தமிழ்மணம் நுட்ப உதவிக்குழு

தமிழ்மணம் போன்றதொரு தளத்தினைப் பயன்படுத்த ஆரம்ப காலத்தில் இருந்தே நுட்ப உதவிக்கென்று ஒரு வழிமுறை இருப்பது அவசியமாக இருந்தது. இதற்குக் காரணங்கள் பல.

ஒன்று, வலைப்பதிவுகளின் ஆரம்ப காலத்தில் பெரும்பாலும் கணினி, மென்பொருள், மற்றும் பொறியியற் துறைகளைச் சார்ந்தவர்களே அதிகம் இருந்தனர் என்றாலும், நாளடைவில் இணைய வளர்ச்சியின் பரவலாலும், இணையத்தில் தமிழ்ப் பயன்பாடு வளர்ந்தமையாலும், வலைப்பதிவுகளும் இன்ன பிற இணைய வசதிகளும் பலதரப்பட்ட பயனர்களையும் சென்றடைந்தது. ஆனால், எல்லோருடைய பின்புலமும் வெவ்வேறானதாக இருந்தமையால் அவர்களுக்குத் தேவைப்பட்ட நுட்ப விளக்கங்களும் வேறு வேறு விதமான அளவில் இருந்தன. இன்றும் இருக்கின்றன.

காட்டு: “செய்தியோடை” என்றால் என்ன? என்னும் கேள்விகள் கூட இன்னும் வந்துகொண்டிருக்கும் நிலையில் இது இயல்பானதொன்றே என்று எடுத்துக் கொள்கிறோம். இதற்கெனவே வலைப்பதிவு நுட்பங்களின் அடிப்படை மற்றும் தமிழ்மணம் திரட்டியில் இணைந்து கொள்வது போன்ற அடிப்படை விளக்கங்களுக்குச் சில பக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறோம். இவை எல்லோருக்கும் தேவையானவை அல்ல. ஆனால், இன்னும் இவற்றிற்கான தேவை இருக்கிறது.

இரண்டு, இணையமும், நுட்பங்களும் அதிவேகமாக மாறி வரும் வேளையில் இயன்றவரை அவற்றைத் தமிழ்மணத்தில் சேர்க்க முயல்கிறோம். சிலவற்றைச் சேர்த்தும் பிறவற்றை விலக்கியும் மாற்றங்களை எப்போதும் கொண்டிருப்பதால் சிலசமயம் அவற்றைத் தெளிவு செய்துகொள்வதற்கான தேவையும் பயனர்களுக்கும் இருக்கிறது.

காட்டாக, செய்தியோடைகளை அடிப்படையாக வைத்தே திரட்டி நுட்பம் இயங்குகிறது என்பது பலரும் இன்று அறிந்த ஒன்றே. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னர், முக்கியமான வலைப்பதிவுச் சேவையான பிளாக்கர், தனது இயல்பான செய்தியோடை முகவரியை மாற்றியது. http://dharumi.blogspot.com/atom.xml என்பது போல இருந்தவை http://tamilamudam.blogspot.com/feeds/posts/default என்பது போன்ற வடிவத்திற்கு மாறியது (மேற்சுட்டிய தளங்கள் தற்செயலானவை). அதோடு, பழைய பிளாக்கர், புதிய பிளாக்கர் என்று இரண்டும் சிறிது நாட்களுக்கு ஒருசேர இயங்கியது. சிக்கல் என்னவென்றால் தமிழ்மணத்தின் பல வசதிகளை வழங்கிவந்த கருவிப்பட்டை நிரல் முற்றிலுமாக மாற்றியமைக்கப் படவேண்டியிருந்த்து. இதனைச் செய்ய வழிமுறைகளை அறிவித்தாலும், ஆரம்பத்தில் அது சற்றே சிக்கலுக்குரியதாக இருந்த்து. இதையே பின்னாளில் எளிதாகச் சேர்த்துக் கொள்ளும் நுட்பத்தைச் சில பதிவர்களே செய்துதவினர். (இப்படியான கருவிப்பட்டையே இன்றைய நாளில் தேவை தானா என்னும் கேள்வியும் பதிவர்கள் இடையேவும் தமிழ்மண நிர்வாகத்திலும் எழுந்திருக்கிறது. அது வேறு கேள்வி. அதனைப் பின்னர் பார்ப்போம்).

இதுவே, அண்மையில் பிளாக்கர் ஃபீட்பர்னர் ஓடையையும் பாவிக்கத் தொடங்கியதில் இருந்து, ஃபீட்பர்னருக்கு இயல்பான ஓடையை வழிமாற்றிவிடுவதால் திரட்டிக்குச் சிக்கல் ஏற்படுகிறது என்பதைப் பலருக்கும் விளக்க வேண்டியிருக்கிறது. ஃபீட்பர்னர் ஓடையைக் கூடுதலாக வைத்துக் கொள்வது பிரச்சினையில்லை. ஆனால் இயல்பாய் உள்ள ஓடையை வழிமாற்றுவதில் சிக்கல்கள் உள்ளன. இவற்றை எல்லாம் முற்றிலும் அறிந்துணர தமிழ்மணம் நிர்வாக்க் குழுவிலும் சிலரேனும் நிறைய நேரம் செலவிட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லா நுட்பங்களையும் எல்லாச் சமயங்களிலும் தெளிவாக விளக்கிச் சொல்ல இயலாத நேரங்களில் சிலசமயம் பதிவர்கள் உதவுகின்றனர். இந்த பீட்பர்னர் பிரச்சினை குறித்து நுட்ப உதவி கேட்டு வரும் மடல்களுக்குக் கீழ்க்கண்ட பரிந்துரையை அனுப்புகிறோம்.

1. Remove redirection to feedburner feeds. OR
2. See: http://tvs50.blogspot.com/2009/06/feedburner-rss-feeds-vs-tamilmanam.html
Also See: http://ethirneechal.blogspot.com/2010/12/tamilmanam.html

மூன்று, சிலசமயங்களில் சில காரணங்களால் சில வசதிகள் அறிவித்தது போல் வேலை செய்யாது போகலாம். அதற்கும் பல காரணங்கள் உண்டு. தற்காலிகமாக வழங்கியின் பளு அதிகமாகித் தளம் தொய்வடைவதுண்டு. இதனைச் சரிசெய்ய நாளடைவில் மேலும் அதிகச் சக்தி வாய்ந்த வழங்கிகளுக்கு மாறிக் கொண்டே வந்திருக்கிறோம்.

அடுத்து, தமிழ்மணம் நிரலில் சிலசமயம் பிழை ஏதும் இருக்கவும் வாய்ப்புண்டு. அவற்றில் சிலவற்றை எளிதாகத் தீர்த்து விடுவதுண்டு. சிலவற்றைச் சரிசெய்வது எளிது தான் என்றாலும் நேரம் இன்மையால் விட்டுவிடுவதுண்டு. இது போன்றவற்றிற்கும் வழிமாற்று முறைகளையும் பிற விளக்கங்களையும் நுட்ப உதவிக்குழுவிற்கு வரும் மடல்களின் வாயிலாகச் செய்து வருகிறோம்.

இயன்றவரை உதவிக்குழுவிற்கு வரும் ஒவ்வொரு மடலுக்கும் பதில் அனுப்ப முயல்கிறோம். சில சமயம் தாமதம் ஆகிவிடுவதுண்டு என்றாலும், அநேகமாக 99% மடல்களுக்குப் பதில் அனுப்பி விடுகிறோம் என்பதையே ஒரு சாதனையாகக் கருதுகிறோம். இதிலும் வேடிக்கையும் வேதனையுமான சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அவை பற்றிப் பிறகு.

Comments

5 Responses to “தமிழ்மணம் நுட்ப உதவிக்குழு”

 1. நீச்சல்காரன் on September 28th, 2011 12:15 am

  விளக்கத்திற்கு நன்றி, இந்த பீட்பர்னர் பிரச்னையை ஓரளவு குறைக்க நீங்கள் .blogspot.com/feeds/posts/default என்பதற்குப் பதிலாக .blogspot.com/feeds/posts/summary பயபடுத்தலாம் என நினைக்கிறேன். இதனால் பதிவர்கள் ரீடேரக்ட் முகவரி எது கொடுத்தாலும் பதிவு சரியாக திரட்டப்படும் என நினைக்கிறேன்.

 2. ilavarasan on September 28th, 2011 2:50 am

  சவால்களையும்,சாதனையாக்குவதே தமிழ்மணத்தின் சிறப்பு.

 3. ஜோதிஜி on September 28th, 2011 12:05 pm

  இது போன்ற பணியை சுயலாபம் இல்லாது தன் முனைப்புடன் பார்த்துக் கொண்டிருப்பதே ஒரு மிகப்பெரிய சாதனை.

  இதை விட வேறென்ன வேண்டும்.

  போற்றுவார் போற்ற தூற்றுவார் தூற்ற

  இருந்த போதிலும்

  பணி செய்து கிடப்பதே.

 4. MSERK on October 10th, 2011 3:55 am

  அன்புள்ள நிர்வாகி அவர்களுக்கு,
  தமிழ் மணத்திலிருந்து விலக விரும்புகிறேன். எப்படி அதை செயல்படுத்துவது என்று கூற முடியுமா?
  நன்றி.


  செயற்படுத்திவிட்டோம்.
  இதுவரை நாள் இணைந்திருந்ததற்கு நன்றி.

  தமிழ்மணம்

 5. MSERK on October 10th, 2011 6:22 am

  Thank You.

Leave a Reply