கேளிர் – தமிழ்மணம் பன்மொழித்திரட்டி

கேளிர் – தமிழ்மணம் பன்மொழித்திரட்டி – Beta

டி எம் ஐ தொழில்நுட்பக்குழு உருவாக்கிய கேளிர் – தமிழ்மணம் பன்மொழித் திரட்டியின் பீட்டா வடிவத்தைத் தற்பொழுது வெளியிட்டு உள்ளோம். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலிருந்து வலைப்பதிவுகள் திரட்டப்படுகின்றன. இவ்வலைப்பதிவுகள் கூகுள் வலைப்பதிவு தேடுதல் சேவை மூலமாகத் திரட்டப்படுகிறன.

கூகுளை அடிப்படையாகக் கொண்டு கேளிர் திரட்டியிலே வலைப்பதிவுகள் திரட்டப்படுவதால், தமிழ்மணத்திற் பதிவு செய்யப்படாத தமிழ்ப்பதிவுகளும் இதிலே தெரிவதற்கு வாய்ப்பு உள்ளது. கேளிர் மூலமாகத் திரட்டப்படும் பதிவுகளின் உட்கருத்துகளுக்குத் தமிழ்மணம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது.

கேளிர் திரட்டியில் மேலும் சில மொழிப்பதிவுகள் எதிர்காலத்திற் சேர்க்கப்படும்.

யாதும் ஊரே; யாவரும் கேளிர்

நிர்வாகம்
தமிழ்மணம்

தமிழ்விழி – தமிழ்மணம் விழியத்திரட்டி

தமிழ்விழி – தமிழ்மணம் விழியத்திரட்டி

டி எம் ஐ தொழில்நுட்பக்குழுவின் சிறப்பான செயற்பாட்டின் இன்னொரு பயனான தமிழ்விழி – தமிழ்மணம் விழியத்திரட்டியின் பீட்டா வடிவத்தைத் தற்பொழுது வெளியிட்டுள்ளோம்.

http://www.thamizmanam.com/video.php

தமிழ்விழிக்கான வீடியோக்கள் கூகுள் வீடியோ, யூ – டியுப், யாகூ வீடியோ போன்றவற்றின் ஓடைகளில் இருந்து திரட்டப்படுகிறது.

கூகுள் போன்றவற்றின் ஓடைகளிலிருந்து சில தேடுதல் சொற்களைக் கொண்டு இந்த விழியங்கள் திரட்டப்படுகின்றன. தமிழ்மணத்தில் சில விரும்பத்தகாத விழியங்கள் தோன்றாதவண்ணம் நிரலி ரீதியாக சில கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. என்றாலும், நிரலி ரீதியாக செயற்படும் இந்தக்கட்டுப்பாடுகளை மீறி, சில விழியங்கள் தமிழ்மணத்திலே தோன்றினால் பதிவர்கள் தமிழ்மணத்திற்கு உடனே அறியத்தரும்படி கேட்டுக்கொள்கிறோம்

தமிழ்விழி தமிழ்மணம் பயனர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என நம்புகிறோம்

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி.

நிர்வாகம்
தமிழ்மணம்

தமிழ்மணம் நடத்தும் முதலாமாண்டு வலைப்பதிவர் கருத்தரங்கம்

தமிழ் வலைப்பதிவர்களுக்கிடையே நேரடி அறிமுகத்தினை ஏற்படுத்தவும் , கருத்தாடல்களுக்கு வழிவகுக்கவும், புதிதாக வலைப்பதிய விரும்புபவர்களுக்கு பயிற்சியளிக்கவும் அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையுடன் (Federation of Tamil Sangams of North America, FeTNA) இணைந்து பேரவையின் ஆண்டுவிழாவின்போது ஒரு வலைப்பதிவர் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்ய தமிழ்மணம் விழைகின்றது. இம்முயற்சியின் தொடக்கமாக, இவ்வாண்டு, அமெரிக்காவின் வடக்கு கரோலைனா மாநிலத்தில் அமைந்திருக்கும் ராலே நகரில் (Raleigh, NC) ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நிகழவிருக்கும் பேரவை நிகழ்வுகளின்போது முதலாவது வலைப்பதிவர் கருத்தரங்கினை ஏற்பாடு செய்கிறது. இந்தக் கருத்தரங்கத்தின் உத்தேசமான வடிவம் கீழே தரப்பட்டுள்ளது :

* வலைப் பதிவர்கள், பதியாதவர்கள், பதிய விரும்புவோர், வாசிப்போர், யார் வேண்டுமானாலும் பங்குபெறலாம்.
* கருத்தரங்கம் சுமார் 1-2 மணி நேரங்கள் நடக்கும் .
* ஒருங்கிணைப்பாளர்/ மட்டுறுத்துனரின் அறிமுக உரை இருக்கும்.
* புதிதாக வலைப்பதிய விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் ஒரு செயல் விளக்கம் இருக்கும்.
* ஒவ்வொரு வலைப்பதிவரும் தான் விரும்பும் தலைப்பில் (குறிப்பாக வலைப்பதிவு; மற்றபடி தமிழ், சமூகம் உள்ளிட்ட பல கருத்துக்களில்) உரையாற்றலாம், உரை வாசிக்கலாம், அல்லது தம் வெவ்வேறு விதமான கலைத் திறன்களை வெளிக்காட்டலாம். ஒருவருக்கு சுமார் பத்து நிமிடங்கள் ஒதுக்கப்படும். வரும் வலைப்பதிவர்களின் தொகையினைப் பொறுத்து இக் கால அளவு மாறுபடும்.
* ஒவ்வொரு பதிவரின் நிகழ்ச்சிக்குப் பின்னும், அவரிடம் , பார்வையாளர்கள் பொதுவில் கேள்வி கேட்பதற்கு (அல்லது கருத்துக் கூறுவதற்கு), இரண்டு நிமிடங்கள் ஒதுக்கப்படும் .
* அரங்கத்தில் நவீன ஒலி/ ஒளி, திரை/ projector வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே powerpointஐப் பயன்படுத்தி உரை நிகழ்த்துவது வரவேற்கப்படுகிறது .
* பேரவையின் விழாவுக்கு வருகை தரும் ஒரு சிறப்பு விருந்தினரும் நமது கருத்தரங்கில் வந்து கலந்து கொள்வார்.

இக்கருத்தரங்கை மேம்படுத்த வலைப்பதிவர்கள் தங்கள் கருத்துக்களையும் , யோசனைகளையும் கூறி நிகழ்ச்சி சிறக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அனைத்து அமெரிக்க வலைப்பதிவர்களையும் பங்குபெற அழைக்கிறோம். பங்கு பெற விரும்பும் வலைப்பதிவர்கள்/மற்றவர்கள் தங்கள் விருப்பத்தினைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். மேலும் இக்கருத்தரங்கினை ஒருங்கிணைக்க கீழ்க்கண்ட வலைப்பதிவர்கள் இசைந்துள்ளார்கள். அவர்களில் யாரையேனும் பதிவர்கள் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

பாஸ்டன் பாலாஜி (bsubra at gmail dot com)
மயிலாடுதுறை சிவா (sivaakumar at gmail dot com)
இலவசக் கொத்தனார் (elavasam at gmail dot com)
சுந்தரவடிவேல் (sundara at gmail dot com)
சங்கரபாண்டி (sornam at gmail dot com)

பூக்கூடை – தமிழ்மணம் குறிச்சொல்திரட்டி

பூக்கூடை – தமிழ்மணம் குறிச்சொற்கள் திரட்டியின் பீட்டா வடிவத்தைத் தற்பொழுது வெளியிட்டுள்ளோம்

தமிழ்மணத்திற்கு வலைப்பதிவுகளை அனுப்பும் பொழுது, அந்த இடுகையைச் சார்ந்த ப்ளாகர் லேபிள் (Blogger Label), வேர்ட்பிரஸ் வகை (WordPress Categories) போன்றவை பூக்கூடை திரட்டிக்கு திரட்டப்படும்.

அதிகமான இடுகைகளில் இணைக்கப்பெற்றிருக்கும் குறிச்சொற்கள் தமிழ்மணம் முன்பக்கத்தில் தெரியும். தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட அனைத்துக்குறிச்சொற்களையும் குறிச்சொற்கள் பக்கத்திற் பார்க்க முடியும் ( http://www.thamizmanam.com/tm_tags.php)

தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட பதிவுகள் தவிர WordPress, Technorati, Del.icio.us போன்றவற்றிலும் ஒரு குறிச்சொல்லைச் சார்ந்த இடுகைகளைப் பார்க்க இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன

உதாரணமாக “அரசியல்” என்ற குறிச்சொல்லைச் சார்ந்து தமிழ்மணத்தில் திரட்டப்பட்ட இடுகைகளை இந்தச் சுட்டி மூலம் “http://www.thamizmanam.com/tag/அரசியல்” பார்க்க முடியும். அரசியல் என்ற குறிச்சொல் கொண்டு WordPress, Technorati, Del.icio.us போன்றவற்றில் இணைக்கப்பட்ட பதிவுகளையும் பார்க்க இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன

வலைப்பதிவெங்கும் பூக்கும் குறிச்சொற்களைத் தமிழ்மணம் பூக்கூடை மூலமாக எளிதாகப் பார்க்க வகை செய்யும் இந்த முயற்சி வலைப்பதிவர்களுக்குப் பயனளிக்கும் என நாங்கள் நம்புகிறோம்

பூக்கூடை தற்பொழுது பீட்டா வடிவத்தில் இருப்பதால் உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம்

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி.

நிர்வாகம்
தமிழ்மணம்