பூங்கா வலையிதழ் பற்றிய விரிவான அறிவிப்பு

September 7, 2006 · Posted in அறிவிப்புகள் 

தமிழ்மணம் திரட்டும் வலைப்பதிவுகளிலிருந்து, வாரந்தோறும் சிறந்தவையென அடையாளம் காணப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு, “பூங்கா” எனும் வாராந்திர வலையிதழாக வெளிவரத் தமிழ்மணம் விரும்புகிறது.

பூங்கா – வலையிதழ்
இணையத்தமிழின் முதலாவது தானியங்கித்திரட்டி என்ற ஆரம்பநிலையைக் கடந்து, அடுத்தபடியிலே தன்னிற் திரட்டப்படும் வலைப்பதிவுகளில் இருந்து புதிய பார்வைகளையும் பரந்துபட்ட சிந்தனைகளையும் உயிர்ப்பான மொழியிலே வெளிப்படுத்தும் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து வாரந்தோறும் ‘பூங்கா’ வலையிதழூடாக தொகுப்பது பயனானதெனத் தமிழ்மணம் நோக்குகிறது. இக்கவனிப்பினூடாக தமிழ்ப்பதிவர்களின் பல்வேறு துறைநிபுணத்துவத்தை அடையாளங் கண்டு பதிவு செய்யத்தூண்டவும் மொழிவெளிப்பாட்டின் பல்வேறு கலைப்பரிமாணங்களைப் பரிசோதனை செய்ய ஊக்குவிக்கவும் சமூக அக்கறையுள்ளவர்களை ஒன்றிணைக்கவும் வேண்டிய தொடர்ச்சியான தேவையை நிறைவேற்றலாமெனத் தமிழ்மணம் திடமாக நம்புகிறது.

எக்கோணத்திலிருந்தும் வரும் கருத்துகளுக்கும் பேதமின்றி, தமிழ்மணவிதிகளுக்கு முரண்படாத வகையிலே இடமளிப்பதனால், பூங்கா மூலம் நடையொழுங்கு, உள்ளடக்கம், வடிவ நேர்த்தி, தகவல் புதுமை, வெளிப்பாட்டு உத்தி போன்றவற்றைப் பதிவர்கள் மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் தரமான எழுத்துக்களை வாசிக்க விரும்பும் வாசகர்களுக்கு அத்தகைய பதிவுகளைச் சுலபமாக அடையும் வழியாகவும் பூங்கா விளங்குமென உறுதியாக நம்புகிறோம்.

தமிழ்மணமும் பூங்காவும்
தமிழ்மணம் என்பது அணையில்லாப் பேராறு. தமிழ்ப்பரப்பில் உலகெங்கும் பெய்கின்ற சிந்தனைத்துளிகள் அத்தனையும் ஒன்றிணைந்து பிரவகித்து வருகிற இணையத்தின் பொன்னி. கரை மோதிப் புரண்டசைந்து ஆர்ப்பரித்து வரும் ஆடிப்பெருக்கு; மனிதக்கரங்களும் கறைகளும் படாதது.

பூங்கா வலையிதழ் நதியின் ஆழமும் அமைதியுங் கொண்ட ஆடுதுறை. மூழ்கிக் குளிப்பதற்கும் நீந்திக் களிப்பதற்குமாய் வெட்டப்பட்ட செய்குளம். வேண்டின், இதன் வழி நீந்தி தமிழ்மணம் என்ற ஜீவநதியையும் அடையலாம்; உங்களைத் தடுப்பவர் எவருமிலர்.

பதிவுகளைப் பூங்காவிலே சேர்க்கத் தருதல்
பூங்கா, இலாபநோக்கற்ற, சமூக, இலக்கிய விழிப்புணர்வு கருத்துகளை உள்ளடக்கிய ஒரு மாற்றூடக இதழ். இதில் வெளிவரும் படைப்புகளுக்கு எவ்வித ஊதியமும் வழங்கப்படுவதில்லை.

பூங்கா ஆசிரியர் குழு பதிவுகளை தமிழ் மணத்தின் விதிமுறைக்கு உட்பட்டு, தமிழ்மணத்தினால் திரட்டப்படும் பதிவுகளிலிருந்து தெரிவு செய்யும். பூங்கா ஆசிரியர் குழுவின் பதிவுத்தேர்வுகளே இறுதியானவை.

தமிழ்மணத்தில் வெளிவரும் அனனத்து வகை பதிவுகளிலிருந்தும் ஆசிரியர்குழுவுக்குச் சிறந்ததெனத் தோன்றும் பதிவுகள் தெரிவு செய்யப்படும். தற்சமயம் இருக்கும் வகைப்பாடுகளில் அனைத்திலுமிருந்து தரமான பதிவுகளை பூங்கா வலையிதழ் உள்வாங்கும். இதற்கான ஒப்புதல் வலைப்பதிவர்களிடமிருந்து பெறப்படும். வலைப்பதிவர்கள் தங்கள் பதிவுகள் பூங்காவின் தேர்வுக்கு உள்ளாகி வெளிவர விருப்பம் கொண்டால், பதிவுகளைத் தமிழ்மணத்திலே திரட்ட அறிவிக்கும்போதே ஒப்புதல் தரும்வகையிலே தமிழ்மணம் மாறுதலைத் தற்போதைய அமைப்பிலே செய்யும்.

வலைப்பதிவர்கள் தமக்கே உரிமைகொண்ட, தாமாகவே எழுதிய, படம்பிடித்த, வரைந்த, ஒலித்த ஆக்கங்கள்மட்டுமே தேர்வுக்குக் கவனிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள் பதிவருக்குச் சொந்தமற்றவையென அறியப்படுமிடத்து அறிவித்தலுடன் விலக்கப்படும். பதிவர்கள் இவ்வகையான சொந்தப்பதிவுகளை தமிழ்மணத்திற்கு அறிவிக்கும்போது பயன்படுத்தும் “வகைப்படுத்தல்” பக்கத்திலே பூங்காவிலே சேர்க்க அனுமதி கேட்கப்படும். அங்கே உங்கள் பதிவை பூங்காவிற் சேர்த்துக்கொள்ளச் சம்மதம் என்றால் நீங்கள் தேர்விலே எந்த மாற்றத்தினையும் செய்யாமல் அப்படியே அனுப்பினால் போதுமானது. உங்களுக்குச் சம்மதமில்லை என்றால் மட்டும் “சம்மதமில்லை” என்பதைத் தெரிவு செய்து அனுப்பவேண்டும். கீழ்க்கண்ட படம் இச்செயற்பாட்டுக்கான தேர்வுநிலையைக் காட்டுகிறது.

பூங்காவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எப்பதிவின் உரிமையும் அதனை ஆக்கிய வலைப்பதிவரிடமே எப்போதுமிருக்கும். எதிர்காலத்தில், ஆண்டின் மிகச்சிறந்தபதிவுகளைத் தேர்ந்தெடுத்து, அச்சுநூலாக்கும் திட்டமும் கருத்தளவிலே தனக்கு உண்டென்பதை இங்கே தமிழ்மணம் குறிப்பிட விரும்புகிறது. பூங்காவில் வெளியிட விருப்பம் தெரிவிக்காத பதிவர்களின் பதிவுகள் பூங்காவில் வெளிவரா.

பூங்காவின் உள்ளடக்கம்
நிகழ்வுகள், அரசியல், அறிவியல்,செய்தி விமரிசனம், தொழில்நுட்பம், பொருளாதாரம், இலக்கியம், நூல் அறிமுகம்/விமர்சனம், வரலாறு மற்றும் பலவேறுபட்ட விடயங்கள் தொடர்பான நல்ல பதிவுகளையும் பூங்கா வெளியிடும். ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெறும் பதிவுகளுக்கு எண்ணிக்கை வரையறை எதுவும் இல்லை. பதிவரினாலே அனுமதி தரப்பட்ட தரம்வாய்ந்ததெனத் தோன்றும் படைப்புகள் அனைத்தும் தொகுக்கப்பெறும்.

பூங்கா இதழில், தேவைக்கேற்ப புதிய பிரிவுகளை சேர்க்கவோ, முன்பிருந்த பிரிவுகளை விலக்கவோஆசிரியர் குழுவிற்கு முழு உரிமையுண்டு.

பூங்காவுக்குப் பதிவுகளினைத் தேர்ந்தெடுத்தல்
ஒரு வாரத்தின் வெள்ளிக்கிழமை முதல் அடுத்த வாரத்தின் வியாழக்கிழமை வரை தொகுக்கப்படும் பதிவுகள், தேர்ந்தெடுக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து வரும் திங்கட்கிழமை அன்று பூங்காவிலே வெளியிடப்படும். சிறந்த படைப்புகள் என ஆசிரியர் குழு பரிந்துரைக்கும் படைப்புகள் குறித்த வாரத்திற்கு முன்னதாக வெளிவந்திருந்தாலும், அவை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டிருக்காவிடின், காணப்பட்ட வாரத்து இதழில் இடம்பெறும்.

தமிழ்மணம் நட்சத்திரங்களின் பங்களிப்பின் தடங்கள் பூங்காவிலும் இருக்க வேண்டுமெனத் தமிழ்மணம் உணர்வதால், நட்சத்திரங்கள் தாம் சேவை செய்யும் வாரத்துக்கு முந்தைய வாரத்திலிருந்து தேர்வு செய்யும் பதிவுகளும் அவர்கள் மின்னும் வாரத்திலே வெளிவரும் பூங்காவில் இடம்பெறும். நட்சத்திர தெரிவுகள் இடம்பெறும் சிறப்புப்பக்கங்கள் “நட்சத்திர தேர்வு” என குறிப்பிடப்படும். நட்சத்திரங்கள் பல துறைகளிலிருந்தும் துறைக்கு ஒன்று என, தாம் சிறந்ததெனக் கருதும் ஐந்து பதிவுகளை ஆசிரியர் குழுவிற்கு அவர்கள் அனுப்பினால் அவற்றிலிருந்து இரண்டு பதிவுகளைப் பூங்கா வெளியிட விரும்புகிறது.

இதுவரை தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட பதிவுகளிலிருந்து மிகச் சிறந்த இடுகை என வாசகர்கள் எதையேனும் எண்ணினால் அதை தேர்வு குழுவிற்கு அனுப்பி வைக்கலாம். வாசகர்களுக்கும் வலைப்பதிவர்களுக்கும் தமிழ்மணத்தைப் போன்றே பூங்காவும் ஒரு பாலமாகச் செயற்படும். எனவே இதழ் பற்றிய கருத்துக்கள், பதிவுகள், மேம்பாட்டு உத்திகள் அனைத்திலும் உங்கள் பங்களிப்பையும் அன்புடன் தமிழ்மணம் கோருகிறது.

பூங்கா பக்கமும் தொடர்பும்
பூங்கா ஆசிரியர் குழுவைத் தொடர்பு கொள்ள ezine@thamizmanam.com

தமிழ்மணம் தளத்திலே பூங்கா இதழ்ப்பக்கத்தின் முகவரி விரைவிலே வெளியிடப்படும்.

தற்போது ஆசிரியர்குழுவின் வெள்ளோட்டச்சோதனையிலிருக்கும் பூங்கா 18 செப்டெம்பர் 2006, திங்கள் அன்று முதலாவது இதழாக வெளியாகும்.

தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு நன்றி.

Comments

41 Responses to “பூங்கா வலையிதழ் பற்றிய விரிவான அறிவிப்பு”

  1. தமியன் on September 7th, 2006 11:01 pm

    மிக நல்ல விடயம்!
    தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
    எப்போதுமே தமிழ்மணம் நம்பர் ஒன்!
    நன்றியுடன்
    அன்பகலா
    தமியன்

  2. கோவி.கண்ணன் on September 7th, 2006 11:17 pm

    தமிழ்மணத்தின் புதியபரிமான வளர்ச்சிக்கு பாராட்டுக்கள் !
    அன்புடன்
    கோவி.கண்ணன்

  3. மருதநாயகம் on September 7th, 2006 11:57 pm

    தமிழ்மணத்தின் புதிய பரிமாணம் மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது. உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்

  4. யெஸ்.பாலபாரதி on September 8th, 2006 12:21 am

    தங்களின் பணி வியக்க வைப்பதாக உள்ளது.
    தொடர்ந்து வலை உலகில் தாங்கள் ஆற்றி வரும் சேவையை காலம் தன்னுள் பதிவு செய்தபடியே தான் இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.

  5. thiruvadiyan on September 8th, 2006 12:43 am

    வாழ்க நன்முயற்சி… வெல்க உம் தமிழ்ப்பணி…மென்மேலும் சிறக்க உளங்கனிந்த வாழ்த்துக்கள்.

  6. ஞானவெட்டியான் on September 8th, 2006 12:51 am

    வாழ்க நும் சீரிய பணி

  7. துளசி கோபால் on September 8th, 2006 1:01 am

    நல்ல முயற்சி.

    மேன்மேலும் வளர வாழ்த்து(க்)கள்.

  8. சுரேஷ் - பினாத்தல் on September 8th, 2006 1:20 am

    நல்ல விரிவான விளக்கம் மற்றும் அருமையான தொடக்கம். வாழ்த்துகிறேன்.

  9. பொன்ஸ் on September 8th, 2006 3:00 am

    அற்புதமான முயற்சி. வாழ்த்துக்கள்..

    முதல் பூங்காவைத் தரிசிக்க ஆவலுடன்…..

  10. Rasikow Gnaniyar on September 8th, 2006 3:01 am

    தமிழ்மணத்தின் வளர்ச்சிக்கு பாராட்டுக்கள் !

  11. உதயச்செல்வி on September 8th, 2006 4:26 am

    ‘மெள்ளத் தமிழினி சாகுமோ’வென
    உள்ளந் துயர்பட வாடான் அவன்!
    என்ன சொல்லியுமை வாழ்த்திடுவேன்
    எண்ணித் துணிந்த உம் கருமம்
    ம்ண்ணில் சிறக்க வாழ்த்துகிறேன்!
    ம்னம் நெகிழ்ந்து வாழ்த்துகிறேன்!

  12. சுந்தரவடிவேல் on September 8th, 2006 5:54 am

    புதிய நிர்வாகத்தின் பரிசுக்கு நன்றி!

  13. ப்டியன் on September 8th, 2006 6:37 am

    சீரிய முயற்சி அதுவும் சீக்கிரமே!

    வாழ்த்துக்கள்!

    பாலா சொல்வதுப்போல் காலம் தமிழ்மணத்தை அதன் கல்வெட்டில் பதித்து வைக்கும்

  14. pot"tea"kadai on September 8th, 2006 7:11 am

    நல்லதொரு ஆக்கபூர்வமான செயல் திட்டம். எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்…!

  15. சத்தியா on September 8th, 2006 8:08 am

    உங்கள் முயற்சிக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்!

  16. தமிழ் சசி on September 8th, 2006 8:08 am

    தமிழ்மணத்தின் மற்றொரு சிறப்பான முயற்சி
    வாழ்த்துக்கள்

  17. madhumitha on September 8th, 2006 8:22 am

    நல்லதோர் முயற்சி
    மனமார்ந்த வாழ்த்துகள்

    ///
    எதிர்காலத்தில், ஆண்டின் மிகச்சிறந்தபதிவுகளைத் தேர்ந்தெடுத்து, அச்சுநூலாக்கும் திட்டமும் கருத்தளவிலே தனக்கு உண்டென்பதை இங்கே தமிழ்மணம் குறிப்பிட விரும்புகிறது
    ///

    நன்று
    நன்றி

  18. காசி on September 8th, 2006 10:49 am

    தமிழ்மணம் புது உத்வேகத்துடன் பயணிப்பதைப் பார்க்க நிறைவாக இருக்கிறது. இந்தப் பூங்கா வலையிதழில் இடுகைகள் மறுபதிப்பு செய்யப்படுமா? அப்படியென்றால் எழுத்துப்பிழை/இலக்கணப்பிழை ஆகியவை களையப்பட வழி இருக்கும். மறுமொழிய வசதி இருக்குமா? மறுமொழிய விருப்பப்பட்டவர்களை அசல் பதிவுக்கே அனுப்பிவிடுவது நல்லது என்பது என் கருத்து.

    இந்த முயற்சி பெருவெற்றியடையவும் அதனால் வலைப்பதிவுகளின் ஆழமும் வீச்சும் முன்னேறவும் வாழ்த்துக்கள்.

  19. revathinarasimhan on September 8th, 2006 11:03 am

    தமிழ்மணம் புதிய பதிவில் மேலும் சிறக்க வேண்டும் என்று வாழ்த்துக்கள் சொல்கிறேன்.

  20. சமுத்ரா on September 8th, 2006 11:59 am

    அருமை!
    வருடத்தின் சிறந்த பதிவை தேர்ந்தெடுப்பது நல்ல யோசனை.

  21. DJ on September 8th, 2006 12:29 pm

    நல்லதொரு ஆரம்பம். முக்கியமான படைப்புகளை அச்சில் ஏற்றுவதும் வரவேற்புக்குரியது. வலைப்பதிவுகளின் ஆக்கங்களை அச்சாக்குவதை எப்போதோ ஒருமுறை வலையில் விவாதித்து நம்மைப்போன்றவர்கள் கிடப்பில்விட்டதைப் போன்றதல்லாது, உங்கள் காரியம் கைப்பட வாழ்த்துகின்றேன்.

  22. sarah on September 8th, 2006 12:33 pm

    இந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    சாரா

  23. Mayiladuthurai Sivaa on September 8th, 2006 2:03 pm

    புதிய முயற்ச்சிக்கு வாழ்த்துகள் பல.

    முதல் பூங்கா இதழை பார்க்க ஆவலாக இருக்கும்

    மயிலாடுதுறை சிவா…

  24. மாசிலா on September 8th, 2006 2:15 pm

    மிகக் கூறிய தொலைநோக்குடன், அடையவேண்டிய இலக்கு, நேரம் காலம் அனைத்தையும் முன்கூட்டியே அட்டவனை போட்டு அறிவித்து பிறக்கப்போகும் தமிழவள் குழந்தைக்கு பூங்கா என பெயரிட்டிருக்கிறீர். வளர்த்து, ஆலாக்கி வெற்றி வாகை சூடைவைக்கும் பொருப்பை நாங்கள் ஏற்கிறோம். கவலை விடுங்கள்!

  25. selvanayaki on September 8th, 2006 4:01 pm

    நல்ல முயற்சி. தரமான, நல்ல சிந்தனைகளைக் கொண்ட எழுத்துக்களைத் தேடிப் படிக்க விரும்புகிற வாசகர்களுக்கு பூங்கா இதழ் பெரிதும் உதவலாம். அப்படிப்பட்ட வாசகர்களின் நேரவிரயத்தையும் அது தடுக்க உதவும். நன்றி.

  26. மரம் on September 8th, 2006 4:35 pm

    தமிழ் மணம் நிறைய மாறியிருக்கிறது. வலைப் பதிவில் அனைத்து முதல் முயற்சிகளும் தமிழ்மணத்தில் இருந்துதான் துவங்கி இருக்கிறது. பூங்காவும் இணையத் தமிழின் மைல் கல்லாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. வெகு நாட்களுக்குப் பிறகு இப்பக்கம் வந்தாலும், ஏற்பட்டு இருக்கும் மாற்றங்கள் வியப்பையும், மகிழ்ச்சியையும் தருகிறது. வாழ்த்துக்கள்.

  27. Kanags on September 8th, 2006 9:29 pm

    நல்ல முயற்சி. இத்திட்டம் மென்மேலும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தமிழுக்கு நீங்கள் புரியும் சேவை போற்றப்படவேண்டியது.

    மேலும் ஒரு வேண்டுகோள். அண்மைய காலங்களில் வலைப்பதிவாளர்கள் பலர் தமது பதிவுகளின் தலைப்புகளை ஆங்கிலத்தில் எழுதுவதை ஆரம்பித்திருக்கிறார்கள். அண்மைக் காலங்களில் இது அதிகரித்தும் வருகின்றது. உதாரணமாக இன்றைய பதிவுகளை எடுத்துக் கொண்டால் பன்னிரண்டு பதிவுகளில் தலைப்புகள் ஆங்கிலம் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இடம்பெற்றிருப்பதை அவதானிக்கலாம். இது ஒரு கவலைக்கிடமான விடயமாக படுகின்றது. இனிமேல் ஆங்கிலத் தலைப்புப் பதிவுகளைத் தவிர்க்குமாறு தமிழ்மணம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டுகிறேன். அல்லது கலைஞர் அண்மையில் தமிழ் திரைப்படத்தயாரிப்பாளர்களுக்கு அறிவித்தது போல ஏதாவது ஊக்குவிப்பைத் தமிழ்மணம் அறிவிக்க வேண்டும்:))

    நன்றி

  28. எல்.ஏ.வாசுதேவன் on September 8th, 2006 11:50 pm

    அன்புள்ள தமிழ்மணம் – பூங்கா நிர்வாகிக்கு,

    சீரிய முயற்சி! நன்றே நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    விவேகம்,
    எல்.ஏ.வாசுதேவன்,
    மலேசியா.

  29. திரு on September 9th, 2006 7:42 pm

    அருமையான முயற்சி! தமிழ்மணத்தின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  30. அருட்பெருங்கோ on September 11th, 2006 12:37 am

    புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்!!!

  31. மாஹிர் on September 11th, 2006 1:19 am

    நல்ல முயற்சி..மனமார்ந்த பாராட்டுக்கள்!!

  32. இறையடியான் on September 11th, 2006 9:26 am

    அன்புள்ள ஆசிரியருக்கு,

    i am switch on moderent comment please publish in your home page my comments allso

    thanks
    இறையடியான்

    ==================
    பதிவர்களின் கவனத்துக்கு:
    வேண்டுகோள்களைப் பின்னூட்டங்களாகப் பொருத்தமான பதிவு ஓலைகளிலே இடும்படி தமிழ்மணம் கேட்டுக்கொள்கிறது.
    தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

    தமிழ்மணம் நிர்வாகம்

  33. மா.கலை அரசன் on September 11th, 2006 1:17 pm

    புதிதாய்
    மணம் பரப்பி
    தமிழ் மணக்கச்செய்யவரும்
    தமிழ்மணத்தின்
    புதியவரவை!…
    ஓ…
    பூங்காவை தரிசிக்க
    ஆவலோடு காத்திருக்கும்
    பழையவன்!…

  34. கார்மேகராஜா on September 12th, 2006 6:22 am

    தமிழ்’மணம்’ வீசும் அந்த தமிழ் பசுமை பூங்காவில் தவழ்ந்து உலாவ இப்பொழுதே மனம் தவிக்கிறது. மிக விரைவில் தொடங்கி வையுங்கள்.

  35. SP.VR.SUBBIAH on September 12th, 2006 11:31 am

    தமிழ் மணத்தின் வளர்ச்சியில் அதிகம் மகிழ்வடைவது என்னைப்போன்ற பதிவாளர்கள்தான
    உங்களின் எல்லா முயற்சிகளுக்கும் எங்களின் பூரண ஒத்துழைப்பு எப்போதும் உண்டு
    நன்றி, வணக்கத்துடன்
    SP.VR.SUBBIAH

  36. மஞ்சூர் ராசா on September 12th, 2006 12:52 pm

    தமிழ் மணம் என்னும் எல்லையில்லா கடலின் ஒரு அங்கமான பூங்கா என்னும் நதியில் நீராடி மகிழக் காத்திருக்கிறோம்.

    இந்த நேரத்தில் தமிழ் மண நிர்வாகிகளுக்கு பாராட்டுக்களும், நன்றிகளும்.

    உங்களின் சேவை மகத்தானது.

    மேலும் மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  37. Vaa.Manikandan on September 13th, 2006 11:45 am

    Good.

    All the best! :)

  38. SK on September 14th, 2006 3:38 pm

    புதுப் பூங்காவில் உலாவிட உள்ளம் விழைகிறது.
    வாழ்த்தி வரவேற்கிறேன்!

  39. என்னார் on September 15th, 2006 12:18 pm

    நல்ல திட்டம் வரவேற்கிறேன் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன்

  40. இலக்கியா on September 19th, 2006 3:54 am

    தமிழ்மணம் இணையத்தில் “பூங்கா” அவசியமானதே!
    வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    இலக்கியா

    http://thamizmanam.com/forward_url.php?url=http://ilackia.blogspot.com

  41. Fun World on September 21st, 2006 5:53 am

    தமிழ்மணத்தின் மற்றொரு சிறப்பான முயற்சி

    வரவேற்கிறேன்

Leave a Reply