Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /homepages/21/d718806694/htdocs/tm_blog/wp-includes/pomo/plural-forms.php on line 210
டி.எம்.ஐ நிறுவனமும் தமிழ்மணத்தின் தொடரும் பயணமும் : தமிழ்மணம்

டி.எம்.ஐ நிறுவனமும் தமிழ்மணத்தின் தொடரும் பயணமும்

April 17, 2007 · Posted in சிறப்பிடுகைகள் 

தமிழ் மீடியா இண்டர்நேஷனல் எல். எல். சி.

(முன் குறிப்பு: இந்த வாரம் தமிழ் மண நட்சத்திரம் யார் என்று ஆவலுடன் படிக்க வந்திருக்கும் உங்களுக்கு டி.எம்.ஐ நிறுவனமே அந்த இடத்தை எடுத்துக் கொண்டது வித்தியாசமாக இருக்கலாம். இந்தப் பதிவைப் படிக்கும் முன்பாக இதற்கு முந்தைய பதிவான காசியின் மீள்பதிவைப் படிக்க வேண்டுகிறோம். குறிப்பாக பாகம் நான்கில் சொல்லப் பட்டதைப் படியுங்கள். நட்சத்திரத் தேர்வை குறை கூறி எழுந்த இந்த வார சர்ச்சைக்கும் காசி குறிப்பிட்டிருந்ததற்கும் எந்த வேறுபாடுமில்லை என்பதுதான் மிகப் பெரிய உண்மை. தமிழ்ப் புத்தாண்டு வாரத்தில் நட்சத்திரப் பதிவராக இருக்கக் கோரி பலரை அணுகிய போது, சொல்லி வைத்தாற்போல அனைவருக்குமே இந்த வாரம் வசதியாக அமையவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. வேறு சில சமயங்களில் ஒரே வாரத்தில் ஒருவருக்கு மேல் முன்வந்ததும் உண்டு என்பதால் இதை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொருவரும் தனக்குத் தோன்றியதை தான் விரும்பிய நேரத்தில் எழுதவே வலைப்பதிவு என்கிற பொழுது நட்சத்திரப் பதிவராக குறிப்பிட்ட வாரத்தில் எழுதவேண்டும் என்று பணிப்பதே முரண்நகைதான். எனவே தமிழ்மணம் நிர்வாகமே இந்த நட்சத்திர வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விழைந்து பதிவர்களுடன் நேரடியாக உறவைப் பேணும் விதமாக இவ்வாரம் தன் நோக்கங்களையும், பணிகளையும், எதிர்காலத் திட்டங்களையும் பகிர்ந்து கொள்கிறது.)

காசி தமிழ்மணம் தளத்தையும் மென்பொருளையும் விற்பனைக்கு அறிவித்த செய்தியை அறிந்து மகிழ்ச்சியுற்றவர்களை விட அதிர்ச்சியுற்றவர்களே அதிகம். ஏனெனில் “பொதுநல நோக்கில் விருப்பு வெறுப்பின்றி இலவசமாகவே” ஒரு சேவையை தமிழர்களுக்கு அளிக்க முனைந்ததை தமிழ்ஊடக உலகம் எப்படி அணுகிய போதும் தமிழ் வலைப்பதிவுகள் நூற்றுக்கணக்கில் பெருகிடவும், உலகளாவிய தமிழ் வழி இணையக் கருத்தாடல் வலுப்பெறவும் உதவியதை பதிவர்கள் அறிவர். (மக்களது அன்றாடப் பயனுக்கேற்றவாறு புதுப்புது இணைய உத்திகளை கூகுள் அறிமுகப் படுத்துவது போல்) தமிழ் மணத்தை மென்மேலும் தொழில் நுட்ப ரீதியில் மெருகூட்டி உலகத் தமிழர்களுக்கான ஒரு பயனுள்ள தளமாகக் கொண்டு வரவேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றிக் கொண்டிருந்த காசியின் கவனத்தைச் சிதறடிப்பதுதான் வலைப் பதிவுகளில் சிலரால் நடத்தப் பட்டுக் கொண்டிருந்தது. இதுதான் காசியின் விற்பனை முடிவுக்குக் காரணமாக இருக்கும் என்று நினைத்து வேதனையடைந்த வட அமெரிக்காவாழ் வலைப்பதிவர்கள் சிலர் ஒன்று கூடி காசியே தமிழ் மணத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும், அதற்கான உதவிகளைச் செய்ய முன் வருவதாகத் தெரிவித்தனர். ஆனால் தன்னுடைய சொந்த தொழில் நிமித்தமாக காசி இந்த முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டபின் உதயமானதுதான் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் எல். எல். சி. (டி.எம்.ஐ).

டி.எம்.ஐ நிறுவனம் திடீரென்று உருவாக்கப் பட்டிருந்தாலும் அதன் கீழ் இணைந்த நாங்கள் அனைவரும் வெவ்வேறு வகையான கல்விஅறிவும், அனுபவமும், செயல் முனைப்பும் கொண்டிருந்தாலும் ஒரு கருத்தில் ஒருமித்திருந்தோம். அதுதான் எங்கள் அமைப்பின் குறிக்கோளான, “அனைத்துத் தரப்புத் தமிழர்களும் சந்தித்து வரும் பொருளாதார, சமூக-அரசியல், கல்வி மற்றும் சுகாதாரப் பிரச்னைகள் குறித்த அறிவையும், விழிப்புணர்வையும் இயன்றவரை உலகளாவிய தமிழ் மக்களிடம் கொண்டு செல்லுதல்”. கடந்த எட்டு மாதங்களில் இந்தக் கருத்தை மையமாக வைத்து டி.எம்.ஐ. நிறுவனத்தில் உள்ளவர்கள் பணியாற்றி வருகிறோம். இருப்பினும் முன்னெடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் எங்களுக்குள் தீர ஆராய்ந்துதான் வைக்கிறோம்.

மேலும் தொழில் நுட்ப ரீதியில் காசி ஏற்கனவே கட்டியுள்ளதைப் புரிந்து கொள்ளவும், ஏற்கனவே தனியொருவராக அவர் செய்துவந்த நடைமுறையை ஆவணப்படுத்தித் தொய்வில்லாமல் கொண்டு செல்லவும் நிறைய அவகாசம் தேவையாயிருந்தது. அதனாலேயே பெருகி வரும் தமிழ்வலைப்பதிவுகளுக்கான புதிய தேவைகளை நாங்கள் உணர்ந்தும், அதற்கான தொழில் நுட்ப உத்திகளை நாங்களும், பல வலைப்பதிவர்களும் ஏற்கனவே பலமுறைகள் அறிந்து சொல்லியும் உடனடியாகச் செய்ய இயலவில்லை. ஆனால் வலைப்பதிவர்கள் அனைவரும் விரும்பும் அந்தப் பாதைகளில் பயணிக்க எல்லா முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம் என்று உறுதியளிக்கிறோம். அவை பற்றிய விளக்கமான தகவல்கள் அடுத்து வரும் பதிவுகளில் வெளிவரும். அவற்றினையொட்டி பதிவர்களது ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

அடுத்தபடியாக காசி தன் வரலாற்றுப் பதிவுகளில் குறிப்பிட்ட அக்காலத்தில் இருந்த தனிப்பதிவர் அரசியல், பதிவர் குழு அரசியல், தமிழர் சமூக நுண்ணரசியல், இந்திய, தமிழக மற்றும் ஈழப் பேரரசியல் எல்லாமே இன்றும் இருந்து வருகின்றன. அவற்றுக்குள் நடக்கும் சண்டைகளும், சேற்றடிப்புகளும் தமிழ் மணத்தின் மீது கொட்டப் படுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றோடு சேர்த்து, எங்கள் நிறுவனத்தில் உள்ளவர்கள் தங்கள் பதிவுகளிலும், பிற இடங்களிலும் முன் வைத்த/வைக்கும் தனிப்பட்ட கருத்துகளின் மேல் எழும் கோபத்தை தமிழ் மணத்தின் மீது கொட்டுவதும் வாடிக்கையாகி விட்டது. ஆனால் இவற்றையெல்லாம் கடந்து செல்லும் அனுபவத்தை நாங்கள் பெற்று வருகிறோம். பதிவர்களில் ஒரு சிலரே (குறிப்பிட்ட மதம், நாடு, சாதி, அரசியல் என்றில்லாமல்) இப்படி நடந்து கொண்டாலும், பெரும்பாலான பதிவர்கள் (திரும்பவும் குறிப்பிட்ட மதம், நாடு, சாதி, அரசியல் என்றில்லாமல்) கண்ணியமான முறையில் கருத்துவேறுபாடுகளையும், பரிந்துரைகளையும் எங்களுக்கு வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர். டி.எம்.ஐ. நிறுவனத்தின் துணைக்குழுக்கள் பாரபட்சமில்லாமல் இயன்ற அளவுக்கு தங்கள் பணியை உடனுக்குடன் செய்ய முயன்று வருகின்றனர். தமிழ்மணத்தின் பல்வேறு செயல்பாடுகள் குறித்த பதிவுகள் இனிவரும் நாட்களில் வெளியிடப்படும். அவை தொடர்பான உங்களது ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

இறுதியாக டி.எம்.ஐ. நிறுவனத்தின் புதிய முயற்சியான பூங்கா வலையிதழையும் குறிப்பிட வேண்டும். தமிழ்மணத்தில் திரட்டப்படும் வலைப்பதிவுகளில் இருந்து புதிய பார்வைகளையும் பரந்துபட்ட சிந்தனைகளையும் உயிர்ப்பான மொழியிலே வெளிப்படுத்தும் படைப்புகளை அனுமதி பெற்றுத் தேர்ந்தெடுத்து வாரந்தோறும் தொகுப்பது பயனானதெனக் கருதி, “பூங்கா” வலையிதழைத் தமிழ்மணம் செப்டம்பர் 2006 இலே ஆரம்பித்தது. இக்கவனிப்பினூடாக தமிழ்ப்பதிவர்களின் பல்வேறு துறைநிபுணத்துவத்தை அடையாளங் கண்டு பதிவு செய்யத்தூண்டவும் மொழிவெளிப்பாட்டின் பல்வேறு கலைப்பரிமாணங்களைப் பரிசோதனை செய்ய ஊக்குவிக்கவும் சமூக அக்கறையுள்ளவர்களை ஒன்றிணைக்கவும் வேண்டிய தொடர்ச்சியான தேவையை நிறைவேற்றலாமென டி.எம்.ஐ. திடமாக நம்புகிறது. இதுவரை முப்பத்தொரு இதழ்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழ்மணம் போலத் தானியங்காமல் தனித்து ஓர் ஆசிரியர் குழுவின் கீழே இயங்கும் பூங்காவுக்காக இடுகைகள் தெரிவு செய்யப் படும் பொழுது சிந்தனையைத் தூண்டும் எல்லா இடுகைகளையும் பாரபட்சமின்றி தேர்வு செய்து வந்தாலும், சில நேரங்களில் சில நல்ல இடுகைகள் நேரமின்மையால் விடப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு. ஓரிரு நேரங்களில் பதிவர்கள் சுட்டிக் காட்டிய பொழுது அதைக் கவனத்தில் கொண்டு தேர்வு முறையை மேலும் செம்மைப் படுத்தி வந்திருக்கிறோம். பூங்காவின் எதிர்கால விரிவினையிட்டும் அதிலே வாசகர்களின் பங்கினையிட்டும் பூங்கா ஆசிரியர்குழுவும் இந்நட்சத்திர வாரத்திலே இங்கே பதிவு செய்யும்.

வலைப்பதிவர்களாகிய உங்களுக்கு எமது நன்றியையும், புத்தாண்டு வாழ்த்துக்களையும் தமிழ்மணம் நட்சத்திரமாக ஒளிரும் இந்நேரத்தில் தெரிவித்துகொள்வதோடு தொடர்ந்து உங்கள் புரிதலையும், ஆதரவையும் வேண்டுகிறது.

Comments

14 Responses to “டி.எம்.ஐ நிறுவனமும் தமிழ்மணத்தின் தொடரும் பயணமும்”

 1. துளசி கோபால் on April 17th, 2007 9:35 pm

  தமிழ்மண நட்சத்திரம் தமிழ்மணமேதான்:-)

  நட்சத்திரத்துக்கு வாழ்த்து(க்)கள்.

 2. இலவசக்கொத்தனார் on April 17th, 2007 9:46 pm

  //ஆனால் வலைப்பதிவர்கள் அனைவரும் விரும்பும் அந்தப் பாதைகளில் பயணிக்க எல்லா முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம் என்று உறுதியளிக்கிறோம். அவை பற்றிய விளக்கமான தகவல்கள் அடுத்து வரும் பதிவுகளில் வெளிவரும். அவற்றினையொட்டி பதிவர்களது ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.//

  இந்த நம்பிக்கை இருப்பதால்தான் நாங்களும் கருத்துக்களை தொகுத்து வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து பேசி உங்களிடம் அளிக்கலாம் என்ற எண்ணத்தில்தான் இந்த பதிவு இட்டுள்ளோம்.

 3. யெஸ்.பாலபாரதி on April 17th, 2007 10:33 pm

  அட!

  வாழ்த்துக்கள். தமிழ்மணம் குறித்தான FAQ மாதிரியான விசயங்களை இந்த வாரம் பதிவுகளாக வருமா?

 4. kumar on April 17th, 2007 10:40 pm

  பிரகாசிக்க வாழ்த்துக்கள்.

 5. இளா on April 18th, 2007 1:21 am

  நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள்! இவை ஒரு விளக்கமாகவும் ஒரு சிலருக்கு புரிதலுக்காகவும் இருக்கும்

 6. உண்மைத் தமிழன் on April 18th, 2007 2:41 am

  தமிழ்மணத்திற்கு எனது வாழ்த்துக்கள்.. எங்களைப் போன்ற புதியவர்களுக்காக தொழில் நுட்ப உதவிகளையும் வழங்க வேண்டும்.

 7. ஜெஸிலா on April 18th, 2007 2:54 am

  ஜொலி ஜொலிக்க வாழ்த்துக்கள்.

  //அவை பற்றிய விளக்கமான தகவல்கள் அடுத்து வரும் பதிவுகளில் வெளிவரும். // காத்திருக்கிறோம்.

 8. கரு.மூர்த்தி on April 18th, 2007 12:41 pm

  என்ன சமாதானம் சொன்னாலும் நேசகுமாரை நீக்கி உங்கள் அரிப்பை தீர்த்துகொண்டது உண்மைதான்.

 9. aravindan neelakandan on April 18th, 2007 12:52 pm

  //டி.எம்.ஐ. நிறுவனத்தின் துணைக்குழுக்கள் பாரபட்சமில்லாமல் இயன்ற அளவுக்கு தங்கள் பணியை உடனுக்குடன் செய்ய முயன்று வருகின்றனர்.//தன் நெஞ்சு அறிவது பொய் அற்க அப்படீன்னு உங்களுக்குதான் திருவள்ளுவர் சொன்னாரோ!

 10. Sivabalan V on April 18th, 2007 6:18 pm

  நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்

  தமிழ் மணம் உலகெங்கும் பரவிட தாங்கள் செய்துவரும் பணி அளவிடமுடியாதது.. தொடரட்டும் உங்கள் மேலான பணி..

 11. ஜோ on April 18th, 2007 8:28 pm

  போற்றுவோர் போற்றட்டும்
  புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்
  தொடரட்டும் உம் பணி!

 12. செந்தழல் ரவி on April 18th, 2007 11:43 pm

  நட்சத்திர தேர்வுமுறை குறித்தான விளக்கம் நிறைவளிக்கவில்லை….

  பல பதிவர்களை தங்களது ‘தேர்வர்’ அனுகவில்லை என்பதே நிஜம்.

  இதுகுறித்தான மேல் விவாதத்திலும் ஈடுபட விரும்பவில்லை…

  நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள் !!!

 13. dharumi on April 19th, 2007 12:32 am

  தமிழ்மண நிர்வாகக் குழுவிற்கு – பாராட்டுக்களும், நன்றியும்.

  மேலும் வளர வாழ்த்துக்கள்…

 14. மாஹிர் on April 19th, 2007 1:14 pm

  நட்சத்திர வாழ்த்துக்கள். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  மாஹிர்

Leave a Reply