வலைப்பதிவான இந்த வலைப்பதிவிலும், மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அறிவித்து வந்திருக்கிறது. அதைத் தவிர வேறு எங்கும் அறிவிப்பது இல்லை. அதேபோல் தமிழ்மணத்தின் கருத்துக்களை அறிய விரும்புவர்களும், தம் கருத்துக்களைத் தமிழ்மணத்துக்குத் தெரிவிக்க விரும்புவர்களும் தமிழ்மணத்தின் மின்னஞ்சல் முகவரியான admin@thamizmanam.com என்ற மின்னஞ்சலுக்கு மட்டுமே தொடர்பு கொள்ளவும். தங்களுடைய பதிவுகளில் வெளியிடுவதால் எந்தப் பயனுமில்லை.

கடந்த சில மாதங்களாகவே தமிழ்மணம் முகப்பில் மிக மலினமாக எழுதப்படும் மொக்கைப் பதிவுகளும், ஒட்டி வெட்டும் காப்புரிமைகளை மீறும் பதிவுகளும், மத, ஜோதிடப்பதிவுகளும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளதாயும், காத்திரமான எழுத்துகள் சில மணிநேரங்கள் கூட நிலைப்பதில்லை என்றும் வலைப்பதிவர்களும், வாசகர்களும் எங்களுக்குத் தொடர்ந்து கவலை தெரிவித்து வந்தனர். இது தமிழ்மணத்தின் நோக்கத்தையே தோற்கடிப்பதாயுள்ளது என்று நாங்கள் கருதியபடியால் முதல் இரண்டுவகைப் பதிவுகளை விலக்கவும் மூன்றாவது வகைப்பதிவுகளை வேண்டுமானால் விளம்பரப் பதிவுகளாக அனுமதிக்கவும் முடிவு செய்திருந்தோம். இம்முடிவைப்பற்றி இரு வாரங்களுக்கு முன்பு எம்முடைய நட்சத்திர வாரத்தில் மிகத்தெளிவாக அறிவித்தும் இருந்தோம்.

இம்முடிவின் அடிப்படையிலேயே கடந்த வாரத்தில் சில பதிவுகளை விலக்கவும் செய்தோம். எப்பதிவுகளை விலக்குவது என்பதை கீழே கொடுக்கப்பட்ட நான்கு நிர்வாகிகளே இணைந்து முடிவெடுத்து வந்திருந்தாலும், அம்முடிவை நடைமுறைப்படுத்துவதையும், தேவைப்பட்டால் பதிவர்களின் மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பதையும் எங்களில் யாரொருவருக்கு கால அவகாசம் இருக்கிறதோ அவர் செய்து வந்திருக்கிறோம்.
இருப்பினும் எங்களுடைய கொள்கைமுடிவை வேண்டுமென்றே தவறாகத் திரித்து சில மொக்கைபதிவுகள் எழுதப்பட்டன. இப்பதிவுகளில் திரிக்கப்பட்ட ஒருசிலதகவல்களை மட்டும் மறுக்கும் வண்ணம் எங்கள் நிர்வாகிகளுள் ஒருவர் ஒரு பதிவில் போய் தன்னுடைய கருத்தைப் பின்னூட்டமாகப் பதிவு செய்திருக்கிறார். கடந்த காலங்களில் கூட தொழில் நுட்பம் போன்றவற்றில் எங்களுடைய நிர்வாகிகள் ஓரிருமுறைகள் இதேபோல் பிற பதிவுகளில் விளக்கம் அளித்திருக்கிறபடியால் இம்முறையும் ஒருநிர்வாகி விளக்கம் அளிக்க முற்பட்டிருக்கிறார். இதுபோன்ற பின்னூட்டங்கள் எவையுமே தமிழ்மணத்தின் பயனர் கணக்கின் கீழ எழுதப்பட்டவை அல்ல. நிர்வாகிகளின் சொந்த மின்னஞ்சற் கணக்குகளிலே எழுதப்பட்டவையே என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அவை தமிழ்மணம் குழுவில் அனைவராலும் இணைந்து தயாரிக்கப்பட்ட வரைவாக இல்லாமல் நிர்வாகிகளின் தனிப்பட்ட கருத்துகளாகவே எழுதப்பட்டவை. மேலும் குறிப்பிட்ட அப்பதிவில் அவர்மேல் சில அனானித் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டிருப்பதால் அந்த நிர்வாகியும் ஒரு விளக்கப் பின்னூட்டத்தோடு நிறுத்தாமல் தொடர்ந்து வாதம் செய்ய அதுமுழுச் சண்டையில் போய் முடிந்திருக்கிறது.

தமிழ்மணம் நிர்வாகி தன் சொந்தப்பெயரில், தன் சொந்தக் கருத்துக்களைப் பின்னூட்டமிட்டாலும், அவர் தமிழ்மணம் நிர்வாகத்தின் முடிவை விளக்க முற்பட்டதால் அவை தமிழ்மணத்தின் கருத்துகளாக ஒருசிலரால் தவறாகக் கருதப்பட்டிருக்கலாம். அவரின் சொந்தக் கருத்துகளுக்கும், தமிழ்மணம் குழுவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவாகக்கூறி இக்குழப்பம் நிகழ்ந்ததற்கு எங்கள் வருத்தத்தைத் தெரிவிக்கிறோம்.

எங்கள் நட்சத்திர இடுகைகளில் சொல்லப்பட்ட முடிவுகளை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புகிறோம். தமிழ்மணம் காத்திரமான பதிவுகளைத் திரட்டும் தளமாகப் பயணிக்க விரும்புகிறது. வெற்று ஆரவார மொக்கைப் பதிவுகள் தமிழ்மணம் முகப்பை ஆக்கிரமிப்பது குறித்து பல பதிவர்களும் வாசகர்களும் எங்களுக்கு விடுத்த வேண்டுகோள்களைச் சார்ந்தே தற்பொழுது சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்த நடவடிக்கைகள் தமிழ்மணத்தை ஒரு ஆக்கப்பூர்வமான பாதைக்கு கொண்டு செல்லும் என நம்புகிறோம். தமிழ்மணத்தின் இந்தக் கருத்தினைச் சார்ந்த விமர்சனங்களை வரவேற்கும் அதே நேரத்தில் இந்த கொள்கை முடிவினை விரும்பாதவர்கள் தமிழ்மணத்தில் இருந்து விலகிக் கொள்வதையும் வரவேற்கிறோம். விலக நினைப்பவர்கள் தமிழ்மணம் மின்னஞ்சல் முகவரியான admin@thamizmanam.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்.

தமிழ்மணம் நிர்வாகிகள்
தமிழ் சசி
செல்வராசு
சொ. சங்கரபாண்டி
இரமணீதரன்

டி.எம்.ஐ.யின் வருங்காலப் பயணம்

இந்த வாரம் நட்சத்திரப் பதிவுகளில் தமிழ் மணத்தைப் பற்றியும், டி.எம்.ஐ. நிறுவனத்தைப் பற்றியும் சில தலைப்புகளில் உங்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டோம். பின்னூட்டங்கள் வாயிலாக கருத்துக்களையும், ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் நல்கிய பதிவர்கள் அனைவருக்கும் எங்களது நன்றி.

நாங்கள் நட்சத்திரவார முதல் இடுகையில் கூறியபடி பல்வேறு சவால்களுக்கும், நேரப்பற்றாக்குறைக்குமிடையே தமிழ்மணத்தின் சேவையை மேலும் எவ்வளவு செம்மைப்படுத்த முடியுமோ, அவற்றுக்கான முயற்சிகளைத் தொடர்வோம். தொழில்நுட்ப அடிப்படையிலான மாற்றங்கள் பெரும்பாலான பதிவர்களையும் வாசகர்களையும் மனதில் வைத்தே செய்யப்படுகின்றன. சில நேரங்களில் தமிழ்மணம் நிர்வாகத்துக்கு வரும் மின்னஞ்சல்களில் வைக்கப்படும் பயனான வேண்டுகோள்களின் அடிப்படையிலும் மாற்றங்களைச் செய்ய முன்வந்தது. ஆனால், தொழில்நுட்ப மாற்றங்கள் இயன்றவரை மனிதத்தலையீடு இல்லாமலே தானியங்கியாகச் செயற்படுத்தப்படுகிறன. சில மாற்றங்கள் பதிவர்கள் சிலருக்குப் பிடித்தமற்றவையாகவிருக்கலாம். சில மாற்றங்கள் நிரந்தரமானதாக அல்லாமல் பரிசோதனை முயற்சிகளாகவும் இருக்கலாம். எம்மாற்றத்தையுமே வலைப்பதிவுகளில் ஒரு சிலர் தவறுதலாகப் புரிந்து கொள்ளக்கூடிய அபாயமிருந்து வருவதால் இயன்றளவு அனைத்துத்தரப்பினரையும் திருப்திப்படுத்த ஏதாவது செய்ய முடியுமா என்று சிந்தித்தே மாற்றங்களைச் செய்கிறோம். இதற்காக உழைக்கும் எங்கள் தொழில்நுட்பக்குழுவைச் சேர்ந்தவர்கள் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

அடுத்தபடியாக, பதிவரும் பயனரும், நிர்வாகத்தைப் பற்றியும் நாங்கள் முகங்கொடுக்கவேண்டிய சவால்களையும், அவற்றை எப்படி நாம் வகுத்துக்கொண்ட நெறிக்கோவையின் அடிப்படையில் எதிர்கொள்கிறோம் என்றும் இடுகைகளில் எடுத்துரைத்தோம். இங்கும் மேலே தடித்த எழுத்துகளில் சொல்லியவற்றையே மீண்டும் வலியுறுத்த விரும்பிகிறோம். மேலும், எங்களுடைய முழுநேரத்தொழிலுக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்குமிடையே எங்களாலியன்ற அளவு நேரத்தைச் செலவிட்டு, பயனர் நிர்வாகத்துக்கு வரும் மின்னஞ்சல்களுக்குக் இயன்றளவு விரைவாகவே பதில் அளிக்கிறோம். எங்கள் தளத்தின் உதவிப்பக்கங்களில் சில பயனுள்ள தகவல்கள் வைக்கப்பட்டிருப்பதால், உங்கள் மற்றும் எங்கள் நேரம் கருதி அவற்றை முதலில் படித்துவிட்டு பயனில்லையெனில், எங்களுக்கும் அஞ்சல் அனுப்புங்கள்.

அடுத்து, உங்கள் பதிவுகளிலும், மின்னஞ்சல் முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்களிலும் மாற்றமிருந்தால் அவற்றைப் பற்றி உடனடியாக எங்களுக்குத் தெரிவியுங்கள். இல்லாவிட்டால் சில நேரங்களில் அதனாலேயே சிக்கல்கள் ஏற்படுவதுண்டு. எடுத்துக்காட்டாக சில பதிவர்களுக்கு தமிழ்மணம் விருது பற்றியோ, நட்சத்திர அழைப்புக்கோ அனுப்பிய மின்னஞ்சல்கள் திரும்பி வந்திருக்கின்றன. பதிவர்கள் தங்கள் பதிவுகளை தமிழ்மணத்துடன் இணைந்த காலத்தில் கொடுத்த மின்னஞ்சல் முகவரிகளே எங்களுடைய தரவுப்பட்டியலில் இருக்கின்றபடியால், அவை தவறானவையென்றால் எங்களால் வேறு வழிகளில் உங்களைத் தொடர்பு கொள்ள இயலாது.

இவ்வாரம் தமிழ்மணத்தில் திரட்டப்படும் பதிவுகளை வகைப்படுத்துவதையும் வடிகட்டுவதையும் பலரும் வரவேற்றிருப்பது நிறைவானதாக இருக்கிறது. இச்சீரமைப்பொன்றும் புது வழிமுறையல்ல. ஏற்கனவே வகுக்கப்பட்டதுதாம். திரைப்படம் சார்ந்த பதிவர்களின் சொந்தக்கருத்துகளுடனான பதிவுகளைத் திரட்டத் திரைமணத்தினைத் தமிழ்மணம் தந்திருக்கையிலே, திரைப்படத்துக்கென ஒரு பதிவினை உருவாக்கித் திரைமணத்திலே சேருங்கள். தமிழ்மணத்திலே திரைப்பட இடுகைகளைச் சேர்க்கும்போது, அவை தானியங்கித்தேர்வினாலே தாமாகவே முகப்பிலே தோன்றாமற்போகும். ஆங்கில இடுகைகளுக்கும் அதே தோன்றாத நிலையோ, தோன்றினால், விலக்கப்படும் நிலையோதான் உண்டு.

வெட்டி ஒட்டும் பதிவுகள், சாதி/மத/சோதிட/அரசியற் கொள்கை பரப்புப்பதிவுகள், தனிமனிதத்தாக்குதற்பதிவுகள் போன்றவற்றை எக்காரணத்தினாலும் தமிழ்மணம் ஆதரிக்காது. இவற்றை உணர்ந்து பதிவர்கள் தாமே தக்க பதிவுகளைமட்டும் தமிழ்மணத்திலே இணைத்தால் இவற்றைக் கண்காணிக்கவோ நடவடிக்கை எடுக்கவோ தமிழ்மணத்துக்கு அவசியமில்லை. அதே சமயம் தனியாட்கருத்துச் சுதந்திரத்திலே தலையிடவோ தடையிடவோ தமிழ்மணத்துக்கு விருப்பமும் உரிமையுமில்லை. சமூகத்தின் பல திசைகளிலிருந்தும் கருத்துக்களும் குரல்களும் ஒடுக்கப்படாமல் ஒலிக்கத் தமிழ்மணம் தளத்தை அமைத்துக்கொடுக்கவேண்டும் என்பதே எங்கள் செயற்பாடுகளுக்கான ஒரே உந்துதல்.

மேற்சொன்ன இரு நோக்குகளும் சமயத்தே எதிரெதிர்த்திசைகளிலிருந்து வருவதைப்போலத் தோன்றினாலும், ஒன்றோடொன்று முரண்படாமலிருக்கக்கூடிய ஒன்றுதானெனத் தமிழ்மணம் நம்புகிறது. மிகச்சில சந்தர்ப்பங்களிலே இடுகைகளின் உள்ளடக்கங்களாலே இந்நோக்குகளிலே குழப்பம் நேரலாம். அவற்றைமட்டும் தனியே பரிசீலித்து தமிழ்மணத்துக்கு ஏற்புடைய இடங்களில் ஏற்றும், ஏற்பில்லா இடங்களில் விலக்கியும் செயற்பட விழைகிறோம்.

மேலும், தம்கருத்துகளைப் பதிவர்கள் பதிவிடுவதைத்தான் தமிழ்மணம் ஊக்குவிக்கின்றது; உரிமை பெறாத படங்களைத் தொகுப்பாக்கியோ, கருத்துகளை அப்படியே பிற இடங்களில் இருந்து வெட்டி ஒட்டியோ வரும் பதிவுகளைக் கடந்தகாலத்திலே அவ்வப்போது அகப்பட்டபோது நீக்கிக்கொண்டிருந்தாலுங்கூட, இவ்வாரம் ஒவ்வொன்றாகத் தேடி முடிந்தவரை விலக்கிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வோர் இடுகையையும் எங்களாலே பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதால் இவ்விடத்தில் பதிவர்களும் பயனர்களும் இருகண்களாக இருந்து தெரிவிக்கக் கோருகிறோம். தமிழ்மணத்தின் சிறப்பிற்கு டி.எம்.ஐ நிர்வாகக் குழுவினர் மட்டுமன்றி, பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் காரணமே. இவ்வாரத்திற்கூட சில பதிவர்கள் இப்படியான வெட்டி ஒட்டுப் பதிவுகளைத் தக்க ஆதாரங்களுடன் பதிவர்கள் சுட்டிக்காட்டியபோது அவற்றை உடனடியாக நீக்கினோம். எப்போதாவது ஒன்று என்றுங்கூட பிறரின் உரிமைபெற்ற படைப்புகளை வெட்டி ஒட்டுதலையோ பிடிஎப் வடிவத்திலோ எம்பி3 ஒலியவடிவிலோ தமிழ்மணத்திலே இணைப்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை; ஆதரிக்கவும்முடியாது. தகவற்சேகரிப்பிற்கு, பரப்பலுக்கு என்னும் சப்பைக்காரணங்களைத் தமிழ்மணத்திலே தம்பதிவுகளை இணைக்கப் பதிவர்கள் விரும்பும்போது ஏற்றுக்கொள்ளமுடியாது. படைப்புரிமையும் பதிப்புரிமையும் அறிவுச்சொத்துரிமையும் சட்டப்படி வரையறுக்கப்பட்ட காலம்வரைக்கும் அவற்றின் உரிமையாளருக்கானதுமட்டுமே. பிறர் படைப்புகளின் தேவையான சுருக்கமான சில பகுதிகளைமட்டும் மேற்கோள்காட்டி தகுந்த உசாத்துணைகளுடன் அவை சார்ந்த கருத்துக்கள், எதிர்வினைகள், திறனாய்வுகள் என்று வருகின்ற பதிவுகளைப் பற்றிய கருத்தல்ல இது. அப்படியான இடுகைகள் முற்றிலும் தமிழ்மணத்துக்கு ஏற்புடையவையே. இதனால், தொடர்ந்தும் பதிவர்கள், இப்படியாக ஒத்தி-ஒட்டப்படும் இடுகைகள், காப்புரிமையுள்ள நூல்களின் பிடிஎப் கோப்புகள், காப்புரிமையுள்ள பாடல்களின் ஒலியிழைகள் இவற்றினைத் தமிழ்மணத்திலே திரட்டப்பட்டிருக்கும் பதிவுகளிலே கண்டால், இடுகையின் முகவரி, மூலப்படைப்பின் இணைய முகவரி அல்லது உரிமை இவற்றினைத் தமிழ்மணத்துக்கு இலகுவாகச் சுட்டிக்காட்ட வசதி செய்யமுயற்சிக்கிறோம். அதுவரை, எமக்கு மின்னஞ்சலினாலே அறியத்தாருங்கள்.

இவை தவிர, தமிழ்மணத்தின் மீது ஆதாரமற்ற வெறுமையான அவதூறாகவும் பிற பதிவர்களின் மீது தனியாள் தாக்குதலுமாக அமைந்த காரணத்திற்காகவும் சில பதிவுகளை நீக்கி இருக்கிறோம் என்பதையும் குறிப்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்மணத்தின் நுட்ப மற்றும் செயற்பாட்டுக் குறைகளைச் சுட்டிக் காட்டுவதையும் விமர்சிப்பதையும் நாங்கள் என்றுமே தவறாக எடுத்துக் கொண்டதில்லை. சில சமயம் அவை தமிழ்மணத்தினை மேம்பாடாக்க எமக்கு உதவுவதால் அவற்றைக் கருத்திற் கொண்டு செயல்படுகிறோம். சில சமயம் அவை நடைமுறைக்கு ஏற்புடையதல்ல எனப்பட்டால், நிராகரித்து விடுகிறோம். ஆனாலும், அவற்றைச் சொல்லும் உரிமை பிறருக்கு உண்டு என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அதே சமயம், மறுப்பதின் காரணத்தினாலேயே தமிழ்மணத்தின் நோக்கங்களையே சந்தேகிக்கும்படியான கட்டுக்கதைகளைப் புனைவதையும் ஆதாரமின்றி அவதூறு செய்வதையும் ஏற்க மறுக்கிறோம்.

சொந்த நேரத்தையும் பொருளையுமிட்டுத் தன்னார்வத்தொண்டாக இலாப நோக்கற்ற அமைப்பாகச் செயற்பட்டு வருகையில், அதனையும் தொடர்ந்து செய்ய ஏற்பட்ட சிரமங்களின் காரணமாகப் பிறரிடம் எந்தக் கட்டாயங்களுமின்றித் தன்விருப்ப நன்கொடைகள் பெற்றுக் கொள்ளப் ஆண்டுகள் இத்தனை கழித்தே முடிவு செய்தோம். தமிழ்மணத்தின் வேண்டுகோளை ஏற்று நிதி அனுப்பிவைத்த பதிவர்கள், பயனர்கள், நலம்விரும்பிகள் அனைவருக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றியை இவ்விடத்திலே தெரிவித்துக்கொள்கிறோம். நிதி அனுப்பிய ஒவ்வொருக்குமான பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்திய நன்றி அஞ்சல் (தொகை உள்ளிட்டு) இயலுமானவரை உடனுக்குடன் அனுப்பியிருந்தோம். அவ்வாறு யாரேனும் உறுதிப்படுத்தும் அஞ்சல் பெற்றிராவிட்டால், தயைகூர்ந்து தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல்மூலம் அறியத்தாருங்கள்.

விளம்பரங்களையும் தமிழ்மணத்தின் நோக்கங்களுக்கு முற்றிலும் முரணாகவோ, வாசக அனுபவத்திற்குக் குறையுண்டாகும்படியோ இல்லாவிடத்திலே ஏற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறோம். இச்சூழலில், தமிழ்மணம் பொருளீட்டுவதையே முதன்மையாகக் கொண்டிருக்கிறதெனும்படியான அவதூறைப் பரப்பிக்கொண்டிருக்கும் பதிவுகளை நீக்கவேண்டிய அவநிலையேற்படுகின்றது.

பல காலமாகப் பதிவுலகில் சச்சரவுகளுக்குக் காரணமாக இருந்தாலும், தமிழ்மணமும் அதன் நிர்வாகிகளும் அந்நிகழ்வுகளின் காரணமாகத் தேவையின்றி தாக்குதல்களுக்கு உள்ளானபோதிலும், ஓரளவிற்கு அஃது பதிவரின் தனியாள் சுதந்திரம் என்று பொறுத்தே வந்திருந்தாலும், அண்மையில், சில பதிவர்களைப் பிராடு, போலி என்பது போன்றும், இன்னும் பல வழிகளாலும் தனியாட்கள்மீது தாக்குதல் செய்தும், தமிழ்மணத்தின் விளம்பரப் பதிவுகள் சிலவற்றைப் பற்றி எந்த அடிப்படையும் இன்றி உள்நோக்கம் கற்பிக்கும் வண்ணம் தவறான கருத்தையும் அவதூறையும் பரப்பும் பதிவுகளையும் நீக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். மீண்டும், குறைகளைச் சுட்டிக் காட்டுவதையோ, ஆலோசனைகள் சொல்வதையோ நாங்கள் எக்காலத்திலும் எவ்வகையிலும் எதிர்க்கவில்லை; வரவேற்கிறோம். ஆனால், காரணமற்ற அவதூறுகளை எதிர்கொள்ளவும், தொடர்விளக்கம் சொல்லவும், எங்களுக்கு விருப்பமில்லை; நேரமில்லை. சரியான புரிந்துணர்வற்ற நிலையிலே தொடர்ந்திருப்பதைவிட விலகி/விலக்கி விடுதல் நல்லது.

மேலும் எமது புதிய திட்டங்களை அவ்வப்போது இப்பதிவிலே வெளியிட்டு, உங்கள் கருத்துகளையும் கேட்டு மேற்கொண்டு எம் பணி தொடரும்.

இறுதியாக, உங்கள் அனைவரின் ஊக்கமும், ஒத்துழைப்பும் தேவை என்று கூறி டி.எம்.ஐ. இந்த கருத்துப் பரிமாற்றத்தைத் தற்போதைக்கு நிறைவு செய்கிறது. அனைவருக்கும் நன்றி!

தொடரும் தங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி.