த‌மிழ்ம‌ண‌ம் விவாத‌க்க‌ள‌ம்: விரிவான‌ அறிவிப்பு

December 27, 2006 · Posted in அறிவிப்புகள் · 23 Comments 

மனித வர்க்கத்தின் அத்தனை வளர்ச்சிக்கும் ஆதாரம், சுழற்சி. பூமியின் சுழற்சியில் உள்ளது நம் உயிராதாரம். சுழலும் சக்கரங்கள் மனிதனின் மன வேகத்தை இயந்திரத்தில் ஏற்றி இயக்கிய முயற்சி. மனித வரலாற்றில் அறிவியல், பொருளாதாரம், அரசியல், சமூகம் ஆகியவற்றில் நிகழும் அத்தனை மாற்றங்களும் இச்சுழற்சியின் வேகத்தினைப் பொருத்தே அமைகின்றன.

மனிதகுலத்தின் எண்ணச்சுழற்சி, அது வாழும் சமுதாயத்தை அப்படியே பெயர்த்தெடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்திவிடும் பேராற்றல் கொண்டது. சிந்தனையில், செயல்களில், விருப்பங்களில், ஏன் வாழும் முறைகளிற்கூட அருகருகே வசிக்கும் இரு மனிதர்களிடையே எண்ணற்ற வேறுபாடுகள். இத்தகைய வேறுபாடுகளை மாற்ற முயலாமல், புரிந்துகொள்ள முயலும் ஒரு சமுகமே உயர்வு நோக்கிப் பயணிக்கும். புரிந்துகொள்ள முயலும் ஒரு சமூகத்தில் எல்லாவித மதிப்பீடுகளும் நம்பிக்கைகளும் விமர்சிக்கப்பட்டு, மறு ஆய்விற்குட்படுத்தப்பட்டு சிதைந்து தேய்ந்து கால ஓட்டத்தில் மீண்டுமொரு புதிய உருவாக்கம் கொள்ளுமே தவிர, தேங்குநீர்க்குட்டையாய் நின்று தீங்கிழைப்பதில்லை. “இதுதான், இதற்குளேதான் எல்லாம், இதுவே கடைசி” என அனைத்தையும் கட்டத்திற்குள் அடக்கும் ஆதிக்க முகம் நோக்கி நகர்வதல்ல வளர்ச்சி.

இத்துணை காலமாக‌ இருந்துவரும் அனைத்து ஆதிக்கத்தையும் விவாதத்திற்குள்ளாக்குவதிலேதான் உள்ளது உண்மையான வளர்ச்சி. எவ்வித அபிமானமும் எதன் மீதுமில்லாமல் சமுதாய நலனை மட்டுமே கருத்திற் கொண்ட விவாதங்கள், திரித்தல்கள், சங்கடங்கள் இல்லா ஒரு பெரும் விவாதமேடையாக வலைப்பதிவுகள் இருக்கவேண்டும். ஆக்கபூர்வமான விவாதங்களை ஊக்குவித்து பயனற்ற வாதங்களை ஒதுக்கி விடுவது சமூகத்தின் ஆற்றல்களைச் சரிவரப் பயன்படுத்துவதற்கு அவசியமானது. அதற்கான ஒரு முன்னோட்ட முயற்சியே தமிழ்மணத்தின் விவாதக்களம்.

முதல் விவாதக்களம் தமிழ்மணம் நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பெற்ற நான்கு வலைப்பதிவர்களால் நடத்தப்பெறும். பதிவுலகிற் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகத் தனது எண்ணங்களை எழுதும் பதிவர் மா.சிவக்குமார் அவர்கள் இவ்விவாதக்களங்களின் பொறுப்பாளராகச் செயற்படுவார் .

* இப்பதிவர்கள் முக்கியமெனக் கருதும் கருத்துக்கள், நம்பிக்கைகள், படைப்பிலக்கியங்கள், சமூகமதிப்பீடுகள், செய்திகள் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் தமிழ்மணம் விவாதக்க‌ளத்தில் பதிவிடுவார்.

* பதிவு வெளியிடப்பட்ட பின்னர் ஐந்து பதிவர்களும், பதிவின் மீதான விவாதங்களைத் தொடர்ந்து கொண்டு செல்வர் .

* இந்த ஐந்து பதிவர்கள் மட்டுமல்லாது மற்ற நண்பர்களும் தங்களின் செறிவான, ஆரோக்கியமான வாதங்களை இங்கு வைக்கலாம். விவாதக்கள உறுப்பினர்கள், நெறியற்ற வார்த்தைகள் இருப்பின், அவற்றைத் தவிர்த்து வெளியிடுவர். ப‌திவ‌ர்க‌ளின் க‌ருத்துக்க‌ள் எவ்வ‌கையிலும் மாற்ற‌ப்ப‌டா.

* ஒவ்வொரு மாதமும் நான்கு பதிவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள் அடுத்த‌ மாதத்திற்கான நான்கு பதிவர்களைத் தேர்ந்தெடுப்பர்.

கருத்துக்கள் மட்டுமே மோதும் வெளியாகத் தமிழ்மணம் விவாதக்களம் இருக்கும்.

வரும் சனவரி,1 புத்தாண்டு தினத்திலிருந்து தமிழ்மணம் விவாதக்களம் திறக்கப்படவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

புரிந்துணர்வுடனான தொடர்ந்த ஒத்துழைப்பிற்கு நன்றி.

நிர்வாகம்
தமிழ்மணம்

தமிழ்மணத்தின் தலையீடின்மையும் தலையிடியும்

December 23, 2006 · Posted in அறிவிப்புகள் · 35 Comments 

பதிவர்களுக்கு தமிழ்மணத்தின் இடர்ப்பாடுகள் புரியுமென தமிழ்மணம் நினைக்கின்றது. தமிழ்மணத்தினை நடத்தத் தேவையான பொருளாதாரம் குறித்தோ, தொழில்நுட்ப உதவி குறித்தோ இங்கே குறிப்பிடவில்லை. அவற்றின் தாக்கத்தினைத் தாங்கும் திறனும் எதிர்பார்ப்பும் தமிழ்மணத்திடம் இருக்கின்றது. ஆனால், திரும்பத் திரும்ப அறிவில்லாத கிளிப்பிள்ளை செப்புவதுபோல, “தமிழ்மணம் திரட்டி மட்டுமே; தனிப்பட்டவர்களிடையேயான சண்டைகளுக்கும் சிண்டு பிடித்து முண்டு அவிழ்த்தலுக்குமிடையே தமிழ்மணம் அடிதாங்கியாகவோ அல்லது கவசகேடயமாகவோ இருக்கமுடியாது. தமிழ்மணம் தன்னால் இயன்றளவு தன் விதிமுறைகளுக்கு வில்லங்கம் வராதவகையிலே செயற்பட முயற்சிக்கின்றது. அதே நேரத்திலே உங்கள் குரல்களை – அவை ஒழுங்கான தொனியிலே வெளிவரும்போது – வெளியிடவும் முயற்சிக்கின்றது” என்று சொல்லிக்கொண்டிருக்க இனியும் விரும்பவில்லை. விட்டுக்கொடுப்புகள் ஒருபோதும் இயலாமை எனக் கருதப்பட இடம் கொடுக்க விரும்பவில்லை. கடந்த ஒரு மாதத்திலே தனிப்பட்ட தமக்கிடையேயான பிக்கல்பிடுங்கல்களுக்கும் இயலாமைகளுக்கும் எரிச்சல்களுக்கும் தமிழ்மணத்தினைத் தாக்கிக் குரூர திருப்தி அடைகின்றவர்களைக்கூடப் பொறுத்துக் கொள்ளலாம்; ஆனால், அவற்றின் விளைவான திரித்தல்களும் புனைதல்களும் தொடர்ந்து பதிலிறுப்பைத் தமிழ்மணத்திடம் எதிர்பார்த்துக்கொண்டேயிருக்கின்றன. அவை குறித்து தொடர்ந்து தமிழ்மணத்தின் கவனம், திருத்தமாகச் சொன்னால், டிஎம்ஐ இன் கவனம் சிதறிப்போக எம்மால் அனுமதிக்கமுடியாது. தமிழ்மணம், பூங்கா என்பனவற்றுக்கும் அப்பால், தொழில்நுட்பம், அறிவியல் குறித்த வெளியீடுகளைப் பதிப்பித்தல், தமிழ்ச்சமூகத்திலே வாய்ப்புக் குறைந்த பிரிவினரின் வேறு தன்னார்வ குழுமங்களால் அடையாளம் காணப்படாத தேவைகளை இனம் கண்டு, செயற்படுதல் என்பனபோன்ற விரிந்த நோக்குகளுக்கும் டிஎம்ஐ இன் நேரமும் பொருளும் சக்தியும் பயன்படுகின்றன. டிஎம்ஐ இன் வலைப்பக்கத்திலே இந்நோக்குகள் குறித்து சிறிது கோடி காட்டியிருப்பதனை ஏற்கனவே பார்த்திருந்தவர்கள் இவை பற்றி ஓரளவு அறிந்திருப்பீர்கள்.

தமிழ்மணத்தினையும் பூங்காவினையும் எடுத்துக்கொண்டாலே,
1. தொடர்ந்து வளர்ந்து வரும் பதிவுத்தொழில்நுட்பத்துக்கும் அவற்றின் பக்கவிளைவுகளான இருக்கும் நுட்பத்திலே ஏற்படும் மாற்றங்களுக்கும் ஈடாக, தமிழ்மணத்தின் சேவையை அதனோடு இணைந்திருக்கும் பதிவர்களுக்குக் கொடுப்பதும்
2. புதிய வசதிகளைத் தமிழ்மணத்துள்ளே சேர்த்துக்கொள்ள, அடையாளம் காணவும் திட்டமிடவும் செயற்படுத்தவும் முயல்வதும்
3. பூங்காவிற்குச் சரியான, தரமான, ஏற்கனவே வேறெங்கும் பதிக்கப்படாத, செய்தித்துணுக்குகள் அல்லாத பதிவுகளைத் தேர்ந்தெடுத்தலும் சீர்படுத்துதலும் வடிவமைத்தலும்
4. பூங்காவிற்குத் தமிழ்மணத்திற்கு அப்பாலும் வெளிவரும் படைப்புகளைத் தேடிப் பெறுதலும் இணைத்தலும்

ஆகிய செயற்பாடுகள் உள்ளன.

இச்சூழலிலே, தனிப்பட்டவர்களின் பதிவுகளிலே வரும் கருத்துவேறுபாடுகளையும் சண்டைகளையும் தொடர்ந்து அவதானித்து, வசை விழுமிடத்திலெல்லாம் ‘பிளீப்’ சத்தம் எழுத்திலே விழவைக்கும் வல்லமையும் பொழுதும் தமிழ்மணத்துக்கில்லை என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளவில்லையென்பதோ அல்லது புரிந்து கொண்டும் அந்நிலையை விரும்பவில்லையென்பதோ அவர்கள் தரும் அஞ்சல்கள் ஊடாகவும் இடுகைகள் ஊடாகவும் தொடர்ந்து தெரிகின்றது. இவர்கள் எண்ணிக்கையிலே மிகச்சிலரே என்றானபோதுங்கூட, இவர்களுக்குத் தமிழ்மணவிளக்கமும் விலக்கமும் தருவதிலேயே எமக்குப் பாதி பொழுது கழிந்துவிடுகின்றது. குறைந்த பட்சம், வசையடங்கிய இடுகைகளையேனும் தமிழ்மணத்திலே சேர்க்கக்கூடாதென்ற தார்மீகநியாயம் இடுகின்றவர்களிடம் இருக்கவேண்டும்; அல்லது, சேர்க்கப்பட்டால், அப்படியான இடுகைகளைத் தமிழ்மணத்திலிருந்து விலக்கிவிடுவதால்மட்டும் அவ்விடுகைகள் அவ்விடுகைகள் இட்ட பதிவுகளிலிருந்து விலகிவிடுவதில்லை என்பதை ஏரண உய்த்தறிதல்மூலம் அறிந்தும், உணர்வளவிலே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவர்களோடு பிணக்குற்றவர்களுக்கு இருக்கவேண்டும். இல்லாதவிடத்தே, குறைந்த பட்சம் ஆற்றாமையினாலே, நியாயம் துளியுமின்றி தமிழ்மணத்தினைத் தாக்காமலேனும் இருக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு, எய்தவனும் அம்புங்கூடவிருக்க, இடைக்காற்றை நோக்கிச் சாடுவதாலே என்னத்தினைச் சாதித்துவிட்டீர்கள் எனறே கேட்கத் தோன்றுகின்றது.

முன்னமே குறிப்பிட்டதுபோல, டிஎம்ஐ நிறுவத்தினைச் சார்ந்தவர்களுக்கு, தத்தமளவிலே தனிப்பட்ட அரசியல், சமூகப்பார்வைகளுண்டு; ஆனால், தனி மனிதர்களுக்கு மனமும் உணர்வுமிருந்தாலுங்கூட, தொடர்பாடலை அதன் உச்சநிலையான “அனைவருக்கும் சுதந்திரக்கருத்தாடல்” என்ற குரலோடு இயக்க முயற்சிக்கும் தமிழ்மணத்தினை நடத்தும் நிறுவனம் அது சார்ந்த மனிதர்களின் தனிப்பட்ட குரலாக ஒலிக்கமுடியாது; ஒலிக்கவுமில்லை. தனிப்பட்ட பதிவுகளை அவற்றின் உள்ளடக்கம் காரணமாக, அது தமிழ்மணத்திலே பதிகின்ற வேறு பலரின் விருப்புகளுக்கு உகந்தவையல்ல என்பதாலோ, அல்லது ஏன் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகத்திலே இருப்பவர்களின் தனிப்பட்ட விருப்புகளுக்கு ஒவ்வாதவையென்றோ விலக்கிவிட முடியாது. அப்படி விருப்புவெறுப்புக்கேற்ப, சேர்த்துவிலக்குவதாயின், பெருவணிக அச்சூடகங்களும் செய்தித்தாபனங்களும் செயற்படுத்துகின்றதாக குற்றம் சாட்டப்படும் ஒளிப்புமறைப்பு வழிக்கு மாற்றான பாதையென நாம் சொல்லிக்கொள்ளும் இணையவூடகத்திலே எவ்விதமான அர்த்தமுமில்லை. அப்படியான நிலையிலே தமிழ்மணத்தினை டிஎம்ஐ நடத்துவதிலும் அர்த்தமில்லை. தத்தம் படைப்புகளும் கருத்துகளும் அவற்றின் உள்ளடக்கங்களுக்காக வாசிக்கப்படுகின்றன கேட்கப்படுகின்றன என்ற அங்கீகாரத்தினைத் தமிழ்மணத்திலே இணைந்திருக்கும் அனைத்துப் பதிவர்களுக்கும் எந்த வகையிலும் எந்நிலையிலும் தர விரும்புகின்றோம்; இந்நோக்கு -, தமிழ்மணத்திலே திரட்டப்படும் இடுகைகளாகட்டும், தமிழ்மணம் நட்சத்திரமெனத் தேர்ந்தெடுக்கப்படும் பதிவராகட்டும், பூங்காவிலே வெளிவரும் கட்டுரைகளாகட்டும் – எல்லாவற்றிலும் ஆள்,கருத்து வித்தியாசமின்றித் தெறிக்க வைக்க இயலுமானவரை முயல்கிறோம். ஒரு பதிவு அல்லது இடுகை விலக்கப்படும்போதோ அல்லது ஒரு பதிவு சேர்க்கப்படமுடியாதபோதோ அதற்கான காரணங்களைத் திட்டமாக வெளிப்படுத்துகிறோம். மீண்டும் ஒரு பதிவு சேர்க்கப்படும்போது, அதற்கான காரணங்களைத் தெளிவாகச் சொல்கிறோம்.

நிச்சயமாக பூங்கா ஆசிரியர்குழுவின் “தொகுப்பாளரின் மேசையிலிருந்து” நடுநிலையாக இருக்கமுடியாது; ஒரு பத்திரிகையாசிரியர் தனிப்பட்ட கருத்துகளைக் கொண்டிருக்கலாம்; அதேபோல, ஆசிரியர்குழுவும் அதற்கான ஒரு பொதுக்குரலினைக் கொண்டிருக்கலாம். அதனையும் அப்பத்திரிகையிலே திரட்டப்படும் படைப்புகளையும் வாசகர்கள் குழப்பிக்கொள்ளக்கூடாது. பார்வைக்கும் செய்திக்கும் (views Vs. news) என்ற அளவிலேயே காண முயற்சிக்கவேண்டும். தொகுப்பாளரின் மேசை, ஆசிரியர்குழாத்தின் பார்வை; இணைக்கப்படும் படைப்புகள், பூங்காவினைப் பொறுத்தமட்டிலே, செய்திகளும் பலரின் கருத்துப்பார்வைகளும். இதனைச் சில வாசகர்கள் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. தவிர, வேறு செய்தித்தாபனங்களிலே வந்த படைப்புகளை அள்ளிப்போடுவதால் – ஒலி, ஒளிப்பதிவுகள் சிலவேளைகளிலே பூங்காவிலே சேமிக்கும் இட நிலை காரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலுங்கூட – பூங்கா புதிதாக எதைச் சொல்லப்போகின்றது? இதனைச் சரியாகப் புரியாத நிலையிலே அல்லது அதனை விரும்பாத நிலையிலே தொடர்ந்தும் பூங்காவிடம் “ஏன் ‘அ’ வின் பதிவினைச் சேர்க்கவில்லை?” என்றோ அல்லது “‘ஆ’வின் பதிவினைச் சேர்த்தீர்கள்?” என்றோ கேட்பது பொருந்தாது. சில கருத்துகளுக்கு எதிர்க்கருத்துகள் இருக்கின்றன, ஆனால் அவை பூங்காவிலே தோன்றவில்லை என்று தெரிந்தால், “ஏன்???!!” என்ற வினாக்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் மறைமுகமான குறிப்பிட்ட சிலரின் பதிவுகளிலேமட்டுமே தோன்றும் அநாமதேயத்தாக்குதலுக்கும் அப்பால், தயவு செய்து பூங்காவுக்கு உங்களின் எதிர்க்கருத்துகளைக் கட்டுரைகளாகப் பதிவு செய்து அனுப்புங்கள். தாராளமாகப் பூங்கா, அவை தரமுள்ளவையென்று தோன்றின், கருத்துவேறுபாடின்றி ஏற்றுக்கொள்ளும்.

இதுவரை நாள், இப்படியாக தமிழ்மணத்தின் நிர்வாகிக்கு வந்த முறையீடுகளிலே இயலுமானவரை எமது நிலைக்குப் பங்கம்வராது செயற்படவே முயற்சித்தோம்; பதில்களையும் நேரம், சக்தி என்பவற்றினையும் பொருட்படுத்தாது தந்தோம். ஆனால், இப்படியான எமது செயற்பாடு ஆக விழுமியத்தின் கடப்பாடேயன்றி, சட்டத்தின் விளைவான கடப்பாடல்ல என்பதையேனும் புரிந்துகொள்ள இவர்களிலே பெரும்பான்மையானோர் முயற்சிப்பதாகத் தெரியவில்லை.

சென்ற வாரம் வெளிப்படையாகவே முறையிடப்பட்ட இடுகைகளின் தலைப்புகளை – எந்நிலையிலும் முறையிட்டவர்கள் பெயர் சொல்லாது– வெளியிடுவோமென்று சொல்லி வெளியிடத் தொடங்கினோம். ஆனால், தொடர்ந்தும் இவற்றுக்கான எமது தமிழ்மணத்தின் விதிமுறையின் அடிப்படையிலான பதில்களின் பின்னால், தாக்குதல்கள் தமிழ்மணத்தின்மீதுதான் பதிவுகள் காரணமாக வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக, இரண்டு காரணங்களின்படி இவை வந்திருக்கின்றன. இவை தனிப்பட தமிழ்மணத்தினைத் தாக்கி வந்திருப்பதாலும், சில பதிவர்கள் தமது பதிவிலே தமிழ்மணத்தின் பதிவினை வெளியிட்டிருப்பதாலும் வெளிப்படையாகவே இங்கே தமிழ்மணத்தின் மீது தனிப்படக் குற்றம் சாட்டி வந்த சில அஞ்சற்பரிமாற்றங்களைத் தரவிரும்புகின்றோம். இவை தமிழ்மணத்தின் நிலையினைப் பதிவர்களுக்கு அறியத் தரும் நேரத்திலே, தமிழ்மணம் எவ்வாறு முகக்கவசமாகவும் இடிதாங்கியாகவும் தன்மீது குற்றம் சாட்டுகின்றவர்களாலேயே தவறாகப் பயன்படுத்தப்படுகின்றதென பதிவர்கள் அறிய உதவும். இதன்மூலம் தமிழ்மணம் பதிவர்களிடமிருந்து கழிவிரக்கத்தையோ ஆறுதலஞ்சல்களையோ எதிர்பார்க்கவில்லை; ஆனால், புரிந்துகொள்ளும் பதிவர்களிடமிருந்தாவது எதிர்காலத்திலே பதிவுகள், பூங்கா தொடர்பாகப் பொறுப்புணர்வினை எதிர்பார்க்கலாமென்ற நம்பிக்கையிலேதான் தருகின்றது. ஆனால், எந்நிலையிலும், இயக்கி பதில் அளிக்காத இறுகிய இரும்புச்சுவர்போல பதிவர்களைச் சேர்ப்பதிலும் விலக்குவதிலும் தமிழ்மணம் ஈடுபடப்போவதில்லை. தமிழ்மணத்தின் செயற்பாடுகள் தமக்குப் பொருத்தமானவையல்ல என்றோ அல்லது தம் நலனை எதிரொலிக்கவில்லையென்ரோ விரும்புகின்றவர்கள் அவர்கள் திரட்டக் கேட்டுச் சேர்ந்ததுபோலவே, திரட்டியிலிருந்து விலக்கக்கேட்டு விலகிப் போகலாம். எடுப்பார்கைப்பிள்ளையாகவோ தெருவாடு குரங்காகவோ தமிழ்மணம் இழுத்தார் இழுப்புக்கெல்லாம் இழுபட்டுக்கொண்டிருக்க அதன் நோக்குகள் இடங்கொடுக்கா. அப்படியாகத் தமிழ்மணத்தினை நடத்துவதற்கு மாற்றாக, அதை மூடிவிட்டுப்போவது தமிழ்ச்சமுதாயத்துக்கு நெடுங்கால நோக்கிலே மிகவும் பயனாகவிருக்குமெனக் கருதுகிறோம். அவர்களின் நலன்களைத் தெறிக்க, தமிழ்மணம் எனும் சிறிய திரட்டி ஒருபோதும் தடையாகவோ அல்லது ஒரே வழிதானென்றோ நாம் ஒருபோதும் சொன்னதில்லை. எத்தனையோ திரட்டிகளும் முறைகளும் இணையத்திலே அவர்களின் நலன்களைத் தெளிவாகத் தெறிக்கக் கிடைக்கட்டுமென்றும் அதன்மூலம் அவர்களின் இலக்குகள் அடையப்படட்டுமென்று வாழ்த்தி விடை தருகிறோம்.

முதலாவது முறையீடு: ஈழம் தொடர்பான பதிவிலே, தமிழ்மணத்திலிருந்து அகரன் என்பவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் மதியுரைஞர் பாலசிங்கம் மறைவு குறித்து வெளியிட்ட இடுகையை அகற்றும்படி பல முறையீடுகள் வந்திருந்தன. தமிழ்மணம் விதிகளின்படி அவ்விடுகை விலக்கப்பட முடியாதென்பதே தமிழ்மணத்தின் முடிவு. அதை இயலுமானவரை தெரியப்படுத்தியிருந்தோம். அதன்பின்னால், தமிழ்மணம் ஈழத்தமிழர்களுக்கெதிராகச் செயற்படுவதாகத் தமது இடுகையிலே அகரன் என்பவர் தெரிவித்திருந்தார். முரண்நகை என்னவெனில், கனக.ஸ்ரீதரன் என்பவரின் பதிவிலே அநாமதேயம் ஒருவர் தமிழ்மணம் நட்சத்திரப்பதிவு ஈழத்தவர்களுக்குமட்டுமே இடம் கொடுக்கின்றதென தெட்டத்தெளிவாகவே பட்டியலாகத் தெரியும் நட்சத்திரப்பதிவாளர்களின் பெயர்களை தனக்குத்தானே இருட்டடிப்புச் செய்து வெளியிட்ட அதே நேரத்திலே அகரன் இப்படியாகத் தெரிவிக்கின்றார். ஏற்கனவே பதிவர் ஓகையின் பின்னூட்டத்திலே ஈழத்தமிழர்களான இரு பதிவர்கள்தான் நடத்துகின்றார்களெனவும் ஈழப்பயங்கரவாதிகளின் திரட்டியெனவும் இந்திய எதிர்ப்புத்திரட்டியெனவும் மிகவும் பிழையானவையும் வேண்டுமென்றே தமிழ்மணம்மீதான உள்நோக்குடனான தாக்குதலாகவும் அநாமதேயம் ஒருவர் பின்னூட்டமிட்டிருந்தார். ஆரூரன் அநாவசியமாக பதிவுகள்வட்டத்தினையும் தாண்டி வேறிடங்களிலும் தன் பார்வையைத் தமிழ்மணத்தின் நோக்காகக் குழப்பிக்கொண்டு இட்டிருந்த இடுகை, “வெறுமனே உணர்வின் அடிப்படையிலே ஈழச்சார்பான திரட்டியாக மட்டுமே தமிழ்மணம் இயங்கவேண்டும்; அல்லாது, அகரன் போன்றவர்களின் கருத்துகளை வெளியிட்டால், அது தமிழ்மணம் ஈழத்தமிழர்களின் எதிர்ப்புத்திரட்டி எனவும் கருதப்படும்” என ஜனநாயகமறுப்பான பதிவினை வெளியிட்டிருந்தார். இதுகூட அநாமதேயப்பதிவாளர் ஒருவர் தமிழ்மணம் நடத்துகின்றவர்கள் இவர்கள்தான் எனக்கூறி, ஈழத்தைச் சார்ந்த ஈழத்தேசியத்தின் தீவிர ஆதரவாளர் ஒருவரை இந்த அறிவிப்பினை இங்கே எழுதுகின்ற திரட்டி நிர்வாகியாக அடையாளம் கண்டு எழுதியிருக்கும் நாளிலே நிகழ்ந்தது வேடிக்கையானது. யாருக்கும் தமிழ்மணத்தின் சார்பின்மை குறித்து நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லாதிருப்பினுங்கூட, இப்படியாக ஈழ ஆதரவுத்திரட்டி- ஈழ எதிர்ப்புத்திரட்டி, திராவிடத்திரட்டி-பார்ப்பனத்திரட்டி என்று மத்தளத்து இருபக்கத்தடிகளும் தமிழ்மணத்தின் திரட்டுநடுநிலையைப் புரிந்துகொள்ளும் திறனுள்ள பதிவர்களுக்கு அறியத்தந்திருக்கின்றதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், ஆங்கிலத்திலே மட்டும் இடுகை வந்ததால், அகரனின் பதிவு ஒன்றும் விலக்கப்பட்டது. அதுபோல, my friend என்பவரின் brain teasers, நளாயினி தாமரைச்செல்வனின் ஈழம் குறித்த டொச் இடுகைகளும் மொழி தமிழற்றதென்ற காரணத்தினாலே தமிழ்மணத்தின் விதிகளுக்கமைய விலக்கப்பட்டன.

இரண்டாவது முறையீடு: ‘விடாதுகருப்பு .எதிர். மாயவரத்தான்’ என்ற இருவரிடையேயான தனிப்பட்ட கருத்துவேறுபாடுகள், “திராவிடர். எதிர். பார்ப்பனர்” என்ற தனிக்குழும உணர்வுவேறுபாடுகளின் விளைவாக தொடர்ந்தும் இருசாராரினாலும் முறையின்றித் தமிழ்மணம் தொடர்ந்து தாக்கப்படுகின்றது. எந்தவொரு இடுகையோ பதிவோ நீக்கப்படும்போது, தமிழ்மணத்தின் நோக்கு, விதிமுறைகளுக்கு ஏற்பவே விலக்கப்படுகின்றன; ஆனால், தொடர்ந்து முழுப்பொழுதும் பதிவுகளைக் கவனித்துக்கொண்டிருக்கும் நேரம், வசதி, வல்லமை தமிழ்மணம் நிர்வாகத்துக்கு இல்லாததினாலே, பதிவர்களின் முக்கோணத்தினை அழுத்திய சுட்டிக்காட்டல்கள் இலகுவாக பதிவர்களின் நாளநாடிகளூடாக எல்லைமீறியதெனக் கருதப்படும் பதிவுகளை அடையாளம் கண்டுகொள்ள உதவி செய்கின்றன. அப்படியாக முறையிடப்பட்ட இடுகைகளைப் பார்வையிட்டு, விதிமுறை காரணமாகமட்டும் அவசியமெனக் கருதினால், அவ்விடுகைகளோ, தொடர்ந்தும் அப்பதிவுகள் அப்போக்கிலேயே செயற்பட்டால், பதிவுகளோ அறிவிப்போடு அகற்றப்படுகின்றன. தமிழ்மணத்திலே சேரும்போது, ஒரு தொடர்பு முகவரி தந்திருந்தால், அது மாறும்போது – அதாவது, பதிவர் அதை மாற்றும்போது – தமிழ்மண நிர்வாகத்துக்கு முறையாக அறியத் தரவேண்டியது பதிவர்களின் பொறுப்பாகும்; தமிழ்மணநிர்வாகிகள் நாளும் எப்பதிவரது முகவரி எதுவெனத் தேடிக் கண்டுகொண்டிருப்பது, 900 பதிவுகளிடையே – தமிழ்மணம் திரட்டியினையே நா. கண்ணன், தேவ், ஜி, இராகவன் என்று அறிந்த பதிவர்களின் பெயர்களிலே தமிழ்மணத்திலே சேர்த்துக் கொள்ளும்படி வாரத்துக்கு ஒரு முறையேனும் குளறுபடியினை அநாமதேயர்கள் செய்யும் வேளையிலே, இடுகைகளின் வகையினை மாற்றும்படி, மறுமொழி திரட்டுவதைச் சேர்க்கும்படி வேண்டுகோள்கள் வரும் பொழுதிலே – முற்றிலும் சாத்தியமில்லை. இதன் காரணமாக தமிழ்மணத்தின் முன்னறிவிப்புகள் பதிவர்களுக்குச் சென்று சேராவிட்டால், அதற்குத் தமிழ்மணம் பொறுப்பாகதென அறிந்துகொள்ளவேண்டும்.

ஆரம்பத்திலே, ராதா ராகவன் என்ற பதிவர் ராகவன் நரசிம்மன் என்ற பதிவரின் மீதான தாக்குதலின் பின்னாலும், ராபின்ஹூட் என்ற பதிவர் மூர்த்தி என்ற தமிழ்மணத்திலே திரட்டப்படாத பதிவரின்மீதான தாக்குதலின் பின்னாலும் (தமிழ்மணத்திற்கு மூர்த்தியின் தொடர்ச்சியான முறையீடுகளின் பின்னால், அறிந்து கொண்டு ராபிஹூட்டுக்கு அறிவுறுத்தியபின்னாலும்) விலக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், திரு. நரசிம்மன் ராகவன் தனது பதிவிலே தான் சுட்டிக்காட்டியதாலேதான் ராதா ராகவன் பதிவு விலத்தப்பட்டது என்றெழுதியது, அவரின் கேட்டுக்கொண்டதாலேமட்டுமே தமிழ்மணம் அப்பதிவினை விலக்கியதென்ற தவறான அபிப்பிராயத்தைச் சில பதிவர்களிடம் ஏற்படுத்திவிட்டதோ என்று எண்ணுவதால், அப்பதிவு அவரின் முறையீட்டுக்கு முன்னரே தமிழ்மணத்தினாலே நீக்கப்பட்டுவிட்டதென்பதை இவ்விடத்திலே சுட்டவிரும்புகிறோம். விடாது கருப்புவின் பதிவிலான பின்னூட்டங்கள் காரணமான தொடர்ச்சியான முறையீட்டின் பின்னால், அவருக்கு அவர் தந்திருந்த முகவரிக்கு ஐந்து தடவைகள் முன்னெச்சரிக்கை அறியத்தந்திருந்தபின்னால் அப்பதிவு விலக்கப்பட்டது. இதே தருணத்திலே, சர்வாண்டிஸ் போன்றோரின் பதிவிலேயும் ஓகை போன்றோரின் பதிவுகளிலேயேயும் தமிழ்மணம் குறித்த தவறானதும் அவதூறானதும் ஆதாரமற்றதுமான கருத்துகள் உள்ளிட்ட பின்னூட்டங்களை விலத்திக்கொள்ளக் கேட்டு, அவர்கள் விலத்திக்கொண்டிருக்கின்றார்கள். சர்வாண்டிசின் இடுகை ஒன்றும் ஏற்கனவே விலக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக, தமிழ்மணத்தினை விடாது கருப்புவின் செயல் சரியெனக் கருதியவர்கள் குற்றம் சாட்டியதை விடாது கருப்பு விலக்கல் குறித்த அறிவிப்பு இடுகையொன்றிலே பதிவர்கள் அறிந்து கொண்டிருப்பார்கள். அவரது விலக்கல் குறித்து மகிழ்ச்சியுற்றவர்கள், “எது நடக்குமோ அது நடந்தே தீரும்” என்று எரிகின்ற கொள்ளியிலே எண்ணெய் ஊற்றியதும் தமிழ்மணத்தின் மீதான தாக்குதலிலேயே முடிவடைந்ததும் தமிழ்மணம் பார்ப்பனத்திரட்டி எனப்பட்டதும் அவ்வேளையிலேயே. இதன் பின்னால், மிகவும் விபரமாக, விடாதுகருப்புவின் பதிவு குரல் மாறினால், மீண்டும் சேர்க்கப்படுவதிலே எமக்கேதும் ஆட்சேபணையில்லையெனவும் அதன் உள்ளடக்கங்கள் குறித்து எமக்கேதும் தனிப்பட்ட கருத்துகள் முன்னர்போலவும் அவர் குறித்து முறையிடுகின்றவர்களின் பதிவு உள்ளடக்கங்கள்போலவும் தமிழ்மணத்துக்கு எந்த அபிப்பிராயமும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தோம். (இடையிலே விட்டது சிகப்பு உட்பட சில பதிவர்களின் இடுகைகளையும் விலக்கியிருந்தோம்) அது தொடர்பான பின்னான, அவருடனான தொடர்பாடல்களிலே சிலவற்றினை அவர் தன் பதிவிலும் குறிப்பிட்டிருந்தார். பின்னர், அவர் தன் பதிவிலே வெளியிடாடாத அஞ்சற்றொடர்பாடலிலே தான் இனி விடாதுகருப்பினை நடத்தப்போவதில்லையெனவும் மகேந்திரன் என்பவரே நடத்தப்போகின்றாரெனவும் கூறியபின்னால், முன்னரே சுட்டியிருந்த நிபந்தனைகளின்படி அவரது பதிவு சேர்க்கப்பட்டது. இது குறித்து இதற்கு முன்னைய பதிவிலே அறியத் தந்திருந்தோம். (விடாது கருப்பினை விலக்கியது, மீண்டும் சேர்த்துக் கொள்வது, கொண்டது குறித்த மாயவரத்தானின் “பதிவு விலக்கம்” அறிவிப்புக்கான பின்னூட்டமும் அஞ்சல்களும் இன்னமும் வெளியிடப்படாமலே இருக்கின்றன என்பதையும் இங்கே அறியத் தர விரும்புகிறோம். அவற்றினை மாயவரத்தானே வெளியிடாவரைக்கும் வெளியிட எமது தார்மீக நியாயம் இடம் கொடுக்வில்லை)

தொடர்ந்தும் இரு குழுவினரும் (குறிப்பாக, மாயவரத்தான் & விடாது கருப்பு பதிவாளர்) தமிழ்மணத்தின்மீது மேற்கொள்ளும் தாக்குதல்கள் தமிழ்மணத்தின் சகிப்பு எல்லையை மீறிப் போவதாக உணர்கிறோம். விடாது கருப்புவின் காமலோகம் என்ற இடுகையும் (இது குறித்து மாயவரத்தான் உட்பட சில பதிவர்களும்) மாயவரத்தானின் ஆத்மநாதன் என்ற இடுகையும் (இது குறித்து மூர்த்தி உட்பட சில பதிவர்களும்) முழுக்கவே தனிமனிதத்தாக்குதலாகவே எம் விதிமுறைகளின்படியும் இருந்ததால், விலக்கினோம். இவ்விலக்கங்களின் போதான மாயவரத்தானின் தமிழ்மணம் நிர்வாகிக்கான அஞ்சலையும் வேறு சில பதிவர்களின் அஞ்சல்களையும் இங்கே எமது நிலையினையும் எம் மீதான தாக்குதல்களின் வகைகளையும் அறியத் தரும்பொருட்டு தருகின்றோம்.

மாயவரத்தானுடனான தொடர்பாடல்:

On 12/23/06, Mayavarathaan wrote:
Just now got this mail.
What the hell u r talking? U r the guys who don’t have guts to remove that vidathu karuppu idiot’s post. Once u removed him and as soon as he started putting ur pictures in his special aapu’s blog, u’ve again started aggregating his vidathu karuppu blog.
Did I write or allow any indecent comments in my blog on anybody? How come you can compare me with him?
Better close down thamizmanam aggregation service rather collection lot of posts nowadays blamming brahmins. If somebody will started writing about u people and about ur parents in the same way karuppu did in his blogs, then only u fools will know this pain.
Go to hell.
– Mayavarathaan…
On 12/22/06, postadmin thamizmanam wrote:
hello
Basically we are sick and tired of people like vittathu karuppu and mayavarathan and your posts. Why on earth are you bugging us? Are we the ones posting in each and everyone’s blog? Why don’t you go and fight with him directly rather than strangling our necks.

This becomes irritating in times.

Last, and also the least concerned news for you: for your information, this post by mayavaraththaan and similar post by vittathu karuppu were already removed.

On 12/22/06,Mayavarathaan wrote:
இடுகை விபரம்:
தலைப்பு:காமலோக பார்ப்பன மாய யாவாரம்!

வலைப்பதிவர்:விடாதுகருப்பு

வகை:பதிவர் வட்டம்

தகவல்:
u need the reasons?! 🙂

நன்றி,
mayavarathaan


புரிந்துணர்வோடு தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி

=====
தமிழ்மணம் திரட்டி நிர்வாகம்

புரிந்துணர்வோடு தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி

=====
தமிழ்மணம் திரட்டி நிர்வாகம்

=====================
On 12/23/06, Mayavarathaan wrote:
Thanks.

Plz. remove my blog from thamizmanam aggregating.

Also I dont want to show up my blog name in thamzmanam in anyway
showing that ‘comments are not aggregated’ like that.

Tks,

Mayavarathaan…

___________________________________________________________


புரிந்துணர்வோடு தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி

=====
தமிழ்மணம் திரட்டி நிர்வாகம்
=============================================
வேறொரு பதிவரின் தொடர்பாடல்:
On 12/22/06, postadmin thamizmanam wrote:
Dear Friend,
Basically we are sick and tired of people like vittathu karuppu and mayavarathan, and their posts. Why on earth are you bugging us? Are we the ones posting in each and everyone’s blog? Why don’t you go and fight with him directly rather than strangling our necks. After all, viddathu karuppu posted similar kamalogam post. You haven’t complained about it to us. Mayavarathaan complained about vittathu karuppu’s post, but zilch about his post.

This situation becomes irritating in times. Why on earth we have to spend hours sitting in front of monitor running thamizmaNam as a service!! What on earth we achieved on the expense of our time and energy!!

What on earth are you expecting us to do? You and your friends are complaining about mayavaraththaan & Co to us, and mayavaraththaan & friends are complaining about you & Co to us. We are JUST running a simple aggregator. As an internet user we hope you know what it means by “aggregator.” We can not be the bufferzone for both sides by taking blows of proxy wars.

Last, and also the least concerned news for you: for your information, this post by mayavaraththaan and similar post by vittathu karuppu were already removed.

On 12/21/06, ||A blogger whose name got removed|| wrote:
Dear Thamizmanam,

I have a great doubt on Tamizmanam’s political ( correct or incorrect) side of recent times.

http://mayavarathaan.blogspot.com/2006/12/409.html

chk. out this blog and decide yourself.
I dont care whoever that moorthy is or was…I dont give a damn f*** about what he writes. But do u tolerate this particular blogger’s(maayavaraththaan) actions which is been aggregated by Thamizmanam.
This is not the first time its been happening. And I was damn tired about it on reporting everytime.

I do understand that you must have lot of other works but nvm you are

And ofcourse the importance and the respect u give to ravisrinivas or mayavarathaan or dondu is astonishing compared to that of others.(I have seen it from your moderation for Thamizmanam arivippugal & Poonga blog)

Keep up your good work.

PS:
the word “POLITICAL” mentioned is not exactly about your own politics. But its from my point of view.

===========================================
மூர்த்தியின் தொடர்பாடல்:

On 12/22/06, Moorthi M wrote:
>
>
>
>
> On 12/23/06, Moorthi M wrote:
> >
> > அன்புள்ள தமிழ்மணம்,
> >
> > http://mayavarathaan.blogspot.com/2006/12/409.html
> >
> > என்ற பதிவில் மாயவரத்தான் என்ற ரமேஷ் எனது பெயரின் நற்புகழுக்கு களங்கம் கற்பிக்குமாறு பதிவிலும் பின்னூட்டங்களிலும் ஆபாசங்களாக எழுதி உள்ளான். இன்னமும் நீங்கள் அவனை திரட்டியில் இருந்து நீக்காமல் இருக்கிறீர்கள். உங்களின் எண்ணத்தினை அறிய ஆவலாக இருக்கிறேன். உங்கள் கடிதம் கண்டதும் அடுத்ததாக சில ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
> >
> > —
> > With Love,
> > Moorthi.

>
>
>
> —
> With Love,
> Moorthi.


புரிந்துணர்வோடு தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி

=====
தமிழ்மணம் திரட்டி நிர்வாகம்
=======================================================

விடாது கருப்புவுக்கோ வெட்டிவேலை ஆப்புக்கோ மாயவரத்தானுக்கோ அநாமதேயங்களுக்கோ அவர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாகப் பயந்து கொண்டு ஓடும் உளப்பாங்குள்ளவர்களென்றால், இப்படியான சூழலையும் எதிர்பார்த்த நாம் தமிழ்மணத்தினை ஒரு சேவையென எம் நேரத்தையும் சக்தியையும் பொருளையும் வீணாக்கி நடத்த முன்வந்திருக்கமாட்டோம். இது பற்றி மாயவரத்தானோ அவருக்கு அடுத்த அஞ்சலையிட்ட பதிவரோ அறியாதிருக்கமுடியாதென நம்புகிறோம். தனிப்பட்ட ஆளாக, இத்தகு/காத் தாக்குதலுக்குப் பதிலான தாக்குதலாக அஞ்சல் அனுப்புவது இலகு. ஆனால், ஒரு பொறுப்பான திரட்டி நிர்வாகமாக தமிழ்மணம் நிர்வாகம் அப்படியாகச் செய்யாதென்ற நம்பிக்கையிலேயே இப்படியான தாக்குதல் அஞ்சல்கள் வருகின்றன. அப்படியான நம்பிக்கையைத் தமிழ்மணத்திலே வைத்திருக்கும் இவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம். தமிழ்மணத்தினை நடவடிக்கை எடுக்காமல், தானே சரியான முடிவினைப் புரிந்து கொண்டு எடுத்துக்கொண்ட மாயவரத்தானுக்குத் தமிழ்மணம் நன்றி தெரிவிக்கும் அதேவேளையிலே, தனிப்பட்டவர்களின் பதிவிலே தோன்றும் பின்னூட்டங்களினை நீக்கும் வல்லமை தமிழ்மணத்துக்கு இல்லை, ஆனால், அப்பின்னூட்டங்கள் தமிழ்மணம் விதிகளுக்கு முரணாகவிருப்பின் நிச்சயமாக அவ்விடுகைகள் நீக்கப்படுமென அறியத் தருகிறோம். ஆனால், உள்ளடக்கமின்றி, கணியமுகவரிகளை அறியவரும் அஞ்சல்களின் பிறப்பிடங்களையும் ஒரே இணையமுகவரியோடு வரும் பதிவுகளை ஓரளவுக்கு ஒத்துப்பார்க்கும் வல்லமையையும் தமிழ்மணம் அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் கைவரப் பெறச் சாத்தியமிருப்பதால், அநாமதேய இருப்பு தரும் பல சிக்கல்களை வருமாண்டிலே தீர்த்துக்கொள்வோம் என நம்புகிறோம்.

விடாது கருப்பு பதிவினை இப்போது நடத்துகிறவரோ இன்னும் வேறெந்த பதிவரோ தொடர்ந்தும் இப்படியான காமலோகம் போன்றும் மற்றவரைச் சீண்டும் பதிவுகளையோ விடாப்பிடியான வில்லங்கமான இடுகைகளையோ எழுதுவது அவரவர் விருப்பம். ஆனால், அப்படியான இடுகைகளைத் தமிழ்மணத்திலே பதிவு பட்டைமூலம் இணைக்கவேண்டாமென அன்புடன் தமிழ்மணம் கேட்டுக்கொள்கிறது. தொடர்ந்தும், அவ்வாறான எல்லைமீறும் இடுகைகளை இணைக்கும்வேளையிலே, தமிழ்மணம் இடுகைகளையோ பதிவுகளையோ விலக்குமென மீண்டுமொரு முறையும் இறுதியாகவும் வலியுறுத்திச் சொல்கிறது.

மாயவரத்தான் கட்டளையிட்டபடி நரகத்துக்குப் போகத் தமிழ்மணம் முற்றாக மறுக்கும் அதேநேரத்திலே, அவர் சொர்க்கத்துக்கு வழிதவறாமற் போய்ச்சேர தனது விழைவினை இச்சந்தர்ப்பத்திலே தெரிவிக்கின்றது. விரும்பும் நேரத்திலே, விடாது கருப்பு மீண்டும் இணைந்து கொண்டதுபோல தமிழ்மணம் திரட்டியிலே அவர் சேர்ந்து கொள்ள விரும்பினால், அவருக்குத் தமிழ்மணத்தின் வாசல் அதன் விதிமுறைகளோடு திறந்தேயிருக்கின்றது. அவரைப் போலவே, தமிழ்மணத்தின் செயற்பாடுகளினை ஒத்துக்கொள்ளமுடியாத பதிவர்கள் தம்மை விலத்திக்கொண்டு தம் நோக்குகளுக்குப் பொருந்துமிடங்களிலே இணைந்துகொள்வது அவர்களுக்கும் தமிழ்மணத்துக்கும் பெருநன்மையினைத் தரும். இணைந்திருக்கும் பதிவர்களின் எண்ணிக்கையைவிட, பதிவுகளின் தரமும் பதிவர்களின் செயற்பாடுகளுமே தமிழிணையத்துக்கும் தமிழ்மணத்துக்கும் பயனாகவிருக்குமென நம்புகிறோம்.

தமிழ் மீடியா இண்டர்நேஷனல் சார்பாக புத்தாண்டு அனைவருக்கும் இனிதாக இருக்கட்டும் என, தமிழ்மணம் வாழ்த்தினைத் தெரிவிக்கின்றது

திரட்டி நிர்வாகம்
தமிழ்மணம்

தமிழ்மணம் பதிவுகள் நாளாந்த குறிப்பு

December 14, 2006 · Posted in அறிவிப்புகள் · 19 Comments 

தமிழ்மணம் திரட்டியிலே தனிப்பட்ட கண்காணிப்பின்கீழே சேர்க்கப்பட்ட, சேர்க்கப்பட மறுக்கப்பட்ட, விலக்கப்பட்ட, முறையிடப்பட்ட பதிவுகள், இடுகைகள் குறித்த செய்தி அவசியப்பட்ட்டால், நாளாந்தம் இங்கே தமிழ்மணவாசகர்களுக்குத் தரப்படும். இது தமிழ்மணம் அறிவிப்புகள் பதிவிலே ஒரு தற்காலிகமான பதிவு மட்டுமே. தகுந்த இடத்திலே புதிய பதிவு தேவைப்படின் விரைவிலே ஆரம்பிக்கப்படும்.

விலக்கப்பட்ட, முறையிடப்பட்ட பதிவுகளின் பெயர் மட்டுமே வெளியிடப்படும். முறையிட்டவர்களின் பெயர்கள் தமிழ்மணத்திற்கு அவசியமில்லையெனப் படுகிற வேளையிலே எக்காரணம் கொண்டும் வெளியிடப்படமாட்டா.

இடவசதி, நெறிப்படுத்து நேரம், பின்னூட்டவிவாதங்களின் விவகாரம் ஆகியன கருத்திலே கொண்டு பின்னூட்டங்கள், இங்கே எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டா.

புரிதலுடனான தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.

திரட்டி நிர்வாகம்
தமிழ்மணம்

பதிவு விலக்கம் குறித்த அறிவிப்பு

December 6, 2006 · Posted in அறிவிப்புகள் · 119 Comments 

விடாது கறுப்பு பதிவு அதன் அண்மைக்கால உள்ளடக்கம், பின்னூட்டங்கள் ஆகியவை தமிழ்மணத்தின் விதிகளுக்கு மீறியதாக இருப்பதால், உடனடியாகத் தமிழ்மணத்திலிருந்து விலக்கப்படுகின்றது. தமிழ்மணத்தின் விதிகளைப் பின்பற்றும்படி கேட்டுக்கொண்ட தொடர்ச்சியான அஞ்சல்களுக்கும் இடுகைகளின் விலக்கத்துக்கும் விடாது கறுப்பு பதிவினதும் உள்ளடக்கங்களினதும் தொனி மாறாததால், இவ்வாறான நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலைக்குத் தமிழ்மணம் தள்ளப்பட்டிருக்கின்றது.

ஏற்கனவே தனிப்பட்டவர்களினைத் தொடர்ந்து தாக்கியதால் ராபிஹுட் பதிவு, ராதா ராகவன் பதிவு என்பன நீக்கப்பட்டிருப்பதைப் பதிவர்கள் அறிவீர்கள். இதைத் தவிரவும் தனிப்பட்ட தாக்குதல்கள் உள்ளடக்கிய இடுகைகளைக் கொண்ட பதிவுகள் அவை தொடர்ந்தும் தமிழ்மணத்திலே இருக்கவேண்டிய தேவை இருப்பின், அவற்றினை விலக்கும்படி அன்புடன் கேட்கப்பட்டிருக்கின்றன.

தமிழ்மணம் தன்னைப் பற்றிய ஆதாரமற்ற அநாமதேயத்தாக்குதல்களையும் மறைமுகமான மிரட்டல்களையும் தமிழ்மணம் பதிவர்கள் தமிழ்மணத்தின் நோக்கங்களையும் இதுவரைகாலத்துச் செயற்பாடுகளையும் நன்றே அறிந்திருக்கின்றார்கள் என்ற முழு நம்பிக்கையிலே இன்னமும் திரட்டிக் கொண்டிருக்கின்றது. தமிழ்மணம் ஒரு தானியங்கித்திரட்டி என்ற நிலையிலே ஒவ்வொரு பதிவினையும் இப்போதிருக்கும் தொழில்நுட்ப அமைப்பின்படி, உள்ளடக்கங்களைப் பார்த்து சேர்த்தோ விலக்கியோ கொள்ளும் தகமையுடைத்ததல்ல. இதைப் புரிந்து கொண்டு, தனிப்பட்ட பதிவர்களின் செயற்பாடுகளுக்குத் தமிழ்மணம் எவ்வகையிலும் பொறுப்பேற்றமுடியாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். தமிழ்மணம் ஒரு பதிவரின் இடுகை தனிப்பட்டவளவிலே தாக்குதலை நிகழ்த்துதெனக் காண்கையிலே அதற்கான அவரின் செயல் விளக்கத்துக்கும் இடுகை விலக்குதலும் இடமளித்த பின்னரே அப்பதிவு குறித்துச் செயற்படமுடியும். எந்நிலையிலும் தமிழ்மணத்தின் நடவடிக்கைகள் தமிழ்மணத்தின் விதிகளுக்கு அமைய மட்டுமே எடுக்கப்படுகின்றவையாகும். தமிழ்மணத்தின் விதிகளுக்கு முரணானவை எனத் தமிழ்மணத்துக்குத் தோன்றும்படி முறையீடிடப்பட்ட மற்றைய இடுகைகள், பதிவுகள் குறித்த பட்டியலையும் விபரமான பதிவினையும் விரைவிலே இங்கே ‘தமிழ்மணம் அறிவிப்பு’ பதிவிலே காணலாம். இப்பதிவுகளிலே சில ஏற்கனவே இடுகைகளையோ பின்னூட்டங்களையோ விலக்கிக்கொள்ளும்படி கேட்கப்பட்டிருக்கின்றன.

முன்னைய ‘தமிழ்மணம் அறிவிப்பு’ பதிவு ஒன்றிலே குறிப்பிட்டதுபோல, விரைவிலே இது குறித்து பதிவர்கள் வெளிப்படையாகவே பதிவொன்றிலே முறையிட வழிவகை செய்யப்படும். இது தமிழ்மணத்தின் செயற்பாடுகளிலே தமிழ்மணத்திற்கு அநாவசியமான அநாமதேயர்களின் திட்டமிட்ட தாக்குதல்கள் பதிவர்களைக் குழப்பாதிருக்கவும் பயமுறுத்தாதிருக்கவும் உதவுமெனத் தமிழ்மணம் நம்புகிறது. இதன் மூலம் பதிவுகள் குறித்து முறையீடிடும் பதிவர்களும் தமது செயற்பாடுகளுக்கு ஓரளவுக்கு தார்மீகப்பொறுப்பு ஏற்கவேண்டிய நியாயம் உருவாகும். பழுத்த மரத்துக்கும் கல்லடி அதனை உயிரிழக்கும் எல்லை வரைக்கும் இருக்கக்கூடாதென நம்பும் தமிழ்மணம் தன்னிலே பதிவு செய்துகொண்ட பதிவர்களும் உணர்ந்துகொள்ளவேண்டுமென விரும்புகின்றது.

பதிவர்கள் தமிழ்மணத்தின் நிலையினையும் விதிகளையும் புரிந்துகொள்வீர்களெனத் தொடர்ந்தும் தமிழ்மணம் நம்புகிறது.

தமிழ்மணத்தின் பதிவுகள் விலக்கப்படுவது குறித்த பழைய பதிவுகள்:

ஒவ்வாத பதிவுகளை நீக்குதல்

ஒவ்வாத பதிவுகளை நீக்குதல் (தொடர்ச்சி)

நன்றி.