தமிழ்மணம் விருதுகள் 2009 – பரிசுக் கூப்பன்

தமிழ்மணம் விருதுகள் 2009 நிகழ்வில் வெற்றி பெற்றவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு சென்னை நியூபுக்லாண்ட்ஸ் பரிசுக் கூப்பனை அனுப்பி இருக்கிறோம். இந்தக் கூப்பனைக் கொண்டு சென்னை நியூபுக்லாண்ட்ஸ் புத்தக நிலையத்தில் பதிவர்கள் தாங்கள் விரும்பும் புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.

தானியங்கியாக இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதால் ஒவ்வொரு மின்னஞ்சலையும் சோதிக்க இயலவில்லை. மின்னஞ்சலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் admin@thamizmanam.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி

நிர்வாகம்
தமிழ்மணம்

தமிழ்மணம் விருதுகள் 2009 – முடிவுகள்

கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற 2009ம் ஆண்டுக்கான தமிழ்மணம் விருதுகள் நிகழ்வு தற்பொழுது நிறைவுபெறுகிறது. இந்த விருதுகள் நிகழ்வில் கலந்து கொண்ட பதிவர்களுக்கும், இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்கெடுப்பில் பங்கேற்ற பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஆண்டினைக் காட்டிலும் இந்த ஆண்டு இருந்த கூடுதலான ஆர்வமும், பங்கேற்பும் எங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக அமைந்து இருந்தது. அடுத்த ஆண்டில் இந்த ஆர்வம் இன்னும் அதிகரிக்கும் என நம்புகிறோம்.

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்கெடுப்பில் பதிவர் வாக்குகளும் வாசகர் வாக்குகளும் 2:1 என்ற விகிதத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மொத்த வாக்குகள் கணக்கிடப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் கள்ள ஓட்டுகள் போடப்படும் என பல பதிவர்களும், வாசகர்களும் கூறியிருந்தனர். எனவே ஓட்டு எண்ணப்பட்ட பொழுது கள்ள ஓட்டுக்களை நீக்கும் தொழில்நுட்பத்தை தமிழ்மணம் புகுத்தி இருந்தது. தானியங்கியாகவும், நிர்வாகத்தால் அலசப்பட்டும் (Automatic+Manual) கள்ள ஓட்டுக்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன.

ஏற்கனவே அறிவித்து இருந்தது போல முதல் இரண்டு இடங்களைப் பெறும் இடுகைகளுக்கு விருதுகள் வழங்கப்படும். அதே நேரத்தில் சில பிரிவுகளில் சில இடுகைகள் ஒரே அளவிலன ஓட்டுக்களைப் பெற்று இருக்கின்றன. ஒரு பிரிவில் முதல் இடத்திற்கு இரண்டு இடுகைகள் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அந்தப் பிரிவில் இரண்டாம் பரிசு நீக்கப்பட்டு, இரண்டு முதல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இரண்டாம் இடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இடுகைகள் தேர்வு பெறும் பட்சத்தில் அந்த இரண்டு இடுகைகளுமே இரண்டாம் பரிசை பெறும்

விருது முடிவுகளும், வலைப்பதிவில் அணிந்து கொள்ள விருது பதக்கங்களும் கீழே உள்ள சுட்டியில் உள்ளது. ஏற்கனவே அறிவித்து இருந்தது போல பரிசுத் தொகை புத்தகங்களாக வழங்கப்படும். சென்னை நியூபுக்லாண்ட்ஸ் பரிசுக் கூப்பன் வெற்றி பெற்றவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த சில தினங்களில் அனுப்பி வைக்கப்படும்

http://awards2009.tamilmanam.net/winners2009.php

Awards 2009

போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

நிர்வாகம்
தமிழ்மணம்

தமிழ்மணம் விருதுத் தேர்வு ஒருங்கமைப்புக் குழு

தமிழ்மணம் விருதுகள் 2009 – இரண்டாம் கட்ட பொது வாக்கெடுப்பு

தமிழ்மணம் விருதுகள் நிகழ்வின் இறுதிக்கட்டமாக பதிவர்கள், வாசகர்கள் என அனைவரும் பங்கு பெறும் பொதுவாக்கெடுப்பு இப்பொழுது தொடங்கி உள்ளது. இந்த பொதுவாக்கெடுப்பு இன்று தொடங்கி சனவரி 12ம் தேதி வரை நடைபெறும்

முதற்கட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற இடுகைகள் இந்த இரண்டு கட்ட பொது வாக்கெடுப்பில் பங்கு பெற முடியும். முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகளை கீழ்க்கண்ட சுட்டியில் பார்க்கலாம்

தமிழ்மணம் விருதுகள் 2009 – முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகள்

வாக்கெடுப்பு நடைமுறைகள்

1. இரண்டாம் கட்ட பொது வாக்கெடுப்பில் பங்கு பெற விரும்பும் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தமிழ்மணத்தில் ஒரு பயனர் பெயர் வேண்டும். இந்தச் சுட்டிக்கு சென்று ஒரு பயனர் பெயரை உருவாக்கி கொள்ள வேண்டும் – http://www.tamilmanam.net/login/register.php

2. பயனர் பெயரை உருவாக்கி, உங்கள் கணக்கை செயற்படுத்தியவுடன் (Account Activation) தமிழ்மணம் பயனர் கட்டுப்பாட்டகத்தில் (User Dashboard) நுழையலாம்

3.பயனர் கட்டுப்பாட்டகத்தில் தமிழ்மணம் 2009ம் ஆண்டுக்கான வாக்குச்சீட்டு இருக்கும். அதில் உங்கள் விருப்பமான இடுகைக்கு வாக்கினைச் செலுத்தலாம்

4.உங்கள் வாக்கு ரகசியமானதே. தமிழ்மணம் தனிப்பட்ட வாக்கு விவரங்களை
வெளியிடுவதில்லை என்று உறுதியளிக்கிறது.

5.கட்டுப்பாட்டகத்தில் உள்ள வாக்குச்சீட்டு மூலம் பிரிவுக்கு ஒன்றாக 16 பிரிவுகளிலும் வாக்களிக்க இயலும்.
சில பிரிவுகளில் மட்டுமே வாக்களிக்க விரும்புபவர்களும் எளிதாக தங்கள் வாக்கினை சமர்ப்பிக்கலாம்.

6.அளித்த வாக்கை மாற்ற நினைத்தால் உங்கள் வாக்குச்சீட்டினை சொடுக்கி காலக்கெடுவுக்குள் மீண்டும் வாக்களிக்கலாம். அப்போது முதலில் அளித்த வாக்குகள் முழுமையாக மாற்றமடையும்

விருதுகள் பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட சுட்டியை பார்க்கலாம்
தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2009 – விரிவான அறிவிப்பு

ஆர்வத்துடன் தொடரும் உங்களின் பங்களிப்பிற்கு நன்றி.

தமிழ்மணம் விருதுகள் -2009 – ஒருங்கமைப்புக் குழு

தமிழ்மணம் விருதுகள் 2009 – முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகள்

தமிழ்மணம் விருதுகள் 2009ல், பதிவர்கள் மட்டும் பங்கு பெற்ற முதற்கட்ட வாக்கெடுப்பி்ன் முடிவுகளை இப்பொழுது அறிவிக்கின்றோம். இந்த முதற்கட்ட வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் அதிக வாக்குகள் பெற்ற முதல் 10 இடுகைகள் அடுத்த கட்ட பொது வாக்கெடுப்பிற்கு தகுதி பெறுகின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட இடுகைகள் ஒரே அளவிலான வாக்குகளை சில பிரிவுகளில் பெற்றிருப்பதால் சில பிரிவுகளில் 10க்கும் மேற்பட்ட இடுகைகள் அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறுகின்றன.

அடுத்தச் சுற்று பொது வாக்கெடுப்பில் பதிவர்கள், வாசகர்கள் என அனைவரும் பங்கேற்க முடியும். ஏற்கனவே முதல் சுற்றில் வாக்களித்த பதிவர்கள், பொது வாக்கெடுப்பிலும் வாக்களிக்கலாம். பொது வாக்கெடுப்பு நாளை மறு நாள், சனவரி 2 2010ல் தொடங்குகிறது. அதற்கான விபரங்கள் நாளை வெளியாகும்.

முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகளை கீழ்க்கண்ட சுட்டியில் பார்க்கலாம். இந்தச் சுட்டியில் இடுகைகள் Random முறையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இடுகைகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இந்த வரிசை அமைக்கப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

http://awards2009.tamilmanam.net/voting_results.php

கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு பதிவர்கள் அதிக ஆர்வமுடன் இந்த விருது நிகழ்வில் பங்கேற்றார்கள். தங்களுடைய இடுகைகளை பரிந்துரை செய்த அனைத்து பதிவர்களுக்கும், வாக்களித்த பதிவர்களுக்கும் தமிழ்மணம் நிர்வாகத்தின் சார்பில் எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழர் வாழ்விலும், வரலாற்றிலும் கசப்பான ஆண்டாக அமைந்த 2009ம் ஆண்டு முடிவு் பெறுகின்ற தருவாயில் 2010ம் ஆண்டு தமிழர்களுக்கு அமைதியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தமிழ்மணம் நிர்வாகத்தின் சார்பாக எங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி

– தமிழ்மணம் விருதுத் தேர்வு ஒருங்கமைப்புக் குழு
– தமிழ்மணம் நிர்வாகம்

விருதுகள் 2009 – முதல் கட்ட வாக்கெடுப்பு – உங்கள் வாக்கினை செலுத்தி விட்டீர்களா ?

தமிழ்மணம் விருதுகள் நிகழ்வின் முக்கியமான கட்டத்திற்கு நாம் வந்துள்ளோம். இந்த ஆண்டின் சிறந்த இடுகைகளை தெரிவு செய்யும் முதல் கட்ட வாக்கெடுப்பு இன்று தொடங்கி டிசம்பர் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முதல் கட்ட வாக்கெடுப்பில் பதிவர்கள் மட்டுமே தங்கள் வாக்கினை செலுத்த முடியும்.

தமிழ்மணத்தில் பதிவு செய்துள்ள பதிவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் மூலமாக வாக்கினை அளிப்பதற்கான சிறப்புத் தொடுப்பு அனுப்பப்பட்டுள்ளது.

tm awards 2009

நடைமுறைகள்:

1. உங்கள் வாக்கு ரகசியமானதே. தமிழ்மணம் தனிப்பட்ட வாக்கு விவரங்களை
வெளியிடுவதில்லை என்று உறுதியளிக்கிறது.

2. இச்சிறப்புத் தொடுப்பின் மூலம் பிரிவுக்கு ஒன்றாக 16 பிரிவுகளிலும் வாக்களிக்க இயலும்.
சில பிரிவுகளில் மட்டுமே வாக்களிக்க விரும்புபவர்களும் எளிதாக தங்கள் வாக்கினை சமர்ப்பிக்கலாம்.

3. ஒவ்வொரு பிரிவின் கீழே கொடுக்கப்பட்ட தொடுப்பின் மூலம் அந்தந்தப் பிரிவிற்குப்
பரிந்துரைக்கப்பட்ட இடுகைகளைப் பார்வையிட்டு வாக்களிக்கலாம். புதிதாக மேலெழும்பும்
சன்னலின் வழியாக வாக்களித்தவுடன் மீண்டும் அதே முகப்புச் சன்னலுக்கு வந்து வேறு
பிரிவுக்கு வாக்களிக்கலாம்

4. அனைத்துப்பிரிவுகளுக்கும்/ விருப்பப்பட்ட பிரிவுகளுக்கும் வாக்களித்தபின்னர் அதே
முகப்பு சன்னலில் ‘வாக்கை உறுதி செய்கிறேன்’ என்ற பொத்தானை அழுத்துவதன்
மூலம் உங்கள் வாக்கு தமிழ்மணத்துக்கு வந்துசேரும்.

5. அளித்த வாக்கை மாற்ற நினைத்தால் மின்னஞ்சலில் வந்த சிறப்புத் தொடுப்பை
சொடுக்கி காலக்கெடுவுக்குள் மீண்டும் வாக்களிக்கலாம். அப்போது முதலில் அளித்த
வாக்குகள் முழுமையாக மாற்றமடையும்

விருதுகள் பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட சுட்டியை பார்க்கலாம்
தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2009 – விரிவான அறிவிப்பு

ஆர்வத்துடன் தொடரும் உங்களின் பங்களிப்பிற்கு நன்றி.

தமிழ்மணம் விருதுகள் -2009 – ஒருங்கமைப்புக் குழு

தமிழ்மணம் விருதுகள் 2009 – இடுகைகள் பரிந்துரைகளுக்கான காலக்கட்டம்

தமிழ்மணம் விருதுகள் 2009ம் ஆண்டுக்கான இடுகைகளைப் பரிந்துரை செய்வதற்கான காலக்கட்டம் வரும் சனிக்கிழமை, டிசம்பர் 5ம் தேதி நள்ளிரவு (அமெரிக்க நேரம்) தொடங்க இருக்கிறது என்பதை பதிவர்களுக்கு நினைவுறுத்துகிறோம்.

பதிவர்களுக்கு அனுப்ப்படும் மின்னஞ்சலைக் கொண்டு தங்களுடைய இடுகைகளை பதிவர்கள் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யலாம். பரிந்துரை தொடங்கும் நேரத்தில் அது குறித்த அறிவிப்பும் தமிழ்மணத்தில் வெளியாகும்.

பரிந்துரைக்கான காலக்கட்டம் – டிசம்பர் 5 முதல் டிசம்பர் 12 வரை (அமெரிக்க நேரம் – EST)

கலந்து கொள்ளும் பதிவர், தனது பதிவினை 30-11-2009க்கு முன்னர் தமிழ்மணத்தில்
இணைத்திருத்தல் வேண்டும். சனவரி 2009 முதல் நவம்பர் 30 2009 வரை எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே விருதுகள் தேர்வுக்கு இடம்பெறும்

தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2009 – விரிவான அறிவிப்பு

பதிவர்கள் அனைவரையும் இந்த விருது நிகழ்வில் பங்கு பெற அழைக்கிறோம்…

-தமிழ்மணம் விருதுத் தேர்வு ஒருங்கமைப்புக் குழு

தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2009 – விரிவான அறிவிப்பு

இவ்வாண்டின் மிகச்சிறந்த இடுகைகளை தெரிவு செய்யும் பதிவுத் திருவிழா

tm awards 2009

தமிழ் வலைப்பதிவுகள் எண்ணிக்கையிலும் தரத்திலும் வளர்வதற்கும், அவை பரவலான வாசகர்களைச் சென்றடையவும் தேவையான கட்டமைப்பை அளிப்பதையும், வழமையான ஊடகவெளிக்கு வெளியே வலைப்பதிவுகளில் எழுதப்படும் தரமான படைப்புகள் உரிய அங்கீகாரம் பெறவும், அதன் மூலம் அத்தகைய படைப்புகள் மேலும் அதிகரிக்க தன்னாலானதைச் செய்வதையுமே தமிழ்மணம் தன் அடிப்படையான பணிகளாகக் கொண்டுள்ளது.

தமிழ்மணத்தின் அடிப்படை நோக்கங்களின் மீது நம்பிக்கை வைத்து இயங்கும் வலைப்பதிவர்களுக்கு நன்றி செலுத்துமுகமாக தமிழ் வலைப்பதிவுகளுக்கென்று விருதுகளை தமிழ்மணம் சென்ற ஆண்டு முதன் முறையாக வழங்கியது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்-சனவரி மாதத்தில் இந்த விருது நிகழ்வுகள் நடைபெறும். 2009ம் ஆண்டுக்கான விருதுகளுக்கான தேர்வுகள், வாக்களிப்பு போன்றவற்றை வரும் டிசம்பர், சனவரி மாதங்களில் நடத்த திட்டம் வகுத்துள்ளோம்.

விருதுகள் தேர்வு முறை

ஒவ்வொரு பதிவரும் தன்னுடைய பதிவே சிறந்தது எனப் பெருமிதம் கொள்ளும் உரிமையைப் பெற்றிருந்தாலும், இடுகைகளுக்கு உடனுக்குடன் கிடைக்கும் சக பதிவர்கள்/வாசகர்களின் பின்னூட்டங்கள் மூலமான அங்கீகாரமும் பதிவர்களை மேலும் ஊக்குவிக்கும் சக்தியாகத் திகழ்கிறது. அப்படிப்பட்ட இடுகைகளை வாசகர்கள் மீண்டுமொருமுறை திரும்பிப் பார்க்க வைத்து அங்கீகரிப்பதே இந்த விருதுத் தேர்வுக்கான அடிப்படை. அறிவிக்கப்பட்ட போட்டிகளுக்காக எழுதப்படும் படைப்புகளாக அல்லாமல், தன்னெழுச்சியாக வெளிப்பட்ட படைப்புகளே இந்தத் தேர்வுகளுக்கு கணக்கிலெடுக்கப்படுவதால் இதில் போட்டியோ, ஏமாற்றமோ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்குமென்றே நம்புகிறோம்.

இவ்வாண்டின் தேர்வுகள் கீழ்காணும் பிரிவுகளில் இருக்கும்:

1. படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)
2. காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், குறும்படங்கள்)
3. நூல், திரைப்படம் அறிமுகம்/விமர்சனம்/திறனாய்வுகள்
4. அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள்
5. பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
6. செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்
7. அரசியல், சமூக விமர்சனங்கள்
8. பெண்கள் பிரச்னைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள்
9. தலித் மக்களின் பிரச்சனைகள், மனித உரிமை, நிறவெறி (Racism) தொடர்பான கட்டுரைகள்
10. ஈழ மக்களின் வாழ்வியல், மனித உரிமை, சமூக, பொருளாதாரச் சிக்கல்கள்
11. தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல்
12. நகைச்சுவை, கார்ட்டூன்
13. சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம்
14. பொருளாதாரம், வணிகம் தொடர்பான கட்டுரைகள்
15. தமிழ்க்கணிமை, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையம் தொடர்பான கட்டுரைகள்
16. விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள்

தேர்வு நடைமுறை:

1. தனிப்பட்ட இடுகை (post) அல்லது இடுகைத் தொடர்களே விருதுக்கு தேர்வு
செய்யப்படும். வலைப்பதிவு முழுமைக்குமான விருது என்று எதுவும் இல்லை.

2. கலந்து கொள்ளும் பதிவர், தனது பதிவினை 1-11-2009க்கு முன்னர் தமிழ்மணத்தில்
இணைத்திருத்தல் வேண்டும். சனவரி 2009 முதல் நவம்பர் 30 2009 வரை எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே விருதுகள் தேர்வுக்கு இடம்பெறும்

3. எந்தவொரு இடுகையையும் எழுதிய பதிவரே பரிந்துரை செய்யவேண்டும். ஒரே பதிவர்
அதிகபட்சமாக இரண்டு வெவ்வேறு பிரிவுகளுக்குப் பரிந்துரை செய்யலாம். ஆனால் ஒரு பிரிவுக்கு ஒரே ஒரு இடுகையை மட்டுமே பரிந்துரை செய்ய முடியும். மேலும்
குறிப்பிட்ட இடுகையை ஒரு பிரிவுக்கு மட்டுமே பரிந்துரை செய்யலாம்.

4. உங்களது பரிந்துரைகளை அளிப்பதற்கென ஒரு சிறப்புத்தளம் ஏற்படுத்தப்
பட்டுள்ளது. அதற்கான சிறப்புத் தொடுப்பும் வழிமுறைகளும் தமிழ்மணத்தில்
பதியப்பட்டுள்ள பதிவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

5. பரிந்துரைக்கப்படும் படைப்புகள் 2009 ஆம் ஆண்டில் முதல் முறையாகப்
பதிவுகளில் எழுதப்பட்டிருக்கவேண்டும். பரிந்துரைகள் 2009 ஆண்டில் வெளியிடப்பட்ட
முந்தைய ஆண்டுகளின் படைப்புகளின் மீள்பதிவுளாகவோ அல்லது வேறு அச்சிதழ் அல்லது
இணைய தளங்களில் வெளியிடப்பட்ட படைப்புகளின் மீள்பதிவுகளாகவோ இருத்தலாகாது.

6. விருதுத் தேர்வுக் குழு (நடுவர் குழு) என்று எதுவும் இல்லை.தமிழ்மணத்தில்
இணைந்துள்ள அனைத்துப் பதிவர்களும் முதற்கட்ட நடுவர்களே. ஒரு பதிவருக்கு ஒரு
பிரிவுக்கு ஒரு வாக்கு என்னும் அடிப்படையில் வாக்குரிமை இருக்கும்.

7. முதற்கட்ட வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்கள் பெறும்
இடுகைகள் இரண்டாம் கட்டப் பொது வாக்கெடுப்புக்குத் தெரிவு செய்யப்படும்.
இரண்டாம் கட்டத்தில் அனைத்து வாசகர்களும் (பதிவு இல்லாதவர்களும்)
வாக்களிக்கலாம்.

8. பதிவர் வாக்குகளும் வாசகர் வாக்குகளும் 2:1 என்ற விகிதத்தில் முக்கியத்துவம்
அளிக்கப்பட்டு மொத்த வாக்குகள் கணக்கிடப்படும். இதில் முதலிடம் பெறும் இடுகை
அந்தந்தப் பிரிவில் 2009-இன் சிறந்த இடுகையாக அறிவிக்கப்படும்.

9. ஒவ்வொரு பிரிவிலும் முதல் கட்ட வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்படும் முதல் 10
இடுகைகளும் (மொத்தம் 160 இடுகைகள்), தமிழ்மணம் தளத்தில் புதிதாக
உருவாக்கப்படும் சிறப்புப் பக்கத்தில் நிரந்தரமாக இடம் பெறும். தமிழ்மணம் புகழ்
அரங்கு (Hall of Fame) என்ற இந்தப் பக்கம் ஒவ்வொரு வருடமும்
தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த இடுகைகளை நிரந்தரமாக முன்னிறுத்தும். கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 120 இடுகைகளும், இவ்வாண்டு தேர்வு செய்யப்படும் 160 இடுகைகளும் இணைந்த புகழ் அரங்கு வரும் ஆண்டு சனவரியில் (2010) உருவாக்கப்படும்.

10. தமிழ்மணத்தில் இணைந்துள்ள பதிவர்களுக்குப் பரிந்துரைகள் அனுப்புவதற்கான
வேண்டுகோள் வெளியிடப்படுவதுடன் விருது தெரிவுப் பணி தொடங்கும்.

11. கிழ்க்கண்ட தேதிகளை பதிவர்கள் குறித்துக் கொள்ளலாம்

– இடுகைகள் பரிந்துரைகளுக்கான காலக்கட்டம் – டிசம்பர் 5 – டிசம்பர் 12
– முதல் கட்ட வாக்கெடுப்பு – டிசம்பர் 16 – டிசம்பர் 30
– இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு – சனவரி 2 – சனவரி 12
– விருதுகள் முடிவுகள் அறிவிப்பு – சனவரி 16

12. ஒவ்வொரு கட்டத்திலும் விரிவான அறிவிப்புகள் தமிழ்மண முகப்பில் வெளியிடப்படும். மின்னஞ்சலிலும் பதிவர்களுக்கு அறிவிக்கப்படும்.

பரிசு:
வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் அதிக வாக்குப் பெற்று முதலிடம் பெறும் பதிவுகளுக்குத் தலா ரூ.1000ம் (ஆயிரம் ரூபாய்), இரண்டாம் இடம் பெறும் பதிவுகளுக்குத் தலா ரூ.500ம் (ஐநூறு ரூபாய்) வழங்கப்படும். பரிசுத்தொகை நூல்களாகவே வழங்கப்படும். பதிவர்கள் தமிழ்மணம் வழங்கும் கூப்பனைக் கொண்டு சென்னை நியூ புக்லாண்ட்ஸ் புத்தகக்கடையில் தாங்கள் விரும்பும் நூல்களைப் பெற்றுக் கொள்ளலாம்

-தமிழ்மணம் விருதுத் தேர்வு ஒருங்கமைப்புக் குழு

தமிழ்மணம் விருதுகள் 2009

தமிழ்மணம் ஆண்டு விருதுகளை இந்த ஆண்டும் வழங்க தமிழ்மணம் முடிவு செய்துள்ளது. 2008 இல் தமிழ்மணம் விருதுகளைத் தேர்ந்தெடுக்கக் கடைப்பிடிக்கப்பட்ட தேர்வு முறை பதிவர்களிடம் இருந்து பரவலான வரவேற்பினைப் பெற்றதால் அதே தேர்வு முறையை இந்த ஆண்டும் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.

tm awards 2009

தமிழ்மணம் விருதுகள் குறித்த மேலும் விரிவான அறிவிப்புகள் அடுத்த சில வாரங்களில் வெளியாகும். டிசம்பர்-சனவரி மாதங்களில் விருதுக்கான தேர்வுகள், வாக்களிப்பு போன்றவை நடைபெறும். பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தில் விருது பெற்றவர்களின் விபரங்கள் அறிவிக்கப்படும்.

கடந்த ஆண்டு தமிழ்மணம் விருதுகளை முதன் முறையாக நடத்தியதாலும், அப்பொழுது ஈழத்தில் நிலவிய அசாதாரணமான சூழலாலும் தமிழ்மணம் விருது நிகழ்வு காலதாமதமானது. இவ்வாண்டு எத்தாமமுதம் இல்லாமல் குறித்த நாட்களுக்குள் விருது நிகழ்வு நடக்குமென உறுதி அளிக்கிறோம்.

கடந்த ஆண்டினைப் போலவே பதிவர்களின் ஒத்துழைப்பினை இந்த ஆண்டும் வேண்டுகிறோம்

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

நிர்வாகம்,
தமிழ்மணம்