தமிழ்மணம் பரிந்துரை : வாக்களிப்பு முறையில் மாற்றம்

தமிழ்மணத்தில் இருந்த வாக்களிப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இனி வாக்களிப்பதற்கு OpenIDஐ பயன்படுத்த வேண்டும். OpenIDஐ பயன்படுத்தும் அதே நேரத்தில் முன்பு போலவே சுலபமாக வாக்களிக்கும் வகையிலும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதன் முறையாக ஒரு இடுகைக்கு வாக்களிக்கும் பொழுது மட்டுமே தங்களது OpenIDஐ வாசகர்கள்/பதிவர்கள் தமிழ்மணத்திற்கு அளிக்க வேண்டும். அடுத்த சில வாரங்களுக்கு எத்தனை பதிவுகளுக்கு ஒட்டளித்தாலும் நீங்கள் உங்கள் openidஐ அளிக்க வேண்டிய தேவை இருக்காது. இந்த புதிய தொழில்நுட்பம் மூலமாக இடுகைகளுக்கு விழும் வாக்குகள் நேர்மையானதாகவும், அதன் தரத்தைச் சார்ந்ததாகவும் மட்டுமே இருக்கும் என நம்புகிறோம்.

எவ்வாறு வாக்களிப்பது ?

தமிழ்மணத்தில் வாக்களிப்பதற்கு உங்கள் OpenIDஐ பயன்படுத்த வேண்டும்

OpenID என்றால் என்ன ?

உங்கள் ப்ளாகர், வேர்ட்பிரஸ், யாகூ முகவரிகளே OpenID முகவரி ஆகும். இது குறித்த மேலதிக விபரங்கள் OpenID தளத்தில் உள்ளது .

எப்படி வாக்களிப்பது ?

வாக்களிக்க நுழையும் பொழுது OpenId பெட்டியில் உங்களது ப்ளாகர்/வேர்ட்பிரஸ் முகவரியை இவ்வாறு அளிக்க வேண்டும் – username.blogspot.com அல்லது username.wordpress.com. யாகூ முகவரியை username@yahoo.com என அளிக்க வேண்டும்

அவ்வாறு அளித்தவுடன் ப்ளாகர்/வேர்ட்பிரஸ்/யாகூ தளத்திற்கு நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். அங்கு உங்கள் பயனர்பெயரையும், கடவுச்சொல்லையும் அளிக்க வேண்டும். ப்ளாகர்/வேர்ட்பிரஸ்/யாகூ அதனை சோதித்து அது ஒரு சரியான முகவரியே என்ற தகவலை மட்டும் தமிழ்மணத்திற்கு வழங்கும்

ஒவ்வொரு முறை வாக்களிக்கும் பொழுதும் என்னுடைய OpenID அளிக்க வேண்டுமா ?

இல்லை. முதல் முறை வாக்களிக்கும் பொழுது மட்டுமே OpenIDஐ அளிக்க வேண்டும். தமிழ்மணம் அதனை நினைவில் வைத்துக் கொள்ளும். அடுத்த சில வாரங்களுக்கு எத்தனை பதிவுகளுக்கு ஒட்டளித்தாலும் நீங்கள் உங்கள் openidஐ அளிக்க வேண்டிய தேவை இருக்காது.

என்னுடைய யாகூ, ப்ளாகர், வேர்ட்பிரஸ் பயனர் பெயர், கடவுச்சொல் தமிழ்மணத்திற்கு தெரியுமா ? தமிழ்மணம் அதனை சேமிக்கிறதா ?

உங்கள் பயனர் பெயரோ, கடவுச்சொல்லோ தமிழ்மணத்திற்கு தெரியாது. உங்களது OpenID முகவரி மட்டுமே தமிழ்மணத்திற்கு தெரியும். தமிழ்மணம் உங்களது OpenID தவிர வேறு எந்த விபரங்களையும் கோருவதில்லை. சேமிப்பதும் இல்லை.

இந்த தொழில்நுட்பம் தற்பொழுது சோதனை வடிவத்தில் உள்ளது. சில பிரச்சனைகளை (Bad signature) பதிவர்கள் தமிழ்மணத்திற்கு தெரிவித்திருந்தார்கள். அது சரி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நுட்பத்தில் வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் தமிழ்மணம் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த கேட்டுக் கொள்கிறோம். பதிவர்கள் மற்றும் வாசகர்களின் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம்

Vote

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

தமிழ் சசி,
தமிழ்மணம்

தமிழ்மணத்தில் இருந்து சில பதிவுகள் நீக்கம்

தமிழ்மணத்தில் சேர்த்திருக்கும் சில பதிவுகளைத் திரட்டுவதில் இருந்து விலக்கி வருகிறோம். பிற செய்தித்தளங்கள், இணையதளங்களில் இருந்து பெரும்பாலும் வெட்டி ஒட்டிய இடுகைகளைக் கொண்டவற்றையும், பிறரின் காப்புரிமையை மதிக்காதவற்றையும், வெறும் அவதூறு மற்றும் வதந்தி பரப்பும் பதிவுகளையும், தமிழ்மணத்தின் சூழலை மாசுபடுத்துபவையையும் காலப்போக்கில் இனியும் விலக்கி விட முடிவு செய்திருக்கிறோம். அதோடு தமிழ்மணத்தில் இணைந்த தளங்கள் இப்போது தொழிற்படாமல் இருப்பின் (தளமே இல்லாதிருத்தல் போன்றன) அவற்றையும் நீக்க எண்ணியுள்ளோம். இது வாசகர்கள் பதிவர்கள் அனைவருக்கும் நன்மையையே தரும் என்பதோடு, தமிழ்மணத்தின் வழங்கிச் சுமையையும் குறைத்து நுட்ப அளவிலும் பயனுள்ளதாய் அமையும் என நம்புகிறோம்.

இம்முடிவைச் செயல்படுத்துகையில் தவறுதலாக ஏதேனும் பதிவு நீக்கப்பட்டால், மறுபரிசீலனை செய்து ஏற்றுக் கொள்ளவோ தொடர்ந்தும் விலக்கவோ உரிமையைத் தமிழ்மணம் தக்க வைத்துக் கொள்கிறது. இந்தச் செயற்பாட்டின் காரணமாகக் காலதாமதம் ஏற்பட நேரிட்டால் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறோம். முகப்புப் பக்கத்திலும் சில மாற்றங்களைச் சோதித்துப் பார்க்க எண்ணியிருக்கிறோம்.

பதிவர்கள் மற்றும் வாசகர்களுக்கு நல்ல வாசிப்பனுபவம் ஏற்படவும், தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளச் சுதந்திரமான ஒரு தளத்தை அமைத்துப் பேணுவதிலும் தொடர்ந்து தமிழ்மணம் ஈடுபடும்.

புரிந்துணர்வுடன் தொடரும் உங்கள் அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றி.

தமிழ்மணம் ஈழம்

இறுதிப் போர் என சிறீலங்கா அரசால் அறிவிக்கப்பட்டு நடந்த ஈழப் போரில் பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். விமானத்தாக்குதல், ஆர்ட்டிலரி, செல் என பலவகையான கனரக ஆயுதங்களுக்கு பலியான தமிழர்களுக்கு தமிழ்மணம் தனது அஞ்சலியை செலுத்துகிறது. இந்த ’தமி்ழ்மணம் ஈழம்’ தளம் போரில் பலியான மக்களுக்கும், போராளி்களுக்கும் சமர்பிக்கப்படுகிறது
eelam

தொடரப் போகும் ஈழத்தின் அரசியல் போராட்டத்தை இந்த தளம் பதிவும் செய்யும்
eelam