தமிழ்மணத்தில் பின்னூட்டங்களின் இற்றைப்படுத்துகை: உயரெல்லை 30

February 26, 2007 · Posted in அறிவிப்புகள் · 71 Comments 

தமிழ்மணம் முகப்புப்பக்கத்தில் உள்ள இரண்டு சிறப்புப்பகுதிகள், அண்மையில் எழுதப்பட்ட இடுகைகளைத் திரட்டும் நடுப்பகுதியும் அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகளைக் காட்டும் வலப்புறப் பகுதியும் ஆகும். முன்னது, 1,000 நொடிகளுக்கொரு முறையும், பின்னது, 500 நொடிகளுக்கொரு முறையும் இற்றைப்படுத்தப்படுகின்றன. எத்தகைய பின்னூட்டங்களை அனுமதிப்பது என்பது சம்பந்தப்பட்ட வலைப்பதிவரின் தனிப்பட்ட உரிமையெனினுங்கூட, சில பதிவுகளில் பின்னூட்டங்கள், வெறும் விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் சில சந்தர்ப்பக்களிலே சச்சரவுகளை உருவாக்கும் நோக்கத்தோடும் அனுமதிக்கப்படுவதால், பின்னூட்டங்களைத் திரட்டும் வசதி அதன் தேவைக்கும் நோக்கத்துக்கும் மாறாக, முறையின்றிப் பயன்படுத்தப்படுகின்றது என்று தமிழ்மணம் நிர்வாகத்திற்குத் தொடர்ந்து முறையீடுகள் வருகின்றன. திரட்டியின் வளங்களைச் செம்மையாகவும், வாசகர்களுக்கு இயன்றளவு பயன் அளிக்கும் வகையிலும் தரும் நோக்குடன், பின்னூட்டங்களை இற்றைப்படுத்தும் முறையில் மாற்றங்களைத் தமிழ்மணம் கொண்டு வந்திருக்கின்றது. ஒரு சோதனை ஏற்பாடாக, ஓர் இடுகைக்கு உயரெல்லையாக, திரட்டப்படுவதிலே 30 பின்னூட்டங்கள்வரை மட்டுமே தமிழ்மணம் முன்றல்-வலப்புறத்திலே காட்டுவது என தமிழ்மணம் முடிவு செய்து செயற்படுத்தத் தொடங்கியுள்ளது. தங்கள் பதிவுகளில் எத்தனை பின்னூட்டங்களை அனுமதிப்பது என்பது பதிவர்களின் முடிவு; ஆனால், பின்னூட்டங்கள் முப்பது எண்ணிக்கைக் கணக்கினைத் தாண்டியபிறகு குறித்த இடுகைகள் முகப்புப் பகுதியில் காட்டப்படா.

மற்றபடி தமிழ்மணத்தின் சிறப்புகளில் ஒன்று, அது பின்னூட்டங்களை இற்றைப்படுத்துவது என்பதை மிகவும் நன்றாக உணர்ந்திருப்பதால், தமிழ்மணத்திலே கட்டுப்பாட்டைக் கற்றுத் தரும் முயற்சிக்கு மாற்றாக வேறு வழிகளில் நல்ல பதிவுகளையும்/ பின்னூட்டங்களையும் ஊக்குவிக்கவும் நாம் ஆராய்ந்து வருகின்றோம். அதனால், இந்த ஏற்பாடு பரிசோதிக்கப்படும்வேளையிலே, பின்னூட்டங்களைத் திரட்டுவதைச் சிறப்பான முறையில் செய்வதற்கான பதிவர்களின் ஆலோசனைகளையும் வரவேற்கிறோம். நடைமுறையிலேயிருக்கும் வேலைப்பளு, நேரம் காரணமாக, தனிப்பட்ட பதிவர்கள், தம் இடுகைகளிலோ, ஆங்கே பின்னூட்டங்கள் வாயிலாகவோ தெரிவிக்கும் ஆலோசனைகள் எங்கள் கவனத்தைப் பெறும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமுமில்லை. அதனால், அவற்றை இவ்விடுகையில் பின்னூட்டங்கள் மூலமாகவோ, மின்னஞ்சல்கள் மூலமாகவோ தெரியப்படுத்தலாம்.

பதிவர்களின் தொடந்த புரிதலுடனான ஒத்துழைப்புக்கு நன்றி.

நிர்வாகம்
தமிழ்மணம்.

‘தேன்கூடு’ சாகரன் அவர்களுக்கு அஞ்சலி

February 11, 2007 · Posted in அறிவிப்புகள் · 66 Comments 

‘தேன்கூடு’ வலைப்பதிவுத் திரட்டியை உருவாக்கியவரும், சாகரன் என்கிற புனைப்பெயர் கொண்ட சகவலைப்பதிவருமான திரு. கல்யாண் அவர்கள் அகாலமாக மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தோம். அவருடைய பிரிவினைத் தாளாது துயருறும் அவரது துணைவியார், குழந்தை, பெற்றோர், உறவினர்கள், உற்ற நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான அனுதாபங்களையும், அன்னாருடைய நினைவிற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

‘தமிழ்மணம்’ திரட்டியை நடத்த டி.எம்.ஐ பொறுப்பேற்றுக்கொண்டபோது புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து அவர் அனுப்பிய மடலை இவ்வேளையில் கனத்த மனத்தோடு நினைவு கூர்கிறோம். வலைப்பதிவு என்னும் மாற்றூடகம் தமிழில் வளர்ச்சிபெற தமிழ்மணமும், தேன்கூடும் இணையாக பணிபுரிந்துவருகின்ற நிலையில் தேன்கூட்டின் பின்புலத்தில் முதன்மையானவராக இருந்து இயங்கிய கல்யாண் மறைந்தது தமிழ் வலைப்பதிவு உலகிற்கு பேரிழப்பாகும். அவரது இழப்பை ஈடு செய்து தேன்கூட்டினை தொடர்ந்து வளர்த்தெடுக்க தேன்கூட்டோடு சம்பந்தப்பட்ட நண்பர்களுக்கு மனத்திண்மை வாய்க்க உளப்பூர்வமாக விழைகிறோம். கல்யாண் விரும்பியதைப்போல தமிழ்மணம் பிற தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகளோடு தொடர்ந்து நட்புறவு பேணும் என்பதனை அவருடைய நினைவுக்கு அளிக்கும் மரியாதையாக மீண்டும் உறுதி செய்கிறோம்.

இவண்,
டி.எம்.ஐ. நிர்வாகம்
—–
Update

Dear All,
Please check the following website for sakaran’s funeral rites updates.

http://djanakiraman.googlepages.com/

Thanks
Deepa (His sister)
February 13th, 2007 | 1:04 am

—–
தேன் பதிவிலிருந்து:

சாகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லும் விதமாகவும் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலி செய்திகளை ஒருங்குறியிலோ அல்லது ஆங்கிலத்திலோ (இயன்றவரை தமிழில் செய்யவும்) அனுப்பவும்.

ஏற்கனவே பதிவிட்டிருந்தால் அதையும் அனுப்பலாம். இவர்குறித்து வந்த பதிவுகளையும் மினஞ்சலில் வரும் செய்திகளையும் தொகுத்து சாகரன் குடும்பத்தாருக்கு சென்னை பதிவர்கள் தர இருக்கிறார்கள்.

sakaraalai@gmail.com

எனும் முகவரிக்கு உங்கள் இரங்கல் செய்திகளை அனுப்பலாம்.

தமிழ்மணம்/பூங்கா சேவையில் ஏற்பட்ட தடை

February 3, 2007 · Posted in அறிவிப்புகள் · 8 Comments 

சென்ற 30, ஜனவரி 2007 – 31, ஜனவரி 2007 நாட்களிலே பதினேழு மணிநேரம் தமிழ்மணம்/பூங்கா உள்ளிட்ட டிஎம்ஐ சேவை பாதிக்கப்பட்டிருந்ததை தமிழ்மணம் பயனாளிகளும் பூங்கா வாசகர்களும் அறிவீர்கள். சேவையிலே ஏற்பட்ட தடை குறித்து பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் முற்கூட்டியே நிர்வாகம் அறிவிக்கமுடியவில்லை. பாதிப்பு ஏற்பட்ட பின்னரே, டிஎம்ஐ நிர்வாகத்துக்கே இப்பாதிப்பினைக் குறித்துத் தெரியவந்தது. இது தொடர்பாக, உடனடியாக டிஎம்ஐ சேவைக்கான வழங்கியைக் கொண்டிருக்கும் நிறுவனத்தோடு எமது தொழில்நுட்பக்குழு தொடர்பு கொண்டபோது, தமிழ்மணம்/பூங்கா ஆகியவற்றுக்கு வரும் வாசகர்களின் தொகையும் இணையப்போக்குவரத்தும் தொடர்ந்து கணிசமாக அதிகரித்துக்கொண்டு செல்வதால், தற்போதைய வழங்கிக்குப் பளு அதிகரிக்கும் காரணத்தால் டிஎம்ஐ சேவையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்ததாக அறியத்தந்தார்கள்.

டிஎம்ஐ இன் தொழில்நுட்பக்குழு – இணையச்சேவை வழங்கு நிறுவனத்துடனான பேச்சுவார்த்தைக்குப் பின், ஜனவரி 31 காலையிலே தொழில்நுட்பக்குழுவுக்கு, வழங்குசேவையைத் தொடர வழி செய்திருப்பதாக அந்நிறுவனம் அறியத்தந்தது. மீண்டும் தமிழ்மணம்/பூங்கா சேவைகள் ஆரம்பிக்க இது வசதியேற்படுத்திக்கொடுத்தது.

டி எம் ஐ சேவையிலே தொடர்ச்சியாக நாம் அவதானித்துவரும் பயனாளிகள் இணைவும் இணையப்போக்குவரத்தும் எமக்கு மகிழ்ச்சிக்குரியவை. இவ்வளர்ச்சிக்கு ஏற்ப, சேவை வழங்கும் வழிவகைகளை டிஎம்ஐ ஆராய்ந்து வருகின்றது. தொடர்ந்து இணைந்து வரும் பயனாளிகள், வழங்க எண்ணியிருக்கும் டிஎம்ஐ சேவைகளின் காரணமாக நிச்சயமாக எமக்கான இணையப்போக்குவரத்து அதிகரித்தே வரும். இந்நிலையிலே நம்பகமான இணையச்சேவைவழங்கிக்கு மாற உத்தேசமாக எண்ணியுள்ளோம். ஆனால், இம்மாற்றத்தினை எப்போது செய்வதென்பது குறித்து எமது அடுத்த தமிழ்மணம் மேம்படுத்துகையை முன்வைத்தே தீர்மானிக்கவிருக்கின்றோம்.

எவ்விதமாறுதலேனும், இயலுமானவரை உடனுக்குடன், தமிழ்மணம்/பூங்கா பயனாளிகளுக்கு டி எம் ஐ இங்கே அறியத் தரும். இதேவேளையிலே தமிழ்மணம்/பூங்கா முன்கூட்டியே தம் பயனாளிகளுக்கு அறிவிக்கமுடியாமல், ஏற்பட்ட சேவைப்பாதிப்புக்காக வருத்தத்தினைத் தெரிவித்து மன்னிப்பினை வேண்டுகின்றது.

தொடர்ந்தும் புரிந்துணர்வுடன் காட்டிவரும் ஆதரவுக்கு நன்றி.

நிர்வாகம்
டிஎம்ஐ

01 பெப்ருவரி 2007