Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /homepages/21/d718806694/htdocs/tm_blog/wp-includes/pomo/plural-forms.php on line 210
தமிழ் வலைப்பதிவுகளும், தமிழ்மணமும் – ஒரு வரலாற்றுப் பார்வை : தமிழ்மணம்

தமிழ் வலைப்பதிவுகளும், தமிழ்மணமும் – ஒரு வரலாற்றுப் பார்வை

April 15, 2007 · Posted in சிறப்பிடுகைகள் 

தமிழ் வலைப்பதிவுகளும், தமிழ்மணமும் – ஒரு வரலாற்றுப் பார்வை

‘தமிழ் மணம்’ காசி ஆறுமுகம்

பாகம் ஒன்று
தமிழ் இணைய உலகில் என் அனுபவம் சுமார் 3 ஆண்டுகளே. அதற்குள் பல அனுபவங்கள். என் பணி சூழலால் இணையத்துடனான என் தொடர்பு சென்ற மாதங்களில் குறைந்துகொண்டே வருகிறது. எனவே என் அனுபவங்களை சுருக்கமாகவேனும் ஓரிடத்தில் எழுதி வைப்போம் என்று தோன்றியது. அதன் விளைவே இந்தக் குறுந்தொடர்.
மேலும் படிக்க: http://kasiblogs.blogspot.com/2006/07/1.html

பாகம் இரண்டு
எப்படியோ விழுந்து எழுந்து, நியூக்ளியஸ் பொதியின் அதிகாரப்பூர்வ தமிழ்ப் பதிப்பு வெளியாக என் பங்களிப்பை அளித்தேன். இந்த நியூக்ளியஸ் தமிழாக்க முயற்சிகளுக்கான சோதனைக்களமாக எனக்கு ஒரு இணைய வழங்கிச் சேவை தேவைப்பட்டது. 1and1.comஎன்ற சேவை நிறுவனம் இலவசமாக அளித்த வழங்கியின்மூலமே இது சாத்தியப்பட்டது. சேவையை தனித்துவமிக்க ஒரு ஆள்களப்பெயருடன் (damain name) பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று யோசித்ததன் விளைவே ‘தமிழ்மணம்’ என்ற பெயர். தமிழ் வலைப்பூ மணம் வீசும் இடம் என்ற பொருளில் வைத்ததுதான் இந்தப் பெயர். பட்டியல்-நியூக்ளியஸ்-வலைப்பூ-செய்தியோடை என்ற இந்த சூழலே என்னை ஒரு புதுமையான வலைப்பதிவு தளத்தை வடிவமைக்கத் தூண்டியது. இன்று தமிழ்மணத்தில் பார்க்கும் பெரும்பாலான அம்சங்களும் அன்றே யோசித்திருந்தவையே.
மேலும் படிக்க: http://kasiblogs.blogspot.com/2006/07/2.html

பாகம் மூன்று
வெளியிடும்போது புது ஆள்களப்பெயரோடு வெளியிட எண்ணி துண்டுபோட்டுவைத்த பெயர்தான் ‘நந்தவனம்.காம்’. ஆனால் நானாக வெளியிடும் முன்பே பலரும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதால் தற்காலிகமாக இயங்கிவந்த ‘தமிழ்மணம்.காம்’ என்பதையே நிரந்தரமாக்கிவிட்டேன். ‘இந்த இணைய இதழில் எழுதுகிறேன்’ என்பதுபோல ‘தமிழ்மணத்தில் எழுதுகிறேன்’ என்று சொல்லுமளவுக்குத் தமிழ்மணமும் தமிழ்வலைப்பதிவுலகமும் ஒன்றாகிப் போனது. இதனால் பெருமை இருந்தாலும் பல சிக்கல்களும் இருந்தன.
மேலும் படிக்க: http://kasiblogs.blogspot.com/2006/07/3.html

பாகம் நான்கு
நிர்வாகப் பணிக்கு மதி, செல்வராஜ், அன்பு செழியன் ஆகியோர் (பரி பின்னாளில் நிர்வாகத்தில் பங்கெடுத்தார்) முன்வந்தனர். முதல் கட்டப்பணியாக இந்தவார நட்சத்திரத்தைத் தேர்ந்தெடுத்து ஏற்பாடு செய்யும் பணி நான்கு வார சுற்றாக நால்வரிடமும் அளிக்கப்பட்டது. இந்த நட்சத்திரமாகட்டும் வலைப்பூ வாத்தியாராகட்டும் நடத்துவதில் உள்ள சிரமம் நடத்தியவர்களுக்கே தெரியும். பலரும் ‘இவரைப் போய் ஏன் போட்டார்கள், இன்னும் சிறப்பாக எழுதும் அவரை ஏன் போடவில்லை?’ என்றெல்லாம் பேசலாம். ஆனால் உண்மையில் இந்த வாரம் நீங்கள் இருக்கத்தயாரா என்று கேட்டால் பாதிப்பேர் நான் அந்த வாரம் ரொம்ப பிசி என்பார்கள். எதையும் விமர்சிப்பது எளிது செய்வது எத்தனை கடினம் என்பது இந்த அனுபவங்களில் கிடைத்த பாடம்.
மேலும் படிக்க: http://kasiblogs.blogspot.com/2006/07/4.html

பாகம் ஐந்து
தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த முயற்சிகள் என்றால் மதி/சுரதாவின் உதவிப் பக்கங்கள், வளைகுடாப்பகுதியில் வசித்த உமர் தயாரித்து அளித்த தேனீ இயங்கு எழுத்துரு, மலேசியாவிலிருந்த முகுந்த் தலைமையில் தமிழா குழு அளித்த இ-கலப்பை தட்டச்சு செலுத்தி, மறுமொழியிடலை எளிதாக்கிய ஜெர்மனிவாழ் சுரதாவின் பொங்குதமிழ் ஜாவாஸ்க்ரிப்ட் நிரல் ஆகியனவற்றைச் சொல்லலாம். முக்கியமாக தேனீ இயங்கு எழுத்துரு தயாரிக்கையில் உமர் கூடுதல் முயற்சி எடுத்து எல்லாத் தளங்களிலும் அது இயங்குமாறு செய்திருந்தது ஒரு சிறப்பு. இவை அனைத்தும் பொதுநல நோக்கில் விருப்பு வெறுப்பின்றி இலவசமாகவே அளிக்கப்பட்டன. ஆகவே, இவற்றின் நீட்சியாக தமிழ்மணம் சேவையும் இலவசமாகவே என்றும் அளிக்கப்பட வேண்டும் என்பதை ஒரு அடிப்படைக் கொள்கையாகக் கொண்டேன்.
மேலும் படிக்க: http://kasiblogs.blogspot.com/2006/07/5.html

பாகம் ஆறு
தானியங்கிக் கருவியே தற்போக்காக எடுத்த (Randomly picked)10 பதிவுகளை பட்டியலில் காட்டும்போதும் ‘என் பெயர் வருவதேயில்லை, காசி தனக்குப்பிடித்த பெயர்களை மட்டும் முன்னிறுத்துகிறார்’ என்றும் சிலர் குறைபட்டுக்கொண்டபோது இங்கே எத்தகைய ‘தன்னை மையப்படுத்தும், அவநம்பிக்கை நிறைந்த’ சூழல் நிலவுகிறது என்று புரிந்தது. அதன் பின்னர் அதற்கும் ஒரு தீர்வு காணப்பட்டாலும், இணையத்தில் உள்நுழை/மின்னஞ்சல்-அழைப்பு அல்லாத நேரடி வாக்கெடுப்பு முறைகள் எதிலுமே முற்றிலும் நம்பகமானது என்று எதுவுமில்லை என்பதைப் புரிந்துகொள்ளாமல் ஏசுவது இன்றும் தொடர்கிறது. தன் இடுகைகள் பரிந்துரைக்கப்படாததைப் பொறுக்க முடியாதவர்கள், தங்கள் கருத்துக்கு எதிரானவை பரிந்துரைக்கப்படுவதை சகிக்காதவர்கள் இதை ஏற்றுக்கொள்ளாததும் தொடர்கிறது.
மேலும் படிக்க: http://kasiblogs.blogspot.com/2006/07/6.html

பாகம் ஏழு
பயனர்கள் தமிழ்மணம் தள இயக்கம் பற்றிய தங்கள் கருத்துக்களை/கேள்விகளை விவாதிக்க ஒரு மேடை வேண்டும் என்பதால் முதலில் குறைந்த வசதிகளுடன் ஒரு மன்றம் அமைக்கப்பட்டது. இந்த மன்றம் என்பது பயனர்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் இடமாக இருக்கவேண்டும், அவர்களால் தீர்வு சொல்ல இயலாத பிரச்னைகளுக்கு தமிழ்மண நிர்வாகிகளோ, நானோ பதிலளிக்குமாறு இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது நிறைவேறவில்லை. நம் பயனர்கள் இதை 1-800-… வாடிக்கையாளர் சேவை மையமாகத் தான் பார்த்தார்கள். முழுக்க விளக்கப்பட்ட பிரச்னைகளுக்கும் எதையுமே வாசிக்காமல், தாங்களும் யோசிக்காமல் கேள்விகள் கேட்கப்படுவது வாடிக்கையாக நடக்கிறது. பல கேள்விகளுக்கும் தெளிவாக விளக்கப்பட்ட உதவிப்பக்கங்கள் உள்ளன. அதிலும் விடுபட்டிருப்பின், பதில் தெரிந்த 100 பேர் இங்கே இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் பதில் சொல்வதில்லை. நூற்றில் ஒருவர் சிரமமெடுத்து சில சமயம் சொல்லுவார். அவரும் சில நாளில் மனம் சோர்ந்தோ என்னவோ மேலும் அதைத் தொடர முடியாமல் விட்டுவிடுவார். ஆனால் ‘கேட்டேன், பதிலில்லை’ என்று ஒற்றைத்தனமாக தமிழ்மணம் சேவையை மட்டந்தட்டிப் பேசி, அதற்கும் ஒரு மடலோ, இடுகையோ எழுதிவிட்டுப் போய்க்கொண்டே இருப்பதைப் பார்த்து மனம் நொந்ததும் உண்டு. இன்னும் சில பெரிய மனிதர்கள் மன்றத்தில்கூட கேட்காமல் தங்கள் பதிவிலேயே எழுதிவிட்டு தமிழ்மணம் பதில் சொல்லவேண்டும் என்று எதிர்பார்த்து, பதில்வராததால் கோபித்ததும் உண்டு.
மேலும் படிக்க: http://kasiblogs.blogspot.com/2006/07/7.html

பாகம் எட்டு
நவன் பகவதி, சாகரன், சத்யராஜ்குமார், என்று பலர் சிறுசிறு ஆலோசனைகளை வழங்கி தமிழ்மணம் மேம்பட உதவியிருக்கிறார்கள். (இன்னும் கூட சிலரின் பெயர் விட்டுப்போயிருக்கலாம், முடிந்தவரை நினைவிலிருந்து எழுதுகிறேன்.) பலர் தனிப்பட்ட முறையில் நேரில் சந்திக்கும்போதும், மின்னஞ்சல் வழியாகவும் ‘தமிழ்மணம் ஒரு சாதனை’ என்றெல்லாம் பாராட்டியிருக்கிறார்கள். ஆனாலும் எந்த பிரபல தினசரி/வார/மாத இதழிலோ, சிற்றிதழிலோ, திசைகள் தவிர பிற இணைய இதழிலோ வலைப்பதிவுகள் என்ற ஒரு வடிவத்தின் இருப்பையோ வளர்ச்சியையோ அவற்றுக்கு தமிழ்மணம் போன்ற முயற்சிகளின்மூலம் கிடைக்கும் உத்வேகத்தையோ குறிப்பிட்டு யாரும் எழுதியதில்லை.
மேலும் படிக்க: http://kasiblogs.blogspot.com/2006/07/8.html

பாகம் ஒன்பது
ஊருக்குத் திரும்பும்முன்பே ஆட்சேபகரமான மறுமொழிகள் பிரச்னை ஆரம்பமாகிவிட்டதென நினைவு. ஆனாலும் அதுபற்றி தமிழ்மணம் செய்ய ஒன்றுமில்லை. அனைவரும் ப்ளாக்கர்.காம்-க்கு இதன் தீவிரத்தைக் குறிப்பிட்டு எழுதினால் அவர்கள் ஏதேனும் செய்யலாம் என்ற ஒன்று மட்டுமே சொல்லமுடிந்தது. அன்று வலைப்பதிவர் சந்திப்புக்கு சென்னை வந்திருந்த இன்னொரு நண்பர் தமிழ்மணம் திரட்டி இயங்கும் நுட்பம் குறித்து சில கேள்விகளை என்னுடன் தனியாகக் கேட்டுக்கொண்டார். அதன் பின்னரும் அஞ்சல் தொடர்பில்/தொலைபேசியில் எங்களுக்குள் பரிமாற்றம் இருந்தது. அவர் இன்று தேன்கூடு நடத்தும் அன்பர்.
மேலும் படிக்க: http://kasiblogs.blogspot.com/2006/07/9.html

பாகம் பத்து
இதுபோன்ற சர்ச்சைகள் வரும்போது தானாக முன்வந்து பலர் தங்கள் கருத்துக்களை எழுதுவதும், அவர்கள் சொல்வது என்னையோ தமிழ்மணத்தையோ ஆதரிக்கும் ரீதியில் இருந்துவிட்டால் அவர்களை ‘என் அடியாட்கள்/அல்லக்கைகள்’ என்று குறிப்பிட்டு, ‘எது கேட்டாலும் இந்த ஆள் பேசமாட்டானாம், அவனின் அடியாட்கள் பேசுவார்களாம்’ என்று சிலர் எழுதுவதும் பலமுறை கண்டிருக்கிறேன். எந்த அணியிலும் சேர விரும்பாத, யாருடனும் தொலைபேசியில் மட்டுமல்லாமல், மின் அரட்டையிலும் கூடத் தொடர்புகொள்ள விரும்பாத, இலக்கிய, சிற்றிதழ் குழுக்களை அறிந்தும்கூட இராத எனக்கு இத்தகைய தன்னார்வலர்களின் ஆதரவு ஒன்றே ஊட்டம். அது மட்டும் இல்லையென்றால் இந்த தமிழ் இலக்கிய அரசியல் சூழல் புரிந்த அன்றே தமிழ்மணத்தைத் தூக்கிக் கடாசிவிட்டுப் போயிருப்பேன்.
மேலும் படிக்க: http://kasiblogs.blogspot.com/2006/07/10.html

பாகம் பதினொன்று
இக்காலத்தில் தமிழ்மணத்தின் வாசகர் வருகையும் குறைய ஆரம்பித்திருந்தது. தமிழ்மணத்தை வாசிக்கும்போது உருப்படியான பதிவுகள் கிடைப்பது குறைந்துகொண்டு வந்ததும் இதற்கு ஒரு காரணம் என்பதை உணர்ந்தேன். வகைப்படுத்தல் போன்ற நுட்பத்தீர்வுகள் வாசகர் வருகையை அதிகரிக்க வாய்ப்பிருப்பினும், நிரல் மேம்படுத்த எனக்கு வசதிப்படவில்லை. உடனடித் தேவையாக ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாக உணர்ந்தேன். இருக்கும் பட்டியலில் சிலவற்றை நீக்கி பட்டியலை சிறிதாக்கினால் ஒழிய மொத்த தமிழ்மண இயக்கமுமே சீர்கெடும் என்ற நிலை. ஆகவே ஒரு தவிர்க்க முடியாத இடைக்கால நடவடிக்கையாக ஒரு மாதமாக எழுதப்படாதவை, மதரீதியானவை, சக வலைப்பதிவர்களை கேலிசெய்வதை மட்டுமே முக்கிய நோக்கமாகக் கொண்டவை, வெட்டி அரட்டை மறுமொழிகளுக்காகவே எழுதப்படுபவை ஆகிய பதிவுகளை திரட்டியிலிருந்து விலக்கிவைத்தேன்.
மேலும் படிக்க: http://kasiblogs.blogspot.com/2006/07/11.html

பாகம் பன்னிரண்டு
இந்தக் கூச்சல்களுக்குப் பதில் சொல்வது இயலாதது மட்டுமல்ல, வீண்வேலை என்றும் நம்பியதால், எல்லாவற்றையும் புறந்தள்ளி, என் மீது வைக்கப்பட்ட தாக்குதல்களுக்கு என் ஒரே பதிலாக, அனைவருக்கும் இடம் கிடைக்கும் புதிய தமிழ்மணத்தை வெளியிடுவதிலேயே என் உழைப்பைச் செலுத்தினேன். வலைப்பதிவு உலகில் பல புதுமைகளைக் கொண்டு தமிழ்மணம்.காம் இரண்டாம் பதிப்பு 2006 ஜனவரி 14ஆம் நாள் தைத்திங்கள் மலர்ந்தது. கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் நண்பர் தேன்கூடு தளத்தையும் பொதுப்பயனுக்கு வெளியிட்டார்.
மேலும் படிக்க: http://kasiblogs.blogspot.com/2006/07/12.html

Comments

8 Responses to “தமிழ் வலைப்பதிவுகளும், தமிழ்மணமும் – ஒரு வரலாற்றுப் பார்வை”

 1. selvanayaki on April 15th, 2007 11:50 pm

  காசி இதைத் தன் பக்கத்தில் எழுதியிருந்தபோதே படித்தது. இப்போது இங்கு மீள்பதிப்புச் செய்தமைக்கும் நன்றி.

  அப்போது படித்ததைவிட இப்போது படிக்கும்போது இது மேலும் பலபொருள்களைச் சொல்லுவதாகவும், மனம் கசியவைப்பதாகவும் உள்ளது.

 2. ரவிசங்கர் on April 16th, 2007 2:26 am

  காலத்துக்கேற்ற மீள்பதிவு ! தமிழ்க் கணிமைச் சூழலில் கூட்டு முயற்சியில் ஈடுபடும் எவருக்கும் காசியின் தொடர் ஒரு நல்ல வழிகாட்டல்!

 3. திரு on April 16th, 2007 7:41 am

  அவசியமான மீள்பதிவு! தமிழ்மணம் மீது தவறாக அவதூறு பரப்பும் சூழலில் பலருக்கும் தமிழ்மணம் பற்றிய வரலாற்று பார்வை தெளிவை ஏற்படுத்த உதவும். தொடர்ந்து உங்கள் இலக்குகளை நோக்கி பயணமாகுங்கள். தமிழில் தலைசிறந்த திரட்டியாக மட்டும் இல்லாமல் பரந்துபட்ட இலக்குகளை அடைய வாழ்த்துக்கள்!

 4. இளா on April 16th, 2007 12:59 pm

  “தமிழ்மணம்” நிறைய பேரின் உழைப்பையும், பணத்தையும் கொண்டு உருவாக்கப்பட்டது. அதை எந்த சாரார் களங்கப்படுத்தினாலும், அதன் பேரை கெடுக்க முயற்சித்தாலும் அது பதிவர்களின் பக்கமே நஷ்டத்தை கொடுக்கும். அந்தந்த சாரார் சரியாக நேரத்தில் பணிசெய்தால் தமிழ்”மணம்” சுகந்தமாய் வீசும். செய்வார்களா?

 5. sarah on April 16th, 2007 2:15 pm

  தமிழ்மணத்தினைப் பற்றிய இந்த மீள்பதிவுக்கு நன்றி.

  //இந்தக் கூச்சல்களுக்குப் பதில் சொல்வது இயலாதது மட்டுமல்ல, வீண்வேலை என்றும் நம்பியதால், எல்லாவற்றையும் புறந்தள்ளி, என் மீது வைக்கப்பட்ட தாக்குதல்களுக்கு என் ஒரே பதிலாக, அனைவருக்கும் இடம் கிடைக்கும் புதிய தமிழ்மணத்தை வெளியிடுவதிலேயே என் உழைப்பைச் செலுத்தினேன். //

  காசியின் உழைப்புக்கும், அவரின் தமிழ்ப் பற்றுக்கும் எனது வணக்கங்கள்.

  சாரா

 6. தமிழ்நதி on April 16th, 2007 9:21 pm

  சஞ்சிகைகளில் எழுத முடியாதவர்கள், அவற்றிடையே நிலவும் உள் அரசியல்கள் காரணமாக எழுத விரும்பாதவர்களுக்கு தமிழ்மணம் எவ்வளவிற்குக் களம் அமைத்துக்கொடுத்திருக்கிறது என்பதை உணர்ந்தவர் உணர்வர். தமிழ்மணத்தை நடத்துபவர்களுக்கும் குடும்பம்,பொருளாதாரச் சிக்கல்கள்,தமக்கே தமக்கான மனவுளைச்சல்கள் இருக்குமென்பதை எவரும் மறுக்கவியலாது. அவ்வகையில் பார்த்தால் இதுவொரு உயரிய சேவை. அதற்காக திரு.காசிக்கும் ஏனைய நண்பர்களுக்கும் எங்களைப் போன்றவர்கள் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டவர்கள். ‘தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பவர்களை’புறமொதுக்கி தமிழ்மணம் முன்செல்ல வேண்டுமென்பதே எங்களது அவா.

 7. தென்றல் on April 17th, 2007 9:30 pm

  /தமிழ் நதி said… அதற்காக திரு.காசிக்கும் ஏனைய நண்பர்களுக்கும் எங்களைப் போன்றவர்கள் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டவர்கள்./
  அதே…! நன்றி,
  காசிக்கும் மற்ற நண்பர்களுக்கும் ..!

 8. ஜெஸிலா on April 18th, 2007 2:04 am

  //அது மட்டும் இல்லையென்றால் இந்த தமிழ் இலக்கிய அரசியல் சூழல் புரிந்த அன்றே தமிழ்மணத்தைத் தூக்கிக் கடாசிவிட்டுப் போயிருப்பேன்.// உங்கள் பொறுமையையும் சேவையையும் பாராட்ட ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறேன். நல்லவற்றை செய்ய முடியாவிட்டாலும் பிறருக்கு தீங்கிழைக்காமல் இருப்பது சிறந்த தருமமென்று எப்போது நம் மக்கள் உணர்வார்களோ? உரிய நேரத்தில் மீள்பதிவுக்கு வாழ்த்துகள்.

Leave a Reply