தமிழ்மணம்: இடுகைகளும் பதிவுகளும் நீக்கம்

தமிழ்மணம் குழுவினரின் செயல்பாடுகள் முழுக்க வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று எண்ணி, அதன் முதற்கட்டமாக கூடுமான வரை எங்களுடைய மின்னஞ்சல்களும், இடுகைகளும் பணியாற்றுபவர்/எழுதுபவர் பெயர் தாங்கி இடப்படவேண்டும் என்று முடிவு செய்தோம். எடுத்துக்காட்டாக தொழில் நுட்பக் குழுவில் பணியாற்றுபவர்கள், அவர்கள் செய்து முடித்த பணி குறித்து நேரடியாக பதிவர்களுக்கு அவர்களுடைய பெயர் தாங்கியே இடுகை எழுத வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்சசி அண்மையில் இரண்டு இடுகைகளை எழுதியிருந்தார். அதுபோலவே இடுகை நிர்வாகப் பணிகுறித்த மின்னஞ்சல்களில் அப்பணியாற்றுபவர்கள் தங்கள் பெயரிட்டு அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். தங்களுடைய பெயர்கள் வெளியிடப்படுவதனால் போலிகள் தங்களை அவதூறு செய்யக் கூடும் என்ற தயக்கம் எங்களிடம் இருப்பதும் உண்மையே. அதைத்தான் இப்பொழுது அனுபவிக்கிறோம். இருப்பினும் இந்த இடுகையையும் என்னுடைய பெயரில் எழுதுகிறேன். சில விசயங்களை பதிவர்களின் முன்பு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நேற்று தமிழ்மணத்திலிருந்து சில இடுகைகளும் பதிவுகளும் நீக்கப் பட்டிருகின்றன. அவை நீக்கப்பட்டதற்கு தமிழ்மண நிர்வாகத்தில் பணிபுரியும் இரமணியுடன் எற்பட்ட தனிப்பட்ட பிரச்னைதான் காரணம் என்று ஒருசிலரால் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையைச் சொல்வதென்றால் நேற்று நீக்கப் பட்ட பதிவுகள் சில வாரங்களுக்கு முன்பே நீக்கப் படவேண்டும் என்று எங்கள் குழுவில் விவாதத்துக்கு வந்தபொழுது அப்பொழுது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்க வேண்டாம், காத்திருந்து புரிய வைக்கலாம் என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் ஒருவர் தற்பொழுது குற்றஞ்சாட்டப்படும் இரமணிதான். அதனாலேயே அப்பதிவுகள் இன்னும் சில வாரங்கள் நீடித்து நின்றன.

எங்கள் குழுவிற்குள் யார் என்ன கருத்துக் கொண்டிருந்தார் என்றோ என்ன விவாதம் நடந்தது என்றோ நாங்கள் இதுவரை பொதுவில் சொன்னது கிடையாது. அனைத்தும் தமிழ் மணம் குழுவினரின் ஒருமித்த முடிவாகத்தான் பொதுவில் வைக்கப்பட்டது. இப்பொழுதும் இது எங்களது ஒருமித்த முடிவுதான் என்றாலும், மேலே சொன்ன சிறுதகவலை மட்டும் நான் தற்பொழுது குறிப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இரமணியின் மீது சுமத்தப் படும் குற்றச்சாட்டினைக் மறுப்பது மட்டுமல்லாமல், தமிழ்மணம் ஒரு தனிப்பட்டப் பதிவரின் சொந்த விருப்பு-வெறுப்பின் படி இயங்குகிறது என்ற குற்றச்சாட்டை மறுப்பதே இதன் நோக்கம். ஒவ்வொரு சிக்கல் வரும் பொழுதும் எங்கள் குழுவில் உள்ள 12 பேரும் இது குறித்து பல முறை விவாதித்துத் தான் முடிவெடுத்து வருகிறோம். இதற்காக நாங்கள் செலவிடும் நேரமும் அதிகம். எனவே எடுக்கப் பட்ட எல்லா முடிவுகளுமே தமிழ்மணத்தின் முடிவுகள்தான். குற்றம் சொல்லுவதாயினும், பாராட்டுவதாயினும் தமிழ்மணத்திடமே அவற்றைச் சேர்க்கவும்.

தற்பொழுது நீக்கப் பட்ட பதிவுகள் நீக்கப் படுவதற்கான காரணங்கள் சில வாரங்களுக்கு முன்பே அறியப்பட்டு, அலசப்பட்டு அதைப் பற்றிய ஒரு முன்னறிவிப்பையும் செய்திருந்தோம். அப்பொழுதே அவை நீக்கப்பட்டிருக்கலாம் என்றாலும் ஒரு பதிவர் தன்னுடைய இடுகைகளில் எழுதுவதற்கான உரிமையை மதித்து அவராகவே சில நாட்களில் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்வார் என்று எதிர்பார்ப்புடன்
காத்திருந்தோம். எனவே இப்பொழுது அவை நீக்கப் பட்டதற்கும் இரமணியுடன் அப்பதிவர்களுக்கு நடந்த தனிப்பட்ட பிணக்குகளுக்கும் எந்த தொடர்புமில்லை. தனிப்பட்ட பதிவராய் இரமணியோ அல்லது தமிழ்மணம் குழுவைச் சேர்ந்த வேறு ஒருவரோ எழுதும் எந்த விசயத்துக்கும் தமிழ்மணம் பொறுப்பாவதில்லை. ஆனால் அவர்கள் எழுதும் இடுகைகளும் தமிழ்மணம் கடைப்பிடிக்கும் விதிகளுக்குள் வராவிட்டால் நீக்கப்பட்டிருக்கின்றன, எதிர்காலத்திலும் நீக்கப்படும்.

இறுதியாக, தமிழ்மணத்திலிருப்பவர்களாகிய எங்களுக்கும் அரசியல் மற்றும் கொள்கை நிலைப்பாடுகள் உண்டு. ஆனால் அதன் அடிப்படையில் பதிவுகளைத் தமிழ்மணம் திரட்டுவதும், நீக்குவதும் கிடையாது. எனவே பெண்ணியம், பெரியாரியம், இந்துத்துவம், பார்ப்பனியம் என்ற அடிப்படைகளில் தமிழ் மணத்தின் நிலைப்பாட்டை அலச வேண்டாம். வழக்கமாக ஊடகங்கள் செய்யும் இந்த அரசியல் கருத்துத் தணிக்கையிலிருந்து விடுபட்ட ஊடகமாக வலைப்பதிவுகள் வளரவேண்டும் என்று தமிழ்மணம் கருதுகிறது, அதற்காக உழைக்கிறது.

தமிழ்ச்சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் மாறுபட்ட கொள்கைகளின் அடிப்படையில் தங்களுடைய கருத்துக்களை சுதந்திரமாகப் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று தமிழ்மணம் கருதுகிறது. அதற்குத் தடையாக இருக்கும் சிலருடைய தனிநபர் விளம்பர விளையாட்டுகளை, அவை கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்படவேண்டும் என்று புரிந்து கொள்ளப்பட்டாலும் தமிழ் மணத்தில் அனுமதிக்க இயலாது என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி – சொ. சங்கரபாண்டி
தமிழ் மணம்

தமிழ்மணத்தில் பதிவர்களின் புகைப்படங்களை இணைக்க/மாற்றும் வசதி

March 24, 2008 · Posted in அறிவிப்புகள் · 17 Comments 

தமிழ்மணத்தில் தற்பொழுது பதிவர்களின் புகைப்படங்கள் அவர்களின் இடுகைக்கு அருகே தெரியும் வசதி உள்ளது. சமீப காலங்களில் ப்ளாகரில் செய்யப்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு இந்த வசதி சரியாக வேலை செய்யாததால் பதிவர்கள் தங்கள் புகைப்படங்களை மாற்றி கொள்ள முடியாத சூழல் இருந்தது. இந்தப் பிரச்சனைக்கு ப்ளாகரில் தரவேற்றப்பட்ட புகைப்படங்களை கையாளுவதில் இருக்கும் சில பிரச்சனைகள், தமிழ்மணத்தின் வழங்கி மாற்றத்தால் எழுந்த பிரச்சனைகள் போன்றவை முக்கிய காரணங்கள். ப்ளாகரில் தரவேற்றப்பட்ட புகைப்படங்களை வேறு தளங்களில் தரவேற்றுவதில் சில பிரச்சனைகள் உள்ளன. இந்தப் பிரச்சனை தமிழ்மணம் என்றில்லாமல் imageshack.us போன்ற தளங்களிலும் காணப்படுகிறது. இந்த தொழில்நுட்ப பிரச்சனையை சரி செய்ய முயல்வோம். என்றாலும் இடைக்கால ஏற்படாக தமிழ்மணம் இந்த தீர்வினை வழங்குகிறது.

பதிவர்கள் தங்களது தமிழ்மணத்தின் கருவிப்பட்டையில் சில மாற்றங்கள் செய்வதன் மூலமாக தங்கள் புகைப்படங்களை தமிழ்மணத்தில் மாற்றிக் கொள்ள முடியும். மேலே கூறியுள்ளது போல ப்ளாகரில் தரவேற்றப்பட்ட புகைப்படங்களை தமிழ்மணத்தில் இணைக்க முடியாது. ஆனால் http://www.imageshack.us/ போன்ற தளங்களில் இருக்கும் புகைப்படங்களை இணைத்துக் கொள்ள முடியும்.

உதாரணமாக உங்களது ப்ளாகர் ப்ரோபைலில் உள்ள புகைப்படங்களை (உதாரணமாக – இந்தப் படம்) http://www.imageshack.us/ போன்ற தளங்களில் தரவேற்றி விட்டு (Avatar – 100 x 75) அதன் சுட்டியை உங்கள் தமிழ்மணம் கருவிப்பட்டையில் இணைக்க வேண்டும் (http://img212.imageshack.us/img212/7906/thamizhsasixs1.jpg).

புகைப்படங்களை மாற்றும் செய்முறை

கீழ்க்கண்டவாறு உங்கள் புகைப்படங்களை மாற்றலாம். இந்தப் பிரச்சனையை எளிமையாக தீர்க்கவும், தமிழ்மணத்தின் கருவிப்பட்டையை சுலபமாக உங்கள் பதிவில் இணைத்துக் கொள்ளவும் “தமிழ்மணம் பதிவுப்பட்டை விட்கட் (Widget)” ஒன்றை உருவாக்க திட்டம் உள்ளது. இந்த செய்முறை ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே.

தமிழ்மணத்தின் பதிவுப்பட்டையின் இரண்டாம் பகுதிக்கு செல்லுங்கள் – thamizmanam.com toolbar code Part 2

script expr:src=’ “http://services.thamizmanam.com/toolbar.php?date=” + data:post.timestamp + “&posturl=” + data:post.url + “&cmt=” + data:post.numComments + “&blogurl=” + data:blog.homepageUrl + “&photo=” + data:photo.url’ language=’javascript’ type=’text/javascript’

அதில் “&photo=” + data:photo.url என்ற பகுதியில் தான் மாற்றம் செய்ய வேண்டும். + data:photo.url என்ற variable value ப்ளாகரில் ப்ரோபைல் தவிர வேறு பகுதிகளில் வருவதில்லை என்பதால் + data:photo.url என்பதை நீக்கி விட்டு உங்கள் புகைப்படத்தை கீழ்க்கண்டவாறு இணைக்க வேண்டும்

&photo=http://img212.imageshack.us/img212/7906/thamizhsasixs1.jpg” என்று மாற்றம் செய்ய வேண்டும்.

மாற்றப்பட்ட உங்கள் கருவிப்பட்டை நிரலி இவ்வாறு தெரியும்.

இந்த மாற்றம் செய்யப்பட்ட பிறகு புதிய இடுகை தமிழ்மணத்திற்கு சமர்பிக்கப்படும் பொழுது, தமிழ்மணம் உங்கள் புகைப்படத்தையும் திரட்டிக் கொள்ளும்.

அன்புடன்,
தமிழ் சசி

தமிழ்மணம் - தமிழ் மீடியா இண்டர்நேஷனல்

தமிழ்மணத்தில் வேர்ட்பிரஸ்.காம் பின்னூட்டங்கள்

March 22, 2008 · Posted in அறிவிப்புகள் · 28 Comments 

தமிழ்மணத்தின் “அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்” பகுதியில் தற்பொழுது வேர்ட்பிரஸ்.காம் (WordPress.com) பின்னூட்டங்களும் திரட்டப்படுகின்றன. வேர்ட்பிரஸ.காம் பின்னூட்ட ஓடை மூலமாக இந்தப் பின்னூட்ட நிலவரம் 20 நிமிடத்திற்கு ஒரு முறை திரட்டப்படுகிறது. தற்போதைய நிலையில் தமிழ்மணத்தின் சோதனை ஓட்டத்தில் இந்த வசதி உள்ளதால் சில பிரச்சனைகள் இருக்கலாம். அவ்வாறான பிரச்சனைகளை பதிவர்கள் தமிழ்மணத்திற்கு தெரிவித்தால் அதனை சரி செய்ய முயல்வோம்.

அறியப்பட்ட பிரச்சனைகள்

* பின்னூட்ட ஓடையில் (Comment Feed) இருக்கும் பின்னூட்டங்களைப் பொறுத்தே பின்னூட்ட எண்ணிக்கை தமிழ்மணத்தில் தெரியும். எனவே இது வரை எழுதப்பட்ட இடுகைகளின் பின்னூட்ட எண்ணிக்கை தமிழ்மணத்தில் சரியாக இருக்காது. உதாரணமாக ஒரு இடுகை 20 பின்னூட்டங்களை பெற்றிருக்கலாம். ஆனால் பின்னூட்ட ஓடையில் அந்த இடுகையின் 4 பின்னூட்டங்கள் மட்டுமே இருந்தால் தமிழ்மணத்தில் பின்னூட்ட எண்ணிக்கை 4 என்றே தெரியும்.

* அது போலவே சோதனை ஓட்டத்தின் பொழுது பல முறை சில பதிவுகள் சோதனை செய்யப்பட்டன. எனவே அத்தகைய இடுகைகளின் பின்னூட்ட எண்ணிக்கையும் சரியாக இருக்காது. உதாரணமாக ஒரு இடுகை 1 பின்னூட்டத்தை மட்டுமே பெற்றிருக்கலாம். ஆனால் தமிழ்மணத்தில் 4 என்று தெரியலாம்.

இந்தப் பிரச்சனைகள் கடந்த காலங்களில் எழுதப்பட்ட இடுகைக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் இனி மேல் எழுதப்படும் இடுகைகள், அவற்றின் பின்னூட்ட எண்ணிக்கை தமிழ்மணத்தில் சரியாக தெரியும்.

தமிழ்மணத்தின் இந்தப் புதிய வசதி வேர்ட்பிரஸ் பதிவர்களுக்கு அதிக கவனத்தை பெற்று தரும் என நம்புகிறோம்.

அன்புடன்,
தமிழ் சசி
தொழில்நுட்ப குழு
தமிழ்மணம் – தமிழ் மீடியா இண்டர்நேஷனல்