2010ம் ஆண்டின் முன்னணி வலைப்பதிவுகள்
தமிழ்மணம் ஒவ்வொரு வாரமும் தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என்ற சேவையை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்தச் சேவையை 2010ம் ஆண்டு முழுமைக்கும் வெளியிட தமிழ்மணம் முடிவு செய்துள்ளது. 2010ம் ஆண்டின் முன்னணி வலைப்பதிவுகளின் பட்டியல் வரும் சனவரி 1ம் தேதி வெளியிடப்படும். வாசகர்களிடம் அதிக வரவேற்பினை பெற்றுள்ள முதல் 100 வலைப்பதிவுகள் இந்தப் பட்டியலில் இடம் பெறும்.
நிர்வாகம்,
தமிழ்மணம்
தமிழ்மணம் விருதுகள் 2010 – ”நூல் உலகம்” வழங்கும் புத்தகங்கள்
தமிழ்மணம் விருதுகள் 2010ம் ஆண்டின் விளம்பரதாரராக அமெரிக்காவைச் சேர்ந்த அலோகா நிறுவனத்துடன் மற்றொரு விளம்பரதாரராக “நூல் உலகம்” (http://www.noolulagam.com/) இணையத்தளமும் இணைகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். “நூல் உலகம்” இணையத்தளத்தை நடத்தும் “ஜீவா புத்தகாலயம்“, தமிழகத்தில் நாமக்கல் நகரை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது.
தமிழ்மணம் ஏற்கனவே முதல் பரிசாக ரூ1000.00, இரண்டாம் பரிசாக ரூ500.00 மதிப்புள்ள புத்தகங்களை நியூபுக்லேன்ட்சு மூலமாக வழங்குகிறது. இதைத் தவிர கீழ்கண்ட புத்தகங்களை தமிழ்மணமும், நியூபுக்லேன்ட்சு நிறுவனமும் வழங்குகின்றன.
1. மெல்லச் சுழலுது காலம் – இரா. செல்வராசு (தமிழ்மணம் சார்பாக)
2. யுத்தங்களுக்கிடையில் – அசோகமித்ரன் (நியூபுக்லேன்ட்சு சார்பாக)
கூடுதலாக கீழ்கண்ட பரிசுகளை நூல் உலகம் இணையத்தளம் வழங்குகிறது.
முதல் பரிசு ரூ500.00 மதிப்புள்ள புத்தகங்கள்
இரண்டாம் பரிசு ரூ250.00 மதிப்புள்ள புத்தகங்கள்

நூல் உலகம் வழங்கும் பரிசுக் கூப்பனைக் கொண்டு நீங்கள் விரும்பும் புத்தகங்களை நூல் உலகம் இணையத்தளத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
நூல் உலகம் வழங்கும் பரிசுத்தொகையையும் சேர்த்து மொத்தம் ரூ45,000.00 மதிப்புள்ள பரிசுகளை தமிழ்மணம் விருதுகள் 2010 விருதுகள் மூலம் வழங்குகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…
நிர்வாகம்,
தமிழ் மீடியா இண்டர்நேசனல்
தமிழ்மணத்தின் பரிசுத் தொகை குறித்த விளக்கம்
தமிழ்மணத்தின் பரிசுத்தொகை குறித்த சில கேள்விகளைப் பதிவர்கள் சிலர் மறுமொழிகளிலும் மின்னஞ்சல் மூலமாகவும் எழுப்பி உள்ளனர். தமிழ்மணம் வழங்கும் பரிசுத்தொகை மிகவும் குறைவான தொகையாக உள்ளதான ஒரு கருத்து இந்த மறுமொழிகளிலும் கேள்விகளிலும் முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ்மணத்தை நடத்தும் தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம் ஒரு வணிக நோக்கற்ற தன்னார்வ நிறுவனமாகவே செயற்பட்டு வருகிறது. கடந்த இரு மாதங்களாக பெற்றுக் கொள்ளத் தொடங்கி இருக்கும் விளம்பரங்களைத் தவிர்த்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்மணத்தை நடத்தி வரும் தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம் எந்த வருமானத்தையும் ஈட்டவில்லை. வணிக நோக்கிலும் நாங்கள் செயல்பட வில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே நேரத்தில் தமிழ்மணம் போன்ற அதிக பயனர்களைக் கொண்ட திரட்டியை நடத்த பல இலட்சக்கணக்கான ரூபாய்களை நாங்கள் செலவழித்திருக்கிறோம் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம். புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் நண்பர்களின் தமிழ் மொழி ஆர்வத்தினாலும், தனிப்பட்ட உழைப்பினாலும்மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள இயலும் என நம்புகிறோம். ஆனால், நண்பர்கள் சிலரின் கூட்டுமுயற்சியால் மட்டுமே பல்லாண்டுகளாக ஒரு தளத்தினையும் நிறுவனத்தையும் நடத்துவது சாத்தியமானதல்ல. காரணம் இணையத்தளத்தினைத் தொடர்ந்து நடத்துவதற்கு பொருளாதார பலமும் தேவை. தமிழ்மணத்தினை ஓராண்டு நடத்தவே பல ஆயிரம் ரூபாய்கள் தேவைப்படுகின்றன. இத்தேவைக்காகத்தான் தமிழ்மணம் விளம்பரங்களைப் பெற்றுக் கொள்ளத் தொடங்கியிருக்கிறது.
இவ்வாறான சூழலில் வலைப்பதிவர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கில் மட்டுமே ‘தமிழ்மணம் வலைப்பதிவு விருது’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படை நோக்கத்திற்கு ஓர் அடையாளமாகவே பரிசுகளும் பரிசுத் தொகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் மொத்த பரிசுத்தொகை சுமார் 30,000 ரூபாய். எந்த லாபமும் இல்லாமல் செயற்படும் ஒரு நிறுவனத்திற்கு இஃது ஒரு மிகப் பெரிய தொகையே. ஒரு பிரிவிற்கு ரூ1000.00, ரூ500.00 என மிகவும் குறைந்த பரிசாகத் தெரிந்தாலும் தமிழ்மணத்தின் நிதி ஆதாரத்தை பொறுத்தவரையில் மொத்த பரிசுத்தொகையான சுமார் 30,000 ரூபாய் ஒரு குறிப்பிடத்தகுந்த தொகையே ஆகும்.
இந்த ஆண்டு தமிழ்மணம் சில விளம்பரதாரர்களைப் பெற்றிருக்கிறது. அடுத்த வரும் ஆண்டுகளிலும் விளம்பரதாரர்கள் மூலமாக பரிசுகளை வழங்க தமிழ்மணம் முடிவு செய்துள்ளது. இதைத் தவிரவும் தமிழ்மணம் விளம்பரங்கள் மூலம் ஈட்டப்படும் தொகையை தமிழ்மணம் வழங்கிச் செலவுகள் தவிர தமிழ்மணம் விருதுகள் மற்றும் பிற வலைப்பதிவு சேவைகளுக்குப் பயன்படுத்தவே தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம் விரும்புகிறது.
தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம், வணிக மயமான ஊடக வெளியில் இருந்து விலகிச் சாதாரண மக்களின் குரலை ஊடகவெளியில் ஒலிக்கச் செய்யும் பணியைச் செய்வதையே அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஒலிக்கச் செய்வதில் இணையம் தற்பொழுது முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த இணைய வெளியில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஒலிக்கும் ஒரு தளமாகவே தமிழ்மணம் செயல்பட தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம் முயன்று வருகிறது. இந்த முயற்சியில் இது வரை எங்களுக்கு அளித்து வரும் ஆதரவையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து வலைப்பதிவர்கள் மற்றும் வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…
நிர்வாகம்,
தமிழ் மீடியா இண்டர்நேசனல்
தமிழ்மணம் விருதுகள் – பரிந்துரைக் காலகட்டம்
தமிழ்மணத்தின் விருதுகள் 2010 நிகழ்வின் இடுகைகள் பரிந்துரை இன்று தொடங்குவதாக இருந்தது. சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த நிகழ்வு டிசம்பர் 5ல் தொடங்கும்.
கிழ்க்கண்ட தேதிகளை பதிவர்கள் குறித்துக் கொள்ளலாம்
- இடுகைகள் பரிந்துரைகளுக்கான காலக்கட்டம் – டிசம்பர் 5 – டிசம்பர் 15
- முதல் கட்ட வாக்கெடுப்பு – டிசம்பர் 16 – டிசம்பர் 26
- இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு – டிசம்பர் 27 – சனவரி 03
- நடுவர் குழு வாக்கெடுப்பு – சனவரி 4 – சனவரி 12
- விருதுகள் முடிவுகள் அறிவிப்பு – பொங்கல் தினத்தன்று முடிவுகள் அறிவிக்கப்படும்
இந்த தாமதத்திற்கு வருந்துகிறோம். டிசம்பர் 5ம் தேதி குறித்த நேரத்தில் விருதுகள் நிகழ்வு தொடங்கும் என உறுதி அளிக்கிறோம்
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…
தமிழ்மணம் விருது தேர்வுக் குழு
தமிழ்மணம் விருதுகள் 2010 – வழங்குபவர் அலோகா
தமிழ்மணம் விருதுகள் 2010ம் ஆண்டு விளம்பரதாராக இருக்க, அமெரிக்காவைச் சேர்ந்த அலோகா நிறுவனம் முன்வந்துள்ளது (இணையத்தளம் – http://www.aloha-usa.com/).
அலோகா நிறுவனம் குழந்தைகளுக்கான கணிதப்பயிற்சி நிறுவனமாகும். இந் நிறுவனம் 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டு அமெரிக்காவெங்கும் பல கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவில் செயல்படும் அலோகா நிறுவனத்தின் நிறுவனர் திரு. மணி மாணிக்கவேலு ஒரு தமிழர் என்பது மகிழ்ச்சிக்குரியது. அத்தோடு மட்டுமில்லாமல் தமிழ்மணத்தின் தொடர்ச்சியான வாசகராகவும் உள்ள திரு.மணி, தன்னுடைய அலோகா நிறுவனம் மூலமாக இந்த ஆண்டு தமிழ்மணம் விருதுகளின் விளம்பரதாராக இருக்க முன்வந்துள்ளார்.
அலோகா நிறுவனத்திற்கு எங்களுடைய நன்றி.

நிர்வாகம்,
தமிழ் மீடியா இண்டர்நேஷனல்
தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் – டாப் 20 வலைப்பதிவுகள்
தமிழ்மணத்தின் புதிய சேவையாக தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்துகிறோம்.
வாசகர்களின் அங்கீகாரம் தான் எந்த ஒரு எழுத்தாளருக்கும் ஊட்டம் தரும் ஊக்கச் சக்தியாக விளங்குகிறது. வாசகர்களிடம் இருந்து பெறும் வாசகர் பரிந்துரை வாக்குகள், மறுமொழிகள் போன்றவை தான் தொடர்ந்து எழுத்தின் மீதான ஆர்வத்தை வலைப்பதிவர்களுக்கு ஏற்படுத்துகிறது. ஆனால் வலைப்பதிவர்கள் வாசகர்களிடம் இருந்து பெறும் அங்கீகாரம் குறித்த சரியான அளவுகோல் இல்லை என்றே சொல்லலாம். வாசகர்களின் அங்கீகாரத்தை ஒரு வலைப்பதிவு பெறும் பார்வைகள் (ஹிட்ஸ்), மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் போன்றவற்றைக் கொண்டு கணிக்கலாம். இதனை அடிப்படையாக கொண்டு தமிழ்மணம் தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என்ற சேவையை வடிவமைத்து உள்ளது.
தற்பொழுது சோதனை வடிவத்தில் உள்ள இந்தச் சேவை குறித்த உங்களின் ஆலோசனைகளை வரவேற்கிறோம்
இந்தச் சேவையை இந்தச் சுட்டியில் பார்க்கலாம்
http://www.tamilmanam.net/top/blogs/1
வலைப்பதிவுகளின் முன்னணி பட்டியில் ஒவ்வொரு ஞாயிறும் வெளியிடப்படும். கடந்த ஏழு நாட்களில் வலைப்பதிவுகள் வாசகர்களிடம் பெற்ற மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் மற்றும் பார்வைகள் (ஹிட்ஸ்) போன்றவை கொண்டு இந்த முன்னணி நிலவரம் கணக்கிடப்படுகிறது
நிர்வாகம்,
தமிழ் மீடியா இண்டர்நேஷனல்
TMI Inc
தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2010
இவ்வாண்டின் மிகச்சிறந்த இடுகைகளை தெரிவு செய்யும் பதிவுத் திருவிழா
தமிழின் முண்ணனித் திரட்டியாக விளங்கும் தமிழ்மணம் ஆண்டுதோறும் வலைப்பதிவில் வெளிவரும் சிறந்த இடுகைகளை தேர்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது. இந்த ஆண்டும், 2010ம் ஆண்டில் வெளிவந்த படைப்புகளுக்கான விருதுகளை வழங்கும், “தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2010” நிகழ்வு வரும் டிசம்பர் மாதம் தொடங்கி பொங்கல் தினம் வரை நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த ஆண்டு 17 பிரிவுகளில் சிறந்த இடுகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த ஆண்டு விருதுகள் நிகழ்வு 20 பிரிவுகளில் நடைபெறும். பெண் பதிவர்கள் மட்டுமே பங்கு பெறும் பெண் பதிவர்களுக்கான ஒரு புதியப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வலைப்பதிவுகளில் பெண் பதிவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் பொருட்டே இந்தப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திரைப்படங்களைச் சார்ந்த இடுகைகளுக்கு ”திரைமணம் விருதுகள்” என்ற பெயரில் திரைமணம் தளம் மூலம் விருதுகள் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு பதிவர் வாக்கெடுப்பு, வாசகர் வாக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக போட்டி நடைபெற்றது. இந்த ஆண்டு பதிவர் வாக்கெடுப்பு, வாசகர் வாக்கெடுப்பு, நடுவர் குழு பரிசீலனை என மூன்று கட்டங்களாக போட்டிகள் நடைபெறும். தமிழ்மணம் நிர்வாகம் மற்றும் வலைப்பதிவர்களை உள்ளடக்கிய நடுவர் குழு அமைக்கப்படும். நடுவர் குழு அமைக்கப்பட்டவுடன் அது குறித்த அறிவிப்பு வெளியாகும்.
விருதுகள் தேர்வு முறை
ஒவ்வொரு பதிவரும் தன்னுடைய பதிவே சிறந்தது எனப் பெருமிதம் கொள்ளும் உரிமையைப் பெற்றிருந்தாலும், இடுகைகளுக்கு உடனுக்குடன் கிடைக்கும் சக பதிவர்கள்/வாசகர்களின் பின்னூட்டங்கள் மூலமான அங்கீகாரமும் பதிவர்களை மேலும் ஊக்குவிக்கும் சக்தியாகத் திகழ்கிறது. அப்படிப்பட்ட இடுகைகளை வாசகர்கள் மீண்டுமொருமுறை திரும்பிப் பார்க்க வைத்து அங்கீகரிப்பதே இந்த விருதுத் தேர்வுக்கான அடிப்படை. அறிவிக்கப்பட்ட போட்டிகளுக்காக எழுதப்படும் படைப்புகளாக அல்லாமல், தன்னெழுச்சியாக வெளிப்பட்ட படைப்புகளே இந்தத் தேர்வுகளுக்கு கணக்கிலெடுக்கப்படுவதால் இதில் போட்டியோ, ஏமாற்றமோ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்குமென்றே நம்புகிறோம்.
இவ்வாண்டின் தேர்வுகள் கீழ்காணும் பிரிவுகளில் இருக்கும்:
1. படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)
2. காட்சிப் படைப்புகள் (ஓவியம், புகைப்படங்கள் போன்றவை)
3. நூல் விமர்சனம், அறிமுகம்
4. அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள்
5. பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
6. செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்
7. அரசியல், சமூக விமர்சனங்கள்
8. பெண்கள் பிரச்னைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள்
9. தலித் மக்களின் பிரச்சனைகள், மனித உரிமை, நிறவெறி (Racism) தொடர்பான கட்டுரைகள்
10. ஈழ மக்களின் வாழ்வியல், மனித உரிமை, சமூக, பொருளாதாரச் சிக்கல்கள்
11. தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல்
12. நகைச்சுவை, கார்ட்டூன்
13. சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம்
14. பொருளாதாரம், வணிகம் தொடர்பான கட்டுரைகள்
15. தமிழ்க்கணிமை, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையம் தொடர்பான கட்டுரைகள்
16. விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள்
17. பெண் பதிவர்கள் மட்டும் பங்கு பெறும் பிரிவு – எந்த இடுகைகளாகவும் இருக்கலாம்
18. தமிழிசை, நடனம், தமிழ் கிராமியக் கலைகள் தொடர்பான கட்டுரைகள்
இந்த 18 பிரிவுகள் தவிர சிறந்த சினிமா இடுகைகளுக்கான திரைமணம் விருதுகள் கீழ்க்காணும் பிரிவுகளில் வழங்கப்படும்.
19. திரைப்பட விமர்சனங்கள் – தமிழ் சினிமா விமர்சனங்கள்
20. உலக சினிமா விமர்சனங்கள், குறும்படங்கள், திரைப்படக்கலை, மாற்று சினிமா தொடர்பான படைப்புகள்
தேர்வு நடைமுறை:
1. தனிப்பட்ட இடுகை (post) அல்லது இடுகைத் தொடர்களே விருதுக்கு தேர்வு செய்யப்படும். வலைப்பதிவு முழுமைக்குமான விருது என்று எதுவும் இல்லை.
2. கலந்து கொள்ளும் பதிவர், தனது பதிவினை 1-11-2010க்கு முன்னர் தமிழ்மணத்தில் இணைத்திருத்தல் வேண்டும். டிசம்பர் 1, 2009 முதல் நவம்பர் 10 2010 வரை எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே விருதுகள் தேர்வுக்கு இடம்பெறும்
3. எந்தவொரு இடுகையையும் எழுதிய பதிவரே பரிந்துரை செய்யவேண்டும். ஒரே பதிவர் அதிகபட்சமாக மூன்று வெவ்வேறு பிரிவுகளுக்குப் பரிந்துரை செய்யலாம். ஆனால் ஒரு பிரிவுக்கு ஒரே ஒரு இடுகையை மட்டுமே பரிந்துரை செய்ய முடியும். மேலும் குறிப்பிட்ட இடுகையை ஒரு பிரிவுக்கு மட்டுமே பரிந்துரை செய்யலாம்.
4. உங்களது பரிந்துரைகளை அளிப்பதற்கென ஒரு சிறப்புத்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான சிறப்புத் தொடுப்பும் வழிமுறைகளும் தமிழ்மணத்தில் பதியப்பட்டுள்ள பதிவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
5. பரிந்துரைக்கப்படும் படைப்புகள் 2010 ஆம் ஆண்டில் முதல் முறையாகப் பதிவுகளில் எழுதப்பட்டிருக்கவேண்டும். பரிந்துரைகள் 2010 ஆண்டில் வெளியிடப்பட்ட முந்தைய ஆண்டுகளின் படைப்புகளின் மீள்பதிவுளாகவோ அல்லது வேறு அச்சிதழ் அல்லது இணைய தளங்களில் வெளியிடப்பட்ட படைப்புகளின் மீள்பதிவுகளாகவோ இருத்தலாகாது.
6. தமிழ்மணம் விருதுத் தேர்வுகள் மூன்று கட்டமாக நடைபெறும்.
7. தமிழ்மணத்தின் முதற்கட்ட வாக்கெடுப்பு வலைப்பதிவர்களுக்கானது. தமிழ்மணத்தில் பதிவு செய்துள்ள வலைப்பதிவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம். ஒரு பதிவருக்கு ஒரு பிரிவுக்கு ஒரு வாக்கு என்னும் அடிப்படையில் வாக்குரிமை இருக்கும்.
8. இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு வாசகர்களுக்கானது. முதற்கட்ட வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்கள் பெறும் இடுகைகள் இரண்டாம் கட்டப் பொது வாக்கெடுப்புக்குத் தெரிவு செய்யப்படும். இரண்டாம் கட்டத்தில் அனைத்து வாசகர்களும் (பதிவு இல்லாதவர்களும்) வாக்களிக்கலாம்.
9. பதிவர் வாக்குகளும் வாசகர் வாக்குகளும் 2:1 என்ற விகிதத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மொத்த வாக்குகள் கணக்கிடப்படும். இதில் தேர்வு பெறும் முதல் 5 இடுகைகள் மூன்றாம் கட்ட நடுவர் குழுவின் பரிசீலனைக்கு தேர்ந்தெடுக்கப்படும்.
10. தமிழ்மணம் நிர்வாகம், வலைப்பதிவர்களைக் கொண்ட நடுவர் குழு அமைக்கப்படும். நடுவர் குழுவில் இடம் பெறும் நடுவர்கள் தனித்தனியாக இடுகைகளை தேர்வு செய்து தமிழ்மணம் விருதுக்குழுவிற்கு அளிப்பார்கள். தமிழ்மணம் விருதுக் குழு இந்த மூன்று சுற்று வாக்குகளையும் கணக்கில் கொண்டு விருதுகளை அறிவிக்கும்.
11. நடுவர் குழுவில் இடம் பெறும் வலைப்பதிவர்களும் போட்டியில் கலந்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் கலந்து கொள்ளும் பிரிவில் விருதுகளை தேர்வு செய்ய இயலாது.
12. தமிழ்மணத்தில் இணைந்துள்ள பதிவர்களுக்குப் பரிந்துரைகள் அனுப்புவதற்கான வேண்டுகோள் வெளியிடப்படுவதுடன் விருது தெரிவுப் பணி தொடங்கும்.
13. கிழ்க்கண்ட தேதிகளை பதிவர்கள் குறித்துக் கொள்ளலாம்
- இடுகைகள் பரிந்துரைகளுக்கான காலக்கட்டம் – டிசம்பர் 1 – டிசம்பர் 10
- முதல் கட்ட வாக்கெடுப்பு – டிசம்பர் 11 – டிசம்பர் 20
- இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு – டிசம்பர் 21 – டிசம்பர் 30
- நடுவர் குழு வாக்கெடுப்பு – சனவரி 1 – சனவரி 10
- விருதுகள் முடிவுகள் அறிவிப்பு – பொங்கல் தினத்தன்று முடிவுகள் அறிவிக்கப்படும்
14. ஒவ்வொரு கட்டத்திலும் விரிவான அறிவிப்புகள் தமிழ்மண முகப்பில் வெளியிடப்படும். மின்னஞ்சலிலும் பதிவர்களுக்கு அறிவிக்கப்படும்.
பரிசு:
வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் அதிக வாக்குப் பெற்று முதலிடம் பெறும் பதிவுகளுக்குத் தலா ரூ.1000ம் (ஆயிரம் ரூபாய்), இரண்டாம் இடம் பெறும் பதிவுகளுக்குத் தலா ரூ.500ம் (ஐநூறு ரூபாய்) வழங்கப்படும். பரிசுத்தொகை நூல்களாகவே வழங்கப்படும். பதிவர்கள் தமிழ்மணம் வழங்கும் கூப்பனைக் கொண்டு சென்னை நியூ புக்லாண்ட்ஸ் புத்தகக்கடையில் தாங்கள் விரும்பும் நூல்களைப் பெற்றுக் கொள்ளலாம்
-தமிழ்மணம்/திரைமணம் விருதுத் தேர்வு ஒருங்கமைப்புக் குழு
தமிழ்மணம் கட்டண சேவை
தமிழ்மணம், தமிழின் முதன்மையான வலைத்திரட்டியாகவும், தமிழின் முன்னணி இணையத்தளங்களில் ஒன்றாகவும் செயல்பட்டு வருகிறது. தமிழ்மணத்தை தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறது. அமெரிக்காவில் ஒரு லாப நோக்கற்ற நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனம் தமிழின் வளர்ச்சிக்கும், வலைப்பதிவுகளின் பெருக்கத்திற்கும் தன்னாலான முயற்சிகளை செய்வதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
வலைப்பதிவுகளின் வளர்ச்சிக்கு, தமிழ்மணம் சேவையை வலைப்பதிவர்களுக்கு இலவச சேவையாக வழங்குவதையே தமிழ் மீடியா இண்டர்நேஷனல் முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளது. அதே நேரத்தில் தமிழ்மணம் செயல்படுவதற்கான மாதாந்திர வழங்கி செலவுகளும், பராமரிப்பு செலவுகளும் அதிகரித்து வருகின்றன. அச்சு ஊடகங்களின் இணையத்தளங்களோடு ஒப்பிடத்தக்க வாசகர் பரப்பினை கொண்டுள்ள தமிழ்மணத்தின் மாதந்திர செலவுகளை ஈடுகட்ட தமிழ்மணம் சில முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக தமிழ்மணம், திரைமணம் இணையத்தளங்களில் விளம்பரங்களை பெற்றுக் கொள்ள தொடங்கி இருக்கிறோம்.
விளம்பரங்களைத் தவிர கட்டண சேவை என்ற புதிய சேவையை தமிழ்மணம் அறிமுகப்படுத்துகிறது. தனிப்பட்ட வலைப்பதிவர்களின் வலைப்பதிவுகளைத் திரட்டும் சேவையில் எந்த மாற்றமும் இராது. ஆனால் செய்தித்தளங்கள், இணையத்தளங்கள், தன்னார்வத் தனியார் தொண்டு நிறுவனங்கள் சாராத தனியார் அமைப்புகளின் தளங்கள், பிரச்சாரத் தளங்கள் ஆகியவற்றை திரட்ட தமிழ்மணம் கட்டணம் விதிக்க முடிவு செய்துள்ளது. தமிழ்மணத்தில் தற்பொழுது திரட்டப்பட்டு வரும் இந்த தளங்களுக்கு தனிப்பட்ட மின்னஞ்சலும் கட்டண விபரமும் அடுத்த சில நாட்களில் அனுப்பப்படும்.
இது தவிர தம் தளத்தை பிரபலமாக்க விரும்பும் எவரும் இந்தக் கட்டணச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கட்டண விபரங்கள் இந்தப் பக்கத்தில் உள்ளன – http://www.tamilmanam.net/purchase_ads.php
தமிழ்மணம் தொடர்ந்து செயல்படுவதற்கே இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…
நிர்வாகம்,
தமிழ் மீடியா இண்டர்நேஷனல்
தமிழ்மணம் வழங்கி மாற்றம் : சேவையில் தடங்கல்
தமிழ்மணம் வழங்கி மாற்றம் இந்த வார இறுதியில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்மணம் திரட்டி சேவை வரும் வெள்ளி இரவு (ஜூலை 30) 10 மணி (அமெரிக்க கிழக்கு கடற்கரை நேரம்) தொடங்கி சனிக்கிழமை (ஜூலை 31) மாலை வரை இயங்காது என தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்மணம் அவ்வப்பொழுது முடங்கிப் போகும் பிரச்சனையை சரி செய்யவும், இன்னும் வேகமான சேவையை வழங்கவுமே இந்த வழங்கி மாற்றம் நடைபெற இருக்கிறது.
தமிழ்மணம் சேவையில் வார இறுதியில் ஏற்பட இருக்கும் தடங்கலுக்கு எங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
நிர்வாகம்
தமிழ்மணம்
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் – தமிழ்மணத்தின் நிலைப்பாடு
தமிழ்மணம் இணையத்தளத்தினை நடத்தி வரும் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் குழுமம் (TMI Inc) தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் தமிழ் மொழியின் பயன்பாட்டிற்கும் தன்னாலான முயற்சிகளை செய்வதையே அடிப்படை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இணையத்தில் தமிழ்மொழியின் பயன்பாடு தமிழ் வலைப்பதிவுகளின் வருகைக்குப் பிறகு அதிகரித்து இருக்கிறது என்பது கண்கூடு. இன்றைய இணைய தொழில்நுட்பத்தின் மூலம் ஆயிரக்கணக்கான வலைப்பதிவர்கள் தமிழில் எழுதி வருகின்றனர். முன்னெப்பொழுதையும் விட தற்பொழுது தமிழில் எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் பெருகி உள்ளனர்.
இணையம் என்றில்லாமல் நாளிதழ்களும், அச்சு இதழ்களும், புத்தகங்களும் இன்று அதிகளவில் விற்கப்படுகின்றன. பல துறை சார்ந்த நூல்கள் தமிழில் வெளிவருகின்றன. வணிக ரீதியில் இந்தப் புத்தகங்கள் விற்பதைக் கொண்டு வாசகர்கள் எண்ணிக்கையும் இன்று அதிகரித்து உள்ளதை உணர முடிகிறது. வெகுஜன ஊடகங்கள் தவிர பல சிற்றிதழ்களும், மாற்று இதழ்களும் முன் எப்பொழுதையும் விட அதிகளவில் அச்சிலும் இணையத்திலும் வெளிவருகின்றன. தமிழ் வழியில் பொறியியல் படிப்பினை இவ்வருடம் முதல் அறிமுகப்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளிலும் தமிழ்ச்சங்கங்கள் வாரயிறுதிகளில் தமிழ்ப் பள்ளிகளை நடத்தி வருகின்றன. இப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ் பயில்கிறார்கள். அதிக எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட சில மாநிலங்களில், தமிழ்ப் பள்ளியில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அவர்களது அமெரிக்கப் பள்ளிக்கூட மதிப்பெண்களோடு சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு இப்பள்ளிகள் அமெரிக்கக்கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தமிழின் பயன்பாடு பல வழிகளிலும் முன்னெப்பொழுதையும்விட அதிகமாக நடந்து வருகிறது. தற்போதைய தமிழ் எழுத்து வடிவில் இதனை நாம் சாதித்து இருக்கிறோம்.
இவ்வாறான சூழ்நிலையில் தமிழக அரசு தமிழ் மொழியில் எழுத்துச் சீர்த்திருத்தம் செய்யப்போவதாகவும், வருகின்ற செம்மொழி மாநாட்டில் அது குறித்து அறிவிக்கப்படும் என்றும் அதிகாரபூர்வமான செய்திக்குறிப்பு ஒன்று கடந்த சனவரி 7ஆம் தேதியன்று வெளியான மாலை மலரில் வெளியாகி உள்ளது.
இதன் தொடர்ச்சியாக இது குறித்த பரவலான விவாதம் இணையத்தளங்களிலும், தமிழ்க் குழுமங்களிலும் நடந்து வருகிறது.
எழுத்துச் சீர்திருத்தம் என்பது என்ன ?
தமிழ் மொழியில் உள்ள வரிவடிவங்களில் இகர, ஈகார, உகர, ஊகார வடிவங்களில் சீர்மையை கொண்டு வரப் போவதாக தமிழறிஞர்கள் சிலர் பேசி வருகின்றனர். இவர்கள் மிகவும் சிறுபான்மையினர்; ஆனால், அதிகாரத்தில் உள்ளவர்கள். வரும் சூன் மாதம் கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் வேலைத்திட்டங்களைத் தமிழ்ச்சமுதாயத்தின் மேல் திணிக்க முனைகின்றனர்.
இவர்கள் அறிவித்துள்ள சீர்மை தமிழ் எழுத்துகளில் 72 எழுத்துக்களில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும், நான்கு புதிய வரி வடிவங்கள் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிகிறது. வா.செ.குழந்தைசாமி வெளியிட்டுள்ள சீர்மைக் கட்டுரைகளில் இருந்து இதனை அறிய முடிகிறது. இது தமிழ்மொழிக்குக் கேடு விளைவிக்கக் கூடியதாகும். பல தமிழ் அறிஞர்கள் இந்த முயற்சிக்கு எதிரான தங்கள் ஆணித்தரமான கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள். இவர்களுடன் தமிழ்மணமும் தன்னை இணைத்துக் கொள்கிறது.

சுமார் 72 எழுத்துக்களுக்கு மாற்றம் என்பது சீர்மையோ, சீர்திருத்தமோ அல்ல. மிகப் பெரிய மாற்றம். குறுகிய கால இடைவெளியில் எக் காலத்திலும் தமிழ் மொழி இவ்வாறு மாற்றப்பட வில்லை. தந்தை பெரியார் ஒரு சில எழுத்துக்களை மட்டுமே அச்சுத் தொழிலுக்கு ஏற்றவாறு மாற்றினார். அதுவும் புதிய வரி வடிவங்கள் எதையும் பெரியார் புகுத்தவில்லை. வழக்கில் இருந்த வரி வடிங்களைக் கொண்டே சில எழுத்துக்களில் சீர்மையை பெரியார் கொண்டு வந்தார். ஆனால் இன்றைய இணையம், கணினி யுகத்தில் இத்தகைய எந்த மாற்றமும் தமிழுக்குத் தேவை இல்லை. இன்று இணையத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படும் சில தெற்காசிய மொழிகளில் ஒன்றாக தமிழும் உள்ளது. கணினி பயன்பாட்டிலும் பலப் பிரச்சனைகளை களைந்து தமிழ் பயன்பாடு ஒரு சுமூகமான நிலையை எட்டி உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் இந்தச் சீர்மை தேவை தானா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது.
சீர்மையால் விளையும் கேடுகள்
இந்த எழுத்துச் சீர்மை ஏற்படுத்தப் பட்டால் தற்பொழுது வெளியாகி உள்ள எண்ணற்ற புத்தகங்கள் பயனற்றதாகி விடும். புதிய புத்தகங்களை வெளியிட வேண்டும். பல இணையத்தளங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் மறுபடியும் மாற்றப்பட வேண்டும். தற்பொழுது வழக்கில் உள்ள தமிழ் எதிர்காலத்தில் கல்வெட்டு தமிழ் போன்றதாகி விடும். வெகு இயல்பாக உள்ள தமிழ் பயன்பாடு பெருங்குழப்பத்திற்கு உள்ளாகும். தமிழின் பயன்பாடு வளர்ச்சியில் இருந்து தேக்க நிலையை அடையும்.
இத்தகைய ஒரு சீர்மை அவசியம் தானா என்ற கேள்வியை நாம் அனைவரும் எழுப்ப வேண்டும்.
தமிழ் மொழிக்கு இந்த சீர்மையால் நேரும் கேட்டினைத் தடுத்து நிறுத்தத் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்யத் தமிழ்மணம் முடிவு செய்திருக்கிறது. இதில் பதிவர்களின் ஆதரவினையும் தமிழ்மணம் வேண்டுகிறது.
இது குறித்த விரிவான வாசிப்பிற்குச் சில கட்டுரைகளைத் தமிழ்மணம் பரிந்துரை செய்கிறது
சுப.நற்குணன் – தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா?
நாக.இளங்கோவன் – எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள்
முனைவர் மு.இளங்கோவன் – தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையா?
மணி மு. மணிவண்ணன் – எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? – கருத்தரங்கம் – ஓர் அறிக்கை
முனைவர். பெரியண்ணன் சந்திரசேகரன் – Tamil Script Reform: Its Vacuity Next to The Chinese Script
பேராசிரியர் செ. இரா. செல்வக்குமார் – எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி
தமிழ்மணம் நிர்வாகக் குழு சார்பாக:
எழுத்துச்சீர்திருத்தத்தை எதிர்த்து
சொர்ணம் சங்கர்,
இரா. செல்வராஜ்,
இரமணீதரன்,
தங்கமணி,
சுந்தரவடிவேல்,
இளங்கோ,
தமிழ் சசி,
பாலாஜி பாரி
