தமிழ்மணம் இடுகைகள்: 28, டிசம்பர் 2007

இன்று (28, டிசம்பர் 2007) தமிழ்மணம் தரவுத்தளத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இன்று தமிழ்மணத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இடுகைகள் அனைத்தையும் இழக்க நேரிட்டுள்ளது. விளைவாக, டிசம்பர் 28, 2007 அதிகாலை 1:00 கிநிநே (EST) அளவில் எடுக்கப்பட்ட backup கொண்டு தமிழ்மணம் தளம் சரிசெய்யப்பட்டுள்ளது. அதிகாலை 1:00மணியில் இருந்து இன்று இரவு 8மணி வரை சமர்ப்பிக்கப்பட்ட இடுகைகள் தமிழ்மணத்திலே தற்சமயம் இல்லை.

இந்த எதிர்பாராத விளைவிற்குத் தமிழ்மணம் வருந்துகின்றது. பதிவர்கள் தங்கள் பதிவை மறுபடியும் தமிழ்மணத்துக்குச் சமர்ப்பிக்கும்போது, இவ்விடுகைகளைத் தமிழ்மணம் திரட்டிக்கொள்ளும்.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.

நிர்வாகம்
தமிழ்மணம்

தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2007: விரிவான அறிவிப்பு

December 25, 2007 · Posted in அறிவிப்புகள் · 21 Comments 

தமிழ் வலைப்பதிவுகள் எண்ணிக்கையிலும் தரத்திலும் வளர்வதற்கும், அவை பரவலான வாசகர்களைச் சென்றடையவும் தேவையான கட்டமைப்பை அளிப்பதையும், வழமையான ஊடகவெளிக்கு வெளியே வலைப்பதிவுகளில் எழுதப்படும் தரமான படைப்புகள் உரிய அங்கீகாரம் பெறவும், அதன் மூலம் அத்தகைய படைப்புகள் மேலும் அதிகரிக்கவும் தன்னாலானதைச் செய்வதையுமே தமிழ்மணம் தன் அடிப்படையான பணிகளாகக் கொண்டுள்ளது.

தமிழ்மணத்தின் அடிப்படை நோக்கங்களின் மீது நம்பிக்கை வைத்து இயங்கும் வலைப்பதிவர்களுக்கு நன்றி செலுத்துமுகமாக தமிழ் வலைப்பதிவுகளுக்கென்று விருதுகள் ஏற்படுத்தும் திட்டம் பல மாதங்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும், ஒரு ஆண்டுக்கான விருதுகளை அந்த ஆண்டின் இறுதியில் வழங்குவதே சரியெனத் தோன்றியதால் இவ்வறிவிப்பு தற்போது தான் வெளியிடப்படுகிறது.

வலைப்பதிவுகளின் ஜனநாயகத் தன்மையைப் போலவே, தமிழ்மணத்தின் அமைப்பில் உள்ளவர்கள், நியமிக்கப்பட்ட, நடுவர்கள் போன்ற சிறு குழுக்களின் சாய்வுகளை மீறி, பதிவர்களே தாங்கள் எழுதியவற்றுள் சிறந்த படைப்புகள் எனக் கருதுபவற்றை அடையாளம் காட்டும் ஒரு peer selection/recognition முறையாக இதை ஜனநாயக வழியில் நடத்த வேண்டுமென்பதே எங்கள் நோக்கம். தமிழ்மணத்தை நிர்வகிக்கும் டி.எம்.ஐ. அதை செயல்படுத்தும் ஒரு கருவியாக மட்டுமே விளங்கும்.

ஒவ்வொரு பதிவரும் தன்னுடைய பதிவே சிறந்தது எனப் பெருமிதம் கொள்ளும் உரிமையைப் பெற்றிருந்தாலும், இடுகைகளுக்கு உடனுக்குடன் கிடைக்கும் சக பதிவர்கள்/வாசகர்களின் பின்னூட்டங்கள் மூலமான அங்கீகாரமும் பதிவர்களை மேலும் ஊக்குவிக்கும் சக்தியாகத் திகழ்கிறது. அப்படிப்பட்ட இடுகைகளை வாசகர்கள் மீண்டுமொருமுறை திரும்பிப் பார்க்க வைத்து அங்கீகரிப்பதே இந்த விருதுத் தேர்வுக்கான அடிப்படை. அறிவிக்கப்பட்ட போட்டிகளுக்காக எழுதப்படும் படைப்புகளாக அல்லாமல், தன்னெழுச்சியாக வெளிப்பட்ட படைப்புகளே இந்தத் தேர்வுகளுக்கு கணக்கிலெடுக்கப்படுவதால் இதில் போட்டியோ, ஏமாற்றமோ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்குமென்றே நம்புகிறோம். இவ்வாண்டின் தேர்வுகள் கீழ்காணும் பிரிவுகளில் இருக்கும்:

  1. படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)
  2. காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், திரைப்படம்)
  3. நூல், திரைப்படம் அறிமுகம்/திறனாய்வுகள்
  4. அறிவியல், தொழில்நுட்பக் கட்டுரைகள்
  5. பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
  6. செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்
  7. அரசியல், சமூக விமர்சனங்கள்
  8. பெண்கள் பிரச்னைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள்
  9. ஈழ மக்களின் சமூக-பொருளாதாரச் சிக்கல்கள்
  10. தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல்

தேர்வு நடைமுறை:

1. தனிப்பட்ட இடுகை (post) அல்லது இடுகைத் தொடர்களே விருதுக்கு தேர்வு செய்யப்படும். வலைப்பதிவு முழுமைக்குமான விருது என்று எதுவும் இல்லை.

2. இடுகையை எழுதிய பதிவரே பரிந்துரை செய்யவேண்டும். ஒரே பதிவர் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளுக்குப் பரிந்துரை செய்யலாம். ஆனால் ஒரு பிரிவுக்கு ஒரே இடுகையை மட்டுமே பரிந்துரை செய்ய வேண்டும். குறிப்பிட்ட இடுகையை ஒரு பிரிவுக்கு மட்டுமே பரிந்துரை செய்ய இயலும்.

3. பரிந்துரைக்கப்படும் படைப்புகள் 2007 ஆம் ஆண்டில் முதல் முறையாகப் பதிவுகளில் எழுதப்பட்டிருக்கவேண்டும். பரிந்துரைகள் 2007 ஆண்டில் வெளியிடப்பட்ட முந்தைய ஆண்டுகளின் படைப்புகளின் மீள்பதிவுளாகவோ அல்லது வேறு அச்சிதழ் அல்லது இணைய தளங்களில் வெளியிடப்பட்ட படைப்புகளின் மீள்பதிவுகளாகவோ இருத்தலாகாது.

4. விருதுத் தேர்வுக் குழு (நடுவர் குழு) என்று எதுவும் இல்லை.தமிழ்மணத்தில் இணைந்துள்ள அனைத்துப் பதிவர்களும் முதற்கட்ட நடுவர்களே. ஒரு பதிவருக்கு ஒரு பிரிவுக்கு ஒரு வாக்கு என்னும் அடிப்படையில் வாக்குரிமை இருக்கும்.

5. முதற்கட்ட வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்கள் பெறும் இடுகைகள் இரண்டாம் கட்டப் பொது வாக்கெடுப்புக்குத் தெரிவு செய்யப்படும். இரண்டாம் கட்டத்தில் அனைத்து வாசகர்களும் (பதிவு இல்லாதவர்களும்) வாக்களிக்கலாம்.

6. பதிவர் வாக்குகளும் வாசகர் வாக்குகளும் 2:1 என்ற விகிதத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மொத்த வாக்குகள் கணக்கிடப்படும். இதில் முதலிடம் பெறும் இடுகை அந்தந்தப் பிரிவில் 2007-இன் சிறந்த இடுகையாக அறிவிக்கப்படும்.

7. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த இடுகைகள் தமிழ்மணம் வெளியிட எண்ணியிருக்கும் நூலில் அச்சு வடிவம் பெறவும் வாய்ப்பிருக்கிறது. இதற்குப் பதிவரிடம் முதலிலேயே ஒப்புதல் கோரப்பட்டு படைப்பை மேலும் செம்மைப்படுத்தவும் வாய்ப்பளிக்கப்படும்.

8. ஒவ்வொரு பிரிவிலும் முதல் கட்ட வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்படும் முதல் 10 இடுகைகளும் (மொத்தம் 100 இடுகைகள்), தமிழ்மணம் தளத்தில் புதிதாக உருவாக்கப்படும் சிறப்புப் பக்கத்தில் நிரந்தரமாக இடம் பெறும். தமிழ்மணம் புகழ் அரங்கு (Hall of Fame) என்ற இந்தப் பக்கம் ஒவ்வொரு வருடமும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த இடுகைகளை நிரந்தரமாக முன்னிறுத்தும்.

9. தமிழ்மணத்தில் இணைந்துள்ள பதிவர்களுக்குப் பரிந்துரைகள் அனுப்புவதற்கான வேண்டுகோள் வெளியிடப்படுவதுடன் விருது தெரிவுப் பணி தொடங்கும். பரிந்துரைகளுக்கான காலகட்டம் 7 நாட்கள், முதற்கட்ட வாக்கெடுப்புக்கு 7 நாட்கள், இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்கு 7 நாட்கள் அளிக்கப்பட்டு அடுத்த நாளில் விருது அறிவிப்பு வெளியாகும்.

10. முன்னதாக விருதுகளுக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பதக்க மாதிரிகளும், அவற்றைப் பதிவில் இணைக்கும் நிரல்துண்டுகளும் வெளியிடப்படும்.

முதல் ஆண்டு என்பதால் இந்த நடைமுறையில் சில சிக்கல்கள் ஏற்படலாம் அவை இயன்றவரையில் களையப்பட்டு, வரும் ஆண்டுகளில் இன்னும் மேம்படுத்தப்பட்ட, இவ்வாண்டு காணப்படும் உற்சாகம், பங்கேற்பின் அடிப்படையில் விரிவாக்கப்பட்ட வகையில் தமிழ்மணம் விருதுகள் நிர்வகிக்கப்படும் என்றும் உறுதி கூறுகிறோம். அடுத்த ஆண்டு முதல் டிசம்பர் -ஜனவரியில் நடத்தப்பட்டு தைத்திங்கள் முதல் நாளில் விருது அறிவிக்கப்படும். இந்த ஆண்டு சில தொழில்நுட்ப, மற்றும் நடைமுறைக் காரணங்களால் விருது நடைமுறை தொடங்குவது சில வாரங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பரிசு:
வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் அதிக வாக்குப் பெற்று முதலிடம் பெறும் பதிவுகளுக்குத் தலா ரூ.500ம் (ஐநூறு), இரண்டாம் இடம் பெறும் பதிவுகளுக்குத் தலா ரூ.250ம் (இருநூற்றி ஐம்பது) வழங்கப்படும். இவை பணமாகவோ, அதன் மதிப்பான புத்தகங்களாகவோ வழங்கப்படும்.

-தமிழ்மணம் விருதுத் தேர்வு ஒருங்கமைப்புக் குழு

தமிழ்மணம் விருதுகள் 2007

தமிழ் வலைப்பதிவுகளுக்கென்று விருதுகள் ஏற்படுத்தி சிறந்த பதிவுகளைப் பாராட்டி அங்கீகரிக்கும் நோக்கில் தமிழ்வலைப்பதிவுகளின் முன்னோடித் திரட்டியான தமிழ்மணம் சில திட்டங்களை வரைந்துகொண்டுள்ளது. இதைப்பற்றி ஏற்கனவே தமிழ்மணம் தளத்தை நிர்வகிக்கும் டி.எம்.ஐ. நிறுவனம் சில இடங்களில் இடுகை/மறுமொழி வாயிலாக குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

விரைவில் முழுமையான அறிவிப்பை எதிர்பாருங்கள்.