தமிழ்மணம் நட்சத்திர தேர்வு முறை

தமிழ்மணத்தின் “இந்த வார நட்சத்திரம்” எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறது? தமிழ்மணம் நட்சத்திரம் ஆவதற்கான தகுதிகள் என்ன என்பன போன்ற கேள்விகளை பதிவர்கள் பல நேரங்களில் எழுப்பி வந்துள்ளனர்.

தமிழ்மணம் நட்சத்திரமாகத் தேர்ந்தெடுப்பதற்குத் தகுதிகள் என்று சொல்வதை விட சிலக் காரணிகளை அடிப்படையாகக் கொள்கிறோம் என்று சொல்லலாம். தகுதிகள் என இதற்கு அடைமொழியை கொடுக்க விரும்பவில்லை. காரணம் தமிழ்மணத்தில் ஆயிரக்கணக்கான பதிவர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவருடைய எழுத்தும் ஒவ்வொரு வகையில் சிறந்தவையாக இருக்கின்றன. அவை அனைத்திற்குமான தகுதிகளை வரையறுப்பது முடியாத காரியம் மட்டும் அல்ல. அதனை செய்வது தமிழ்மணத்தின் நோக்கமும் அல்ல.

பெரும்பாலும் கீழ்க்கண்ட காரணிகளைக் கொண்டே தமிழ்மணம் நட்சத்திர வாரத்திற்கு பதிவர்களை தேர்ந்தெடுக்கிறோம். ஆனால் இவை மட்டுமே காரணி என்று வரையறுத்து விட முடியாது. அது போல கீழேயுள்ள இதே வரிசைப்படியே கணக்கில் கொள்வதில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

1.பெரும்பாலும் மிகுந்த சிரத்தை எடுத்துத் தகவல்களைத் திரட்டி எளிமையாகவும், சுவாரசியமாகவும் எழுதக் கூடியவர்களை நட்சத்திரமாக்க முயல்கிறோம்
2. நீண்டகாலமாக (பெரும்பாலும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக) தமிழில் வலைப்பதிவு எழுதுகிறவர்கள். அவர்கள் ஓரளவுக்கு நன்றாக எழுதுபவர்களாகவும், அடிக்கடி எழுதுபவர்களாகவும் இருக்க வேண்டும். தமிழ்மணத்தின் தரவுகளிலிருந்து இதைத் கண்டறிந்து அவர்களை தேர்ந்தெடுக்கிறோம்.
3. சக பதிவர்களும், வாசகர்களும் பரிந்துரைக்கும் நன்றாக எழுதும் பதிவர்களை நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கிறோம்
4. வாசகர்கள் அதிகம் விரும்பும்படி எழுதுபவர்கள். பின்னூட்டங்களில் வரும் கருத்துகளின் அடிப்படையில் இதைக் கணக்கில் கொள்கிறோம்.
5. சிறப்பான வாரங்களில், எடுத்துக்காட்டாக, உலக மகளிர் தினம் வரும் வாரத்தில் பெரும்பாலும் அறியப்பட்ட பெண் எழுத்தாளர் – பதிவரை அழைக்கிறோம்.
6.பொங்கல் வாரத்தில் ஏற்கனவே வலைப்பதிந்து வரும் சிறந்த தமிழ் எழுத்தாளரைத் தேடுகிறோம். இவர்கள் நட்சத்திர வாரத்தில் நாங்கள் வேண்டிக்கொள்கிறபடி பதிவுகள் இடாமலும் போகக் கூடிய சிக்கலுமுண்டு.
7. சில பிரிவினர்க்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டுமென்று முன்னுரிமை வழங்க நினைப்பதுமுண்டு, பெண்பதிவர்கள், ஈழத்துப் பதிவர்கள் போன்ற எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.
8.நட்சத்திர வாரம் வேலைப் பளு மிக்க வாரம் என்பதை நட்சத்திரமாக இருந்த பதிவர்கள் அறிவார்கள். தினமும் ஒரு பதிவு என ஏழு நாட்களுக்கு பதிவு எழுதவே பதிவர்களை வேண்டுகிறோம். குறைந்தது 5 இடுகைகளையாவது எழுதக்கூடியவரா என்பதை பார்க்கிறோம். அதனால் வலைப்பதிவுகளில் அடிக்கடி எழுதும் பதிவரா என்பதை முக்கியமாக கவனிக்கிறோம். சிலப் பதிவர்கள் நன்றாக எழுதக்கூடியவர்களாக இருந்தாலும் தொடர்ச்சியாக வலைப்பதிவுகளில் எழுதுவதில்லை. நட்சத்திர வாரத்தில் தொடர்ந்து எழுதுதல் முக்கியம் என்பதால் அதனை ஒரு முக்கிய காரணியாகப் பார்க்கிறோம்

நட்சத்திரங்களை தேர்தெடுப்பதில் உள்ள சவால்கள்
1.நட்சத்திர வாரங்களுக்கு முன்கூட்டியே ஒப்புதல் அளித்து விட்டு இறுதி நேரத்தில் பதிவர்கள் மறுக்கும் சூழ்நிலையில் வேறு ஒருவரை தேட வேண்டிய சூழ்நிலைகள் பலமுறை ஏற்பட்டுள்ளது.
2.நட்சத்திர வாரத்திற்கு ஒப்புக் கொண்டு பதிவுகள் எதையும் எழுதாத பதிவர்களும் உண்டு. இது போன்ற சூழ்நிலையில் மின்னஞ்சல், தொலைபேசி எண் இருந்தால் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எழுத வலியுறுத்துதல் போன்றவையும் செய்ய நேரிட்டிருக்கிறது
3.பத்தாயிரம் பதிவுகளை எட்டும் நிலையில் தன்னார்வப் பணியாக தமிழ்மணத்தை நடத்தும் சூழ்நிலையில் அனைத்துப் பதிவர்களையும் கவனித்து நட்சத்திரங்களை தேர்ந்தெடுப்பது என்பது மிகப் பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. இதனால் சில நேரங்களில் நன்றாக எழுதக்கூடிய பதிவர்களை நாங்கள் கவனிக்காமல் போகும் வாய்ப்புகள் உள்ளது

பதிவர்கள் எங்களுக்கு எப்படி உதவலாம்
சில நிமிடங்களே தமிழ்மணம் முகப்பில் பதிவுகள் நிற்கிற இக்காலத்தில் பத்தாயிரம் பதிவுகளில் பல அருமையான பதிவுகள் இன்னும் எங்கள் கண்ணில் சிக்காமலே இருந்திருக்கக்கூடும். இதற்கு உங்கள் அனைவருடைய உதவியும் தேவை. தொடர்ந்து அருமையாக எழுதப்படும் பதிவுகளின் முகவரியைப் பரிந்துரை செய்து நட்சத்திர நிர்வாகியின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
To: staradmin@thamizmanam.com
Subject: நட்சத்திரப் பரிந்துரை
இவ்வாறு பரிந்துரைக்கப்படும் எல்லாப் பதிவர்களையும் நட்சத்திரமாக அழைக்க இயலாது என்பதை அறிவீர்கள். அதிகம் பேர் பரிந்துரைக்கப் படும் பதிவுகளை தமிழ்மணம் நிர்வாகக்குழுவினர் பரிசீலித்து முடிவு செய்வார்கள்.

புரிந்துணர்வுடன் கூடிய உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

தமிழ்மணம் நட்சத்திர நிர்வாகம்

தமிழ்மணம் – பதிவுகளைச் சேர்த்தலும் விலக்கலும்

தமிழ்மணம் இயன்றவரையிலே தரமான, சொந்தமாக எழுதப்பட்ட பதிவுகளையே திரட்ட முயற்சிக்கின்றது. தமிழ்மணத்திலே சராசரி மாதாந்தம் நூற்றைம்பது பதிவுகள் இணைக்கப்படுகின்றன. இவற்றைத் தவிர, சராசரியாக முப்பது பதிவுகள் தமிழ்மணத்தின் விதிமுறைகட்கும் நோக்குகளுக்கும் பொருந்தாக்காரணங்களாலே சேர்க்கப்படாமற் தவிர்க்கவேண்டியதாகின்றது. அத்துடன் சேர்த்துக்கொள்ளப்பட்ட பதிவுகள் தொடர்ந்தும் விதிமுறைகளை மீறுவதைச் சுட்டிக்காட்டும்போதும் தொடர்ந்து மீறுகையிலே விலக்கப்படுவதும் தவிர்க்கப்படமுடியாததாகின்றது.
பதிவர்கள் ஏற்கனவே அறிந்தபடி, தமிழ்மணத்திலே சேர்க்கப்படும் பதிவுகளுக்கு அடிப்படையிலே சில விதிகளை வைத்திருக்கின்றோம்.
1. பதிவுகள் தமிழிலே எழுதப்பட்டிருக்கவேண்டும்; தமிழ்மணத்திலே சேர்க்கப்படுவதற்குக் குறைந்தளவு மூன்று இடுகைகளேனும் பதிவு கொண்டிருக்கவேண்டும்.
2. முழுக்கவே சாதிச்சங்கங்கள், அரசியற்கட்சிகள், நிறுவனப்பட்ட மதங்கள், சோதிடம் இவற்றுக்காகவே சார்ந்த பதிவுகள் சேர்த்துக்கொள்ளப்படமாட்டா; ஏற்கனவே சேர்க்கப்பட்டிருக்கும் பதிவுகள், இப்படியான கருக்களை மையப்படுத்தி வெளிவரும்போது, சாதி, கட்சிப்பதிவுகள் சுட்டிக்காட்டலோடு, முற்றாக விலக்கப்படுகின்றன; மதம் சார்ந்த பதிவுகள் ‘வணிகப்பதிவுகள்’ பிரிவுக்குள்ளே சேர்க்க ஊக்குவிக்கப்படுகின்றன. பொருளீட்டுதல் சாராத கல்விநிறுவன, தொண்டுநிறுவனப்பதிவுகள்மட்டும் இப்படியான வகைப்படுத்தலிலிருந்து விலக்கானவை.
3. பொருளீட்டுதலை முதன்மை நோக்கமாகக் கொண்ட வணிகப்பதிவுகள், பணம் கட்டும் பதிவுகளாக ஆகும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றன.
4. திரைப்படப்பதிவுகள், வணிகப்பதிவுகள் அல்லாதவிடத்து, தமிழ்மணத்தின் திரைப்படங்கள் சார்ந்த பதிவுகளைமட்டும் திரட்டும் “திரைமணம்” திரட்டியிலே சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு, தமிழ்மணத்திலே சேர்க்கப்படாமல் தவிர்க்கப்படுகின்றன.
5. பிற தளங்கள், பதிப்புகளிலிருந்து “ஒத்தி ஒட்டும்” பதிவுகள் இயன்றவரை தவிர்க்கப்படுகின்றன. தமிழ்ப்பதிவர்கள், தமிழிலே எழுதுவதை ஊக்குவிக்கும்வகையிலேமட்டுமே தமிழ்மணம் ஆரம்பிக்கப்பட்டது. அதனாலே, உரிமை பெற்றோ பெறாமலோ வெட்டி ஒட்டும் பதிவுகளைத் தவிர்க்கவே விரும்புகின்றோம். கலை, சமூகத்தேவை கருதிய அறிவிப்புகளும் அறிக்கைகளும் இவ்வகைப்படுத்தலுக்கு அப்பாலானவை.
6. எல்லைமீறும் இடுகைகள், தனிப்பட்ட தாக்குதல்கள் உள்ளடக்கிய இடுகைகள் அழுத்தமான ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்படும்போது, அப்படியான இடுகைகளும் தொடரும் பதிவுகளும் தமிழ்மணத்திலிருந்து விலக்கப்படும். ஆனால், பூடகமான இடுகைகளுக்கெல்லாம் அர்த்தம் கண்டு விலக்கத் தமிழ்மணத்துக்கு இயலாதெனப் பதிவர்கள் அறிவார்களென நம்புகிறோம். மேலும், தமிழ்மணம் பதிவர்களின் தனிப்பட்ட பிணக்குகளுக்குத் தீர்ப்புச்சொல்லும் முறையீட்டு, நீதிவழங்குநிலையமில்லை என்பதைப் பதிவர்கள் உணர்வார்களென நம்புகிறோம்.
7. நகைச்சுவைப்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன; ஆனால், பரபரப்பான தலைப்புகளிலே “சூடாக விழையும்” கும்மிப்பதிவுகளையும் இயன்றவரை முன்னறிவித்தல்களோடு காலத்துக்குக் காலம் தமிழ்மணம் விலக்கி வைத்து, காத்திரமான பதிவுகள் தமிழ்மணம் முன்றலிலே தோன்ற முயற்சிக்கின்றோம்.
தமிழ்மணத்திலிருந்து பதிவுகளை தனிப்பட்ட காரணங்களுக்காக விலக்கிக்கொள்ளவிரும்புகின்றவர்கள் தனிப்பட்ட தமிழ்மணம் நிர்வாகிகளின் முகவரிக்கு அறியத்தாருங்கள். தமிழ்மணத்திலிருந்து விலக்கப்பட்ட பதிவுகள் விலக்கப்பட்ட காரணப்பிழைகள் களையப்படுமிடத்து, பதிவர் விண்ணப்பிக்குமிடத்திலே மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படும்.
ஒரு பதிவரின் வெவ்வேறு உள்ளடக்கங்கள் உள்ள பதிவுகளைச் சேர்ப்பதிலே எதுவிதமான சிக்கலுமில்லை. ஆனால், ஒரே பதிவினை வெவ்வேறு தளங்களிலே ஏற்றித் தமிழ்மணத்திலே சேர்க்க முயற்சிக்கும்போது, ஒரு பதிவினைமட்டுமே சேர்க்கலாம்.
தமிழ்மணம், தன்னார்வ அடிப்படையிலே நிர்வகிக்கப்பட்டுவருவதாகும். அதனாலே, பதிவுகளைச் சேர்ப்பதற்கும், சேர்க்கப்பட்ட பதிவுகள் பற்றிய முறையீடுகளுக்குப் பதிலளிப்பதற்கும் உடனடியே நிர்வாகிகளுக்கு இயலாமலிருக்கும். அதனாலே, குறைந்தளவு இரு நாட்கள் அவகாசமேனும் தரும்படி பதிவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் சேர்ப்பதும் விலக்குவதும் தொடர்பான உங்கள் வினாக்களை ஈங்கிட்டால், முடிந்தவரை பதிலளிக்கமுயற்சி செய்வோம்.

தமிழ்மணம் தொழில்நுட்ப கேள்விகளுக்கு பதில்கள்

ரவிசங்கர்

கேள்வி : Recent times when I try to post after typing my username and password the next screen says” புது இடுகை
எதுவும் காணப்படவில்லை” two times I tried and the same message came but post has not been appeared in tamilmanam. But it appears after some time. Some time it get posted if I post one more post after five minutes.Both posts
appears.

பதில் : தமிழ்மணம் தொடர்ச்சியாக தானியங்கியாக பதிவுகளை திரட்டிக் கொண்டிருக்கிறது. சில நிமிடங்களுக்கு ஒரு முறை இந்த திரட்டுதல் நடந்து கொண்டே இருக்கிறது. இதனால் சில நேரங்களில் பதிவுகள் Cache என்று சொல்லப்படுகிற சேமிப்பானில் இருக்கும். அவ்வாறான நேரங்களில் நீங்கள் குறிப்பிடும் பிரச்சனை வரும் வாய்ப்புள்ளதை கண்டறிந்தோம். உங்களுடைய கேள்விக்கு மிக்க நன்றி. தற்பொழுது இந்த வழு(Bug) களையப்பட்டிருக்கிறது

டோண்டு ராகவன்

கேள்வி :சில பதிவர்கள் தமது மென்பொருள் அறிவை தவறாகப் பயன்படுத்தி, தமது இடுகைகள் மட்டும் பல நாட்களாகத் தொடர்ந்து தமிழ்மண முதல் பக்கத்தில் வருமாறு செய்து விடுகிறார்கள்

பதில் : நீங்கள் குறிப்பிடும் பதிவுகள் தமிழ்மணம் முகப்பில் தொடர்ந்து இருக்க விளம்பரம் செய்யப்பட்ட பதிவுகள். தமிழ்மணத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்தில் எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே தமிழ்மணம் முகப்பில் தெரியும். அதனை யாரும் தவறாக பயன்படுத்துவதாக தெரியவில்லை

ஜோதிஜி

கேள்வி :ஓட்டுப்பட்டை என்பது அவசியமா? உறுப்பினராக இருப்பவர்கள் பதிவை வெளியிட்டதும் இயல்பாகவே இணைத்துக் கொள்ளும் வசதியை உருவாக்கினால் என்ன?

பதில் : ஒட்டுப்பட்டை (அ) பதிவுப்பட்டை என்பது அவசியமானது அல்ல. பதிவுப்பட்டையை இணைப்பது பதிவர்களின் தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்தது. அதனை தமிழ்மணம் வலியுறுத்துவது இல்லை. அதே நேரத்தில் சில வசதிகள் பதிவுப்பட்டை மூலமே சாத்தியமாகிறது – குறிப்பாக வாசகர் பரிந்துரை வாக்குகள், மறுமொழிகளை திரட்டுதல் போன்றவை ஒட்டுப்பட்டை (அ) பதிவுப்பட்டை மூலமே சாத்தியமாகிறது. பதிவுப்பட்டையை இணைக்காவிட்டாலும் பதிவுகளை தமிழ்மணம் தானியங்கியாக திரட்டும்.

செல்வராஜ நிரூபன்

கேள்வி :என்னிடம் சிறிய ஒரு கேள்வி இருக்கின்றது. சில நேரங்களில் தமிழ்மண முகப்பு பக்கத்தில் வெளிவருகின்ற பதிவுகளிற்கு அண்மையாக உள்ள யெலோ (Yellow) பட்டன் மூலம் ரிப்போர் செய்து, தனி மனிதத் தாக்குதலோ அல்லது ஆபாச விடயங்களோ இல்லாத பதிவுகளையும் விஷமத் தனமாக திட்டமிட்டு தமிழ் மணத்திற்கு ரிப்போர்ட் செய்து பலர் நீக்கச் செய்கின்றார்கள். இவ்வாறு பதிவர்களால் ரிப்போர்ட் செய்யப்படும் பதிவுகளும் தானியங்கி முறையில் தான் நீக்கப்படுகின்றனவா அல்லது தமிழ்மண நிர்வாகிகளின் பார்வைக்கு உட்படுத்தப்பட்டு நீக்கப்படுகின்றனவா? இதே வேளை ஒரு பதிவர் தனது தனிப்பட்ட ஐபி முகவரியிலிருந்து ரிப்போர்ட் செய்திருக்கிறாரா? அல்லது பல பதிவர்களின் வெவ்வேறு ஐபி முகவரியிலிருந்து புகார் செய்திருக்கிறார்களா? எனும் தொழில் நுட்பத் தகவல்களைத் தமிழ் மணம் பரிசோதித்தா இவ்வாறு ரிப்போர்ட் செய்யப்படும் பதிவுகளை நீக்குகின்றது?

பதில் : தமிழ்மணத்தில் ஒரு பதிவோ, இடுகையோ எதன் அடிப்படையில் நீக்கப்படுகிறது என்பது குறித்த விபரங்களை இந்தப் பதிவில் எழுதியிருக்கிறோம் (தமிழ்மணம் – பதிவுகளைச் சேர்த்தலும் விலக்கலும்). ஆனால் இது தானியங்கியாக செய்யப்படுவதில்லை. புகார் வழங்குபவர்கள் ஐபி விபரங்களை தமிழ்மணம் சேகரிப்பதில்லை. ஒரு புகார் முன்வைக்கப்படுகிறது என்பதாலேயே ஒரு பதிவோ, இடுகையோ நீக்கப்படுவதும் இல்லை. தகுந்த பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு தமிழ்மணம் சேர்க்கை விதிகளை மீறியிருந்தால் மட்டுமே ஒரு பதிவோ, இடுகையோ விலக்கப்படுகிறது.

முனைவர் இரா.குணசீலன்
கேள்வி :“தாங்கள் அளிக்கும் குறிச்சொற்களில் “இலக்கியம்“ என்னும் பிரிவும் இருந்தால் இலக்கியப் பதிவுகள் அதிகரிக்கத் துணையாக இருக்கும் எனக் கருதுகிறேன்..

பதில் : ஆலோசனைக்கு நன்றி. இதனை நிச்சயம் செய்கிறோம்

YOGA.S

கேள்வி :வார நட்சத்திரம் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறது?தரப்படுத்தலில் பாகுபாடு காண்பிக்கப்படுவதில்லையா?அதிக பின்னூட்டம்(கருத்து)பெறுவோர் முன்னணிக்கு வந்து விட முடியுமா?பின்னூட்டமிடுவோர் கண்டிப்பாகப் பதிவராகத் தான் இருக்க வேண்டுமா?அப்போது தான் முகப்பில் இடம்பிடிக்கலாமா?(நான் பதிவரல்ல)

பதில் : நட்சத்திரங்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது குறித்த விபரங்களை தனி இடுகையில் முன்வைக்க இருக்கிறோம். அப்பொழுது இது குறித்து விரிவாக எழுதுகிறோம்

கோவி.கண்ணன்

கேள்வி :‘மகளிர்மணம்’ எப்போது செயல்பாட்டுக்கு வரும் ? தமிழ்மணம் விவாதக் களங்களை (Forum) உருவாக்கி ஆக்கமான விவாதங்களுக்கு வழி செய்யலாமே

பதில் : உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி. நல்ல யோசனை. இதனை பரிசீலனை செய்கிறோம்.

கேள்விகளை எழுப்பிய அனைவருக்கும் நன்றி. மேலும் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக இருக்கிறோம்

தமிழ்மணம் தொழில்நுட்பக் குழு

தமிழ்மணம் நுட்ப உதவிக்குழு

தமிழ்மணம் போன்றதொரு தளத்தினைப் பயன்படுத்த ஆரம்ப காலத்தில் இருந்தே நுட்ப உதவிக்கென்று ஒரு வழிமுறை இருப்பது அவசியமாக இருந்தது. இதற்குக் காரணங்கள் பல.

ஒன்று, வலைப்பதிவுகளின் ஆரம்ப காலத்தில் பெரும்பாலும் கணினி, மென்பொருள், மற்றும் பொறியியற் துறைகளைச் சார்ந்தவர்களே அதிகம் இருந்தனர் என்றாலும், நாளடைவில் இணைய வளர்ச்சியின் பரவலாலும், இணையத்தில் தமிழ்ப் பயன்பாடு வளர்ந்தமையாலும், வலைப்பதிவுகளும் இன்ன பிற இணைய வசதிகளும் பலதரப்பட்ட பயனர்களையும் சென்றடைந்தது. ஆனால், எல்லோருடைய பின்புலமும் வெவ்வேறானதாக இருந்தமையால் அவர்களுக்குத் தேவைப்பட்ட நுட்ப விளக்கங்களும் வேறு வேறு விதமான அளவில் இருந்தன. இன்றும் இருக்கின்றன.

காட்டு: “செய்தியோடை” என்றால் என்ன? என்னும் கேள்விகள் கூட இன்னும் வந்துகொண்டிருக்கும் நிலையில் இது இயல்பானதொன்றே என்று எடுத்துக் கொள்கிறோம். இதற்கெனவே வலைப்பதிவு நுட்பங்களின் அடிப்படை மற்றும் தமிழ்மணம் திரட்டியில் இணைந்து கொள்வது போன்ற அடிப்படை விளக்கங்களுக்குச் சில பக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறோம். இவை எல்லோருக்கும் தேவையானவை அல்ல. ஆனால், இன்னும் இவற்றிற்கான தேவை இருக்கிறது.

இரண்டு, இணையமும், நுட்பங்களும் அதிவேகமாக மாறி வரும் வேளையில் இயன்றவரை அவற்றைத் தமிழ்மணத்தில் சேர்க்க முயல்கிறோம். சிலவற்றைச் சேர்த்தும் பிறவற்றை விலக்கியும் மாற்றங்களை எப்போதும் கொண்டிருப்பதால் சிலசமயம் அவற்றைத் தெளிவு செய்துகொள்வதற்கான தேவையும் பயனர்களுக்கும் இருக்கிறது.

காட்டாக, செய்தியோடைகளை அடிப்படையாக வைத்தே திரட்டி நுட்பம் இயங்குகிறது என்பது பலரும் இன்று அறிந்த ஒன்றே. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னர், முக்கியமான வலைப்பதிவுச் சேவையான பிளாக்கர், தனது இயல்பான செய்தியோடை முகவரியை மாற்றியது. http://dharumi.blogspot.com/atom.xml என்பது போல இருந்தவை http://tamilamudam.blogspot.com/feeds/posts/default என்பது போன்ற வடிவத்திற்கு மாறியது (மேற்சுட்டிய தளங்கள் தற்செயலானவை). அதோடு, பழைய பிளாக்கர், புதிய பிளாக்கர் என்று இரண்டும் சிறிது நாட்களுக்கு ஒருசேர இயங்கியது. சிக்கல் என்னவென்றால் தமிழ்மணத்தின் பல வசதிகளை வழங்கிவந்த கருவிப்பட்டை நிரல் முற்றிலுமாக மாற்றியமைக்கப் படவேண்டியிருந்த்து. இதனைச் செய்ய வழிமுறைகளை அறிவித்தாலும், ஆரம்பத்தில் அது சற்றே சிக்கலுக்குரியதாக இருந்த்து. இதையே பின்னாளில் எளிதாகச் சேர்த்துக் கொள்ளும் நுட்பத்தைச் சில பதிவர்களே செய்துதவினர். (இப்படியான கருவிப்பட்டையே இன்றைய நாளில் தேவை தானா என்னும் கேள்வியும் பதிவர்கள் இடையேவும் தமிழ்மண நிர்வாகத்திலும் எழுந்திருக்கிறது. அது வேறு கேள்வி. அதனைப் பின்னர் பார்ப்போம்).

இதுவே, அண்மையில் பிளாக்கர் ஃபீட்பர்னர் ஓடையையும் பாவிக்கத் தொடங்கியதில் இருந்து, ஃபீட்பர்னருக்கு இயல்பான ஓடையை வழிமாற்றிவிடுவதால் திரட்டிக்குச் சிக்கல் ஏற்படுகிறது என்பதைப் பலருக்கும் விளக்க வேண்டியிருக்கிறது. ஃபீட்பர்னர் ஓடையைக் கூடுதலாக வைத்துக் கொள்வது பிரச்சினையில்லை. ஆனால் இயல்பாய் உள்ள ஓடையை வழிமாற்றுவதில் சிக்கல்கள் உள்ளன. இவற்றை எல்லாம் முற்றிலும் அறிந்துணர தமிழ்மணம் நிர்வாக்க் குழுவிலும் சிலரேனும் நிறைய நேரம் செலவிட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லா நுட்பங்களையும் எல்லாச் சமயங்களிலும் தெளிவாக விளக்கிச் சொல்ல இயலாத நேரங்களில் சிலசமயம் பதிவர்கள் உதவுகின்றனர். இந்த பீட்பர்னர் பிரச்சினை குறித்து நுட்ப உதவி கேட்டு வரும் மடல்களுக்குக் கீழ்க்கண்ட பரிந்துரையை அனுப்புகிறோம்.

1. Remove redirection to feedburner feeds. OR
2. See: http://tvs50.blogspot.com/2009/06/feedburner-rss-feeds-vs-tamilmanam.html
Also See: http://ethirneechal.blogspot.com/2010/12/tamilmanam.html

மூன்று, சிலசமயங்களில் சில காரணங்களால் சில வசதிகள் அறிவித்தது போல் வேலை செய்யாது போகலாம். அதற்கும் பல காரணங்கள் உண்டு. தற்காலிகமாக வழங்கியின் பளு அதிகமாகித் தளம் தொய்வடைவதுண்டு. இதனைச் சரிசெய்ய நாளடைவில் மேலும் அதிகச் சக்தி வாய்ந்த வழங்கிகளுக்கு மாறிக் கொண்டே வந்திருக்கிறோம்.

அடுத்து, தமிழ்மணம் நிரலில் சிலசமயம் பிழை ஏதும் இருக்கவும் வாய்ப்புண்டு. அவற்றில் சிலவற்றை எளிதாகத் தீர்த்து விடுவதுண்டு. சிலவற்றைச் சரிசெய்வது எளிது தான் என்றாலும் நேரம் இன்மையால் விட்டுவிடுவதுண்டு. இது போன்றவற்றிற்கும் வழிமாற்று முறைகளையும் பிற விளக்கங்களையும் நுட்ப உதவிக்குழுவிற்கு வரும் மடல்களின் வாயிலாகச் செய்து வருகிறோம்.

இயன்றவரை உதவிக்குழுவிற்கு வரும் ஒவ்வொரு மடலுக்கும் பதில் அனுப்ப முயல்கிறோம். சில சமயம் தாமதம் ஆகிவிடுவதுண்டு என்றாலும், அநேகமாக 99% மடல்களுக்குப் பதில் அனுப்பி விடுகிறோம் என்பதையே ஒரு சாதனையாகக் கருதுகிறோம். இதிலும் வேடிக்கையும் வேதனையுமான சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அவை பற்றிப் பிறகு.

தமிழ்மணம் தொழில்நுட்ப கேள்வி பதில்கள்

தமிழ்மணம் இணைத்தளம் தமிழின் முதல் இணையத்திரட்டியாக 2004ல் தொடங்கப்பட்டது. 2006ல் இருந்து தமிழ்மணத்தை தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம் நடத்தி வருகிறது. தமிழ்மணத்தினை தொடர்ந்து தமிழின் முதன்மையான இணையத்திரட்டியாக தக்கவைப்பதற்கு தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம் தன்னாலான
முயற்சிகளை தொடர்ந்து செய்து வந்திருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ்மணத்தின் தொழில்நுட்பத்தில் பல்வேறு புதிய சேவைகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வந்திருக்கிறோம். தமிழ் வலைப்பதிவுகளுக்கு வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவுக்கு பல்வேறு வசதிகளை தமிழ்மணம் வழங்கி வருகிறது. அதே நேரத்தில் தமிழ்மணத்தின் சேவையை இதை விட இன்னும் மேம்படுத்தி கொடுக்க இயலும். தமிழ்மணத்திலேயே இன்னும் பல தொழில்நுட்ப குறைகள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை நாங்கள் உணர்ந்தும் இருக்கிறோம். என்றாலும் லாப நோக்கு இல்லாத தன்னார்வ நிறுவனமாக தமிழார்வளர்களின் பகுதி நேரப் பணியில் செயல்படும் தமிழ்மணம் எதிர்கொண்ட/எதிர்கொண்டு வருகின்ற சவால்களும் ஏராளம். இந்த சவால்களுக்கு மத்தியில் தான் எங்களால் வழங்க முடிந்த புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம்.

இந்த நட்சத்திர வாரத்தில் தமிழ்மணம் சார்ந்த பல்வேறு விடயங்களை முன்வைக்க இருக்கிறோம். அதன் ஒரு பகுதியாக இந்த இடுகையில் தமிழ்மணம் செயல்படும் தொழில்நுட்பம் குறித்து ஒரு சுருக்கமான அறிமுகத்தை வழங்குகிறோம். இதன் மூலம் தமிழ்மணம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள இயலும்.

தமிழ்மணம் நிர்வாகத்திற்கு வருகின்ற பலக் கேள்விகள் தமிழ்மணத்தின் சூடான இடுகைகள், தமிழின் முன்னணி இடுகைகள் போன்ற சேவைகள் தமிழ்மண நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்படுவதாக பலர் நினைப்பதை எங்களுக்கு தெரிவிக்கிறது. தமிழ்மணத்தின் அனைத்து சேவைகளும் தானியங்கியாகவே செயல்படுகின்றன. தமிழ்மணத்தின் எந்தச் சேவையிலும் மனிதத் தலையீடு இருப்பதில்லை. பதிவுகளை திரட்டுதல் தொடங்கி தமிழின் முன்னணி இடுகைகளை பட்டியலிடுவது வரை அனைத்தையுமே தமிழ்மணம் தானியங்கியாக தான் வழங்குகிறது.

இன்று பதிவுகளின் எண்ணிக்கை பத்தாயிரத்தை எட்டும் நிலையிலும் தமிழ்மணம் பதிவுகளை தானியங்கியாக திரட்டுகிறது. தமிழ்மணம் திரட்டி தினமும் பல ஆயிரம் பதிவுகளின் செய்தியோடைகளை திரட்டி அதில் இருந்து சமீபத்தில் எழுதப்பட்ட இடுகைகளை தமிழ்மணத்தின் முன் பக்கத்திற்கு கொண்டு வருகிறது. ஒரு நாளில்
தமிழ்மணத்தில் தற்பொழுது 500 இடுகைகள் எழுதப்படுகின்றன. இந்த 500 இடுகைகளை அவற்றின் குறிச்சொல் கொண்டு இசை, நகைச்சுவை, சினிமா, அரசியல் என தமிழ்மணம் திரட்டி பல்வேறு பிரிவுகளில் வகைப்படுத்துகிறது. அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு இடுகையும் பெறும் மறுமொழிகளின் எண்ணிக்கை தமிழ்மணம்
முகப்பில் தொகுக்கப்படுகிறது. அது தவிர மறுமொழித் திரட்டி மூலம் அனைத்து மறுமொழிகளையும் வாசிக்க முடியும். மறுமொழித் திரட்டி தமிழ்மணத்தின் முக்கிய சேவையாக இருந்து வருகிறது. பதிவுகளை திரட்டுவதை விட மறுமொழிகளை திரட்டுவது சவால் நிறைந்தது. தமிழ்மணம் வழங்கிக்கு அழுத்தம் கொடுக்ககூடிய இந்தச் சேவையை தமிழ்மணம் தொடர்ந்து வழங்கி வருகிறது. தமிழ்மணம் வழங்கிக்கு பாதிப்பு ஏற்படாதவண்ணம் இந்த தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது.

செய்தியோடைகள்
தமிழ்மணம் செய்தியோடைகளை (RSS Feed) அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. செய்தியோடையில் செய்யப்படும் எந்த வகை மாற்றமும் தமிழ்மணம் பதிவுகளை திரட்டுவதை பாதிக்கும். பல நேரங்களில் பலப் பதிவர்கள் தங்களுடைய பதிவுகள் திரட்டப்படுவதில்லை என்ற குறைகளை முன்வைக்கிற பொழுது அது பெரும்பாலும் அவர்களின் செய்தியோடை சார்ந்த பிரச்சனையாகவே இருக்கிறது. செய்தியோடை மாற்றங்களில் எப்பொழுதும் பதிவர்கள் கவனம் கொள்ள வேண்டும்.

தமிழ்மணம் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு மாறுபட்ட எண்ணங்கள் பதிவர்கள் மத்தியில் இருந்து வருகிறது. நட்சத்திர வாரத்தில் இடுகைகளை வெளியிடுவதோடு நின்று விடாமல் தமிழ்மணத்தின் தொழில்நுட்பம் குறித்த உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் விடையளிக்க விரும்புகிறோம். இந்த இடுகையின் மறுமொழியில் உங்கள் கேள்விகளை கேட்கலாம். பதில்களை மறுமொழியிலோ, மற்றொரு இடுகையிலோ அளிக்க தயாராக இருக்கிறோம்.

கேள்விகளை கேளுங்கள்…

தமிழ்மணம் தொழில்நுட்பக் குழு

ஐந்தாண்டுகளைக் கடந்து டி.எம்.ஐ நிறுவனமும் தமிழ்மணத்தின் தொடரும் பயணமும்

தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம்

இந்த வாரம் தமிழ் மண நட்சத்திரம் யார் என்று ஆவலுடன் படிக்க வந்திருக்கும் உங்களுக்கு டி.எம்.ஐ நிறுவனமே அந்த இடத்தை எடுத்துக் கொண்டது வியப்பாக இருக்கலாம். தமிழ்மணம் வலைத்திரட்டியைத் திரு. காசி ஆறுமுகத்திடம் இருந்து பெற்று மேலும் பல புதிய வலைப்பதிவு சேவைகளை அளிப்பதற்காக தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம் நிறுவப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. வணிகநோக்கற்ற தன்னார்வத் தொண்டுநிறுவனமாக அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள டி.எம்.ஐ நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்து வந்துள்ளவற்றையும், எதிர்கொண்ட சவால்களையும் இவ்வார நட்சத்திரப் பதிவுகளில் ஒரு மீள்பார்வை செய்யவிருக்கிறோம். இந்த நட்சத்திர வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பதிவர்களுடனான நேரடியாக உறவைப் பேணும் விதமாக இவ்வாரம் தன் நோக்கங்களையும் பணிகளையும் எதிர்காலத்திட்டங்களையும் பகிர்ந்து கொள்கிறது. பதிவர்களும், வாசகர்களும் எங்களுடன் இணைந்து தமிழ்மணத்தை மேலும் சிறப்புற ஆலோசனைகளையும் வழங்க வேண்டுகிறோம்.

மேலோட்டமாக பார்ப்போமாயின், இந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்வலைப்பதிவுகளின் எண்ணிக்கையுடன் தொழில்நுட்பரீதியிலும் தமிழ்மணம் பெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அவை பற்றிய விளக்கமான தகவல்கள் அடுத்து வரும் பதிவுகளில் வெளிவரும். தமிழ்மணத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட புதிய சேவைகளைப் பற்றி சுருக்கமாக இங்கே காணலாம்.

முதலில் நோக்கமும் குறிக்கோளும் – தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம், அனைத்துத் தரப்புத் தமிழர்களும் சந்தித்து வரும் பொருளாதார, சமூக-அரசியல், கல்வி மற்றும் சுகாதாரப் பிரச்னைகள் குறித்த அறிவையும், விழிப்புணர்வையும் உலகளாவியத் தமிழ் மக்களிடம் வளர்க்க விரும்புகிறது. அரசு, வணிக நிறுவனங்கள் மற்றும் தன்னார்வக் குழுக்கள் என பல்வேறு அமைப்புகள் இப்பிரச்னைகளில் பெரும்பாலானவற்றை தனித்தனியே அணுகி வந்திருந்தாலும் இவ்வமைப்புகளுக்கும், மக்களுக்குமிடையே முழுமையான தொடர்பு இருக்கவில்லை. இந்தத் தொடர்பறுந்த நிலையானது நம் சமூகத்தின் அடிப்படையில் உள்ள பின்வரும் இரண்டு இடைவெளிகளின் பிரதிபலிப்பேயாகும்: (அ) வசதிகள் வாய்க்கப் பெற்ற பிரிவினருக்கோ விளிம்புநிலை மனிதர்களின் பிரச்னைகளைப் பற்றிய முழுமையான அறிவில்லை. (ஆ) விளிம்புநிலை மனிதர்களுக்கோ தங்களுடைய பிரச்னைகளின் அடிப்படைக் காரணங்களைப் புரிந்து கொள்ளக் கூடிய கல்வியறிவோ, விழிப்புணர்வோ அல்லது இரண்டுமே இருக்கவில்லை. அப்படியே புரிந்து கொண்டாலும், அப்பிரச்னைகளைக் களைவதற்கான வழிகளை அறிய வாய்ப்பில்லை. டி.எம்.ஐ நிறுவனம் இந்த இடைவெளிகளை நிரப்பும் பாலமாகச் செயல்பட விரும்புகிறது. விளிம்புநிலை மனிதர்கள் கூட தங்கள் குரலை சுதந்திரமாகவும், அதே நேரம் தனிமனித தாக்குதல்களின்றியும் ஒலிக்கும் வண்ணம் இணைய வசதிகளைப் பயன்படுத்தி ஒரு தளத்தை உருவாக்க விரும்புகிறது.

டி.எம்.ஐ. நிறுவனம் தமிழ்மணத்தை ஏற்கும்போது ஏறத்தாழ நானூறு பதிவுகளே இருந்தன; ஆனால், இன்றோ தமிழ்மணத்தில் இணைந்த பதிவுகளின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தொடவிருக்கிறது. பத்தாயிரம் பதிவுகளை தினமும் தானியங்கியாக தமிழ்மணம் திரட்டுகிறது. பதிவுகளை மட்டுமில்லாமல் அந்தப் பதிவுகளின் மறுமொழிகள், குறிச்சொற்கள், குறிச்சொற்களைக் கொண்டு தானியங்கியாக பதிவுகளை நகைச்சுவை, தொழில்நுட்பம் என பலப் பரிவுகளாக வகைப்படுத்தும் சேவை, பதிவுகள் வாசகர்களிடம் பெற்றுள்ள பரப்பினை தெரிவிக்கும் “தமிழின் முன்னணி பதிவுகள்”, ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டில் பிரபலமாக உள்ள பதிவுகள் என பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை தமிழ் வலைப்பதிவுகளைச் சார்ந்து தமிழ்மனம் வழங்கி வருகிறது. தமிழில் மட்டுமில்லாமல் பிற தெற்காசிய பிராந்திய மொழிகளில் கூட இல்லாத பல சேவைகளை தமிழ்மணம் வழங்க தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம் உழைத்துள்ளது.

தொழில்நுட்பம் தவிர, டி.எம்.ஐ. நிறுவனத்தின் மற்றொரு முயற்சியான பூங்கா வலையிதழைக் குறிப்பிட வேண்டும். தமிழ்மணத்தில் திரட்டப்படும் வலைப்பதிவுகளில் இருந்து புதிய பார்வைகளையும் பரந்துபட்ட சிந்தனைகளையும் உயிர்ப்பான மொழியிலே வெளிப்படுத்தும் படைப்புகளை அனுமதி பெற்றுத் தேர்ந்தெடுத்து வாரந்தோறும் தொகுப்பது பயனானதெனக் கருதி, “பூங்கா” வலையிதழைத் தமிழ்மணம் செப்டம்பர் 2006 இலே ஆரம்பித்தது. இக்கவனிப்பினூடாக தமிழ்ப்பதிவர்களின் பல்வேறு துறை நிபுணத்துவத்தை அடையாளங் கண்டு பதிவு செய்யத்தூண்டவும் மொழிவெளிப்பாட்டின் பல்வேறு கலைப்பரிமாணங்களைப் பரிசோதனை செய்ய ஊக்குவிக்கவும் சமூக அக்கறையுள்ளவர்களை ஒன்றிணைக்கவும் வேண்டிய தொடர்ச்சியான தேவையை நிறைவேற்றலாமென டி.எம்.ஐ. திடமாக நம்பியது; இன்னமும் நம்புகிறது. ஆனால், கிட்டத்தட்ட ஓராண்டு காலம் வெளிவந்த பூங்கா, தமிழ்மணம் போலத் தானியங்காமல் தனித்து ஓர் ஆசிரியர்குழுவின் கீழே இயங்க வேண்டியிருந்ததால் எங்கள் குழுவினரின் நேரத்தை அதிகம் எடுத்துக் கொள்ள நிறுத்தப்படவேண்டியதாயிற்று. இருப்பினும் இன்றும் பல பதிவர்கள் அம்முயற்சியை நினைத்துப்பார்க்கும்படியாக அமைந்தது பூங்கா என்பதில் மாறுபட்ட கருத்திருக்க முடியாது.
அடுத்து, ஜனவரி 2008 ஆம் ஆண்டு புதிய தமிழ்மணம் 2.0 சிறப்பான முறையில் வெளியிடப்பட்டது. தொடக்கத்தில் புதிய தமிழ்மணத்தின் இடைமுகம் பரிச்சயமின்மையால் முழு வரவேற்பைப் பெறாவிடினும், பழக ஆரம்பித்த சில நாட்களிலேயே அதனுடைய தொழில்நுட்ப மேம்பாட்டினால் பதிவர்களின் ஆதரவைப் பெற ஆரம்பித்தது. புதிய தமிழ்மணம் அளித்த தொழில்நுட்ப வசதிகள் ஏராளம். மறுமொழி திரட்டி, குறிச்சொல் திரட்டி, வாசகர் பரிந்துரை, சூடான இடுகைகள், தனித்தனியேயான துறைசார் பதிவுப்பக்கங்கள், பதிவர்களின் படங்கள் திரட்டல் என பல சேவைகளைக் குறிப்பிட விரும்புகிறோம்.

தமிழ்மணத்தின் இன்னொரு மைல் கல் திரைமணம். திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட பதிவுகள் வாசகர்களின் மத்தியில் அதிக கவனத்தைப் பெறுதலால், புதிய திரைப்படங்கள் வெளிவரும் வேளைகளில் எல்லாம் புதிய சவாலையும் ஏற்படுத்தியது. திரைப்படப் பதிவுகள் அதிகம் வரும் பொழுது மற்ற பதிவுகள் தமிழ்மணம் முகப்பில் அதிக நேரம் நிற்காமையால் பிற துறைகளில் நன்றாக எழுதும் பதிவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. மேலும் திரைப்படங்களைப் பற்றி படிக்க விரும்பும் வாசகர்களுக்கும் புதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நினைத்தோம். அதில் உருவாகியதுதான் திரைமணம். இன்று திரைமணம் பதிவர்களிடையேயும் வாசகர்களிடையேயும் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இறுதியாக, தமிழ்மணம் விருதுகளைக் குறிப்பிட விரும்புகிறோம். பொதுவாகவே வலைப்பதிவு விருதுகள் வழங்குவதில் உள்ள சவால்களையும், குளறுபடிகளையும் எதிர்கொள்ளமுடியாமல் பிறமொழிகளிலெல்லாம் விருதுகள் நிறுத்தப் பட்டிருக்கின்றன. ஆனால், தமிழ்மணம் விருதுகள் செயற்பாடு பல்வழிகளில் ஆராயப்பட்டு தனிநபர் தலையீடு மற்றும் குறைபாடுகள் ஏதுமில்லாமல் கடந்த மூன்றாண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் சுட்டிக்காட்டப்படும் சிறுகுறைகளைக்கூட பின்வரும் ஆண்டிலே பதிவர்களுடைய உதவியுடன் நீக்குகிறோம்.

இருப்பினும், இவையனைத்தையும் விட தமிழ்மணத்தின் வெற்றி வலைப்பதிவர்களாகிய உங்களது தொடர்ந்த ஆதரவில்தான் இருக்கிறது. சில நேரங்களில் எங்களுடைய சேவையில் தொய்வு ஏற்படும்போதுகூட குறைகளைச் சுட்டிக்காட்டி தொடர்ந்து எங்களுக்கு பக்கபலமாக இருந்திருக்கிறீர்கள். அண்மையில் எங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கவும் நன்கொடை அளித்தீர்கள். அவை அனைத்திற்குமான எமது நன்றியை இந்நேரத்தில் தெரிவித்துகொள்வதோடு தொடர்ந்து உங்கள் புரிதலையும் ஆதரவையும் வேண்டுகிறது.

தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம்
(Tamil Media International Inc)