தமிழ்மணம் விருதுகள் – பரிந்துரைக் காலகட்டம்
தமிழ்மணத்தின் விருதுகள் 2010 நிகழ்வின் இடுகைகள் பரிந்துரை இன்று தொடங்குவதாக இருந்தது. சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த நிகழ்வு டிசம்பர் 5ல் தொடங்கும்.
கிழ்க்கண்ட தேதிகளை பதிவர்கள் குறித்துக் கொள்ளலாம்
- இடுகைகள் பரிந்துரைகளுக்கான காலக்கட்டம் – டிசம்பர் 5 – டிசம்பர் 15
- முதல் கட்ட வாக்கெடுப்பு – டிசம்பர் 16 – டிசம்பர் 26
- இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு – டிசம்பர் 27 – சனவரி 03
- நடுவர் குழு வாக்கெடுப்பு – சனவரி 4 – சனவரி 12
- விருதுகள் முடிவுகள் அறிவிப்பு – பொங்கல் தினத்தன்று முடிவுகள் அறிவிக்கப்படும்
இந்த தாமதத்திற்கு வருந்துகிறோம். டிசம்பர் 5ம் தேதி குறித்த நேரத்தில் விருதுகள் நிகழ்வு தொடங்கும் என உறுதி அளிக்கிறோம்
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…
தமிழ்மணம் விருது தேர்வுக் குழு
தமிழ்மணம் விருதுகள் 2010 – வழங்குபவர் அலோகா
தமிழ்மணம் விருதுகள் 2010ம் ஆண்டு விளம்பரதாராக இருக்க, அமெரிக்காவைச் சேர்ந்த அலோகா நிறுவனம் முன்வந்துள்ளது (இணையத்தளம் – http://www.aloha-usa.com/).
அலோகா நிறுவனம் குழந்தைகளுக்கான கணிதப்பயிற்சி நிறுவனமாகும். இந் நிறுவனம் 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டு அமெரிக்காவெங்கும் பல கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவில் செயல்படும் அலோகா நிறுவனத்தின் நிறுவனர் திரு. மணி மாணிக்கவேலு ஒரு தமிழர் என்பது மகிழ்ச்சிக்குரியது. அத்தோடு மட்டுமில்லாமல் தமிழ்மணத்தின் தொடர்ச்சியான வாசகராகவும் உள்ள திரு.மணி, தன்னுடைய அலோகா நிறுவனம் மூலமாக இந்த ஆண்டு தமிழ்மணம் விருதுகளின் விளம்பரதாராக இருக்க முன்வந்துள்ளார்.
அலோகா நிறுவனத்திற்கு எங்களுடைய நன்றி.

நிர்வாகம்,
தமிழ் மீடியா இண்டர்நேஷனல்
தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் – டாப் 20 வலைப்பதிவுகள்
தமிழ்மணத்தின் புதிய சேவையாக தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்துகிறோம்.
வாசகர்களின் அங்கீகாரம் தான் எந்த ஒரு எழுத்தாளருக்கும் ஊட்டம் தரும் ஊக்கச் சக்தியாக விளங்குகிறது. வாசகர்களிடம் இருந்து பெறும் வாசகர் பரிந்துரை வாக்குகள், மறுமொழிகள் போன்றவை தான் தொடர்ந்து எழுத்தின் மீதான ஆர்வத்தை வலைப்பதிவர்களுக்கு ஏற்படுத்துகிறது. ஆனால் வலைப்பதிவர்கள் வாசகர்களிடம் இருந்து பெறும் அங்கீகாரம் குறித்த சரியான அளவுகோல் இல்லை என்றே சொல்லலாம். வாசகர்களின் அங்கீகாரத்தை ஒரு வலைப்பதிவு பெறும் பார்வைகள் (ஹிட்ஸ்), மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் போன்றவற்றைக் கொண்டு கணிக்கலாம். இதனை அடிப்படையாக கொண்டு தமிழ்மணம் தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என்ற சேவையை வடிவமைத்து உள்ளது.
தற்பொழுது சோதனை வடிவத்தில் உள்ள இந்தச் சேவை குறித்த உங்களின் ஆலோசனைகளை வரவேற்கிறோம்
இந்தச் சேவையை இந்தச் சுட்டியில் பார்க்கலாம்
http://www.tamilmanam.net/top/blogs/1
வலைப்பதிவுகளின் முன்னணி பட்டியில் ஒவ்வொரு ஞாயிறும் வெளியிடப்படும். கடந்த ஏழு நாட்களில் வலைப்பதிவுகள் வாசகர்களிடம் பெற்ற மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் மற்றும் பார்வைகள் (ஹிட்ஸ்) போன்றவை கொண்டு இந்த முன்னணி நிலவரம் கணக்கிடப்படுகிறது
நிர்வாகம்,
தமிழ் மீடியா இண்டர்நேஷனல்
TMI Inc
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் – தமிழ்மணத்தின் நிலைப்பாடு
தமிழ்மணம் இணையத்தளத்தினை நடத்தி வரும் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் குழுமம் (TMI Inc) தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் தமிழ் மொழியின் பயன்பாட்டிற்கும் தன்னாலான முயற்சிகளை செய்வதையே அடிப்படை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இணையத்தில் தமிழ்மொழியின் பயன்பாடு தமிழ் வலைப்பதிவுகளின் வருகைக்குப் பிறகு அதிகரித்து இருக்கிறது என்பது கண்கூடு. இன்றைய இணைய தொழில்நுட்பத்தின் மூலம் ஆயிரக்கணக்கான வலைப்பதிவர்கள் தமிழில் எழுதி வருகின்றனர். முன்னெப்பொழுதையும் விட தற்பொழுது தமிழில் எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் பெருகி உள்ளனர்.
இணையம் என்றில்லாமல் நாளிதழ்களும், அச்சு இதழ்களும், புத்தகங்களும் இன்று அதிகளவில் விற்கப்படுகின்றன. பல துறை சார்ந்த நூல்கள் தமிழில் வெளிவருகின்றன. வணிக ரீதியில் இந்தப் புத்தகங்கள் விற்பதைக் கொண்டு வாசகர்கள் எண்ணிக்கையும் இன்று அதிகரித்து உள்ளதை உணர முடிகிறது. வெகுஜன ஊடகங்கள் தவிர பல சிற்றிதழ்களும், மாற்று இதழ்களும் முன் எப்பொழுதையும் விட அதிகளவில் அச்சிலும் இணையத்திலும் வெளிவருகின்றன. தமிழ் வழியில் பொறியியல் படிப்பினை இவ்வருடம் முதல் அறிமுகப்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளிலும் தமிழ்ச்சங்கங்கள் வாரயிறுதிகளில் தமிழ்ப் பள்ளிகளை நடத்தி வருகின்றன. இப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ் பயில்கிறார்கள். அதிக எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட சில மாநிலங்களில், தமிழ்ப் பள்ளியில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அவர்களது அமெரிக்கப் பள்ளிக்கூட மதிப்பெண்களோடு சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு இப்பள்ளிகள் அமெரிக்கக்கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தமிழின் பயன்பாடு பல வழிகளிலும் முன்னெப்பொழுதையும்விட அதிகமாக நடந்து வருகிறது. தற்போதைய தமிழ் எழுத்து வடிவில் இதனை நாம் சாதித்து இருக்கிறோம்.
இவ்வாறான சூழ்நிலையில் தமிழக அரசு தமிழ் மொழியில் எழுத்துச் சீர்த்திருத்தம் செய்யப்போவதாகவும், வருகின்ற செம்மொழி மாநாட்டில் அது குறித்து அறிவிக்கப்படும் என்றும் அதிகாரபூர்வமான செய்திக்குறிப்பு ஒன்று கடந்த சனவரி 7ஆம் தேதியன்று வெளியான மாலை மலரில் வெளியாகி உள்ளது.
இதன் தொடர்ச்சியாக இது குறித்த பரவலான விவாதம் இணையத்தளங்களிலும், தமிழ்க் குழுமங்களிலும் நடந்து வருகிறது.
எழுத்துச் சீர்திருத்தம் என்பது என்ன ?
தமிழ் மொழியில் உள்ள வரிவடிவங்களில் இகர, ஈகார, உகர, ஊகார வடிவங்களில் சீர்மையை கொண்டு வரப் போவதாக தமிழறிஞர்கள் சிலர் பேசி வருகின்றனர். இவர்கள் மிகவும் சிறுபான்மையினர்; ஆனால், அதிகாரத்தில் உள்ளவர்கள். வரும் சூன் மாதம் கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் வேலைத்திட்டங்களைத் தமிழ்ச்சமுதாயத்தின் மேல் திணிக்க முனைகின்றனர்.
இவர்கள் அறிவித்துள்ள சீர்மை தமிழ் எழுத்துகளில் 72 எழுத்துக்களில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும், நான்கு புதிய வரி வடிவங்கள் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிகிறது. வா.செ.குழந்தைசாமி வெளியிட்டுள்ள சீர்மைக் கட்டுரைகளில் இருந்து இதனை அறிய முடிகிறது. இது தமிழ்மொழிக்குக் கேடு விளைவிக்கக் கூடியதாகும். பல தமிழ் அறிஞர்கள் இந்த முயற்சிக்கு எதிரான தங்கள் ஆணித்தரமான கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள். இவர்களுடன் தமிழ்மணமும் தன்னை இணைத்துக் கொள்கிறது.

சுமார் 72 எழுத்துக்களுக்கு மாற்றம் என்பது சீர்மையோ, சீர்திருத்தமோ அல்ல. மிகப் பெரிய மாற்றம். குறுகிய கால இடைவெளியில் எக் காலத்திலும் தமிழ் மொழி இவ்வாறு மாற்றப்பட வில்லை. தந்தை பெரியார் ஒரு சில எழுத்துக்களை மட்டுமே அச்சுத் தொழிலுக்கு ஏற்றவாறு மாற்றினார். அதுவும் புதிய வரி வடிவங்கள் எதையும் பெரியார் புகுத்தவில்லை. வழக்கில் இருந்த வரி வடிங்களைக் கொண்டே சில எழுத்துக்களில் சீர்மையை பெரியார் கொண்டு வந்தார். ஆனால் இன்றைய இணையம், கணினி யுகத்தில் இத்தகைய எந்த மாற்றமும் தமிழுக்குத் தேவை இல்லை. இன்று இணையத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படும் சில தெற்காசிய மொழிகளில் ஒன்றாக தமிழும் உள்ளது. கணினி பயன்பாட்டிலும் பலப் பிரச்சனைகளை களைந்து தமிழ் பயன்பாடு ஒரு சுமூகமான நிலையை எட்டி உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் இந்தச் சீர்மை தேவை தானா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது.
சீர்மையால் விளையும் கேடுகள்
இந்த எழுத்துச் சீர்மை ஏற்படுத்தப் பட்டால் தற்பொழுது வெளியாகி உள்ள எண்ணற்ற புத்தகங்கள் பயனற்றதாகி விடும். புதிய புத்தகங்களை வெளியிட வேண்டும். பல இணையத்தளங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் மறுபடியும் மாற்றப்பட வேண்டும். தற்பொழுது வழக்கில் உள்ள தமிழ் எதிர்காலத்தில் கல்வெட்டு தமிழ் போன்றதாகி விடும். வெகு இயல்பாக உள்ள தமிழ் பயன்பாடு பெருங்குழப்பத்திற்கு உள்ளாகும். தமிழின் பயன்பாடு வளர்ச்சியில் இருந்து தேக்க நிலையை அடையும்.
இத்தகைய ஒரு சீர்மை அவசியம் தானா என்ற கேள்வியை நாம் அனைவரும் எழுப்ப வேண்டும்.
தமிழ் மொழிக்கு இந்த சீர்மையால் நேரும் கேட்டினைத் தடுத்து நிறுத்தத் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்யத் தமிழ்மணம் முடிவு செய்திருக்கிறது. இதில் பதிவர்களின் ஆதரவினையும் தமிழ்மணம் வேண்டுகிறது.
இது குறித்த விரிவான வாசிப்பிற்குச் சில கட்டுரைகளைத் தமிழ்மணம் பரிந்துரை செய்கிறது
சுப.நற்குணன் – தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா?
நாக.இளங்கோவன் – எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள்
முனைவர் மு.இளங்கோவன் – தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையா?
மணி மு. மணிவண்ணன் – எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? – கருத்தரங்கம் – ஓர் அறிக்கை
முனைவர். பெரியண்ணன் சந்திரசேகரன் – Tamil Script Reform: Its Vacuity Next to The Chinese Script
பேராசிரியர் செ. இரா. செல்வக்குமார் – எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி
தமிழ்மணம் நிர்வாகக் குழு சார்பாக:
எழுத்துச்சீர்திருத்தத்தை எதிர்த்து
சொர்ணம் சங்கர்,
இரா. செல்வராஜ்,
இரமணீதரன்,
தங்கமணி,
சுந்தரவடிவேல்,
இளங்கோ,
தமிழ் சசி,
பாலாஜி பாரி
தமிழ்மணம் விருதுகள் 2009 – பரிசுக் கூப்பன்
தமிழ்மணம் விருதுகள் 2009 நிகழ்வில் வெற்றி பெற்றவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு சென்னை நியூபுக்லாண்ட்ஸ் பரிசுக் கூப்பனை அனுப்பி இருக்கிறோம். இந்தக் கூப்பனைக் கொண்டு சென்னை நியூபுக்லாண்ட்ஸ் புத்தக நிலையத்தில் பதிவர்கள் தாங்கள் விரும்பும் புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.
தானியங்கியாக இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதால் ஒவ்வொரு மின்னஞ்சலையும் சோதிக்க இயலவில்லை. மின்னஞ்சலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் admin@thamizmanam.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி
நிர்வாகம்
தமிழ்மணம்
தமிழ்மணம் வழங்கிப் பிரச்சனை
தமிழ்மணம் வழங்கியில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனையால் நேற்று மாலை (சனவரி 16)தொடங்கி இன்று மதியம் வரை(சனவரி 17) தமிழ்மணம் சேவையில் தடங்கல் இருந்தது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்மணத்தில் கடந்த 48மணி நேரத்தில் பதிவு செய்யப்பட்ட வாசகர் பரிந்துரையின் வாக்குகள் தமிழ்மணத்தில் இல்லை. இனிமேல் அளிக்கப்படும் வாக்குகள் தமிழ்மணத்தில் சேகரிக்கப்படும்.
சேவையில் ஏற்பட்ட இடையூறுக்கு வருந்துகிறோம்
நிர்வாகம்
தமிழ்மணம்
தமிழ்மணம் விருதுகள் 2009 – முடிவுகள்
கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற 2009ம் ஆண்டுக்கான தமிழ்மணம் விருதுகள் நிகழ்வு தற்பொழுது நிறைவுபெறுகிறது. இந்த விருதுகள் நிகழ்வில் கலந்து கொண்ட பதிவர்களுக்கும், இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்கெடுப்பில் பங்கேற்ற பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஆண்டினைக் காட்டிலும் இந்த ஆண்டு இருந்த கூடுதலான ஆர்வமும், பங்கேற்பும் எங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக அமைந்து இருந்தது. அடுத்த ஆண்டில் இந்த ஆர்வம் இன்னும் அதிகரிக்கும் என நம்புகிறோம்.
இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்கெடுப்பில் பதிவர் வாக்குகளும் வாசகர் வாக்குகளும் 2:1 என்ற விகிதத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மொத்த வாக்குகள் கணக்கிடப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் கள்ள ஓட்டுகள் போடப்படும் என பல பதிவர்களும், வாசகர்களும் கூறியிருந்தனர். எனவே ஓட்டு எண்ணப்பட்ட பொழுது கள்ள ஓட்டுக்களை நீக்கும் தொழில்நுட்பத்தை தமிழ்மணம் புகுத்தி இருந்தது. தானியங்கியாகவும், நிர்வாகத்தால் அலசப்பட்டும் (Automatic+Manual) கள்ள ஓட்டுக்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன.
ஏற்கனவே அறிவித்து இருந்தது போல முதல் இரண்டு இடங்களைப் பெறும் இடுகைகளுக்கு விருதுகள் வழங்கப்படும். அதே நேரத்தில் சில பிரிவுகளில் சில இடுகைகள் ஒரே அளவிலன ஓட்டுக்களைப் பெற்று இருக்கின்றன. ஒரு பிரிவில் முதல் இடத்திற்கு இரண்டு இடுகைகள் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அந்தப் பிரிவில் இரண்டாம் பரிசு நீக்கப்பட்டு, இரண்டு முதல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இரண்டாம் இடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இடுகைகள் தேர்வு பெறும் பட்சத்தில் அந்த இரண்டு இடுகைகளுமே இரண்டாம் பரிசை பெறும்
விருது முடிவுகளும், வலைப்பதிவில் அணிந்து கொள்ள விருது பதக்கங்களும் கீழே உள்ள சுட்டியில் உள்ளது. ஏற்கனவே அறிவித்து இருந்தது போல பரிசுத் தொகை புத்தகங்களாக வழங்கப்படும். சென்னை நியூபுக்லாண்ட்ஸ் பரிசுக் கூப்பன் வெற்றி பெற்றவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த சில தினங்களில் அனுப்பி வைக்கப்படும்
http://awards2009.tamilmanam.net/winners2009.php

போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…
நிர்வாகம்
தமிழ்மணம்
தமிழ்மணம் விருதுத் தேர்வு ஒருங்கமைப்புக் குழு
தமிழ்மணம் நூற்குறி (புக்மார்க்)
இணையத்தில் இருக்கும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்ளும் நூற்குறி (புக்மார்க்) வசதி தற்பொழுது தமிழ்மணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது அடிப்படையான சோதனை வடிவம் ஆகும். வாசகர்களின் வரவேற்பினை பொறுத்து எதிர்காலத்தில் மேம்படுத்தப்பட்ட நூற்குறி வசதியினை வழங்க முனைவோம்.
இந்த நூற்குறி வசதியைக் கொண்டு பதிவர்கள் மட்டுமில்லாமல் வாசகர்களும் தமிழ்மணத்தில் தாங்கள் படித்த சுட்டிகளை பகிர்ந்து கொள்ள முடியும். ஒரு பயனர் பெயரை உருவாக்கி தமிழ்மணத்தில் உள்நுழைந்தால் கட்டுப்பாட்டகத்தில் நூற்குறியை பகிர்ந்து கொள்ளும் சுட்டி இருக்கும் – http://www.tamilmanam.net/login/tm_bookmarks.php
நிர்வாகம்,
தமிழ்மணம்
தமிழ்மணம் வாசகர் பரிந்துரை – வாக்களிக்கும் முறையில் மாற்றம்
தமிழ்மணம் வாசகர் பரிந்துரை வாக்களிக்கும் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறோம். Openid முறையில் வாக்களிப்பதில் இருந்த பல சிரமங்களை பதிவர்களும், வாசகர்களும் எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர். அதனைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இனி வாக்களிப்பதற்கு தமிழ்மணத்தில் ஒரு பயனர் பெயரை உருவாக்கி கொள்ள வேண்டும். தற்போதைய புதிய முறை மிகவும் எளிமையாக இருப்பதால் அதிகளவில் வாசகர்கள்/பதிவர்கள் இதனை பயன்படுத்த முடியும் என நம்புகிறோம்
உங்களுக்கு ஒரு புதிய பயனர் பெயரை உருவாக்கி கொள்ள இந்தச் சுட்டியை சொடுக்குங்கள் – http://www.tamilmanam.net/login/register.php
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…
நிர்வாகம்
தமிழ்மணம்
தமிழ்மணம் விருதுகள் 2009 – இரண்டாம் கட்ட பொது வாக்கெடுப்பு
தமிழ்மணம் விருதுகள் நிகழ்வின் இறுதிக்கட்டமாக பதிவர்கள், வாசகர்கள் என அனைவரும் பங்கு பெறும் பொதுவாக்கெடுப்பு இப்பொழுது தொடங்கி உள்ளது. இந்த பொதுவாக்கெடுப்பு இன்று தொடங்கி சனவரி 12ம் தேதி வரை நடைபெறும்
முதற்கட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற இடுகைகள் இந்த இரண்டு கட்ட பொது வாக்கெடுப்பில் பங்கு பெற முடியும். முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகளை கீழ்க்கண்ட சுட்டியில் பார்க்கலாம்
தமிழ்மணம் விருதுகள் 2009 – முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகள்
வாக்கெடுப்பு நடைமுறைகள்
1. இரண்டாம் கட்ட பொது வாக்கெடுப்பில் பங்கு பெற விரும்பும் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தமிழ்மணத்தில் ஒரு பயனர் பெயர் வேண்டும். இந்தச் சுட்டிக்கு சென்று ஒரு பயனர் பெயரை உருவாக்கி கொள்ள வேண்டும் – http://www.tamilmanam.net/login/register.php
2. பயனர் பெயரை உருவாக்கி, உங்கள் கணக்கை செயற்படுத்தியவுடன் (Account Activation) தமிழ்மணம் பயனர் கட்டுப்பாட்டகத்தில் (User Dashboard) நுழையலாம்
3.பயனர் கட்டுப்பாட்டகத்தில் தமிழ்மணம் 2009ம் ஆண்டுக்கான வாக்குச்சீட்டு இருக்கும். அதில் உங்கள் விருப்பமான இடுகைக்கு வாக்கினைச் செலுத்தலாம்
4.உங்கள் வாக்கு ரகசியமானதே. தமிழ்மணம் தனிப்பட்ட வாக்கு விவரங்களை
வெளியிடுவதில்லை என்று உறுதியளிக்கிறது.
5.கட்டுப்பாட்டகத்தில் உள்ள வாக்குச்சீட்டு மூலம் பிரிவுக்கு ஒன்றாக 16 பிரிவுகளிலும் வாக்களிக்க இயலும்.
சில பிரிவுகளில் மட்டுமே வாக்களிக்க விரும்புபவர்களும் எளிதாக தங்கள் வாக்கினை சமர்ப்பிக்கலாம்.
6.அளித்த வாக்கை மாற்ற நினைத்தால் உங்கள் வாக்குச்சீட்டினை சொடுக்கி காலக்கெடுவுக்குள் மீண்டும் வாக்களிக்கலாம். அப்போது முதலில் அளித்த வாக்குகள் முழுமையாக மாற்றமடையும்
விருதுகள் பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட சுட்டியை பார்க்கலாம்
தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2009 – விரிவான அறிவிப்பு
ஆர்வத்துடன் தொடரும் உங்களின் பங்களிப்பிற்கு நன்றி.
தமிழ்மணம் விருதுகள் -2009 – ஒருங்கமைப்புக் குழு
