தமிழ்மணம் : தொழில்நுட்ப தேவைகளும், புதிய வாய்ப்புகளும்
April 20, 2007 – 7:30 am by தமிழ்மணம்தமிழ்மணம் தமிழின் முதல் தானியங்கி வலைப்பதிவு திரட்டி என்பது மட்டுமில்லாது தமிழில் சிறப்பான தொழில்நுட்ப வசதிகளைப் பயனர்களுக்குக் கொடுக்கும் முக்கிய தளம் என்பதை பதிவர்கள் அறிவார்கள். உடனுக்குடன் பதிவுகளையும், பின்னூட்டங்களையும் வாசகர்களுக்கு கொண்டு செல்வது தமிழ்மணத்தின் முக்கியமான சேவை. கூகுள் போன்ற திரட்டிகளில் கூட நம் பதிவு தெரிவதற்குச் சில மணி நேரங்கள் தேவைப்படும் சூழலில் தமிழ் வலைப்பதிவுகள் உடனே வாசகர்களின் பார்வைக்கு செல்வதில் தமிழ்மணம் மகிழ்ச்சி கொள்கிறது. இவை தவிர தமிழ்மணத்தில் வரும் பதிவுகளை PDF கோப்பில் படிக்கும் வசதியும் தமிழ்மணத்தின் முக்கிய சேவைகளில் ஒன்று. பலருக்கு உதவி புரியாத தொழில்நுட்ப அலங்காரங்களை விட பலரும் நாடும் தொழில்நுட்பத்தை எளிமையான வடிவில் கொண்டிருப்பதே தமிழ்மணத்தின் சிறப்பு
தமிழ்மணத்தை திரு.காசி அவர்களிடம் இருந்து “தமிழ் மீடியா இண்டர்நேஷனல்” நிறுவனம் பெற்றுக் கொண்டதும் டி.எம்.ஐ நிறுவனத்தைச் சார்ந்த மென்பொருள் துறையில் ஆர்வம் உடைய சிலர் இணைந்து “டி.எம்.ஐ தொழில்நுட்ப குழு” என்பதனை உருவாக்கி, தமிழ்மணத்தைப் பராமரிக்கும் வேலையினை ஏற்றோம்.
தமிழ்மணத்தின் நிரலியினை முழுமையாக அறிந்து கொள்வது எங்களின் முதல் நோக்கமாக இருந்தது. குழுவில் இருந்த சிலர் மென்பொருள் துறையில் இருந்தாலும் தமிழ்மணம் உருவாக்கப்பட்ட நுட்பங்கள் பற்றி அறியாமல் இந்தப் பணியினை ஏற்கும் நிர்பந்தம் இருந்தது. அதோடு தமிழ்மணத்தினை ஏற்றுக்கொண்ட குறுகிய காலத்திலேயே ப்ளாக்கரில் ஏற்பட்ட மாற்றத்திற்கு ஏற்ப தமிழ்மணத்தின் தொழில்நுட்பத்தை மாற்ற வேண்டியிருந்தது. ஏற்கனவே இருந்த பதிவுகளுக்குப் பாதிப்பு வராமல் இம்மாற்றத்தை ஓரளவிற்கு வெற்றிகரமாகவே எதிர்கொண்டோம்.
இதற்கிடையில் பூங்கா வலையிதழுக்கு என்று ஒரு தளத்தினை உருவாக்கும் பணியும் தமிழ்மணம் தொழில்நுட்பக்குழுவிற்கு ஏற்பட்டது. பூங்கா ஒரு வார இதழாக வெளிவருவதால் வார இதழ் தளம் போன்று, பழைய இடுகைகளையும் வாசிக்கும் வசதி போன்றவைகளை ஏற்படுத்தும் தேவையும் தொழில்நுட்பக்குழுவிற்கு இருந்தது. பூங்கா வார இதழை ஜூம்லா என்ற கட்டற்ற மென்பொருள் மூலமாக அமைத்தோம்
தமிழ்மணத்தின் மீது முன்வைக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான விமர்சனங்களில் தமிழ்மணம் தொழில்நுட்ப குழு மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் முக்கியமானவை. தமிழ்மணத்தின் தொழில்நுட்ப மேம்பாடு குறித்து பலர் பல கேள்விகளை எழுப்பி இருந்தனர். தொழில்முறை மென்பொருள் வல்லுனர்களை உள்ளடக்கிய எங்கள் குழுவில் நிரலி எழுதுவதில் பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் தமிழ்மணம் போன்ற அதிக பயனர் பங்கு பெறும் வலைத்தளம் எதிர்கொள்ளும் சேவை வழங்கி (Server) குறித்த பிரச்சனையை நாங்கள் எதிர்கொண்டோம்.
தமிழ்மணம் கருவிப்பட்டை தமிழ்மணம் தளத்திற்கு பதிவர்கள் தங்கள் பதிவுகளை அறிவிக்கவும், பின்னூட்டங்களை தமிழ்மணம் முகப்புப் பக்கத்தில் உடனே தெரிவதற்கும் முக்கிய தொழில்நுட்பமாக விளங்குவதை பதிவர்கள் அறிவீர்கள். இந்தக் கருவிப்பட்டை தமிழ்மணம் தளத்தில் உள்ள சுமார் 1821 பதிவுகளிலும் இருப்பதாலும், ஒவ்வொரு பதிவும் Refresh செய்யப்படும் பொழுதும், இந்த கருவிப்பட்டை மூலம் புதிய பின்னூட்ட விவரம் (பின்னூட்ட எண்ணிக்கை மட்டும்) தமிழ்மணத்திற்கு வரும். இந்த சேவையின் காரணமாக தமிழ்மணம் Serverல் CPU Utilization மிக அதிகமாக இருந்தது. தமிழ்மணம் தளத்தினை மேலும் மேம்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதால் மேம்பட்ட வழங்கி ஒன்றில் தமிழ்மணத்தை நிறுவினோம். தளத்தைச் சோதனை செய்த பொழுது சரியாக வேலைசெய்த தைரியத்தில் தமிழ்மணம் தளத்தை மாற்றிய பொழுது தமிழ்மணம் தளமே தொங்கிப் போனது. பிறகு மறுபடியும் தமிழ்மணம் தளத்தை பழைய சர்வருக்கு மாற்றம் செய்து மறுபடியும் சோதனை முயற்சியாக தமிழ்மணத்தை வேறொரு மேம்பட்ட சர்வருக்கு மாற்றினோம். இதிலும் சில பிரச்சனை எதிர்கொண்டோம். பெரும்பாலான பிரச்சனைகளை சரி செய்து விட்டாலும் இன்னும் சில பிரச்சனைகளை அவ்வப்பொழுது எதிர்கொண்டே வருகிறோம். பதிவர்கள் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
டி.எம்.ஐ.ல் உள்ளோரின் முழு நேர பணி நிர்பந்தம், குடும்பம், பிற தேவைகள் போன்றவற்றுக்கு பிறகு வார இறுதியில் சில மணி நேரங்களே எங்களால் தமிழ்மணத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு செலவு செய்ய முடிகிற சூழலில், இந்த நிலையற்ற Server (Unstable Server) எங்களின் பெரும்பாலான நேரத்தை எடுத்துக்கொண்டதோடு மட்டுமில்லாமல் தமிழ்மணத்தின் புதிய மேம்பாடுகளையும் தாமதம் செய்தது.
இப்பொழுது ஓரளவிற்கு நிலையான நிலைக்கு வந்து இருப்பதால் எங்களால் தமிழ்மணம் மேம்பாட்டு வேலைகளில் கவனம் செலுத்த முடியும் என்று நம்புகிறோம்.
தமிழின் முதல் தானியங்கி வலைத்திரட்டியாக காசி அவர்களால் உருவாக்கப்பட்டு தமிழில் வலைப்பதிவுகள் செழிக்கச் செய்த தமிழ்மணம் இன்று மிக எளிமையாக பல திரட்டிகளை உருவாக்கி கொள்ளக்கூடிய சூழலில் எப்படியான மாற்றத்தினை உருவாக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. இன்று திரட்டி தொழில்நுட்பம் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டு வருகிறது. Web Services சார்ந்த தொழில்நுட்ப வாய்ப்புகளை நோக்கி வலைப்பதிவுலகம் நகர்ந்து வருகிறது. இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்ட யாகூ நிறுவனத்தின் “யாகூ பைப்ஸ்” இந்த திரட்டி தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய மைல்கல் என்று குறிப்பிடுகிறார்கள். இதன் மூலம் நிரலி எழுத வேண்டிய அவசியம் கூட இல்லாமல் ஒரு திரட்டியினை குறுகிய காலத்தில் தயாரித்து விட முடியும். என்றாலும் தமிழ்மணம் பல சேவைகளை தொடர்ந்து அளிக்க திட்டமிட்டு வருகிறது. சில திட்டங்கள் சோதனை கட்டத்திலும் இருக்கின்றன.
பின்னூட்டத்தினைத் திரட்ட கருவிப்பட்டையைத் தற்பொழுது பயன்படுத்தி வரும் நிலையில் அதற்கு மாற்று வழியாக பதிவுகளின் பின்னூட்ட ஓடை மூலம் பின்னூட்டங்களை திரட்டுவது தமிழ்மணத்தின் பரிசீலனையில் இருந்தாலும், இதில் சில பிரச்சனைகளும் உள்ளன. இவ்வாறான யோசனையை சில பதிவர்கள் கூடக் குறிப்பிடிருந்தார்கள். ஆனாலும் இவ்வாறு பின்னூட்டங்களை திரட்டும் பொழுது பின்னூட்ட ஓடையினைக் குறிப்பிட்ட இடைவேளைக்கு ஒரு முறை தான் திரட்ட முடியும். இதனால் பின்னூட்டங்கள் உடனே தமிழ்மணம் முகப்பு பக்கத்தில் தெரியாது. ஆனால் கருவிப்பட்டை மூலம் பின்னூட்டங்களை உடனே முகப்புப் பக்கத்தில் காட்டலாம்.
தமிழில் போட்காஸ்டிங் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு இன்னும் வளர்ச்சி பெறவில்லை. என்றாலும் போட்காஸ்டிங் திரட்டி என்பது போட்காஸ்டிங்கை அதிகளவில் அதிகரிக்க செய்யும் வாய்ப்புகளை உருவாக்கும் எனத் தமிழ்மணம் நம்புகிறது. வலைப்பதிவுகள் போன்று எளிமைப்படுத்தப்படாமல் இருப்பதும் போட்காஸ்டிங் அதிகளவில் இல்லாமைக்கு ஒரு காரணமாக இருக்க கூடும். இது குறித்த விடயங்களையும் தமிழ்மணம் யோசித்து வருகிறது
இவை தவிர தமிழ்மணம் பயனர்களுக்கு மேலும் பல மேம்பாடுகளை அளிக்கவும் திட்டம் உள்ளது.
தமிழ்மணம் திரட்டி 2004ல் தொடங்கப்பட்ட காலத்தில் தமிழ்மணம் திரட்டியில் நிறைய ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன என்பதை மூத்த வலைப்பதிவர்கள் அறிவார்கள். ஆனால் புதிய வலைப்பதிவர்களுக்கு அது தெரியவேண்டாமா? எனவே பழைய பதிவுகளை “பரண்” என்ற புதிய வடிவத்தில் கொண்டு வரும் பணியில் தமிழ்மணம் ஈடுபட்டுள்ளது. அது விரைவில் வெளியிடப்படும்.
தமிழ்மணம் பயனர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப தமிழ்மணத்தை Customize செய்து கொள்ளும் வசதியை அளிக்கவும் திட்டமிட்டு வருகிறோம். அந்தப் பணியும் தற்பொழுது தொடங்கப்பட்டு உள்ளது
தமிழ்மணம் பயனர்களும், பதிவர்களும் தங்களுடைய ஆலோசனைகளை தமிழ்மணத்திற்கு தொடர்ந்து அளிக்க வேண்டுமென விண்ணப்பித்துக்கொள்கிறோம். உங்களில் பலர் முன்வைத்த ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தும் சாத்தியங்களை நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம்
தமிழ்மணம் உங்களுக்கு ஒரு சுகமான வலைப்பதிவு அனுபவத்தைத் தொடர்ந்து கொடுக்கும் என்று நம்புகிறோம்
தொழில்நுட்ப குழு
டி.எம்.ஐ
10 Responses to “தமிழ்மணம் : தொழில்நுட்ப தேவைகளும், புதிய வாய்ப்புகளும்”
களத்துமேட்டின் பதிவுகள் எதுவும் இன்னும் தமிழ்மணத்தில் தடம் பதிக்கவில்லை. பலதடவை முயன்றும் பலன் கிடைக்கவில்லை.
படைப்புகள் யுனிகோடு தமிழில் எழுதப்படவில்லை அல்லது யுனிகோடு தமிழின் அடர்த்தி போதுமானதாயில்லை (இடையில் நிறைய ரோமன் எழுத்துக்கள் வந்திருக்கலாம்) இவ்வாறு இப்போது பதில் வருகின்றது.
நான் ஈகலப்பை யுனிகோட் பாவிக்கின்றேன்.
எனது தடங்கலை நிவர்த்தி செய்யுமா தமிழ்மணம்.
By களத்துமேடு on Apr 20, 2007
உங்கள் முயற்சிகளுக்கும், உழைப்புக்கும், எவ்வகையிலும் சுய ஆதாயமற்ற அக்கறையுடனான மொழிப்பணிக்கும் ஒரு பயனாளி என்ற முறையில் நன்றிகள்.
///தமிழ்மணம் திரட்டி 2004ல் தொடங்கப்பட்ட காலத்தில் தமிழ்மணம் திரட்டியில் நிறைய ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன என்பதை மூத்த வலைப்பதிவர்கள் அறிவார்கள். ஆனால் புதிய வலைப்பதிவர்களுக்கு அது தெரியவேண்டாமா? எனவே பழைய பதிவுகளை “பரண்” என்ற புதிய வடிவத்தில் கொண்டு வரும் பணியில் தமிழ்மணம் ஈடுபட்டுள்ளது. அது விரைவில் வெளியிடப்படும்.///
வெகுநல்ல யோசனை இது. அதற்கான தேவை இங்கு நிறையவே உள்ளது. உண்மைத் தேடலுடன் புதிதாக நுழைபவர்க்கு அது உதவியானதும்கூட.
By selvanayaki on Apr 20, 2007
பாட்பரப்புத் திரட்டி ( podcasting aggregator
), தன் விருப்பமாக்கல் முயற்சிகள் நன்று. பரண் என்பது முகப்புப் பக்கத்தையே முன்பு ஒரு நாள் இருந்தது போல் காட்டும் முயற்சியா? இது சரியாகப் புரியவில்லை. இன்னும் விளக்கலாம்.
வாழ்த்துக்கள்
By ரவிசங்கர் on Apr 20, 2007
Your service is very valuable to Tamil bloggers.
I’m running a Tamil blogging service at http://adadaa.com/
Please note that this is in very beta stage.
There is always a problem to list posts from WordPress to Thamizmanam. Now I installed a Thamizmanam toolbar by Kannan
http://kannan.jumbledthoughts.com/index.php/thamizmanam-plugin-updated/
I noticed few small problems.
1) If I named the post in Tamil characters, the thamizmaNam toolbar doesn’t appear. But the post do appear in the TM site.
ex: http://1padam.adadaa.com/2007/02/20/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%af%e0%af%8d/
toolbar appeared ex:
http://1padam.adadaa.com/2007/01/08/mann/
Even this doesn’t aggregate comments. If you view the source code, the necessary syntax for Thamizmanam aggregation is there. So I have no more clues how to fix this problem as I don’t know how the Thamizmanam aggregates [technically].
I’m willing to share technical details and willing to allow testing on
http://1soothanai.adadaa.com/
[Edited Username Password — Thamizmanam]
Thank you
By skcsknathan001 on Apr 20, 2007
நன்றி செல்வநாயகி,
எனது வினாவுக்கு தங்களின் பதில் ஏற்புடையதாகவில்லை, இருப்பினும் சேவை நோக்கமே பிரதானம் என்பதால் தமிழ்மணம் களத்துமேட்டின் பதிவுகளை நிச்சயம் ஏற்றுக்கொள்ளும் என நினைக்கின்றேன்.
புதிய களங்கள் தமிழ்மணத்தின் பெருமையை அறிவதெப்போது? புதிய பரிமாணத்துக்காகக் காத்திருக்கின்றேன்.
By களத்துமேடு on Apr 21, 2007
களத்துமேடு,
அடடா, உங்களின் மறுமொழிக்கு அடுத்து நான் இட்டவுடன் அது நான் உங்களுக்கு அளித்த பதில் என நினைத்துக்கொண்டீர்களா? இல்லை, நானும் அது தமிழ்மணத்துக்குச் சொன்னதுதான்.
விரைவில் உங்கள் தடங்கல்கள் சரியாகி உங்கள் எழுத்துக்களைப் படிக்க ஒரு சகபதிவராய் நானும் ஆவலுடன் இருக்கிறேன். வாழ்த்துக்கள்!
By selvanayaki on Apr 21, 2007
தமிழ் வலைப்பதிவுகளுக்கான yahoo pipes -
http://pipes.yahoo.com/pipes/pipe.info?_id=3OV1O77w2xG92ng1yzUFzw
தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகள் யாவும் வேற வேற feed data formatல் பதிப்பிப்பதால் இந்த pipeன் திறம் இப்போது மட்டுப்படுத்தப்பட்டதே
By ரவிசங்கர் on Apr 24, 2007
தங்களின் கவனத்திற்கு… தமிழ்மணம் IE-ல் பார்க்கப்படும் பொழுது CPU-ன் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. பெரும்பாலும் CPU உபயோகம் 70-90 சதவீதமாக உள்ளது.
By Ramakrishnan on May 4, 2007
thanks for letting us know. the problem has been rectified
By தமிழ்மணம் on May 4, 2007