தமிழ்மணம் தொழில்நுட்ப கேள்வி பதில்கள்

தமிழ்மணம் இணைத்தளம் தமிழின் முதல் இணையத்திரட்டியாக 2004ல் தொடங்கப்பட்டது. 2006ல் இருந்து தமிழ்மணத்தை தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம் நடத்தி வருகிறது. தமிழ்மணத்தினை தொடர்ந்து தமிழின் முதன்மையான இணையத்திரட்டியாக தக்கவைப்பதற்கு தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம் தன்னாலான
முயற்சிகளை தொடர்ந்து செய்து வந்திருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ்மணத்தின் தொழில்நுட்பத்தில் பல்வேறு புதிய சேவைகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வந்திருக்கிறோம். தமிழ் வலைப்பதிவுகளுக்கு வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவுக்கு பல்வேறு வசதிகளை தமிழ்மணம் வழங்கி வருகிறது. அதே நேரத்தில் தமிழ்மணத்தின் சேவையை இதை விட இன்னும் மேம்படுத்தி கொடுக்க இயலும். தமிழ்மணத்திலேயே இன்னும் பல தொழில்நுட்ப குறைகள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை நாங்கள் உணர்ந்தும் இருக்கிறோம். என்றாலும் லாப நோக்கு இல்லாத தன்னார்வ நிறுவனமாக தமிழார்வளர்களின் பகுதி நேரப் பணியில் செயல்படும் தமிழ்மணம் எதிர்கொண்ட/எதிர்கொண்டு வருகின்ற சவால்களும் ஏராளம். இந்த சவால்களுக்கு மத்தியில் தான் எங்களால் வழங்க முடிந்த புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம்.

இந்த நட்சத்திர வாரத்தில் தமிழ்மணம் சார்ந்த பல்வேறு விடயங்களை முன்வைக்க இருக்கிறோம். அதன் ஒரு பகுதியாக இந்த இடுகையில் தமிழ்மணம் செயல்படும் தொழில்நுட்பம் குறித்து ஒரு சுருக்கமான அறிமுகத்தை வழங்குகிறோம். இதன் மூலம் தமிழ்மணம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள இயலும்.

தமிழ்மணம் நிர்வாகத்திற்கு வருகின்ற பலக் கேள்விகள் தமிழ்மணத்தின் சூடான இடுகைகள், தமிழின் முன்னணி இடுகைகள் போன்ற சேவைகள் தமிழ்மண நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்படுவதாக பலர் நினைப்பதை எங்களுக்கு தெரிவிக்கிறது. தமிழ்மணத்தின் அனைத்து சேவைகளும் தானியங்கியாகவே செயல்படுகின்றன. தமிழ்மணத்தின் எந்தச் சேவையிலும் மனிதத் தலையீடு இருப்பதில்லை. பதிவுகளை திரட்டுதல் தொடங்கி தமிழின் முன்னணி இடுகைகளை பட்டியலிடுவது வரை அனைத்தையுமே தமிழ்மணம் தானியங்கியாக தான் வழங்குகிறது.

இன்று பதிவுகளின் எண்ணிக்கை பத்தாயிரத்தை எட்டும் நிலையிலும் தமிழ்மணம் பதிவுகளை தானியங்கியாக திரட்டுகிறது. தமிழ்மணம் திரட்டி தினமும் பல ஆயிரம் பதிவுகளின் செய்தியோடைகளை திரட்டி அதில் இருந்து சமீபத்தில் எழுதப்பட்ட இடுகைகளை தமிழ்மணத்தின் முன் பக்கத்திற்கு கொண்டு வருகிறது. ஒரு நாளில்
தமிழ்மணத்தில் தற்பொழுது 500 இடுகைகள் எழுதப்படுகின்றன. இந்த 500 இடுகைகளை அவற்றின் குறிச்சொல் கொண்டு இசை, நகைச்சுவை, சினிமா, அரசியல் என தமிழ்மணம் திரட்டி பல்வேறு பிரிவுகளில் வகைப்படுத்துகிறது. அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு இடுகையும் பெறும் மறுமொழிகளின் எண்ணிக்கை தமிழ்மணம்
முகப்பில் தொகுக்கப்படுகிறது. அது தவிர மறுமொழித் திரட்டி மூலம் அனைத்து மறுமொழிகளையும் வாசிக்க முடியும். மறுமொழித் திரட்டி தமிழ்மணத்தின் முக்கிய சேவையாக இருந்து வருகிறது. பதிவுகளை திரட்டுவதை விட மறுமொழிகளை திரட்டுவது சவால் நிறைந்தது. தமிழ்மணம் வழங்கிக்கு அழுத்தம் கொடுக்ககூடிய இந்தச் சேவையை தமிழ்மணம் தொடர்ந்து வழங்கி வருகிறது. தமிழ்மணம் வழங்கிக்கு பாதிப்பு ஏற்படாதவண்ணம் இந்த தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது.

செய்தியோடைகள்
தமிழ்மணம் செய்தியோடைகளை (RSS Feed) அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. செய்தியோடையில் செய்யப்படும் எந்த வகை மாற்றமும் தமிழ்மணம் பதிவுகளை திரட்டுவதை பாதிக்கும். பல நேரங்களில் பலப் பதிவர்கள் தங்களுடைய பதிவுகள் திரட்டப்படுவதில்லை என்ற குறைகளை முன்வைக்கிற பொழுது அது பெரும்பாலும் அவர்களின் செய்தியோடை சார்ந்த பிரச்சனையாகவே இருக்கிறது. செய்தியோடை மாற்றங்களில் எப்பொழுதும் பதிவர்கள் கவனம் கொள்ள வேண்டும்.

தமிழ்மணம் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு மாறுபட்ட எண்ணங்கள் பதிவர்கள் மத்தியில் இருந்து வருகிறது. நட்சத்திர வாரத்தில் இடுகைகளை வெளியிடுவதோடு நின்று விடாமல் தமிழ்மணத்தின் தொழில்நுட்பம் குறித்த உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் விடையளிக்க விரும்புகிறோம். இந்த இடுகையின் மறுமொழியில் உங்கள் கேள்விகளை கேட்கலாம். பதில்களை மறுமொழியிலோ, மற்றொரு இடுகையிலோ அளிக்க தயாராக இருக்கிறோம்.

கேள்விகளை கேளுங்கள்…

தமிழ்மணம் தொழில்நுட்பக் குழு

Comments

9 Responses to “தமிழ்மணம் தொழில்நுட்ப கேள்வி பதில்கள்”

  1. K.Ravishankar on September 27th, 2011 2:44 am

    Recent times when I try to post after typing my username and password the next screen says” புது இடுகை எதுவும் காணப்படவில்லை” two times I tried and the same message came but post has not been appeared in tamilmanam. But it appears after some time. Some time it get posted if I post one more post after five minutes.Both posts appears.

  2. டோண்டு ராகவன் on September 27th, 2011 6:20 am

    சில பதிவரகள் தமது மென்பொருள் அறிவை தவறாகப் பயன்படுத்தி, தமது இடுகைகள் மட்டும் பல நாட்களாகத் தொடர்ந்து தமிழ்மண முதல் பக்கத்தில் வருமாறு செய்து விடுகிறார்கள்.
    இது பற்றி நான் இட்ட இடுகை, இதோ: http://dondu.blogspot.com/2011/09/bugs.html

    அவர்களை கண்டுபிடித்து களையெடுக்க இயலாதா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  3. ஜோதிஜி on September 27th, 2011 8:40 am

    ஓட்டுப்பட்டை என்பது அவஸ்யமா?

    உறுப்பினராக இருப்பவர்கள் பதிவை வெளியிட்டதும் இயல்பாகவே இணைத்துக் கொள்ளும் வசதியை உருவாக்கினால் என்ன?

  4. செல்வராஜ நிரூபன் on September 27th, 2011 9:27 am

    மதிப்பிற்குரிய தமிழ்மணம் நிர்வாக குழாமிற்கு,

    தமிழ்மண தொழில் நுட்பம் தொடர்பாக நல்லதோர் விளக்கத்தினை வழங்கியிருக்கின்றீர்கள்.

    என்னிடம் சிறிய ஒரு கேள்வி இருக்கின்றது. சில நேரங்களில் தமிழ்மண முகப்பு பக்கத்தில் வெளிவருகின்ற பதிவுகளிற்கு அண்மையாக உள்ள யெலோ (Yellow) பட்டன் மூலம் ரிப்போர் செய்து, தனி மனிதத் தாக்குதலோ அல்லது ஆபாச விடயங்களோ இல்லாத பதிவுகளையும் விஷமத் தனமாக திட்டமிட்டு தமிழ் மணத்திற்கு ரிப்போர்ட் செய்து பலர் நீக்கச் செய்கின்றார்கள்.

    இவ்வாறு பதிவர்களால் ரிப்போர்ட் செய்யப்படும் பதிவுகளும் தானியங்கி முறையில் தான் நீக்கப்படுகின்றனவா அல்லது தமிழ்மண நிர்வாகிகளின் பார்வைக்கு உட்படுத்தப்பட்டு நீக்கப்படுகின்றனவா?

    இதே வேளை ஒரு பதிவர் தனது தனிப்பட்ட ஐபி முகவரியிலிருந்து ரிப்போர்ட் செய்திருக்கிறாரா? அல்லது பல பதிவர்களின் வெவ்வேறு ஐபி முகவரியிலிருந்து புகார் செய்திருக்கிறார்களா? எனும் தொழில் நுட்பத் தகவல்களைத் தமிழ் மணம் பரிசோதித்தா இவ்வாறு ரிப்போர்ட் செய்யப்படும் பதிவுகளை நீக்குகின்றது?

    நேசமுடன்,
    செ.நிரூபன்.

  5. தங்கள் பணி

    போற்றுதலுக்கும்

    பாராட்டுதலுக்கும் உரியது..

    “தாங்கள் அளிக்கும் குறிச்சொற்களில்

    “இலக்கியம்“

    என்னும பிரிவும் இருந்தால் இலக்கியப் பதிவுகள் அதிகரிக்கத் துணையாக இருக்கும எனக் கருதுகிறேன்..

  6. YOGA.S.Fr on September 27th, 2011 12:29 pm

    வார நட்சத்திரம் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறது?தரப்படுத்தலில் பாகுபாடு காண்பிக்கப்படுவதில்லையா?அதிக பின்னூட்டம்(கருத்து)பெறுவோர் முன்னணிக்கு வந்து விட முடியுமா?பின்னூட்டமிடுவோர் கண்டிப்பாகப் பதிவராகத் தான் இருக்க வேண்டுமா?அப்போது தான் முகப்பில் இடம்பிடிக்கலாமா?(நான் பதிவரல்ல)

  7. கோவி.கண்ணன் on September 27th, 2011 10:42 pm

    ‘மகளிர்மணம்’ எப்போது செயல்பாட்டுக்கு வரும் ?

    தமிழ்மணம் விவாதக் களங்களை (Forum) உருவாக்கி ஆக்கமான விவாதங்களுக்கு வழி செய்யலாமே

  8. டோண்டு ராகவன் on September 28th, 2011 9:32 am

    கேட்ட கேள்விகளுக்கு பதில் எப்போது?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  9. தமிழ்மணம் on September 28th, 2011 10:22 pm

    பதில்கள் இந்த இடுகையில் வழங்கப்பட்டிருக்கிறது
    http://blog.thamizmanam.com/archives/338

    நன்றி….

Leave a Reply