தமிழ்மணம் விருதுகள் 2008

Tamilmanam Blog Awards 2008

1. தமிழ்மண விருதுகள் பதிவை எப்பப் போடலாம்னு நினைக்கறீங்க?
2. ஏன், இன்னைக்கே கூட போட்டுடலாம்.

1. முழுமையான அறிவிப்ப வெளியிடப் போறோமா, இல்லை முன்னோட்ட அறிவிப்பு மட்டும் தானா?
2. இப்போதைக்கு முன்னோட்ட அறிவிப்பு மட்டும் போதும்.

1. ஏற்கனவே விருதுகள் 2007 அறிவிச்சிட்டு, அப்படியே காணாம போயிட்டோம். அதனால…
2. அப்போ ஏற்பட்ட குழப்பங்கள் இந்த முறை இருக்காது. தெரிவை எளிமையாக்குறதுக்கான நிரல்கள் பாதி தயாரா இருக்கு. இன்னும் சில நாட்கள்ல முழுமையான சோதனைய நடத்திப் பார்த்திடலாம்.

1. அப்படின்னா முழுமையான அறிவிப்பையே வெளியிட்டுடலாமே?
2. வேண்டாம். முழுமையான அறிவிப்பை நிரல் சோதனைகள் முடிஞ்சபின்னாடி வெளியிடலாம். இப்போதைக்குப் பதிவர்களுக்கு இப்படி ஒரு திட்டம் இருக்குற தகவலை மட்டும் சொல்லிடலாம். சரியா?

சொன்னதும், செய்யிறதும்

November 24, 2008 · Posted in சிறப்பிடுகைகள் · 16 Comments 

1. கீழ இருக்கற இந்தப் படத்தைத் தான் தமிழ்மணம் முகப்பிலயும், தமிழ்மணம் வலைப்பதிவிலையும் சிறப்பிடுகைகள் பிரிவில போடப் போறேன்.
2. ஏற்கனவே பதிவர்கள் நம்மளை திட்டுறது காணாதுன்னு இப்ப நமக்கு நாமே திட்டத்தில் நாமே திட்டிக்க போறோமா?

1. இத நாங்க சுயபரிசோதனைன்னு விளம்பிக்குவோம்.
2. 🙂

1. இந்தப் படத்துக்கு என்ன தலைப்பு வைக்கிறதுன்னு தான் தெரியலை. தலைப்பு கடன் தர முடியுமா?
2. “நாங்க சொன்னதையெல்லாம் செஞ்சதும் இல்லை, அதுக்காக எதுவும் செய்யாமலும் இல்லை”

1. இது எனக்குப் பிடிச்சிருக்கு. நன்றி.

Teaser - 2

டி.எம்.ஐ.யின் எதிர்காலப்பயணம்

April 30, 2007 · Posted in சிறப்பிடுகைகள் · 24 Comments 

கடந்த வாரம் நட்சத்திரப் பதிவுகளில் தமிழ் மணத்தைப் பற்றியும், டி.எம்.ஐ. நிறுவனத்தைப் பற்றியும் பல தலைப்புகளில் உங்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டோம். அப்பொழுது வந்த பின்னூட்டங்கள் வாயிலாக பாராட்டுக்களையும், ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் நல்கிய பதிவர்கள் அனைவருக்கும் எங்களது நன்றி.

நாங்கள் சொல்லியபடி தமிழ் மணத்தின் சேவையை மேலும் எவ்வளவு செம்மைப் படுத்த முடியுமோ, அவற்றுக்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம். எடுத்துக்காட்டாக, தமிழ்மணம் முதல் பக்கத்தில் அளிக்கப்படும் “அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்” பகுதிதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகம் சர்ச்சைக்குள்ளான பகுதி எனலாம். எப்பொழுதுமே ஒரு சாராரைத் திருப்தியடையச் செய்த மாற்றம் இன்னொரு சாராரை அதிருப்தியடையச் செய்தது. இருந்தாலும் தமிழ் மணம் எப்பொழுதுமே ஒரு குறிப்பிட்ட பகுதியினரை திருப்திப் படுத்துவதற்காக எதையும் செய்ததில்லை. தமிழ்மண நிர்வாகத்துக்கு வரும் மின்னஞ்சல்களில் வைக்கப் படும் பெரும்பாலான வேண்டுகோள்களின் அடிப்படையில்தான் மாற்றங்களைச் செய்ய முன்வந்தது. எந்த விதமான மாற்றமும் நிரந்தரமானதும் அல்ல, ஒருவகையில் பரிசோதனை முயற்சியே. ஆனால் எதையும் தவறுதலாகப் புரிந்து கொள்ளக்கூடிய அபாயம் வலைப்பதிவுகளில் இருந்து வருவதால் இந்த விசயத்தில் இயன்றளவு அனைத்து தரப்பினரையும் திருப்திப் படுத்த ஏதாவது செய்ய முடியுமா என்று சிந்தித்து தற்போதைய தொழில் நுட்ப மாற்றத்தை நேற்று செய்துள்ளோம். இதற்காக கடந்த சில நாட்களாக உழைத்த எங்கள் தொழில் நுட்பக் குழுவைச் சேர்ந்தவர் பெரிதும் பாராட்டப் பட வேண்டியவர். விரைவில் மேலும் பல தொழில் நுட்ப முன்னேற்றங்களையும் செய்ய இருக்கிறோம் என்று உறுதியளிக்கிறோம்.

அடுத்தபடியாக டி.எம்.ஐ. உலகெங்கிலும் உள்ள தமிழர்கள், குறிப்பாக நம் வருங்கால சந்ததியர், பயன்படுத்துமாறு வேறு பல நல்ல திட்டங்களையும் செய்ய இருக்கிறது. அவற்றைப் பற்றிய விரிவான விளக்கங்கள் அவை ஆரம்பிக்கும் வேளையில் வெளியிடப்படும் என்றாலும் சுருக்கமாக சிலவற்றை அறிவிக்கிறோம். எங்களுக்குத் தெரியாத பல தொடர்புடைய தகவல்களை பதிவர்கள் அறிந்திருக்கக் கூடும். அவற்றை இங்கு பின்னூட்டமாகவோ, தனி மின்னஞ்சல் வாயிலோகவோ எங்களுக்கு தெரிவிக்கலாம் இங்கு அறிவிப்பதன் நோக்கம். மேலும் ஒரு சிலர் அவற்றில் முன் அனுபவம் உள்ளவர்களாகவும், வேறு சிலர் தன்னார்வம் மிக்கவர்களாகவும் இருக்கக் கூடும். இதன் அடிப்படையில் எங்களுடன் சேர்ந்து பணிபுரிய விரும்புவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். இவை எந்த இலாப நோக்கமுமின்றி முழுவதும் வெளிப்படையாக தமிழ்ச் சமூக நோக்கில் செய்யப் பட வேண்டியவை. திற மூல மென்பொருள் தயாரிப்புகள் போலவே இவை சமூதாயப் பங்களிப்பை ஊக்குவிப்பவையாக இருக்கும்.

தமிழ் மொழியை இரண்டாம் மொழியாகக் கற்றுக் கொடுக்கத் தரமான பாட நூல்கள் மற்றும் கருவிகள். தற்போதுள்ள நல்ல நூல்கள் அனைத்துமே தமிழை முதல் மொழியாகக் (அல்லது தாய்மொழியாகக்) கொண்டவர்கள் பயில்வதற்கு வசதியாக இருக்கின்றன. புலம் பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகள் தங்கள் நாட்டில் உள்ள சூழலுக்கேற்றவாறு எடுத்துக்காட்டுகளைக் கொண்ட அந்நாட்டில் பேசும் இயல்பு மொழி (அல்லது ஆங்கிலம்) வாயிலாக கற்பிக்கும் நூல்கள் தரமாகக் கிடைப்பதில்லை.

இணையத்தில் (குறிப்பாக வலைப் பதிவுகளில்) பயன்படுத்தப் படும் தமிழ் சொற்களை சேமிக்கவும், எளிதில் தேடவும் இணையக் களஞ்சியம்.

தமிழறிஞர் பெரியசாமி தூரன் பல பத்து வருடங்களுக்கு முன்பு தொகுத்தளித்த அருமையான கலைக்களஞ்சியம் மற்றும் குழந்தைகளுக்கான களஞ்சியம் போன்றவற்றை கணினிகளுக்குட் கொண்டு வந்து இணையத்தில் மூலம் தமிழர் அனைவரும் பயனடையச் செய்வது.

சிறந்த வலைப் பதிவுகளுக்கான விருதுகள்.

தமிழில் புதியவர்கள் வலைப்பதிவு எழுதுவதை ஊக்குவிக்கும் வண்ணம் நடத்தப்படும் தமிழ்ப்பதிவர் பயிற்சிப்பட்டறை/முகாம்/கூட்டங்களுக்கு ஆதரவு அளித்தல். ஆண்டுக்கு ஓரிருமுறை ஏற்கனவே வலைப்பதிவு செய்பவர்களும், புதியவர்களும் கணிசமான அளவு கலந்து கொள்ளும் இக்கூட்டங்களுக்குப் பயனுள்ள சில பொருள்களை வழங்குதல்.

சில முக்கியமான பொருள்களில் தரவுகளுடன் எழுதப்படும் தரமான எழுத்துக்களை ஆசிரியர்களின் ஒப்புதலுடன் தொகுத்து புத்தகமாக வெளியிடுதலை ஊக்குவித்தல்.

மேற்கூறிய திட்டங்களுக்கு உங்கள் அனைவரின் ஊக்கமும், ஒத்துழைப்பும் தேவை என்று கூறி டி.எம்.ஐ. இந்த கருத்துப் பரிமாற்றத்தைத் தற்போதைக்கு நிறைவு செய்கிறது. அனைவருக்கும் நன்றி!

தமிழ்மணம் விவாதக்களம்

April 22, 2007 · Posted in சிறப்பிடுகைகள் · Comment 

தோற்றம்

“மனித வர்க்கத்தின் அத்தனை வளர்ச்சிக்கும் ஆதாரம், சுழற்சி. பூமியின் சுழற்சியில் உள்ளது நம் உயிராதாரம். சுழலும் சக்கரங்கள் மனிதனின் மன வேகத்தை இயந்திரத்தில் ஏற்றி இயக்கிய முயற்சி. மனித வரலாற்றில் அறிவியல், பொருளாதாரம், அரசியல், சமூகம் ஆகியவற்றில் நிகழும் அத்தனை மாற்றங்களும் இச்சுழற்சியின் வேகத்தினைப் பொருத்தே அமைகின்றன.

மனிதகுலத்தின் எண்ணச்சுழற்சி, அது வாழும் சமுதாயத்தை அப்படியே பெயர்த்தெடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்திவிடும் பேராற்றல் கொண்டது. சிந்தனையில், செயல்களில், விருப்பங்களில், ஏன் வாழும் முறைகளிற்கூட அருகருகே வசிக்கும் இரு மனிதர்களிடையே எண்ணற்ற வேறுபாடுகள். இத்தகைய வேறுபாடுகளை மாற்ற முயலாமல், புரிந்துகொள்ள முயலும் ஒரு சமுகமே உயர்வு நோக்கிப் பயணிக்கும். புரிந்துகொள்ள முயலும் ஒரு சமூகத்தில் எல்லாவித மதிப்பீடுகளும் நம்பிக்கைகளும் விமர்சிக்கப்பட்டு, மறு ஆய்விற்குட்படுத்தப்பட்டு சிதைந்து தேய்ந்து கால ஓட்டத்தில் மீண்டுமொரு புதிய உருவாக்கம் கொள்ளுமே தவிர, தேங்குநீர்க்குட்டையாய் நின்று தீங்கிழைப்பதில்லை. “இதுதான், இதற்குளேதான் எல்லாம், இதுவே கடைசி” என அனைத்தையும் கட்டத்திற்குள் அடக்கும் ஆதிக்க முகம் நோக்கி நகர்வதல்ல வளர்ச்சி.

இத்துணை காலமாக‌ இருந்துவரும் அனைத்து ஆதிக்கத்தையும் விவாதத்திற்குள்ளாக்குவதிலேதான் உள்ளது உண்மையான வளர்ச்சி. எவ்வித அபிமானமும் எதன் மீதுமில்லாமல் சமுதாய நலனை மட்டுமே கருத்திற் கொண்ட விவாதங்கள், திரித்தல்கள், சங்கடங்கள் இல்லா ஒரு பெரும் விவாதமேடையாக வலைப்பதிவுகள் இருக்கவேண்டும். ஆக்கபூர்வமான விவாதங்களை ஊக்குவித்து பயனற்ற வாதங்களை ஒதுக்கி விடுவது சமூகத்தின் ஆற்றல்களைச் சரிவரப் பயன்படுத்துவதற்கு அவசியமானது. அதற்கான ஒரு முன்னோட்ட முயற்சியே தமிழ்மணம் விவாதக்களம்.

முதல் விவாதக்களம் தமிழ்மணம் நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பெற்ற நான்கு வலைப்பதிவர்களால் நடத்தப்பெறும். பதிவுலகிற் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகத் தனது எண்ணங்களை எழுதும் பதிவர் மா.சிவக்குமார் அவர்கள் இவ்விவாதக்களங்களின் பொறுப்பாளராகச் செயற்படுவார்.

* இப்பதிவர்கள் முக்கியமெனக் கருதும் கருத்துக்கள், நம்பிக்கைகள், படைப்பிலக்கியங்கள், சமூகமதிப்பீடுகள், செய்திகள் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் தமிழ்மணம் விவாதக்க‌ளத்தில் பதிவிடுவார்.

* பதிவு வெளியிடப்பட்ட பின்னர் ஐந்து பதிவர்களும், பதிவின் மீதான விவாதங்களைத் தொடர்ந்து கொண்டு செல்வர்.

* இந்த ஐந்து பதிவர்கள் மட்டுமல்லாது மற்ற நண்பர்களும் தங்களின் செறிவான, ஆரோக்கியமான வாதங்களை இங்கு வைக்கலாம். விவாதக்கள உறுப்பினர்கள், நெறியற்ற வார்த்தைகள் இருப்பின், அவற்றைத் தவிர்த்து வெளியிடுவர். ப‌திவ‌ர்க‌ளின் க‌ருத்துக்க‌ள் எவ்வ‌கையிலும் மாற்ற‌ப்ப‌டா.

* ஒவ்வொரு மாதமும் நான்கு பதிவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள் அடுத்த‌ மாதத்திற்கான நான்கு பதிவர்களைத் தேர்ந்தெடுப்பர்.

கருத்துக்கள் மட்டுமே மோதும் வெளியாகத் தமிழ்மணம் விவாதக்களம் இருக்கும்.

வரும் சனவரி,1 புத்தாண்டு தினத்திலிருந்து தமிழ்மணம் விவாதக்களம் திறக்கப்படவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

என்ற முன்னறிவிப்புடன் தமிழ்மண விவாதக்களம் ஆரம்பித்து வைக்கப்பட்டு தமிழ்மண விவாதக்களம் ஆங்காங்கே சில வாரங்கள் சில தொய்வுகள் இருந்த போதிலும் தொடர்ந்தும் முன்னோக்கி இயங்கி வருகிறது.

செயற்பாடு

தமிழ்மணம் வெளியில் பொதுவாகவே சில ஆண்டுகளாவது நீடித்திருக்கும் பதிவர்கள் பலரும் தம்முடைய விவாதிக்கும் திறன், விமர்சனங்களுக்கான பார்வை, அங்கத உணர்விலேற்றம், சமரசமில்லாத கேள்விகேட்கும் தன்மை ஆகியன தம்மில் பலருக்கு அதிகரித்து வருவதை பார்த்திருப்பார்கள். இதுவே தமிழின் வெற்றியும் ஒரு விதத்திலே அதைத் தாங்கி அர்ப்பணிப்புடன் இயங்கி வரும் தமிழ்மணத்தின் வெற்றியுமாகும் என்பதில் தமிழ்மணம் பெருமிதம் கொள்கிறது. அப்படியான பதிவர்களுக்குத் தம் வாழ்த்தினையும் அவ்வாறான எழுத்தார்வம்,முனைப்பு, விமரிசனப்பார்வை ஆகியன வளர மற்ற பதிவர்களுக்கும் தம் விழைவையும் ஒத்துழைப்பையும் நல்குகிறது.

இப்படியாக தமிழ்மணத்திற் பங்கேற்கும் அனைத்து பதிவர்களுக்கும் தம்மின் எழுத்தார்வம்,முனைப்பு, விமரிசனப்பார்வை மற்றும் விவாதிக்கும் திறன் ஆகியன விளைய தமிழ்மணம் விழைகின்றது என்பதைச் செயலிற் காட்டி வந்ததே தமிழ்மணம் விவாதக்களம். இவ்வாறே இது இனியும் தொடரும் என்பதையும் தமிழ்மணம் பதிவர்களிடம் சொல்வதில் பெருமிதம் கொள்கிறது. இதுவரை எவரும் விவாதிக்கத் தயங்கும் பல தலைப்புக்களில் விவாதங்கள் நடந்தன. அவற்றின் பின்னூட்டங்களும் காழ்ப்பிலாத, சக பதிவர்களின் மேலான தாக்குதலிலாத எவ்வித முரணான கருத்துக்களையும் பதிவாகும்வண்ணம் இவ்விவாத மன்றம் வெளியிட்டு வந்துள்ளது. கருத்துச்சுதந்திரத்திற்கு முதலிடம் கொடுக்கும் பொறுப்பு இருக்கும் அதே தமிழ்மணம் தம் பதிவர்களின் மீதான தாக்குதல்கள் விவாதக்களமுடே அணுகாவண்ணம் இயங்குவது தமக்கு பொறுப்புள்ளதாகவே கருதுகின்றது. தனியாள்மீதான தாக்குதலைத் தவிர்த்து விவாதத்தினூடாக இக்கருத்துச்சுதந்திரத்தினை வெளியிடும் தன்மையும் வலிமையும் தனக்கிருப்பதாகவே டி.எம்.ஐ திடமாக நம்புகின்றது; கருத்தினைக் கவனத்திலே கொள்ளும் பதிவர்களும் அறிவார்கள்.

நுட்பம்

விவாதக்களத்தின் நுட்பத்தினை மேம்படுத்தும் யோசனைகளைத் தமிழ்மணத்தின் பல பதிவர்கள் முன் வைத்ததை டி.எம்.ஐ அறியாமலில்லை. இவற்றின் மேலான கருத்துப்பரிமாற்றங்களும் டிஎம்ஐ இல் நடந்தன. ஆனால் அண்மையில், தமிழ்மணம் பயனர்கள் அதிகரிப்பும் வழங்கியின் வழங்குதிறன் & இடப்பெயர்வு (migration) குறித்ததான சிக்கல்களும் பேரளவிலான டி.எம்.ஐயின் தொழில்நுட்பக்குழுவின் நேரத்தினை எடுத்துக்கொள்கின்றன. மேலும் பின்னூட்டக்கருத்துக்களத்தினைத் தனியாள்மேலான தாக்குதலுக்கு அப்பாற்பட்டு வைக்கவேண்டி அது மட்டுறுத்தலுக்கு பின்னாகவே வெளியிட வேண்டிய அவசியத்தினாலும், வலைப்பதிவின் மட்டுறுத்தல் சேவையே தற்போதைய தேவையைப் பூர்த்திசெய்யும் என்பதாலும் இப்போதிருக்கும் அமைப்பிலேயே தொடர்ந்து இயங்கி வரும். எனினும், வருங்காலத்தில் தமிழ்மணம் விவாதக்களம் தனது இயக்கம்/நுட்பத்தினை தமிழ்மணத்தின் வருங்காலத்தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அவசியத்தினையொட்டி மாற்றிக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை.

இவ்வேளையிலே தமிழ்மணம் விவாதக்களத்தின் தோற்றத்தில் ஆதாரமாகவிருந்த கற்பகம் கல்யாண் அவர்கட்கும், தமிழ்மணம் விவாதக்களத்தின் முதல் நடத்துனராக பொறுப்பேற்று தொடர்ந்து நடத்தி வரும் மா. சிவக்குமார் அவர்கட்கும் டி.எம்.ஐ. தன் நன்றியினை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளது. இனியும் தொடர்ந்து மா.சிவக்குமார் அவர்களே நடத்துனராகவும், விவாதக்களத்தின் அமைப்பாளராகவும் செயல்படுவார். அவருக்கு தம்மாலான உதவிகளை பதிவர்கள் அளிக்குமாறு டி.எம்.ஐ வேண்டி நிற்கிறது.
முடிவாக, தமிழ்மணம் பதிவர்கள் விவாதங்களினால் தம்மை நிறுத்திக்கொள்ள, பார்வைகளைச் செம்மையுறச்செய்ய தமிழ்மண விவாதக்களம் இணையவெளியில் இன்னுமொரு தூணாய் இருக்குமெனக் கூறி அனைவரை பங்கு பெறவும், ஆர்வலர்களை விவாதச்செயற்பாடுகளிலே தம்மை இணைத்துக்கொள்ளவும் அன்புடன் டி.எம்.ஐ அழைக்கின்றது.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி.

நிர்வாகம்
தமிழ்மணம்

மக்கள் தொடர்புக்குழு: தமிழ்மணம் நிர்வாகம், அறிவிப்புகள் & நட்சத்திரம்

April 22, 2007 · Posted in சிறப்பிடுகைகள் · 7 Comments 

மக்கள்தொடர்புக்குழு மக்கள்தொடர்புக்குழுவின் கீழான செயற்பாடுகள்

1. டிஎம்ஐ, அதன் பக்கங்கள் தொடர்பான அறிவிப்புகளைச் செய்தல்
2. தமிழ்மணம் அறிவிப்புகள்: வலைப்பதிவுகள் (http://blog.thamizmaNam.com, http://thamizmaNam.blogspot.com)
3. தமிழ்மணம் முகப்பிலே சேர்த்துக்கொள்ளப்படும் அறிவிப்புகள், மாற்றங்கள் தொடர்பான செயற்பாடுகள்
4. தமிழ்மணம் திரட்டி செயற்பாடுகள்: நிர்வாகம் மின்னஞ்சல் (admin@thamizmaNam.com), வலைப்பதிவு நிர்வாகம் (postadmin@thamizmaNam.com), முறையீடுகள் (complaints@thamizmanam.com)
5. தமிழ்மணம் நட்சத்திரம் தொடர்பான நிர்வாகம்: staradmin@thamizmaNam.com
6. தமிழ்மணம்மீதான பதிவர்களின் கருத்துகளையும் பதிவுகளையும் -வேண்டின், பிற டிஎம்ஐ குழுக்களோடும் சேர்ந்து – ஆராய்ந்து முடிவு செய்தல்

தமிழ்மணம் திரட்டி செயற்பாடுகள்

தமிழ்மணம் திரட்டியிலே பதிவுகளைச் சேர்த்தலும் மாறுதல்களைச் செய்தலும் விலக்குதலும் உள்ளிட்ட நிர்வாகச் செயற்பாடுகள் டிஎம்ஐ நிறுவனத்தின் மக்கள்தொடர்புக்குழுவின் கீழே அமைகின்றன.

TMI, தமிழ்மணத்தைப் பெற்றுக்கொண்டவுடன் பதிவுகளைச் சேர்த்ததுக்கொள்ளுதல், தொடர்ந்து வைத்திருத்தல்/நீக்குதல் போன்றவற்றை எப்படி முறைப்படுத்துவது என்பது விவாதிக்கப்பட்டது. பதிவுகளைச் சேர்த்துக்கொள்ளும் முறை முன்பிருந்தபடியே தொடர்வதென்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி தமிழ்மணம் திரட்டியிலே சேர்வதற்கு ஒரு பதிவு/பதிவாளர் தமிழ்மணம் –> பதிவுகள் –> பட்டியலில் சேர்க்க ஊடாகத் தரும் அவரது பதிவு விபரங்கள், தமிழ்மணம் திரட்டி நிர்வாகிகளால், இருநாட்களுள் கவனிக்கப்படுகின்றன. சேர்க்க விண்ணப்பிக்கப்பட்டிருக்கும் பதிவு தமிழ்மணத்தின் அடிப்படைத்தகுதிகளைக் கொண்டிருக்கின்றவா எனக் கவனிக்கப்படுகின்றது. குறைந்தது, வெவ்வேறு நாட்களிலே இடப்பட்ட மூன்று தமிழ்ப்பதிவுகள், பதிவுகளின் உள்ளடக்கம் என்பன இவற்றுள் அடங்கும். அண்மைக்காலத்திலே இவ்விதிகளோடு பதிவுகளை இணைத்துக்கொள்ளும் சிலர், பின்னால் அப்பதிவுகளின் உள்ளடக்கங்களை நீக்கிவிட்டு, தமிழ்மணம் விதிகளுக்குத் தகாத பதிவுகளைச் சேர்ப்பதும் ஆங்காங்கே காணப்படுவதால், சில பதிவுகள் உடனடியாக அனுமதிக்கப்படாது, காலம் தாழ்த்தி அப்பதிவுகளின் தொடர்ச்சியான இடுகைகளைக் கண்டபின்னரே சேர்க்கப்படுகின்றன. பின்னூட்டங்கள் தமிழ்மணத்தின் முன்றலிலே தோன்றுவதும் இதேபோல அங்கீகரிக்கப்படுகின்றது.

தொடர்ந்து வைத்திருத்தல்/நீக்குதல் என்பதற்குச் சில வழிமுறைகள் விவாதிக்கப்பட்டன. தற்போதைக்கு, கீழ்காணும் முறை பின்பற்றப்படுகிறது. இது தவிர வேறு இரண்டு முறைகளும் விவாதிக்கப்பட்டன.

தமிழ்மணத்தில் இன்றைய நிலவரப்படி 1830 பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளன. சராசரியாக நாளொன்றுக்கு 120 இடுகைகளும், 200 பின்னூட்டங்களும் திரட்டப்படுகின்றன. இவையனைத்தையும் வாசித்து நெறிப்படுத்துவதென்பது இயலாதவொன்று. அப்படியான நோக்கமும் எங்களுக்கு இல்லை. தற்போது பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படவேண்டுமென்ற பழைய விதி களையப்பட்டிருக்கிறது என்பதும் பதிவர்கள் அறிந்ததே. இருப்பினும், பின்னூட்டங்களும் பதிவுகளும் தரக்குறைவாக இருந்தாலோ, மிதமிஞ்சிய தனியாள்மீதான தாக்குதலாக காணப்படும்போதோ பொது வாசகர்களிடமிருந்தோ அல்லது தாக்குதலுக்கு உள்ளாகுபவர்களிடமிருந்தோ எங்களுக்கு முறையீடு வரும்போது, மக்கள் தொடர்புக் குழுவும் குறிப்பிட்ட இடுகைகள்/பின்னூட்டங்களை வாசித்து முறையீட்டில் தர்க்க நியாயம் உள்ளதெனக் கருதினால் அத்தகைய இடுகைகளோ, பதிவுகளோ திரட்டப்படுவதிலிருந்து அகற்றப்படுகின்றன. இப்படியாக அகற்றப்படும் இடுகை, பதிவு விபரங்கள் பதிவருக்கு அனுப்பப்படுகின்றன. பதிவுகள் முழுதாக விலக்கப்படுவதற்குமுன், அவை தொடர்பான பிரச்சினைகள் மக்கள்தொடர்புக்குழுவிலே விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இம்முடிவுகள் இனிவரும் பதிவர்களின் செயற்பாடுகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்குமெனத் தோன்றினால் அவ்விவரம் வலைப்பதிவிலே அறிவிக்கப்படுகிறது.

இது தவிர (தற்போது பின்பற்றப்படாத) மற்ற இரண்டு முறைகள்:

1. முற்று முழுதாக மனிதக் குறுக்கீடற்றத் தானியங்கித் திரட்டியாக்கி சமர்ப்பிக்கப்படும் அனைத்து பதிவுகளையும் சேர்த்துக்கொண்டு, எல்லா இடுகைகளையும், பின்னூட்டங்களையும் திரட்டுவது. அவ்வாறு செய்ய முற்படும்போது வரும் முறையீடுகளின் அடிப்படையில் பிரச்சினைக்குறிய பதிவுகளை முதற்பக்கத்தில் காட்டாமல் வேறுபக்கத்தில் திரட்டி, அதன் நுழைவாயிலில் கீழுள்ள கூகுள் எச்சரிக்கையைப் போல எச்சரிக்கை வைக்கலாம். “Some readers of this blog have contacted Google because they believe this blog’s content is hateful. In general, Google does not review nor do we endorse the content of this or any blog.” ஆனால், தமிழ்மணம் போன்ற சில ஆயிரம் பதிவுகளைத் திரட்டும் தளத்துக்குச் சாத்தியமா என்பது தெரியவில்லை. முறையீடுகளின் அடிப்படையில் மட்டும் பதிவுகளைப் பிரிப்பதில் உள்ள அறவியல் சிக்கல்களால் இம்முறையை நடைமுறைப்படுத்த இயலுமா எனத் தெரியவில்லை.

2. எமக்கு வரும் முறையீடுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பதிவுகளை நாங்களே வாசித்து முடிவெடுக்காமல் அம்முறையீடுகளை மூன்று தனிப்பட்ட பதிவர்களுக்கு அனுப்பி, அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் முடிவு செய்வது. இப்படி முறையீடுகளை/பதிவுகளை மீள்பார்வை செய்யவென நீண்டகாலமாக தொடர்ந்து இயங்கும் பல்வேறு பின்னணி/ஆர்வங்கள் கொண்ட பதிவர்கள் 20-30 பேர்களை அனாமதேய மீள்பார்வையாளர்களாக நியமிக்கலாம்.

இம்மூன்று முறைகளிலும் உள்ள நன்மை, தீமைகளைக் குறித்து பதிவர்களின் கருத்துக்களை அறிய விழைகிறோம். தமிழ்மணம் வலைப்பதிவுகளிலே பதிவர்கள் தரும் பின்னூட்டங்கள், தமிழ்மணத்திலே அவர்கள் பதிவு தொடர்பான மாறுதல்கள், ஓரளவுக்கு முறையீடுகள் postadmin@thamizmaNam.com ஊடாகக் கையாளப்படுகின்றன.

தமிழ்மணம் திரட்டியின் பக்கத்திலேயான பதிவர்களின் முறையீடுகள் பதிவுகளுக்குப் பக்கத்திலேயான ஆச்சரியக்குறி கொண்ட முக்கோணத்தினை அழுத்துவதன்மூலம் complaints@thamizmaNam.com இற்கு அனுப்பப்பட்டுக் கையாளப்படுகின்றன.

தமிழ்மணத்தின் மீதான பதிவர்களின் கருத்துகள், பதிவுகள் என்பன இயன்றவரை தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. நாளாந்தம் நிர்வாகத்துக்கு சராசரி ஏழு அஞ்சல்கள் வருகின்றன. ஒவ்வொன்றுக்குமான தீர்வுக்கான காலம், பதிவரின் பிரச்சனையின் தன்மையைப் பொறுத்தும் அத்தீர்வினைத் தர ஈடுபடவேண்டிய மற்றைய டிஎம்ஐ குழுக்களைப் பொறுத்தும் மாறுபடும். இயன்றவரையிலே, பதில் தரவேண்டிய ஒவ்வொரு அஞ்சலுக்கும் பதில் தரப்படும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

திரட்டி தொடர்பான நிர்வாகத்துக்கான மொத்த மனித நேரம் சராசரியாக நாளாந்தம் இரண்டிலிருந்து மூன்று மணிநேரங்களேனும் தேவைப்படுகின்றது. சில சமயங்களிலே இந்நேரம் நிலைமையைப் பொறுத்து ஆறேழு மணிநேரங்களாகவும் ஆவதுண்டு.

தமிழ்மணம் நட்சத்திர நிர்வாகம்

எழுத்தாற்றல் மிக்க ஒரு திறமையான வலைப்பதிவரின் மேல் வாசகர்களின் கவனத்தைத் திருப்பி அந்த வலைப்பதிவருக்கு ஊக்கம் அளிக்கவே ஒவ்வொரு வாரமும் நட்சத்திரப் பதிவராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தனக்குக் கிடைத்த அந்த ஒரு வாரத்தை நட்சத்திரப்பதிவர் செவ்வனே பயன்படுத்தி உலகளாவிய தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு மத்தியில் தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ளலாம்.

நட்சத்திரங்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

தமிழ்மணம்_நட்சத்திர நிர்வாகியாக இருப்பவர், தொடர்ந்து தமிழ்மணத்தில் தோன்றும் பதிவுகளையும், புதிதாக இணையும் பதிவர்களையும் கண்காணித்து, யார் நன்றாக, ஆக்கபூர்வமாக எழுதி வருகிறார்கள் என்பதனை அடையாளம் கொள்கிறார். நட்சத்திரப்பதிவர் குறைந்தது மூன்று மாதங்களாவது தரமான பதிவுகள் எழுதியிருக்க வேண்டும். தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் போன்ற சிறப்பு தினங்களில் மிகவும் அறியப்பட்ட பதிவர்கள் நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒரு மாதத்தில் குறைந்தது ஒரு பெண் பதிவராவது நட்சத்திரமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஏற்கனவே நட்சத்திரமாக இருந்தவர், மீண்டும் நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்படலாம், ஆனால் குறைந்தது ஆறு மாத இடைவெளி இருத்தல் அவசியம். நட்சத்திரப் பதிவாளராக இருக்கவேண்டிப் பதிவர்களுக்கு அழைப்பு மின் அஞ்சல் மூலம் ஒரு மாதத்திற்கு முன்பாக அனுப்பப்படுகிறது. பதிவர் அனுப்பும் புகைப்படமும் குறிப்பும் தமிழ்மணம் நட்சத்திர மேலாண்மை பக்கத்தில் உள்ளிடப்படுகிறது. திங்கள் தொடங்கும் நள்ளிரவு அந்த வார நட்சத்திரத்தின் புகைப்படம், குறிப்பு, அன்றைய நட்சத்திரப்பதிவு ஆகியவை தமிழ்மணம் நட்சத்திரப் பகுதியில் தோன்றும்.

நட்சத்திர நிர்வாகத்தில் என்னென்ன சிக்கல்கள்?

1. ஒரு தேதியில் நட்சத்திரமாக இருக்க ஒத்துக்கொண்ட ஒரு பதிவர், பின்னர் சில தவிர்க்க முடியாத காரணங்களால் பின் வாங்கிவிடும் வாய்ப்பு உள்ளது.

2. சில பதிவர்களை அனுகும்போது, தனக்கு ஒரு குறிப்பிட்ட மாதத்தில் நட்சத்திர வாய்ப்பினைத் தரும்படி அவர்கள் கேட்டுக்கொள்வார்கள். அதனை நினைவில் கொண்டு, அந்த மாதத்தில் மீண்டும் அவர்களை அணுகவேண்டும்.

நட்சத்திரப்பதிவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையினை இன்னும் மேம்படுத்தி ஒழுக்காற்ற தமிழ்மணத்திலே இணைந்திருக்கும் பதிவர்களிடமிருந்து நடைமுறைப்படுத்தக்கூடிய வழிமுறைகளை முழுமையான திட்டங்களாக எதிர்பார்க்கின்றோம். staradmin@thamizmaNam.com முகவரிக்கு அனுப்பி வைத்துதவலாம்.

மேலும் இச்சந்தர்ப்பத்தினை, தமிழ்மணம் நட்சத்திரம் பகுதியினைக் கடந்த ஆண்டுவரை தொடர்ந்து தொய்யாமல் நடத்தி வழியமைத்த மதி கந்தசாமிக்கும் அழைப்பினை ஏற்றுப் பங்காற்றிய நட்சத்திரப்பதிவர்களுக்கும் தமிழ்மணம் தன் நன்றியினைத் தெரிவிக்கின்றது.

மக்கள்தொடர்புக்குழு
டிஎம்ஐ

வாரப்பதிவுகள் தொடுக்கும் பூங்கா வலைஞ்சிகை

April 21, 2007 · Posted in சிறப்பிடுகைகள் · 6 Comments 

”தமிழ்மணம் திரட்டும் வலைப்பதிவுகளிலிருந்து, வாரந்தோறும் சிறந்தவையென அடையாளம் காணப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு, “பூங்கா எனும் வாராந்திர வலையிதழாக வெளிவரத் தமிழ்மணம் விரும்புகிறது” என்ற அறிவிப்போடு பூங்காவின் வெளியீடு, உள்ளடக்கம், அதன் நோக்கம் குறித்து விரிவான பதிவு செப்டம்பர் 7, 2006 அன்று வெளியானது. “தன்னிற் திரட்டப்படும் வலைப்பதிவுகளில் இருந்து புதிய பார்வைகளையும் பரந்துபட்ட சிந்தனைகளையும் உயிர்ப்பான மொழியிலே வெளிப்படுத்தும் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து வாரந்தோறும் ‘பூங்கா’ வலையிதழூடாக தொகுப்பது பயனானதெனத் தமிழ்மணம் நோக்குகிறது” என்பது பூங்காவின் செயல்திட்டமென்றால், அதன் நோக்கமாகக் கொள்ளப்பட்டது, “தமிழ்ப்பதிவர்களின் பல்வேறு துறைநிபுணத்துவத்தை அடையாளங் கண்டு பதிவு செய்யத்தூண்டவும் மொழிவெளிப்பாட்டின் பல்வேறு கலைப்பரிமாணங்களைப் பரிசோதனை செய்ய ஊக்குவிக்கவும் சமூக அக்கறையுள்ளவர்களை ஒன்றிணைக்கவும் வேண்டிய தொடர்ச்சியான தேவையை (பூங்கா மூலம்) நிறைவேற்றலாம்” என்பதுதான்.

டிஎம்ஐ நிறுவனத்துக்காக, அதன் இதழ் குழுவின்கீழே ஆசிரியர்குழுமத்தினாலே தொகுக்கப்படும் பூங்கா தானியங்கித்திரட்டியான தமிழ்மணத்தினைத் தனக்கான படைப்புகளை அனுமதி பெற்றுத் தேர்ந்தெடுக்க உதவும் ஒரு தொழில்நுட்பவசதியாக மட்டுமே கொள்கின்றது. அதற்குமேலே, பூங்காவின் தேர்வுகள் எதுவுமே தானியங்கியான தமிழ்மணத்தின் நோக்குகளைத் தெறிப்பனவல்ல.

பூங்காவில் என்ன இருக்கிறது?

பூங்காவுக்காக தேர்ந்தெடுக்கப்படுகிற பதிவுகளில் அரசியற்சார்பு உள்ளதா என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். அரசியல் என்பதை கட்சி அரசியலாக மட்டும் புரிந்துகொள்ளாமல் மக்களின் வாழ்க்கை, அவர்கள் வாழ்கிற சமூகம், கல்வி, பிழைப்பாதாரங்கள் எல்லாமே நடக்கிற அரசியலின் பல்வேறு கூறுகளே என்று பார்க்குமிடத்து அவ்வரசியலையே பூங்கா முன்னெடுப்பதை உணரலாம். அதே போல பூங்கா இந்திய தேசியம் முதற்கொண்டு எந்த தேசியத்துக்கும் எதிரானதல்ல. மாறாக நேற்று இருந்த, இன்று இருக்கிற, நாளை வரப்போகிற எல்லா தேசியங்களுக்கும் மேலாக மனிதன் முக்கியமானவன் என்ற கண்ணோட்டம் கொண்டது என்பதையும் புரிந்துகொள்ளலாம். எப்படைப்பினையும் அதன் கருத்துமூலம் பார்க்காமல், சொல்லும் தரத்தின் அடிப்படையிலேயும் அனுமதி தரப்பட்டதா, பதிவுகள் தவிர்த்து வேறு இதழ்களிலே வெளியாகாத படைப்பா என்பவற்றினை மட்டுமே கண்டு வெளியிடுகின்றோம். இவற்றைத் தவிர அறிவியல், மற்றும் துறை சார்ந்த நல்ல பதிவுகளை வெளியிட பூங்கா பெரிதும் விரும்புகிறது. வெளியிடுகிறது. ஆன்மீகம் என்பதை பூங்கா தனி நபர் சார்ந்த ஒன்றாகப் பார்ப்பதால் பூங்கா நிறுவனப்படுத்தப்பட்ட மதம், தொடர்பான அவற்றிடையேயான தொடரும் வாதங்கள் தொடர்பான பதிவுகளை வெளியிடுவதில்லை; ஆனால் நாட்டார் வழக்குகள், கொண்டாட்டங்கள், விழாக்கள் என்ற அளவில் அவை குறித்த பதிவுகளை வெளியிடுகிறது. மேலும், இவ்வாண்டிலிருந்து பதிவுகள் சாராத வெளியார் படைப்புகளையும் நேர்காணல்களையும் தொடர்ச்சியாக பூங்கா வெளியிடத் தொடங்கியிருக்கின்றது. இச்செயற்பாடுகள் மேலும் விரிக்கப்படுகின்றன.

பூங்காவிலே பல்வேறு துறைகளும் படைப்பாளிகளும் தோன்றவேண்டுமென்பதற்காகவே, தரமானவையாகக் காணப்படுமிடத்து, தமிழ்மணத்தின் முன்னையவார நட்சத்திரப்பதிவரின் தேர்வுகள் இரண்டு, அவ்வார நட்சத்திரப்பதிவுகளிலிருந்து தேர்வுகள் இரண்டு, தமிழ்மணத்திலே இவ்வாரம் புதிதாகச் சேர்ந்துகொண்ட பதிவுகளிலே, சிறப்பானதென ஆசிரியர்குழுவினாலே தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளிலேயிருந்து இரண்டு என பரந்துபட்ட தேர்வுகள் உள்வாங்கிக்கொள்ளப்படுகின்றன.

பூங்காவிலே வெளியாகும் படைப்புகளுக்கும் கருத்துகளுக்கும் அவற்றின் ஆசிரியர்களே உரிமையுடையவர்களாவார்கள்.

பூங்கா – எவ்வாறு உருவாகிறது?

இதுவரை முப்பத்தொரு பூங்கா இதழ்கள் வெளியாகியிருக்கின்றன. பூங்காவுக்கென ஒவ்வொருவாரமும் தமிழ் வலைப்பதிவுகளில் அனுமதி வழங்கப்பட்டவைகளில் இருந்து குறிப்பிடத்தக்கவை என்று கருதப்படுகிற பதிவுகள், மாற்றுக்கருத்துக்களைச் சொல்லுகிற முயற்சிகள், சமூக அக்கறை உள்ள பதிவுகள், அறிவியல், மொழி இவற்றைப் பற்றிய பதிவுகள், கண்டறியப்பட்டு வரும்வார இதழுக்காகத் தொகுக்கப்படுகின்றன. இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டவை போலவே விடுபட்டு போனவை நல்ல பதிவுகளும் உண்டு. தேர்வாளர்களின் எண்ணிக்கை, மனித முயற்சியில் இயல்பாகவே ஏற்படும் தவறுகள், அதிகபட்ச எண்ணிக்கையில் உள்ள பதிவுகள் போன்ற காரணங்களால் சில நல்ல பதிவுகள் தவறிப்போகும் சாத்தியங்கள் இருந்த போதுங்கூட இம்முயற்சி பல நல்ல பதிவுகளை வாரந்தோறும் வாசிக்க விரும்பும் ஒரு வாசகருக்கு பயனுடையதாகவே இருந்து வருகிறது என்று கருதுகிறோம். ஒரு நாளில் சராசரியாக 130 பதிவுகளைத் தமிழ்மணம் திரட்டுகிறது. அதில் நல்ல பதிவுகளைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒரு மிகவும் சிக்கலான, நேரத்தைக் கோருகிற வேலை. இதில் பதிவுகள் பல தேசங்கள், கண்டங்கள் என்று நாளின் எல்லா நேரங்களிலும் வெளியாவது வேறு தேர்ந்தெடுப்பதில் மேலதிகமான வேலைப் பளுவையும், தவறவிடுவதற்கான வாய்ப்பையும் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் கடந்தே பதிவுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படுகிற பதிவுகள், வெள்ளியன்று வலையேற்றப்பட்டவுடன், தன்னார்வலர்களாலே பெரும்பாலும் பிழை திருத்தப்பட்டு, அனுமதி வழங்கப்ப்ட்டிருக்கிறதா, வேறு இதழ்களில் வெளியாகி இருக்கிறதா என்பன சரிபார்க்கப்பட்டு, சுட்டிகள் கொடுக்கப்பட்டு, படங்கள் சரிபார்க்கப்பட்டு, வகை பிரிக்கப்பட்டு, அட்டை, தொகுப்பாளரின் மேசையிலிருந்து ஆகியன தயாரிக்கப்பட்டு, பதிப்புக்கு தயாராகின்றன. இவற்றுடன், அனுமதி பெறப்பட்ட நட்சத்திரப்பதிவுகள், நட்சத்திரத்தின் தேர்வுகள், புதியபதிவுகள், பதிவுகளிலே வெளியாகாத சிறப்புப்படைப்புகள், நேர்காணல்கள் என்பன அவற்றுக்கான சிறப்புத்தேவைகளோடு தயாரிக்கப்பட்டுச் சேர்க்கப்படுகின்றன. பின்னர், இவை வருகின்ற திங்களன்று பூங்காவாக மலருகின்றன.

பூங்காவுக்கான நல்ல படைப்புகளை ஆசிரியர்குழுவுக்குப் பரிந்துரைக்கும்படி முதலாவது பூங்கா இதழிலேயே பதிவர்களையும் கேட்டிருந்தோம். ஆனால், இதுவரை இதிலே நாம் பெருமளவிலே வெற்றிபெறவில்லையெனிலுங்கூட, நடசத்திரப்பதிவுகள், புதியபதிவுகள் போன்றவை ஓரளவுக்கு இதனைத் தெறிக்கச் செய்கின்றன. முன்னைய நட்சத்திரப்பதிவாளரின் சேவை முடியும் நேரத்திலே அவருக்கு அஞ்சல் அனுப்பி அவரது தேர்வுகளை அடுத்த வாரத்துக்காகக் கண்காணிக்கக் கேட்டுக்கொண்டு, அவர் அவ்வார இறுதியிலே தருமிடத்துச் சேர்த்துக்கொள்கிறோம். சீர்திருத்தப்படவேண்டிய படைப்புகள், அவற்றின் ஆசிரியர்களின் அனுமதியோடு சீர்திருத்தப்பட்டு இணைக்கப்படுகின்றன.

பூங்காவின் படைப்புகளுக்கான எதிர்வினை பூங்கா தொடர்பான அஞ்சல்கள், ezine@thamizmaNam.com (இதழ், படைப்புகள் தொடர்பான கருத்துகளைத் தெரிவிக்க), select@thamizmanam.com (படைப்புகளைப் பரிந்துரைக்க) ஆகியவற்றூடாகத் தரப்படலாம். அல்லது, பூங்கா தளத்தின் பின்னூட்ட வசதியூடாக, பூங்கா இதழுக்கான பதிவிலே குறித்த இதழின் கீழே பின்னூட்டப்படலாம் (http://blog.poongaa.com). இவை தவிர, தமிழ்மணத்தின் வேறெந்த முகவரிகளுக்கிடும் பதிவுகள் எம்மை வந்தடையக் காலம் செல்லும். அத்தோடு, கிடைக்கப்பெற்ற அஞ்சல்களுக்கும் பின்னூட்டங்களுக்குங்கூட ஒவ்வொரு பதிவர்களுக்கும் உடனடியாகப் பதில் தரமுடியாத நிலை எமக்குள்ளதைப் பெரும்பான்மையான பதிவர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்கள். இதழ் தொடர்பாக, எமக்குக் கிட்டிய பின்னூட்டங்கள், அஞ்சல்கள் தொடரும் வாரத்தின் பூங்காவிலே பதிவர் எதிர்வினையின்கீழே பதிப்புறுவதோடு, பதில் தரவும் படுகின்றது. எமது மனிதவலு, நேரம் காரணமாக, இவ்வாறான எதிர்வினைகளுக்கு அப்பாலான எவ்விதமான கருத்துகளுக்கும் நாம் பதில் அளிக்கமுடியாத நிலையிலேயிருக்கின்றோம்.

பூங்கா என்ன செய்ய விரும்புகின்றது?

பூங்கா பதிவர்களைக் கடந்து சமீபத்தில் வாசகர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பக்கோரியது. வாசகர்கள் தங்களது உன்னதப் படைப்புகளைப் பூங்காவுக்கு அனுப்பலாம். அதே போல தங்களைக் கவர்ந்த நல்ல பதிவுகளின் சுட்டிகளை வாசகர்கள் பூங்காவுக்கு அனுப்பலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, பூங்காவுக்கு தங்கள் விருப்பங்கள், கருத்துக்கள், பாராட்டுகளை (தங்கள் பதிவுகளில் மட்டும் எழுதாமல்) எழுதலாம். அவ்வவ்வாரத்து பூங்காவின் தேவைக்கேற்ப, தேர்வு செய்வதிலே ஆசிரியர்குழுவின் முடிவே இறுதியாது.
பூங்காவின் தேர்வுகளையும் பார்வையினையும் விரித்துத்தருவதற்காக, இன்னமும் சில எண்ணங்கள் தொடர்ச்சியாக ஆசிரியர்குழுவிலே கருத்தாடப்பட்டிருக்கின்றன. அவற்றிலே சிலவற்றினை இயன்றவரை விரைவிலே நடைமுறைப்படுத்துவோம்.

1. வாரத்துக்கொரு விருந்துப்பதிவாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் பார்வையிலே கடந்த வாரத்துப்படைப்புகளை அலசி/தொகுத்து ஒரு பத்தி.

2. பதிவர்களிலிருந்து பூங்காவுக்கான தேர்வுக்குழுவொன்றை அமைத்து வாராவாரம் பதிவுகளைப் பரிந்துரைக்கக்கேட்டல். இக்குழுவிலே உத்தேசமாக, மாறுபட்ட பார்வைகளுள்ள இருபது பதிவர்களை உள்ளடக்க விரும்புகின்றோம்.

3. ஏற்கனவே பதிவர்கள் பூங்காவுக்கான செய்தியாளர்களாக நட்புணர்விலே உதவி செய்திருக்கின்றார்கள். இதனை இன்னமும் பரந்துபட்ட அளவிலே செய்யவிரும்புகின்றோம்.

பூங்காவிலே வெளியான படைப்புகளை அவற்றின் ஆசிரியர்களின் உரிமை பெற்று, ஆண்டிறுதிகளிலே தொகுத்து ஆண்டுமலராக, பிரிவுகளுக்கேற்ப வெளியிடும் எண்ணமும் பூங்கா இதழின் ஆரம்பத்திலே அறிவித்ததுபோல இருக்கின்றது. மனிதவலு, நேரம் ஆகியவற்றினைப் பொறுத்து இவற்றினை எதிர்காலத்திலே நடைமுறைப்படுத்த எண்ணுகிறோம்.

பூங்காவுக்கு வாசகர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள்?

பதிவர்களினைப் பார்வையாளர், படைப்பாளிகளுக்கு மேலாக பங்குதாரராகவும் எதிர்பார்க்கின்றோம். இதனால், பூங்காவின் முன்னடத்தலுக்கான உங்கள் கருத்துகளை வெளிப்படையாக முன்வையுங்கள்; உள்ளடக்கம், அமைப்பு குறித்த கருத்துகளைத் தாருங்கள். படைப்புகளைப் பரிந்துரையுங்கள்; நேர்காணல்கள், உங்கள் பகுதிகளின் முக்கிய சமூக, கலை நிகழ்வுகளின் ஒலிய,விழியப்பதிவுகளை அனுப்புங்கள்.

நன்றி

இறுதியாக, கடந்த காலத்தில் பூங்காவினைக் கட்டியெழுப்ப மிகவும் உறுதுணையாக நின்ற கற்பகம் கல்யாண், மற்றும் மதி கந்தசாமி, பதிவுகள் சாராத படைப்புகளையும் நேர்முகங்களையும் பெற்றுத்தந்த நண்பர்கள், மேலாக தம் படைப்புகளை, பூங்காவின் தேர்வுக்குத் தர அனுமதி தந்த பதிவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை இச்சந்தர்ப்பத்திலே தெரிவித்துக்கொள்வதோடு, பதிவர்களைப் பூங்காவின் பங்குதாரர்களாக, படைப்புகளைத் தெரிவுசெய்வதிலே ஈடுபட மீண்டும் அழைக்கின்றது.

ஆசிரியர்குழு
பூங்கா

தமிழ்மணம் : தொழில்நுட்ப தேவைகளும், புதிய வாய்ப்புகளும்

April 20, 2007 · Posted in சிறப்பிடுகைகள் · 10 Comments 

தமிழ்மணம் தமிழின் முதல் தானியங்கி வலைப்பதிவு திரட்டி என்பது மட்டுமில்லாது தமிழில் சிறப்பான தொழில்நுட்ப வசதிகளைப் பயனர்களுக்குக் கொடுக்கும் முக்கிய தளம் என்பதை பதிவர்கள் அறிவார்கள். உடனுக்குடன் பதிவுகளையும், பின்னூட்டங்களையும் வாசகர்களுக்கு கொண்டு செல்வது தமிழ்மணத்தின் முக்கியமான சேவை. கூகுள் போன்ற திரட்டிகளில் கூட நம் பதிவு தெரிவதற்குச் சில மணி நேரங்கள் தேவைப்படும் சூழலில் தமிழ் வலைப்பதிவுகள் உடனே வாசகர்களின் பார்வைக்கு செல்வதில் தமிழ்மணம் மகிழ்ச்சி கொள்கிறது. இவை தவிர தமிழ்மணத்தில் வரும் பதிவுகளை PDF கோப்பில் படிக்கும் வசதியும் தமிழ்மணத்தின் முக்கிய சேவைகளில் ஒன்று. பலருக்கு உதவி புரியாத தொழில்நுட்ப அலங்காரங்களை விட பலரும் நாடும் தொழில்நுட்பத்தை எளிமையான வடிவில் கொண்டிருப்பதே தமிழ்மணத்தின் சிறப்பு

தமிழ்மணத்தை திரு.காசி அவர்களிடம் இருந்து “தமிழ் மீடியா இண்டர்நேஷனல்” நிறுவனம் பெற்றுக் கொண்டதும் டி.எம்.ஐ நிறுவனத்தைச் சார்ந்த மென்பொருள் துறையில் ஆர்வம் உடைய சிலர் இணைந்து “டி.எம்.ஐ தொழில்நுட்ப குழு” என்பதனை உருவாக்கி, தமிழ்மணத்தைப் பராமரிக்கும் வேலையினை ஏற்றோம்.

தமிழ்மணத்தின் நிரலியினை முழுமையாக அறிந்து கொள்வது எங்களின் முதல் நோக்கமாக இருந்தது. குழுவில் இருந்த சிலர் மென்பொருள் துறையில் இருந்தாலும் தமிழ்மணம் உருவாக்கப்பட்ட நுட்பங்கள் பற்றி அறியாமல் இந்தப் பணியினை ஏற்கும் நிர்பந்தம் இருந்தது. அதோடு தமிழ்மணத்தினை ஏற்றுக்கொண்ட குறுகிய காலத்திலேயே ப்ளாக்கரில் ஏற்பட்ட மாற்றத்திற்கு ஏற்ப தமிழ்மணத்தின் தொழில்நுட்பத்தை மாற்ற வேண்டியிருந்தது. ஏற்கனவே இருந்த பதிவுகளுக்குப் பாதிப்பு வராமல் இம்மாற்றத்தை ஓரளவிற்கு வெற்றிகரமாகவே எதிர்கொண்டோம்.

இதற்கிடையில் பூங்கா வலையிதழுக்கு என்று ஒரு தளத்தினை உருவாக்கும் பணியும் தமிழ்மணம் தொழில்நுட்பக்குழுவிற்கு ஏற்பட்டது. பூங்கா ஒரு வார இதழாக வெளிவருவதால் வார இதழ் தளம் போன்று, பழைய இடுகைகளையும் வாசிக்கும் வசதி போன்றவைகளை ஏற்படுத்தும் தேவையும் தொழில்நுட்பக்குழுவிற்கு இருந்தது. பூங்கா வார இதழை ஜூம்லா என்ற கட்டற்ற மென்பொருள் மூலமாக அமைத்தோம்

தமிழ்மணத்தின் மீது முன்வைக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான விமர்சனங்களில் தமிழ்மணம் தொழில்நுட்ப குழு மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் முக்கியமானவை. தமிழ்மணத்தின் தொழில்நுட்ப மேம்பாடு குறித்து பலர் பல கேள்விகளை எழுப்பி இருந்தனர். தொழில்முறை மென்பொருள் வல்லுனர்களை உள்ளடக்கிய எங்கள் குழுவில் நிரலி எழுதுவதில் பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் தமிழ்மணம் போன்ற அதிக பயனர் பங்கு பெறும் வலைத்தளம் எதிர்கொள்ளும் சேவை வழங்கி (Server) குறித்த பிரச்சனையை நாங்கள் எதிர்கொண்டோம்.

தமிழ்மணம் கருவிப்பட்டை தமிழ்மணம் தளத்திற்கு பதிவர்கள் தங்கள் பதிவுகளை அறிவிக்கவும், பின்னூட்டங்களை தமிழ்மணம் முகப்புப் பக்கத்தில் உடனே தெரிவதற்கும் முக்கிய தொழில்நுட்பமாக விளங்குவதை பதிவர்கள் அறிவீர்கள். இந்தக் கருவிப்பட்டை தமிழ்மணம் தளத்தில் உள்ள சுமார் 1821 பதிவுகளிலும் இருப்பதாலும், ஒவ்வொரு பதிவும் Refresh செய்யப்படும் பொழுதும், இந்த கருவிப்பட்டை மூலம் புதிய பின்னூட்ட விவரம் (பின்னூட்ட எண்ணிக்கை மட்டும்) தமிழ்மணத்திற்கு வரும். இந்த சேவையின் காரணமாக தமிழ்மணம் Serverல் CPU Utilization மிக அதிகமாக இருந்தது. தமிழ்மணம் தளத்தினை மேலும் மேம்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதால் மேம்பட்ட வழங்கி ஒன்றில் தமிழ்மணத்தை நிறுவினோம். தளத்தைச் சோதனை செய்த பொழுது சரியாக வேலைசெய்த தைரியத்தில் தமிழ்மணம் தளத்தை மாற்றிய பொழுது தமிழ்மணம் தளமே தொங்கிப் போனது. பிறகு மறுபடியும் தமிழ்மணம் தளத்தை பழைய சர்வருக்கு மாற்றம் செய்து மறுபடியும் சோதனை முயற்சியாக தமிழ்மணத்தை வேறொரு மேம்பட்ட சர்வருக்கு மாற்றினோம். இதிலும் சில பிரச்சனை எதிர்கொண்டோம். பெரும்பாலான பிரச்சனைகளை சரி செய்து விட்டாலும் இன்னும் சில பிரச்சனைகளை அவ்வப்பொழுது எதிர்கொண்டே வருகிறோம். பதிவர்கள் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

டி.எம்.ஐ.ல் உள்ளோரின் முழு நேர பணி நிர்பந்தம், குடும்பம், பிற தேவைகள் போன்றவற்றுக்கு பிறகு வார இறுதியில் சில மணி நேரங்களே எங்களால் தமிழ்மணத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு செலவு செய்ய முடிகிற சூழலில், இந்த நிலையற்ற Server (Unstable Server) எங்களின் பெரும்பாலான நேரத்தை எடுத்துக்கொண்டதோடு மட்டுமில்லாமல் தமிழ்மணத்தின் புதிய மேம்பாடுகளையும் தாமதம் செய்தது.

இப்பொழுது ஓரளவிற்கு நிலையான நிலைக்கு வந்து இருப்பதால் எங்களால் தமிழ்மணம் மேம்பாட்டு வேலைகளில் கவனம் செலுத்த முடியும் என்று நம்புகிறோம்.

தமிழின் முதல் தானியங்கி வலைத்திரட்டியாக காசி அவர்களால் உருவாக்கப்பட்டு தமிழில் வலைப்பதிவுகள் செழிக்கச் செய்த தமிழ்மணம் இன்று மிக எளிமையாக பல திரட்டிகளை உருவாக்கி கொள்ளக்கூடிய சூழலில் எப்படியான மாற்றத்தினை உருவாக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. இன்று திரட்டி தொழில்நுட்பம் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டு வருகிறது. Web Services சார்ந்த தொழில்நுட்ப வாய்ப்புகளை நோக்கி வலைப்பதிவுலகம் நகர்ந்து வருகிறது. இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்ட யாகூ நிறுவனத்தின் “யாகூ பைப்ஸ்” இந்த திரட்டி தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய மைல்கல் என்று குறிப்பிடுகிறார்கள். இதன் மூலம் நிரலி எழுத வேண்டிய அவசியம் கூட இல்லாமல் ஒரு திரட்டியினை குறுகிய காலத்தில் தயாரித்து விட முடியும். என்றாலும் தமிழ்மணம் பல சேவைகளை தொடர்ந்து அளிக்க திட்டமிட்டு வருகிறது. சில திட்டங்கள் சோதனை கட்டத்திலும் இருக்கின்றன.

பின்னூட்டத்தினைத் திரட்ட கருவிப்பட்டையைத் தற்பொழுது பயன்படுத்தி வரும் நிலையில் அதற்கு மாற்று வழியாக பதிவுகளின் பின்னூட்ட ஓடை மூலம் பின்னூட்டங்களை திரட்டுவது தமிழ்மணத்தின் பரிசீலனையில் இருந்தாலும், இதில் சில பிரச்சனைகளும் உள்ளன. இவ்வாறான யோசனையை சில பதிவர்கள் கூடக் குறிப்பிடிருந்தார்கள். ஆனாலும் இவ்வாறு பின்னூட்டங்களை திரட்டும் பொழுது பின்னூட்ட ஓடையினைக் குறிப்பிட்ட இடைவேளைக்கு ஒரு முறை தான் திரட்ட முடியும். இதனால் பின்னூட்டங்கள் உடனே தமிழ்மணம் முகப்பு பக்கத்தில் தெரியாது. ஆனால் கருவிப்பட்டை மூலம் பின்னூட்டங்களை உடனே முகப்புப் பக்கத்தில் காட்டலாம்.

தமிழில் போட்காஸ்டிங் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு இன்னும் வளர்ச்சி பெறவில்லை. என்றாலும் போட்காஸ்டிங் திரட்டி என்பது போட்காஸ்டிங்கை அதிகளவில் அதிகரிக்க செய்யும் வாய்ப்புகளை உருவாக்கும் எனத் தமிழ்மணம் நம்புகிறது. வலைப்பதிவுகள் போன்று எளிமைப்படுத்தப்படாமல் இருப்பதும் போட்காஸ்டிங் அதிகளவில் இல்லாமைக்கு ஒரு காரணமாக இருக்க கூடும். இது குறித்த விடயங்களையும் தமிழ்மணம் யோசித்து வருகிறது

இவை தவிர தமிழ்மணம் பயனர்களுக்கு மேலும் பல மேம்பாடுகளை அளிக்கவும் திட்டம் உள்ளது.

தமிழ்மணம் திரட்டி 2004ல் தொடங்கப்பட்ட காலத்தில் தமிழ்மணம் திரட்டியில் நிறைய ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன என்பதை மூத்த வலைப்பதிவர்கள் அறிவார்கள். ஆனால் புதிய வலைப்பதிவர்களுக்கு அது தெரியவேண்டாமா? எனவே பழைய பதிவுகளை “பரண்” என்ற புதிய வடிவத்தில் கொண்டு வரும் பணியில் தமிழ்மணம் ஈடுபட்டுள்ளது. அது விரைவில் வெளியிடப்படும்.

தமிழ்மணம் பயனர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப தமிழ்மணத்தை Customize செய்து கொள்ளும் வசதியை அளிக்கவும் திட்டமிட்டு வருகிறோம். அந்தப் பணியும் தற்பொழுது தொடங்கப்பட்டு உள்ளது

தமிழ்மணம் பயனர்களும், பதிவர்களும் தங்களுடைய ஆலோசனைகளை தமிழ்மணத்திற்கு தொடர்ந்து அளிக்க வேண்டுமென விண்ணப்பித்துக்கொள்கிறோம். உங்களில் பலர் முன்வைத்த ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தும் சாத்தியங்களை நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம்

தமிழ்மணம் உங்களுக்கு ஒரு சுகமான வலைப்பதிவு அனுபவத்தைத் தொடர்ந்து கொடுக்கும் என்று நம்புகிறோம்

தொழில்நுட்ப குழு
டி.எம்.ஐ

டி.எம்.ஐ.யின் கையேடுகள்

April 18, 2007 · Posted in சிறப்பிடுகைகள் · 5 Comments 

பொதுவாகக் கையேடுகள் என்பவை குறுகிய நேரத்தில் நிறைய செய்திகளை எளிய முறையில் சொல்லி, பல்வேறு செய்திகளை மக்களுக்குக் கொண்டு செல்லும் ஒரு சாதனம். இவற்றைச் சுற்றுலா மையங்கள், கண்காட்சிகள், நூல்நிலையங்கள், மருத்துவமனைகள் என்பவற்றில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். தமிழ் இணையத்தில் உலாவும் அன்பர்களுக்கு பல்வேறு கருத்துக்கள் குறித்த அறிமுகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட ஒரு சோதனை முயற்சியே ‘தமிழ் மீடியா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கையேடுகள்‘. இவற்றின் நோக்கம், கையேடுகளின் வாயிலாகத் தமிழர்களுக்குச் சுகாதாரம், சமூக நலன், கல்வி போன்றவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது. இதற்கான கையேடுகள் இணையத்திலும், வேண்டும்பொழுதில் அச்சீடாகவும் வெளியிடப்படும்.

இதுவரையில் வெளியிடப்பட்ட கையேடுகள்:

அ) குடும்ப உறவை பலப்படுத்துதல்: இத்தொடரில் குழந்தைகளை மையப்படுத்தி, அவர்களை எவ்வாறு பிரச்சினைகளை எதிர்கொள்வதில் தேர்ச்சியடைய வைக்கலாம் என்பதற்கு வழிகளும், அதன் மூலம் குடும்பங்களில் பிணைப்பை வலுப்படுத்தும் முறைகளைக் குறித்தும் நாம் அறிந்துகொள்ளலாம்.

வாரம்-1 பயிற்சி கையேடு – 1
வாரம்-1 பெற்றோர் கையேடு – 1
வாரம்-2 பயிற்சி கையேடு
வாரம்-2 பெற்றோர் கையேடு
வாரம்-3 பயிற்சி கையேடு
வாரம்-3 பெற்றோர் கையேடு
வாரம்-4 குழந்தைகள் பயிற்சி கையேடு
வாரம்-5 பெற்றோர் கையேடு
வாரம்-6 குழந்தைகள் பயிற்சி கையேடு
வாரம்-6 பெற்றோர் கையேடு
வாரம்-7 பெற்றோர் கையேடு
வாரம்-8 குழந்தைகள் பயிற்சி கையேடு
வாரம்-9 பெற்றோர் கையேடு

ஆ) மார்பகப் புற்றுநோயைத் துவக்கத்திலேயே கண்டறிதல்: இந்தக் கையேட்டில் மார்பக ஆய்வு செய்துகொள்ள வேண்டிய இன்றியமையாமை பற்றியும், முறைகளைப் பற்றியும் விளாக்கப்பட்டிருக்கிறது.

இவற்றை டி.எம்.ஐயின் இந்தப் பக்கத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.

மேற்கண்ட கையேடுகளின் ஆங்கில மூலம் பத்மா அரவிந்த் அவர்களின் ஈடுபாட்டில் தயாரானவை. அவை பூங்கா குழுவினரால் மொழிபெயர்க்கப்பட்டு (“மார்பகப் புற்றுநோயைத் துவக்கத்திலேயே கண்டறிதல்” மொழியாக்கம்-நன்றி: கற்பகம் கல்யாண்), வடிவமைக்கப்பட்டன. இதுவரை சராசரியாக ஒவ்வொரு கையேடும் சுமார் 30 முறை தரவிறக்கப்பட்டுள்ளது. குடும்ப உறவைப் பலப்படுத்துதல் கையேட்டின் இறுதி சில பகுதிகள் வரும் வாரப் பூங்கா இதழ்களில் வெளிவரும். இவற்றைத் தவிர வரும் காலத்தில் அதிக அளவில் குடும்ப நலம், குழந்தைகள் நலம் மற்றும் சுகாதாரம் குறித்த கையேடுகள் வெளியிடப்படவுள்ளன.

வலைப்பதிவர்களாகிய நீங்கள் எவ்வாறு இதற்கு உதவலாம்?

கையேடு தயாரிப்பில் ஆர்வமும், திறமையும் உள்ள வலைப்பதிவர்கள் எங்களோடு இணைந்து இவற்றைத் தயாரிக்கலாம். உதாரணமாக, நீங்கள் காணும் பயனுள்ள பொதுநலக் கையேடுகளை எங்களது கவனத்துக்குக் கொண்டு வரலாம்.

இயன்றால், அதன் வெளியீட்டாளரோடு தொடர்புகொண்டு மொழிபெயர்ப்பு உரிமையைக் கேட்கலாம் (பொதுவாக இது வழங்கப்படுவதில் பிரச்சினையில்லை); நீங்களே அதனைத் தமிழாக்கி எங்களுக்கு அனுப்பலாம்.

உங்கள் வலைப்பதிவுகளில் இட்டுவிட்டு, எங்களுக்கு இணைப்பை அனுப்பலாம்.

நாங்கள் ஏற்கெனவே தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் கையேடுகளை மொழிபெயர்ப்பதில், வடிவமைப்பில் உதவலாம்.

புதிதாக ஏதேனும் கையேடுகள் தயாரிக்கும் யோசனைகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

வெளியிடப்பட்ட கையேடுகளை நண்பர்களுக்கும், அறிந்தவர்களுக்கும் பரப்பலாம்.

அச்சிட்ட கையேடுகளை விநியோகிக்க இயலுமென்றால், அதற்கான ஏற்பாடும் பரிசீலிக்கப்படும்.

கையேடுகளைப் பற்றிய விமரிசனங்களை எங்களோடு பகிர்ந்துகொண்டு, கையேடுகளின் தரத்தினை உயர்த்த வகை செய்யலாம்.

எனவே விருப்பமுள்ள நண்பர்கள் எம்மோடு தொடர்புகொள்ளலாம். பயனுள்ள தகவல்களை மக்களுக்குக் கொண்டுசெல்லும் நோக்கில் தயாரிக்கப்படும் இக்கையேடுகளை பதிவர்கள் அதிக அளவில் தரவிறக்கிப் படித்துக்கொள்ளவும், பிறரோடு பகிர்ந்துகொள்ளவும் வேண்டுகிறோம்.

பதிப்புக்குழு
டிஎம்ஐ

டி.எம்.ஐ நிறுவனமும் தமிழ்மணத்தின் தொடரும் பயணமும்

April 17, 2007 · Posted in சிறப்பிடுகைகள் · 14 Comments 

தமிழ் மீடியா இண்டர்நேஷனல் எல். எல். சி.

(முன் குறிப்பு: இந்த வாரம் தமிழ் மண நட்சத்திரம் யார் என்று ஆவலுடன் படிக்க வந்திருக்கும் உங்களுக்கு டி.எம்.ஐ நிறுவனமே அந்த இடத்தை எடுத்துக் கொண்டது வித்தியாசமாக இருக்கலாம். இந்தப் பதிவைப் படிக்கும் முன்பாக இதற்கு முந்தைய பதிவான காசியின் மீள்பதிவைப் படிக்க வேண்டுகிறோம். குறிப்பாக பாகம் நான்கில் சொல்லப் பட்டதைப் படியுங்கள். நட்சத்திரத் தேர்வை குறை கூறி எழுந்த இந்த வார சர்ச்சைக்கும் காசி குறிப்பிட்டிருந்ததற்கும் எந்த வேறுபாடுமில்லை என்பதுதான் மிகப் பெரிய உண்மை. தமிழ்ப் புத்தாண்டு வாரத்தில் நட்சத்திரப் பதிவராக இருக்கக் கோரி பலரை அணுகிய போது, சொல்லி வைத்தாற்போல அனைவருக்குமே இந்த வாரம் வசதியாக அமையவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. வேறு சில சமயங்களில் ஒரே வாரத்தில் ஒருவருக்கு மேல் முன்வந்ததும் உண்டு என்பதால் இதை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொருவரும் தனக்குத் தோன்றியதை தான் விரும்பிய நேரத்தில் எழுதவே வலைப்பதிவு என்கிற பொழுது நட்சத்திரப் பதிவராக குறிப்பிட்ட வாரத்தில் எழுதவேண்டும் என்று பணிப்பதே முரண்நகைதான். எனவே தமிழ்மணம் நிர்வாகமே இந்த நட்சத்திர வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விழைந்து பதிவர்களுடன் நேரடியாக உறவைப் பேணும் விதமாக இவ்வாரம் தன் நோக்கங்களையும், பணிகளையும், எதிர்காலத் திட்டங்களையும் பகிர்ந்து கொள்கிறது.)

காசி தமிழ்மணம் தளத்தையும் மென்பொருளையும் விற்பனைக்கு அறிவித்த செய்தியை அறிந்து மகிழ்ச்சியுற்றவர்களை விட அதிர்ச்சியுற்றவர்களே அதிகம். ஏனெனில் “பொதுநல நோக்கில் விருப்பு வெறுப்பின்றி இலவசமாகவே” ஒரு சேவையை தமிழர்களுக்கு அளிக்க முனைந்ததை தமிழ்ஊடக உலகம் எப்படி அணுகிய போதும் தமிழ் வலைப்பதிவுகள் நூற்றுக்கணக்கில் பெருகிடவும், உலகளாவிய தமிழ் வழி இணையக் கருத்தாடல் வலுப்பெறவும் உதவியதை பதிவர்கள் அறிவர். (மக்களது அன்றாடப் பயனுக்கேற்றவாறு புதுப்புது இணைய உத்திகளை கூகுள் அறிமுகப் படுத்துவது போல்) தமிழ் மணத்தை மென்மேலும் தொழில் நுட்ப ரீதியில் மெருகூட்டி உலகத் தமிழர்களுக்கான ஒரு பயனுள்ள தளமாகக் கொண்டு வரவேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றிக் கொண்டிருந்த காசியின் கவனத்தைச் சிதறடிப்பதுதான் வலைப் பதிவுகளில் சிலரால் நடத்தப் பட்டுக் கொண்டிருந்தது. இதுதான் காசியின் விற்பனை முடிவுக்குக் காரணமாக இருக்கும் என்று நினைத்து வேதனையடைந்த வட அமெரிக்காவாழ் வலைப்பதிவர்கள் சிலர் ஒன்று கூடி காசியே தமிழ் மணத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும், அதற்கான உதவிகளைச் செய்ய முன் வருவதாகத் தெரிவித்தனர். ஆனால் தன்னுடைய சொந்த தொழில் நிமித்தமாக காசி இந்த முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டபின் உதயமானதுதான் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் எல். எல். சி. (டி.எம்.ஐ).

டி.எம்.ஐ நிறுவனம் திடீரென்று உருவாக்கப் பட்டிருந்தாலும் அதன் கீழ் இணைந்த நாங்கள் அனைவரும் வெவ்வேறு வகையான கல்விஅறிவும், அனுபவமும், செயல் முனைப்பும் கொண்டிருந்தாலும் ஒரு கருத்தில் ஒருமித்திருந்தோம். அதுதான் எங்கள் அமைப்பின் குறிக்கோளான, “அனைத்துத் தரப்புத் தமிழர்களும் சந்தித்து வரும் பொருளாதார, சமூக-அரசியல், கல்வி மற்றும் சுகாதாரப் பிரச்னைகள் குறித்த அறிவையும், விழிப்புணர்வையும் இயன்றவரை உலகளாவிய தமிழ் மக்களிடம் கொண்டு செல்லுதல்”. கடந்த எட்டு மாதங்களில் இந்தக் கருத்தை மையமாக வைத்து டி.எம்.ஐ. நிறுவனத்தில் உள்ளவர்கள் பணியாற்றி வருகிறோம். இருப்பினும் முன்னெடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் எங்களுக்குள் தீர ஆராய்ந்துதான் வைக்கிறோம்.

மேலும் தொழில் நுட்ப ரீதியில் காசி ஏற்கனவே கட்டியுள்ளதைப் புரிந்து கொள்ளவும், ஏற்கனவே தனியொருவராக அவர் செய்துவந்த நடைமுறையை ஆவணப்படுத்தித் தொய்வில்லாமல் கொண்டு செல்லவும் நிறைய அவகாசம் தேவையாயிருந்தது. அதனாலேயே பெருகி வரும் தமிழ்வலைப்பதிவுகளுக்கான புதிய தேவைகளை நாங்கள் உணர்ந்தும், அதற்கான தொழில் நுட்ப உத்திகளை நாங்களும், பல வலைப்பதிவர்களும் ஏற்கனவே பலமுறைகள் அறிந்து சொல்லியும் உடனடியாகச் செய்ய இயலவில்லை. ஆனால் வலைப்பதிவர்கள் அனைவரும் விரும்பும் அந்தப் பாதைகளில் பயணிக்க எல்லா முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம் என்று உறுதியளிக்கிறோம். அவை பற்றிய விளக்கமான தகவல்கள் அடுத்து வரும் பதிவுகளில் வெளிவரும். அவற்றினையொட்டி பதிவர்களது ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

அடுத்தபடியாக காசி தன் வரலாற்றுப் பதிவுகளில் குறிப்பிட்ட அக்காலத்தில் இருந்த தனிப்பதிவர் அரசியல், பதிவர் குழு அரசியல், தமிழர் சமூக நுண்ணரசியல், இந்திய, தமிழக மற்றும் ஈழப் பேரரசியல் எல்லாமே இன்றும் இருந்து வருகின்றன. அவற்றுக்குள் நடக்கும் சண்டைகளும், சேற்றடிப்புகளும் தமிழ் மணத்தின் மீது கொட்டப் படுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றோடு சேர்த்து, எங்கள் நிறுவனத்தில் உள்ளவர்கள் தங்கள் பதிவுகளிலும், பிற இடங்களிலும் முன் வைத்த/வைக்கும் தனிப்பட்ட கருத்துகளின் மேல் எழும் கோபத்தை தமிழ் மணத்தின் மீது கொட்டுவதும் வாடிக்கையாகி விட்டது. ஆனால் இவற்றையெல்லாம் கடந்து செல்லும் அனுபவத்தை நாங்கள் பெற்று வருகிறோம். பதிவர்களில் ஒரு சிலரே (குறிப்பிட்ட மதம், நாடு, சாதி, அரசியல் என்றில்லாமல்) இப்படி நடந்து கொண்டாலும், பெரும்பாலான பதிவர்கள் (திரும்பவும் குறிப்பிட்ட மதம், நாடு, சாதி, அரசியல் என்றில்லாமல்) கண்ணியமான முறையில் கருத்துவேறுபாடுகளையும், பரிந்துரைகளையும் எங்களுக்கு வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர். டி.எம்.ஐ. நிறுவனத்தின் துணைக்குழுக்கள் பாரபட்சமில்லாமல் இயன்ற அளவுக்கு தங்கள் பணியை உடனுக்குடன் செய்ய முயன்று வருகின்றனர். தமிழ்மணத்தின் பல்வேறு செயல்பாடுகள் குறித்த பதிவுகள் இனிவரும் நாட்களில் வெளியிடப்படும். அவை தொடர்பான உங்களது ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

இறுதியாக டி.எம்.ஐ. நிறுவனத்தின் புதிய முயற்சியான பூங்கா வலையிதழையும் குறிப்பிட வேண்டும். தமிழ்மணத்தில் திரட்டப்படும் வலைப்பதிவுகளில் இருந்து புதிய பார்வைகளையும் பரந்துபட்ட சிந்தனைகளையும் உயிர்ப்பான மொழியிலே வெளிப்படுத்தும் படைப்புகளை அனுமதி பெற்றுத் தேர்ந்தெடுத்து வாரந்தோறும் தொகுப்பது பயனானதெனக் கருதி, “பூங்கா” வலையிதழைத் தமிழ்மணம் செப்டம்பர் 2006 இலே ஆரம்பித்தது. இக்கவனிப்பினூடாக தமிழ்ப்பதிவர்களின் பல்வேறு துறைநிபுணத்துவத்தை அடையாளங் கண்டு பதிவு செய்யத்தூண்டவும் மொழிவெளிப்பாட்டின் பல்வேறு கலைப்பரிமாணங்களைப் பரிசோதனை செய்ய ஊக்குவிக்கவும் சமூக அக்கறையுள்ளவர்களை ஒன்றிணைக்கவும் வேண்டிய தொடர்ச்சியான தேவையை நிறைவேற்றலாமென டி.எம்.ஐ. திடமாக நம்புகிறது. இதுவரை முப்பத்தொரு இதழ்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழ்மணம் போலத் தானியங்காமல் தனித்து ஓர் ஆசிரியர் குழுவின் கீழே இயங்கும் பூங்காவுக்காக இடுகைகள் தெரிவு செய்யப் படும் பொழுது சிந்தனையைத் தூண்டும் எல்லா இடுகைகளையும் பாரபட்சமின்றி தேர்வு செய்து வந்தாலும், சில நேரங்களில் சில நல்ல இடுகைகள் நேரமின்மையால் விடப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு. ஓரிரு நேரங்களில் பதிவர்கள் சுட்டிக் காட்டிய பொழுது அதைக் கவனத்தில் கொண்டு தேர்வு முறையை மேலும் செம்மைப் படுத்தி வந்திருக்கிறோம். பூங்காவின் எதிர்கால விரிவினையிட்டும் அதிலே வாசகர்களின் பங்கினையிட்டும் பூங்கா ஆசிரியர்குழுவும் இந்நட்சத்திர வாரத்திலே இங்கே பதிவு செய்யும்.

வலைப்பதிவர்களாகிய உங்களுக்கு எமது நன்றியையும், புத்தாண்டு வாழ்த்துக்களையும் தமிழ்மணம் நட்சத்திரமாக ஒளிரும் இந்நேரத்தில் தெரிவித்துகொள்வதோடு தொடர்ந்து உங்கள் புரிதலையும், ஆதரவையும் வேண்டுகிறது.

தமிழ் வலைப்பதிவுகளும், தமிழ்மணமும் – ஒரு வரலாற்றுப் பார்வை

April 15, 2007 · Posted in சிறப்பிடுகைகள் · 8 Comments 

தமிழ் வலைப்பதிவுகளும், தமிழ்மணமும் – ஒரு வரலாற்றுப் பார்வை

‘தமிழ் மணம்’ காசி ஆறுமுகம்

பாகம் ஒன்று
தமிழ் இணைய உலகில் என் அனுபவம் சுமார் 3 ஆண்டுகளே. அதற்குள் பல அனுபவங்கள். என் பணி சூழலால் இணையத்துடனான என் தொடர்பு சென்ற மாதங்களில் குறைந்துகொண்டே வருகிறது. எனவே என் அனுபவங்களை சுருக்கமாகவேனும் ஓரிடத்தில் எழுதி வைப்போம் என்று தோன்றியது. அதன் விளைவே இந்தக் குறுந்தொடர்.
மேலும் படிக்க: http://kasiblogs.blogspot.com/2006/07/1.html

பாகம் இரண்டு
எப்படியோ விழுந்து எழுந்து, நியூக்ளியஸ் பொதியின் அதிகாரப்பூர்வ தமிழ்ப் பதிப்பு வெளியாக என் பங்களிப்பை அளித்தேன். இந்த நியூக்ளியஸ் தமிழாக்க முயற்சிகளுக்கான சோதனைக்களமாக எனக்கு ஒரு இணைய வழங்கிச் சேவை தேவைப்பட்டது. 1and1.comஎன்ற சேவை நிறுவனம் இலவசமாக அளித்த வழங்கியின்மூலமே இது சாத்தியப்பட்டது. சேவையை தனித்துவமிக்க ஒரு ஆள்களப்பெயருடன் (damain name) பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று யோசித்ததன் விளைவே ‘தமிழ்மணம்’ என்ற பெயர். தமிழ் வலைப்பூ மணம் வீசும் இடம் என்ற பொருளில் வைத்ததுதான் இந்தப் பெயர். பட்டியல்-நியூக்ளியஸ்-வலைப்பூ-செய்தியோடை என்ற இந்த சூழலே என்னை ஒரு புதுமையான வலைப்பதிவு தளத்தை வடிவமைக்கத் தூண்டியது. இன்று தமிழ்மணத்தில் பார்க்கும் பெரும்பாலான அம்சங்களும் அன்றே யோசித்திருந்தவையே.
மேலும் படிக்க: http://kasiblogs.blogspot.com/2006/07/2.html

பாகம் மூன்று
வெளியிடும்போது புது ஆள்களப்பெயரோடு வெளியிட எண்ணி துண்டுபோட்டுவைத்த பெயர்தான் ‘நந்தவனம்.காம்’. ஆனால் நானாக வெளியிடும் முன்பே பலரும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதால் தற்காலிகமாக இயங்கிவந்த ‘தமிழ்மணம்.காம்’ என்பதையே நிரந்தரமாக்கிவிட்டேன். ‘இந்த இணைய இதழில் எழுதுகிறேன்’ என்பதுபோல ‘தமிழ்மணத்தில் எழுதுகிறேன்’ என்று சொல்லுமளவுக்குத் தமிழ்மணமும் தமிழ்வலைப்பதிவுலகமும் ஒன்றாகிப் போனது. இதனால் பெருமை இருந்தாலும் பல சிக்கல்களும் இருந்தன.
மேலும் படிக்க: http://kasiblogs.blogspot.com/2006/07/3.html

பாகம் நான்கு
நிர்வாகப் பணிக்கு மதி, செல்வராஜ், அன்பு செழியன் ஆகியோர் (பரி பின்னாளில் நிர்வாகத்தில் பங்கெடுத்தார்) முன்வந்தனர். முதல் கட்டப்பணியாக இந்தவார நட்சத்திரத்தைத் தேர்ந்தெடுத்து ஏற்பாடு செய்யும் பணி நான்கு வார சுற்றாக நால்வரிடமும் அளிக்கப்பட்டது. இந்த நட்சத்திரமாகட்டும் வலைப்பூ வாத்தியாராகட்டும் நடத்துவதில் உள்ள சிரமம் நடத்தியவர்களுக்கே தெரியும். பலரும் ‘இவரைப் போய் ஏன் போட்டார்கள், இன்னும் சிறப்பாக எழுதும் அவரை ஏன் போடவில்லை?’ என்றெல்லாம் பேசலாம். ஆனால் உண்மையில் இந்த வாரம் நீங்கள் இருக்கத்தயாரா என்று கேட்டால் பாதிப்பேர் நான் அந்த வாரம் ரொம்ப பிசி என்பார்கள். எதையும் விமர்சிப்பது எளிது செய்வது எத்தனை கடினம் என்பது இந்த அனுபவங்களில் கிடைத்த பாடம்.
மேலும் படிக்க: http://kasiblogs.blogspot.com/2006/07/4.html

பாகம் ஐந்து
தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த முயற்சிகள் என்றால் மதி/சுரதாவின் உதவிப் பக்கங்கள், வளைகுடாப்பகுதியில் வசித்த உமர் தயாரித்து அளித்த தேனீ இயங்கு எழுத்துரு, மலேசியாவிலிருந்த முகுந்த் தலைமையில் தமிழா குழு அளித்த இ-கலப்பை தட்டச்சு செலுத்தி, மறுமொழியிடலை எளிதாக்கிய ஜெர்மனிவாழ் சுரதாவின் பொங்குதமிழ் ஜாவாஸ்க்ரிப்ட் நிரல் ஆகியனவற்றைச் சொல்லலாம். முக்கியமாக தேனீ இயங்கு எழுத்துரு தயாரிக்கையில் உமர் கூடுதல் முயற்சி எடுத்து எல்லாத் தளங்களிலும் அது இயங்குமாறு செய்திருந்தது ஒரு சிறப்பு. இவை அனைத்தும் பொதுநல நோக்கில் விருப்பு வெறுப்பின்றி இலவசமாகவே அளிக்கப்பட்டன. ஆகவே, இவற்றின் நீட்சியாக தமிழ்மணம் சேவையும் இலவசமாகவே என்றும் அளிக்கப்பட வேண்டும் என்பதை ஒரு அடிப்படைக் கொள்கையாகக் கொண்டேன்.
மேலும் படிக்க: http://kasiblogs.blogspot.com/2006/07/5.html

பாகம் ஆறு
தானியங்கிக் கருவியே தற்போக்காக எடுத்த (Randomly picked)10 பதிவுகளை பட்டியலில் காட்டும்போதும் ‘என் பெயர் வருவதேயில்லை, காசி தனக்குப்பிடித்த பெயர்களை மட்டும் முன்னிறுத்துகிறார்’ என்றும் சிலர் குறைபட்டுக்கொண்டபோது இங்கே எத்தகைய ‘தன்னை மையப்படுத்தும், அவநம்பிக்கை நிறைந்த’ சூழல் நிலவுகிறது என்று புரிந்தது. அதன் பின்னர் அதற்கும் ஒரு தீர்வு காணப்பட்டாலும், இணையத்தில் உள்நுழை/மின்னஞ்சல்-அழைப்பு அல்லாத நேரடி வாக்கெடுப்பு முறைகள் எதிலுமே முற்றிலும் நம்பகமானது என்று எதுவுமில்லை என்பதைப் புரிந்துகொள்ளாமல் ஏசுவது இன்றும் தொடர்கிறது. தன் இடுகைகள் பரிந்துரைக்கப்படாததைப் பொறுக்க முடியாதவர்கள், தங்கள் கருத்துக்கு எதிரானவை பரிந்துரைக்கப்படுவதை சகிக்காதவர்கள் இதை ஏற்றுக்கொள்ளாததும் தொடர்கிறது.
மேலும் படிக்க: http://kasiblogs.blogspot.com/2006/07/6.html

பாகம் ஏழு
பயனர்கள் தமிழ்மணம் தள இயக்கம் பற்றிய தங்கள் கருத்துக்களை/கேள்விகளை விவாதிக்க ஒரு மேடை வேண்டும் என்பதால் முதலில் குறைந்த வசதிகளுடன் ஒரு மன்றம் அமைக்கப்பட்டது. இந்த மன்றம் என்பது பயனர்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் இடமாக இருக்கவேண்டும், அவர்களால் தீர்வு சொல்ல இயலாத பிரச்னைகளுக்கு தமிழ்மண நிர்வாகிகளோ, நானோ பதிலளிக்குமாறு இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது நிறைவேறவில்லை. நம் பயனர்கள் இதை 1-800-… வாடிக்கையாளர் சேவை மையமாகத் தான் பார்த்தார்கள். முழுக்க விளக்கப்பட்ட பிரச்னைகளுக்கும் எதையுமே வாசிக்காமல், தாங்களும் யோசிக்காமல் கேள்விகள் கேட்கப்படுவது வாடிக்கையாக நடக்கிறது. பல கேள்விகளுக்கும் தெளிவாக விளக்கப்பட்ட உதவிப்பக்கங்கள் உள்ளன. அதிலும் விடுபட்டிருப்பின், பதில் தெரிந்த 100 பேர் இங்கே இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் பதில் சொல்வதில்லை. நூற்றில் ஒருவர் சிரமமெடுத்து சில சமயம் சொல்லுவார். அவரும் சில நாளில் மனம் சோர்ந்தோ என்னவோ மேலும் அதைத் தொடர முடியாமல் விட்டுவிடுவார். ஆனால் ‘கேட்டேன், பதிலில்லை’ என்று ஒற்றைத்தனமாக தமிழ்மணம் சேவையை மட்டந்தட்டிப் பேசி, அதற்கும் ஒரு மடலோ, இடுகையோ எழுதிவிட்டுப் போய்க்கொண்டே இருப்பதைப் பார்த்து மனம் நொந்ததும் உண்டு. இன்னும் சில பெரிய மனிதர்கள் மன்றத்தில்கூட கேட்காமல் தங்கள் பதிவிலேயே எழுதிவிட்டு தமிழ்மணம் பதில் சொல்லவேண்டும் என்று எதிர்பார்த்து, பதில்வராததால் கோபித்ததும் உண்டு.
மேலும் படிக்க: http://kasiblogs.blogspot.com/2006/07/7.html

பாகம் எட்டு
நவன் பகவதி, சாகரன், சத்யராஜ்குமார், என்று பலர் சிறுசிறு ஆலோசனைகளை வழங்கி தமிழ்மணம் மேம்பட உதவியிருக்கிறார்கள். (இன்னும் கூட சிலரின் பெயர் விட்டுப்போயிருக்கலாம், முடிந்தவரை நினைவிலிருந்து எழுதுகிறேன்.) பலர் தனிப்பட்ட முறையில் நேரில் சந்திக்கும்போதும், மின்னஞ்சல் வழியாகவும் ‘தமிழ்மணம் ஒரு சாதனை’ என்றெல்லாம் பாராட்டியிருக்கிறார்கள். ஆனாலும் எந்த பிரபல தினசரி/வார/மாத இதழிலோ, சிற்றிதழிலோ, திசைகள் தவிர பிற இணைய இதழிலோ வலைப்பதிவுகள் என்ற ஒரு வடிவத்தின் இருப்பையோ வளர்ச்சியையோ அவற்றுக்கு தமிழ்மணம் போன்ற முயற்சிகளின்மூலம் கிடைக்கும் உத்வேகத்தையோ குறிப்பிட்டு யாரும் எழுதியதில்லை.
மேலும் படிக்க: http://kasiblogs.blogspot.com/2006/07/8.html

பாகம் ஒன்பது
ஊருக்குத் திரும்பும்முன்பே ஆட்சேபகரமான மறுமொழிகள் பிரச்னை ஆரம்பமாகிவிட்டதென நினைவு. ஆனாலும் அதுபற்றி தமிழ்மணம் செய்ய ஒன்றுமில்லை. அனைவரும் ப்ளாக்கர்.காம்-க்கு இதன் தீவிரத்தைக் குறிப்பிட்டு எழுதினால் அவர்கள் ஏதேனும் செய்யலாம் என்ற ஒன்று மட்டுமே சொல்லமுடிந்தது. அன்று வலைப்பதிவர் சந்திப்புக்கு சென்னை வந்திருந்த இன்னொரு நண்பர் தமிழ்மணம் திரட்டி இயங்கும் நுட்பம் குறித்து சில கேள்விகளை என்னுடன் தனியாகக் கேட்டுக்கொண்டார். அதன் பின்னரும் அஞ்சல் தொடர்பில்/தொலைபேசியில் எங்களுக்குள் பரிமாற்றம் இருந்தது. அவர் இன்று தேன்கூடு நடத்தும் அன்பர்.
மேலும் படிக்க: http://kasiblogs.blogspot.com/2006/07/9.html

பாகம் பத்து
இதுபோன்ற சர்ச்சைகள் வரும்போது தானாக முன்வந்து பலர் தங்கள் கருத்துக்களை எழுதுவதும், அவர்கள் சொல்வது என்னையோ தமிழ்மணத்தையோ ஆதரிக்கும் ரீதியில் இருந்துவிட்டால் அவர்களை ‘என் அடியாட்கள்/அல்லக்கைகள்’ என்று குறிப்பிட்டு, ‘எது கேட்டாலும் இந்த ஆள் பேசமாட்டானாம், அவனின் அடியாட்கள் பேசுவார்களாம்’ என்று சிலர் எழுதுவதும் பலமுறை கண்டிருக்கிறேன். எந்த அணியிலும் சேர விரும்பாத, யாருடனும் தொலைபேசியில் மட்டுமல்லாமல், மின் அரட்டையிலும் கூடத் தொடர்புகொள்ள விரும்பாத, இலக்கிய, சிற்றிதழ் குழுக்களை அறிந்தும்கூட இராத எனக்கு இத்தகைய தன்னார்வலர்களின் ஆதரவு ஒன்றே ஊட்டம். அது மட்டும் இல்லையென்றால் இந்த தமிழ் இலக்கிய அரசியல் சூழல் புரிந்த அன்றே தமிழ்மணத்தைத் தூக்கிக் கடாசிவிட்டுப் போயிருப்பேன்.
மேலும் படிக்க: http://kasiblogs.blogspot.com/2006/07/10.html

பாகம் பதினொன்று
இக்காலத்தில் தமிழ்மணத்தின் வாசகர் வருகையும் குறைய ஆரம்பித்திருந்தது. தமிழ்மணத்தை வாசிக்கும்போது உருப்படியான பதிவுகள் கிடைப்பது குறைந்துகொண்டு வந்ததும் இதற்கு ஒரு காரணம் என்பதை உணர்ந்தேன். வகைப்படுத்தல் போன்ற நுட்பத்தீர்வுகள் வாசகர் வருகையை அதிகரிக்க வாய்ப்பிருப்பினும், நிரல் மேம்படுத்த எனக்கு வசதிப்படவில்லை. உடனடித் தேவையாக ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாக உணர்ந்தேன். இருக்கும் பட்டியலில் சிலவற்றை நீக்கி பட்டியலை சிறிதாக்கினால் ஒழிய மொத்த தமிழ்மண இயக்கமுமே சீர்கெடும் என்ற நிலை. ஆகவே ஒரு தவிர்க்க முடியாத இடைக்கால நடவடிக்கையாக ஒரு மாதமாக எழுதப்படாதவை, மதரீதியானவை, சக வலைப்பதிவர்களை கேலிசெய்வதை மட்டுமே முக்கிய நோக்கமாகக் கொண்டவை, வெட்டி அரட்டை மறுமொழிகளுக்காகவே எழுதப்படுபவை ஆகிய பதிவுகளை திரட்டியிலிருந்து விலக்கிவைத்தேன்.
மேலும் படிக்க: http://kasiblogs.blogspot.com/2006/07/11.html

பாகம் பன்னிரண்டு
இந்தக் கூச்சல்களுக்குப் பதில் சொல்வது இயலாதது மட்டுமல்ல, வீண்வேலை என்றும் நம்பியதால், எல்லாவற்றையும் புறந்தள்ளி, என் மீது வைக்கப்பட்ட தாக்குதல்களுக்கு என் ஒரே பதிலாக, அனைவருக்கும் இடம் கிடைக்கும் புதிய தமிழ்மணத்தை வெளியிடுவதிலேயே என் உழைப்பைச் செலுத்தினேன். வலைப்பதிவு உலகில் பல புதுமைகளைக் கொண்டு தமிழ்மணம்.காம் இரண்டாம் பதிப்பு 2006 ஜனவரி 14ஆம் நாள் தைத்திங்கள் மலர்ந்தது. கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் நண்பர் தேன்கூடு தளத்தையும் பொதுப்பயனுக்கு வெளியிட்டார்.
மேலும் படிக்க: http://kasiblogs.blogspot.com/2006/07/12.html

« Previous Page