தமிழ்மணம்/பூங்கா சேவையில் ஏற்பட்ட தடை

February 3, 2007 – 11:09 pm by தமிழ்மணம்

சென்ற 30, ஜனவரி 2007 - 31, ஜனவரி 2007 நாட்களிலே பதினேழு மணிநேரம் தமிழ்மணம்/பூங்கா உள்ளிட்ட டிஎம்ஐ சேவை பாதிக்கப்பட்டிருந்ததை தமிழ்மணம் பயனாளிகளும் பூங்கா வாசகர்களும் அறிவீர்கள். சேவையிலே ஏற்பட்ட தடை குறித்து பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் முற்கூட்டியே நிர்வாகம் அறிவிக்கமுடியவில்லை. பாதிப்பு ஏற்பட்ட பின்னரே, டிஎம்ஐ நிர்வாகத்துக்கே இப்பாதிப்பினைக் குறித்துத் தெரியவந்தது. இது தொடர்பாக, உடனடியாக டிஎம்ஐ சேவைக்கான வழங்கியைக் கொண்டிருக்கும் நிறுவனத்தோடு எமது தொழில்நுட்பக்குழு தொடர்பு கொண்டபோது, தமிழ்மணம்/பூங்கா ஆகியவற்றுக்கு வரும் வாசகர்களின் தொகையும் இணையப்போக்குவரத்தும் தொடர்ந்து கணிசமாக அதிகரித்துக்கொண்டு செல்வதால், தற்போதைய வழங்கிக்குப் பளு அதிகரிக்கும் காரணத்தால் டிஎம்ஐ சேவையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்ததாக அறியத்தந்தார்கள்.

டிஎம்ஐ இன் தொழில்நுட்பக்குழு - இணையச்சேவை வழங்கு நிறுவனத்துடனான பேச்சுவார்த்தைக்குப் பின், ஜனவரி 31 காலையிலே தொழில்நுட்பக்குழுவுக்கு, வழங்குசேவையைத் தொடர வழி செய்திருப்பதாக அந்நிறுவனம் அறியத்தந்தது. மீண்டும் தமிழ்மணம்/பூங்கா சேவைகள் ஆரம்பிக்க இது வசதியேற்படுத்திக்கொடுத்தது.

டி எம் ஐ சேவையிலே தொடர்ச்சியாக நாம் அவதானித்துவரும் பயனாளிகள் இணைவும் இணையப்போக்குவரத்தும் எமக்கு மகிழ்ச்சிக்குரியவை. இவ்வளர்ச்சிக்கு ஏற்ப, சேவை வழங்கும் வழிவகைகளை டிஎம்ஐ ஆராய்ந்து வருகின்றது. தொடர்ந்து இணைந்து வரும் பயனாளிகள், வழங்க எண்ணியிருக்கும் டிஎம்ஐ சேவைகளின் காரணமாக நிச்சயமாக எமக்கான இணையப்போக்குவரத்து அதிகரித்தே வரும். இந்நிலையிலே நம்பகமான இணையச்சேவைவழங்கிக்கு மாற உத்தேசமாக எண்ணியுள்ளோம். ஆனால், இம்மாற்றத்தினை எப்போது செய்வதென்பது குறித்து எமது அடுத்த தமிழ்மணம் மேம்படுத்துகையை முன்வைத்தே தீர்மானிக்கவிருக்கின்றோம்.

எவ்விதமாறுதலேனும், இயலுமானவரை உடனுக்குடன், தமிழ்மணம்/பூங்கா பயனாளிகளுக்கு டி எம் ஐ இங்கே அறியத் தரும். இதேவேளையிலே தமிழ்மணம்/பூங்கா முன்கூட்டியே தம் பயனாளிகளுக்கு அறிவிக்கமுடியாமல், ஏற்பட்ட சேவைப்பாதிப்புக்காக வருத்தத்தினைத் தெரிவித்து மன்னிப்பினை வேண்டுகின்றது.

தொடர்ந்தும் புரிந்துணர்வுடன் காட்டிவரும் ஆதரவுக்கு நன்றி.

நிர்வாகம்
டிஎம்ஐ

01 பெப்ருவரி 2007

  1. 8 Responses to “தமிழ்மணம்/பூங்கா சேவையில் ஏற்பட்ட தடை”

  2. தடங்கல்கள் வருவது இயல்புதான். அன்று தமிழ்மணத்தில் படிக்க முடியாமல் அவதி பட்டவர்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு ஆதரவு அளிப்பவர்தாம். இது போல் இனி நடவாமலிருக்கத் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதற்கு நன்றி.

    By இலவசக்கொத்தனார் on Feb 3, 2007

  3. ஆதரவுக்கு நன்றி.
    ok thanks

    By gulf- tamilan on Feb 3, 2007

  4. பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி!

    தொடரட்டும் உங்கள் மேலான சேவை!!

    வாழ்த்துக்கள்!

    By Sivabalan V on Feb 3, 2007

  5. //இதேவேளையிலே தமிழ்மணம்/பூங்கா முன்கூட்டியே தம் பயனாளிகளுக்கு அறிவிக்கமுடியாமல், ஏற்பட்ட சேவைப்பாதிப்புக்காக வருத்தத்தினைத் தெரிவித்து மன்னிப்பினை வேண்டுகின்றது.//

    தங்களின் பொறுப்புணர்வுக்கு நன்றி, பதிவர்களும் வாசகர்களுக்கும் தமிழ்மண தளத்தின் மீது உள்ள ஈடுபாட்டை தொழில் நுட்பக் கோளாறுகளால் ஒன்றும் செய்ய முடியாது.

    :)

    தொழில் நுட்ப கோளாறுகள் எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறையில் எதிர்பாராமல் நடப்பது என்று புரிந்து கொண்டுள்ளோம்.

    இது குறித்து உங்கள் விரிவான அக்கரையான இப்பதிவுக்கு நன்றி, மற்றும் பாராட்டுகள்.

    By கோவி.கண்ணன் on Feb 3, 2007

  6. சில சமயங்களில் ஒருவரின் உண்மையான மதிப்பு அவர் அருகில் இல்லாதபோது தான் தெரியும். அந்த வகையில் தமிழ்மணம் தடைப்பட்ட சில மணிநேரங்கள் தமிழ்மணத்தைப் பற்றி தமிழ்மணம் நடத்தும் அன்பர்களுக்கு அதன் முக்கியத்துவத்தையும், வாசகர்களுக்கு அதன் மதிப்பையையும் வெளிப்படுத்த உதவியிருக்கிறது என்றுதான் கொள்ள வேண்டும். தொடரட்டும் உம் சேவை. பல்வேறு நாடுகளிலும் தங்களுடைய சர்வர்களை வைத்து தொடர்ந்து சேவை புரியும் வாய்ப்பு அமைய வாழ்த்துக்கள்.

    By திருவடியான் on Feb 4, 2007

  7. தமிழ்மணம் சேவை மீண்டும் தொடர்ந்ததில் மகிழ்ச்சி….

    நன்றி

    By குழலி on Feb 4, 2007

  8. உங்களின் பொறுப்புணர்வு பாராட்டுக்குரியது. தொடரட்டும் உங்களின் பணி.

    By சந்தோஷ் on Feb 4, 2007

  9. டிஎம்ஐ வழங்கியிலே பூங்கா இதழ் தற்காலிகமாக சேவைக்கொள்ளளவு காரணமாக அகற்றி வைக்கப்பட்டிருக்கின்றது. புதிய சேவைவழங்கிக்கு டிஎம்ஐ மாற்றப்படும்போது, முழுச்சேவை சீரடையும்.

    புரிந்துணர்வுக்கு நன்றி.

    By தமிழ்மணம் on Feb 12, 2007

Post a Comment