தமிழ்மணத்திலே இணைக்கப்படும் இடுகைகளின் காப்புரிமை

September 17, 2008 · Posted in அறிவிப்புகள் · 18 Comments 

சில பதிவுகளில் திரைப்படங்கள், மற்றவர்களின் இடுகைகள் முழுமையாக வெளியிடப்பட்டு, தமிழ்மணத்திலே இணைக்கப்படுகின்றன. அவ்வகையான திரைப்படங்கள், உள்ளடக்கங்கள் கொண்ட இடுகைகள் தகுந்த உரிமை பெற்றிருந்தாலன்றி, தமிழ்மணத்தில் காண்பிக்கப்பட மாட்டா. இப்படியான இடுகைகள் அப்படைப்பினைச் செய்தவர்களின் உழைப்பினைத் திருடுவ‌தாக அமையும் என்பதால் தமிழ்மணம் எவ்வகையிலும் ஊக்குவிக்காது.

பதிவர்களினாலே சேர்க்கப்படும் உரிமை பெறாத உள்ளடக்கங்களைக் கொண்ட இடுகைகள், இயன்றவரை விரைவாக நீக்கப்படும். தொடர்ச்சியாக இவ்வாறான இடுகைகளைத் தமிழ்மணத்திலே சேர்க்கும் பதிவு, தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படும். ஏற்கனவே இவ்விதி தமிழ்மணத்திலே சேரும்போது, பயனர்களுக்குச் சுட்டிக்காட்டப்பட்டதே.

ஆனால், படைப்புகளின் கருத்தினை முன்னிறுத்தவோ, நண்பர்களிடையே பகிர்ந்து கொள்ளவோ படைப்பின் சிறுபகுதியைத் தரும் இடுகைகளைத் தொடர்ந்து தமிழ்மணம் காண்பிக்கும். Youtube போன்ற தளங்களிலே ஏற்றப்பட்டு இணைக்கப்படும் ஒளிவீச்சுக்களும் ஒலிப்பதிவுகளும், ஏனைய நியாயமான பயன்பாட்டு (fair use) இடுகைகளும் இவற்றில் அடங்கும். முழுத்திரைப்படங்களுக்கும் மற்றவர்களின் ஆக்கங்களுக்கும் இடுகையிலே ஏற்றும் உரிமையினைப் பதிவர் பெற்று வெளியிட்டால் அவை தமிழ்மணத்திலே சேர்க்கப்படும்.

செய்திகளைத் தனியே திரட்டுதல்

September 7, 2008 · Posted in அறிவிப்புகள் · 3 Comments 

வலைப்பதிவுகளின் பெரிய வலிமை யாதெனில், அது சுயமான எழுத்து வெளிப்பாட்டிற்கு உதவுவது ஆகும். ஆரோக்கியமான சமூக மாற்றங்களுக்கு வழி வகுக்கும் வகையில் தமது சொந்த அனுபவங்களையும், கருத்துக்களையும் பகிர்வது வலைப்பதிவுகளின் நோக்கமாக இருப்பது சிறந்தது. இதனை ஊக்குவிக்கும் பொருட்டு, வேறு இணைய/அச்சுப் பக்கங்களிலிருந்து வெட்டி ஒட்டி வெளிவரும் பதிவுகளைத் தனியே திரட்ட தமிழ்மணம் விரும்புகிறது.

இவை பெரும்பாலும் செய்திகளாக இருப்பதால், செய்திகள் என்ற பட்டியின் கீழே இவை தொகுக்கப்பட்டிருக்கின்றன. இப் பிரிவின் கீழ் வரத் தகுந்த பதிவுகள் ஏதேனும்
விடுபட்டிருந்தால், அப்பதிவுகளை அறியத் தருமாறு பதிவர்களை வேண்டுகிறோம். செய்திகளை மட்டும் தேடி வாசிப்பவர்களுக்கும் இந்த ஏற்பாடு உதவிகரமாக இருக்கும்
என நம்புகிறோம்.

புரிந்துணர்வுடன் தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி

அன்புடன்,
தமிழ்மணம்