தமிழ்மணம் நட்சத்திர தேர்வு முறை

தமிழ்மணத்தின் “இந்த வார நட்சத்திரம்” எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறது? தமிழ்மணம் நட்சத்திரம் ஆவதற்கான தகுதிகள் என்ன என்பன போன்ற கேள்விகளை பதிவர்கள் பல நேரங்களில் எழுப்பி வந்துள்ளனர்.

தமிழ்மணம் நட்சத்திரமாகத் தேர்ந்தெடுப்பதற்குத் தகுதிகள் என்று சொல்வதை விட சிலக் காரணிகளை அடிப்படையாகக் கொள்கிறோம் என்று சொல்லலாம். தகுதிகள் என இதற்கு அடைமொழியை கொடுக்க விரும்பவில்லை. காரணம் தமிழ்மணத்தில் ஆயிரக்கணக்கான பதிவர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவருடைய எழுத்தும் ஒவ்வொரு வகையில் சிறந்தவையாக இருக்கின்றன. அவை அனைத்திற்குமான தகுதிகளை வரையறுப்பது முடியாத காரியம் மட்டும் அல்ல. அதனை செய்வது தமிழ்மணத்தின் நோக்கமும் அல்ல.

பெரும்பாலும் கீழ்க்கண்ட காரணிகளைக் கொண்டே தமிழ்மணம் நட்சத்திர வாரத்திற்கு பதிவர்களை தேர்ந்தெடுக்கிறோம். ஆனால் இவை மட்டுமே காரணி என்று வரையறுத்து விட முடியாது. அது போல கீழேயுள்ள இதே வரிசைப்படியே கணக்கில் கொள்வதில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

1.பெரும்பாலும் மிகுந்த சிரத்தை எடுத்துத் தகவல்களைத் திரட்டி எளிமையாகவும், சுவாரசியமாகவும் எழுதக் கூடியவர்களை நட்சத்திரமாக்க முயல்கிறோம்
2. நீண்டகாலமாக (பெரும்பாலும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக) தமிழில் வலைப்பதிவு எழுதுகிறவர்கள். அவர்கள் ஓரளவுக்கு நன்றாக எழுதுபவர்களாகவும், அடிக்கடி எழுதுபவர்களாகவும் இருக்க வேண்டும். தமிழ்மணத்தின் தரவுகளிலிருந்து இதைத் கண்டறிந்து அவர்களை தேர்ந்தெடுக்கிறோம்.
3. சக பதிவர்களும், வாசகர்களும் பரிந்துரைக்கும் நன்றாக எழுதும் பதிவர்களை நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கிறோம்
4. வாசகர்கள் அதிகம் விரும்பும்படி எழுதுபவர்கள். பின்னூட்டங்களில் வரும் கருத்துகளின் அடிப்படையில் இதைக் கணக்கில் கொள்கிறோம்.
5. சிறப்பான வாரங்களில், எடுத்துக்காட்டாக, உலக மகளிர் தினம் வரும் வாரத்தில் பெரும்பாலும் அறியப்பட்ட பெண் எழுத்தாளர் – பதிவரை அழைக்கிறோம்.
6.பொங்கல் வாரத்தில் ஏற்கனவே வலைப்பதிந்து வரும் சிறந்த தமிழ் எழுத்தாளரைத் தேடுகிறோம். இவர்கள் நட்சத்திர வாரத்தில் நாங்கள் வேண்டிக்கொள்கிறபடி பதிவுகள் இடாமலும் போகக் கூடிய சிக்கலுமுண்டு.
7. சில பிரிவினர்க்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டுமென்று முன்னுரிமை வழங்க நினைப்பதுமுண்டு, பெண்பதிவர்கள், ஈழத்துப் பதிவர்கள் போன்ற எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.
8.நட்சத்திர வாரம் வேலைப் பளு மிக்க வாரம் என்பதை நட்சத்திரமாக இருந்த பதிவர்கள் அறிவார்கள். தினமும் ஒரு பதிவு என ஏழு நாட்களுக்கு பதிவு எழுதவே பதிவர்களை வேண்டுகிறோம். குறைந்தது 5 இடுகைகளையாவது எழுதக்கூடியவரா என்பதை பார்க்கிறோம். அதனால் வலைப்பதிவுகளில் அடிக்கடி எழுதும் பதிவரா என்பதை முக்கியமாக கவனிக்கிறோம். சிலப் பதிவர்கள் நன்றாக எழுதக்கூடியவர்களாக இருந்தாலும் தொடர்ச்சியாக வலைப்பதிவுகளில் எழுதுவதில்லை. நட்சத்திர வாரத்தில் தொடர்ந்து எழுதுதல் முக்கியம் என்பதால் அதனை ஒரு முக்கிய காரணியாகப் பார்க்கிறோம்

நட்சத்திரங்களை தேர்தெடுப்பதில் உள்ள சவால்கள்
1.நட்சத்திர வாரங்களுக்கு முன்கூட்டியே ஒப்புதல் அளித்து விட்டு இறுதி நேரத்தில் பதிவர்கள் மறுக்கும் சூழ்நிலையில் வேறு ஒருவரை தேட வேண்டிய சூழ்நிலைகள் பலமுறை ஏற்பட்டுள்ளது.
2.நட்சத்திர வாரத்திற்கு ஒப்புக் கொண்டு பதிவுகள் எதையும் எழுதாத பதிவர்களும் உண்டு. இது போன்ற சூழ்நிலையில் மின்னஞ்சல், தொலைபேசி எண் இருந்தால் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எழுத வலியுறுத்துதல் போன்றவையும் செய்ய நேரிட்டிருக்கிறது
3.பத்தாயிரம் பதிவுகளை எட்டும் நிலையில் தன்னார்வப் பணியாக தமிழ்மணத்தை நடத்தும் சூழ்நிலையில் அனைத்துப் பதிவர்களையும் கவனித்து நட்சத்திரங்களை தேர்ந்தெடுப்பது என்பது மிகப் பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. இதனால் சில நேரங்களில் நன்றாக எழுதக்கூடிய பதிவர்களை நாங்கள் கவனிக்காமல் போகும் வாய்ப்புகள் உள்ளது

பதிவர்கள் எங்களுக்கு எப்படி உதவலாம்
சில நிமிடங்களே தமிழ்மணம் முகப்பில் பதிவுகள் நிற்கிற இக்காலத்தில் பத்தாயிரம் பதிவுகளில் பல அருமையான பதிவுகள் இன்னும் எங்கள் கண்ணில் சிக்காமலே இருந்திருக்கக்கூடும். இதற்கு உங்கள் அனைவருடைய உதவியும் தேவை. தொடர்ந்து அருமையாக எழுதப்படும் பதிவுகளின் முகவரியைப் பரிந்துரை செய்து நட்சத்திர நிர்வாகியின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
To: staradmin@thamizmanam.com
Subject: நட்சத்திரப் பரிந்துரை
இவ்வாறு பரிந்துரைக்கப்படும் எல்லாப் பதிவர்களையும் நட்சத்திரமாக அழைக்க இயலாது என்பதை அறிவீர்கள். அதிகம் பேர் பரிந்துரைக்கப் படும் பதிவுகளை தமிழ்மணம் நிர்வாகக்குழுவினர் பரிசீலித்து முடிவு செய்வார்கள்.

புரிந்துணர்வுடன் கூடிய உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

தமிழ்மணம் நட்சத்திர நிர்வாகம்

Comments

12 Responses to “தமிழ்மணம் நட்சத்திர தேர்வு முறை”

  1. a-nagarasan on September 30th, 2011 4:32 am

    ஆயிர கணக்கான வலை பதிவுகள் வரும் சமயத்தில் அதை படித்து தரப் பட்டியலிடுதல் என்பது,Herculien task தான்.நான் blog ஒன்றை உருவாக்கி எழுத காரணமே தமிழ் மணம் தான். இதில் வந்த தமிழில் எழுதலாம் வாங்கா என்ற அழைப்பும் அதன் தொடர்ச்சியாக சொல்லப்பட்ட எளிய வழி முறைகளும் தான்.எனக்கு கம்ப்யூட்டர் பற்றி எதுவும் தெரியாது.நான் கணினி முன்பு அமர்ந்தது 2000 ஆம் ஆண்டுகளில் தான்.ஆங்கில தட்டச்சு மாதிரி இதை ஆபிஸ் பணி நிமித்தம் கற்றுக் கொண்டேன்.ஒவொரு எழுத்தாய் பார்த்து பார்த்து பின் மானிட்டரில் சரியாய் வந்து உள்ளதா என சரி பார்த்து தட்டச்சு செய்வேன்.middle management தான் என்றாலும் எனது பங்களிப்பு நிர்வாகத்துக்கு முக்கியமானது.பிழை இன்றி தட்டச்சு செய்ய காலம் நிறைய தேவை பட்டது.செல்லித்தர அலுவலக நண்பர்கள் குறைவு.நிஜத்தில் அவர்களும் என்னை மாதிரி அரைகுறைகள். கம்ப்யூட்டர் பற்றிய தகவல்களை யாருமே சரியாக சொல்லித்தரவில்லை.கேட்டால் தவிர்ப்பதில் கவனமாய் இருந்தார்கள்.
    இன்று தமிழ் மணம் முலம் ஒரு வலைபதிவை உருவாக்கி உள்ளேன்.கம்ப்யூட்டர் பற்றிய நிறைய தகவல்களை தமிழ் மணத்தில் வந்த பிற வலை தலங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன்.
    என் வரையில் தமிழ் மணம் தான் நட்சத்திரம்-துருவ நட்சத்திரம்

  2. நொந்தகுமாரன் on September 30th, 2011 9:08 am

    இந்தந்த காரணங்களினால் தேர்ந்தெடுக்கிறோம். ஆனால், இதுவே முடிவான காரணங்கள் அல்ல! என்று சொல்வது, உங்கள் சிரமத்தை காட்டுகிறது.

    நாமும் தான் நாலு வருசமா எழுதிக்கிட்டு இருக்கோம். ஆனால், தமிழ்மணம் நட்சத்திரமாக ஏன் அழைப்பு வரவில்லை என்று, அபூர்வமாய் சிந்தித்திருக்கிறேன். உங்கள் பதில் சில புரிதல்களை தருகிறது. இதையெல்லாம், தமிழ்மணம் தன்னை நட்சத்திரமாக தேர்ந்தெடுத்து தான் சொல்லவேண்டும் என்று இல்லையே! 🙂 அவ்வப்பொழுது, இப்படி பதிவர்களோடு தோழமையாய பகிர்ந்து கொள்ளலாமே!

    இப்பொழுது பதிவர்களிடமே அனுப்புங்கள் என்று சொல்கிறீர்கள். என் தளத்திற்கும் தினம் குறைந்தபட்சம் 100 ஹிட்ஸ் வந்தாலும், அபூர்வமாய் தான் பின்னூட்டமிடுகிறார்கள். ஹிட்ஸ் கவுண்ட் மட்டும் இல்லையென்றால், நான் எழுதுவதை எப்பொழுதே நிறுத்தியிருப்பேன். ஆள் வராத கடையில், டீ ஆத்துறது ஒரு பொழப்பா?

    தொடர்ச்சியாய் தமிழ்மணத்தை பல்வேறு சிரமங்களை தாங்கி திறம்பட நடத்திவருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

  3. r.k.sathishkumar on September 30th, 2011 10:42 am

    இந்த மாசம் ஆளு யாரும் சிக்கலை..அதான் இந்த அறிவிப்பு

    —-
    from TM Admin
    r.k.sathishkumar,
    Here we want to point it out that you are spamming our admin mail box with each and every ‘Astrologer’ blog post mail through Google+. Unfortunately we can not respond as it is directed to ‘no-reply’. We would appreciate if you could cease doing it. Thank you.

  4. ஜோதிஜி on September 30th, 2011 12:33 pm

    சிறப்பு

  5. தோழன் மபா on September 30th, 2011 9:53 pm

    உண்மைதான்…. ‘நட்சத்திர வாரம்’ வேலை ‘பளு’ மிகுந்ததுதான். எனது நட்சத்திர வாரத்தின் போது, எனது தங்கையின் திருமண வேலை
    நடந்துக்கொண்டு இருந்தது. ஆபிஸ் வொர்க், கல்யாண வேலை, தொடர்ந்து பதிவு எழுதுதல் என்று அந்த வாரம் மிகுந்த கடினமாக இருந்தது.

    இருந்தாலும் தேன் எடுக்கவேண்டுமென்றால் கஷ்டப்பட்டுதான் ஆகவேண்டும். நச்சத்திர பதிவின் போது…எனது பதிவுகள் பரவலான வாசிப்பபை பெற்றது. பிரதிபலன் பாராது செயல்படும் ‘தமிழ்மணத்தின்’ பணி போற்றக்கூடியது. வாழ்க தமிழ்மணம்.

  6. puthiyapaamaran on October 1st, 2011 12:18 am

    தகவல்களைத் திரட்டித் தரும் கட்டுரைகளுக்கு மட்டும்தான் முதல் மரியாதையா?
    வார்த்தைகளால் கோர்த்தெடுத்து, விளாசித் தள்ளும் கவிதைகளுக்கில்லையா?!

    – புதிய பாமரன்.

  7. vallisimhan on October 1st, 2011 1:50 am

    தமிழ்மணத்தின் நிலைப்பாட்டை விளக்கியதற்கு மிகவும் நன்றி.
    நான் நட்சத்திரம் ஆக வேண்டும் என்று நினைத்ததில்லை.
    என்னால் அது முடியுமா என்ற கவலையுண்டு.
    ஏனெனில் எனக்கு எழுதுவது ஒருவடிகாலாக இருக்கிறது.
    அதற்கு நல்லதொரு தளமாக தமிழ்மணம் இயங்குவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே.
    தமிழ்மணம் மூலம் கிடைத்த நட்பு வட்டம் மிகவும் பெரியது.
    அவர்கள் அன்பு என்னை எப்போதும் கைவிட்டதில்லை.

    உங்களுடன் நேரில் உரையாடச் சந்தர்ப்பம் கிடைத்ததும் நல்லது.
    அன்புடன்
    ரேவதி நரசிம்ஹன்(எ)வல்லிசிம்ஹன்
    ஐந்துவருட நற்தொடர்புக்கு நன்றி.

  8. தமிழ்மணத்தில் நட்சத்திரமாக இருந்தவன் என்ற முறையில் அதன் சிறப்பை நன்கு உணர்ந்திருக்கிறேன்..

    இதுபோன்ற தங்கள் பாராட்டுதல்கள் வலைப்பதிவர்களைப் பெரிதும் ஊக்குவிப்பதாக அமைகின்றன..

    தொடரட்டும் உங்கள் சேவை..

  9. ராஜ நடராஜன் on October 2nd, 2011 3:46 am

    தமிழ்மணத்துக்கு தெரியாமலே சிறப்பாக எழுதிக்கொண்டிருக்கும் பதிவர்கள் இருப்பார்கள் என்பது ஆச்சரியம்!ஒரு வேளை எண்ணிக்கை நோக்காமல் எழுதுவதாலும்,ஆமை நடை போடுவதன் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

    சிபாரிசுக்கடிதம் கொண்டு வந்தால் கவனிக்கப்படும் என்பதால் இப்போதைக்கு எனது சிபாரிசு

    http://aatralarasau.blogspot.com/

    தளம்: சமரசம் உலாவும் இடமே!

    பதிவர்: சார்வாகன்.

  10. dharumi on October 2nd, 2011 9:14 am

    ’பூங்கா’ இனியும் வர வாய்ப்புண்டா?

  11. paramasivam on October 2nd, 2011 12:48 pm

    தரமான பதிவை உருவாக்க ஓயாது சிந்திக்க வேண்டியிருக்கிறது.
    நான் குறிப்பிட்ட ஒரே தலைப்பில் [கடவுளின் ‘இருப்பு’ பற்றிய ஆய்வு] எழுதுபவன்.

    நடு நிலை தவறாமல், பிறர் மனதை நோகடிக்காமல் மிகுந்த எச்சரிக் கையுடன் கருத்துகளை வெளியிட வேண்டியிருப்பதால், நினைத்த நேரத்தில் பதிவைப் பதிவு செய்ய இயலாது.

    எனவே, தமிழ் மணத்தில் என் போன்றவர்களின் பதிவு உரிய நேரத்தில் இடம் பெற்றாலே போதுமானது. பாராட்டு, பரிசு போன்றவை தேவையே இல்லை.

  12. பலே பிரபு on October 16th, 2011 5:08 am

    இது குறித்து நிறைய கேள்வி இருந்தது, பொறுமையான விளக்கத்துக்கு நன்றி.

Leave a Reply