ஐந்தாண்டுகளைக் கடந்து டி.எம்.ஐ நிறுவனமும் தமிழ்மணத்தின் தொடரும் பயணமும்

தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம்

இந்த வாரம் தமிழ் மண நட்சத்திரம் யார் என்று ஆவலுடன் படிக்க வந்திருக்கும் உங்களுக்கு டி.எம்.ஐ நிறுவனமே அந்த இடத்தை எடுத்துக் கொண்டது வியப்பாக இருக்கலாம். தமிழ்மணம் வலைத்திரட்டியைத் திரு. காசி ஆறுமுகத்திடம் இருந்து பெற்று மேலும் பல புதிய வலைப்பதிவு சேவைகளை அளிப்பதற்காக தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம் நிறுவப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. வணிகநோக்கற்ற தன்னார்வத் தொண்டுநிறுவனமாக அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள டி.எம்.ஐ நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்து வந்துள்ளவற்றையும், எதிர்கொண்ட சவால்களையும் இவ்வார நட்சத்திரப் பதிவுகளில் ஒரு மீள்பார்வை செய்யவிருக்கிறோம். இந்த நட்சத்திர வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பதிவர்களுடனான நேரடியாக உறவைப் பேணும் விதமாக இவ்வாரம் தன் நோக்கங்களையும் பணிகளையும் எதிர்காலத்திட்டங்களையும் பகிர்ந்து கொள்கிறது. பதிவர்களும், வாசகர்களும் எங்களுடன் இணைந்து தமிழ்மணத்தை மேலும் சிறப்புற ஆலோசனைகளையும் வழங்க வேண்டுகிறோம்.

மேலோட்டமாக பார்ப்போமாயின், இந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்வலைப்பதிவுகளின் எண்ணிக்கையுடன் தொழில்நுட்பரீதியிலும் தமிழ்மணம் பெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அவை பற்றிய விளக்கமான தகவல்கள் அடுத்து வரும் பதிவுகளில் வெளிவரும். தமிழ்மணத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட புதிய சேவைகளைப் பற்றி சுருக்கமாக இங்கே காணலாம்.

முதலில் நோக்கமும் குறிக்கோளும் – தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம், அனைத்துத் தரப்புத் தமிழர்களும் சந்தித்து வரும் பொருளாதார, சமூக-அரசியல், கல்வி மற்றும் சுகாதாரப் பிரச்னைகள் குறித்த அறிவையும், விழிப்புணர்வையும் உலகளாவியத் தமிழ் மக்களிடம் வளர்க்க விரும்புகிறது. அரசு, வணிக நிறுவனங்கள் மற்றும் தன்னார்வக் குழுக்கள் என பல்வேறு அமைப்புகள் இப்பிரச்னைகளில் பெரும்பாலானவற்றை தனித்தனியே அணுகி வந்திருந்தாலும் இவ்வமைப்புகளுக்கும், மக்களுக்குமிடையே முழுமையான தொடர்பு இருக்கவில்லை. இந்தத் தொடர்பறுந்த நிலையானது நம் சமூகத்தின் அடிப்படையில் உள்ள பின்வரும் இரண்டு இடைவெளிகளின் பிரதிபலிப்பேயாகும்: (அ) வசதிகள் வாய்க்கப் பெற்ற பிரிவினருக்கோ விளிம்புநிலை மனிதர்களின் பிரச்னைகளைப் பற்றிய முழுமையான அறிவில்லை. (ஆ) விளிம்புநிலை மனிதர்களுக்கோ தங்களுடைய பிரச்னைகளின் அடிப்படைக் காரணங்களைப் புரிந்து கொள்ளக் கூடிய கல்வியறிவோ, விழிப்புணர்வோ அல்லது இரண்டுமே இருக்கவில்லை. அப்படியே புரிந்து கொண்டாலும், அப்பிரச்னைகளைக் களைவதற்கான வழிகளை அறிய வாய்ப்பில்லை. டி.எம்.ஐ நிறுவனம் இந்த இடைவெளிகளை நிரப்பும் பாலமாகச் செயல்பட விரும்புகிறது. விளிம்புநிலை மனிதர்கள் கூட தங்கள் குரலை சுதந்திரமாகவும், அதே நேரம் தனிமனித தாக்குதல்களின்றியும் ஒலிக்கும் வண்ணம் இணைய வசதிகளைப் பயன்படுத்தி ஒரு தளத்தை உருவாக்க விரும்புகிறது.

டி.எம்.ஐ. நிறுவனம் தமிழ்மணத்தை ஏற்கும்போது ஏறத்தாழ நானூறு பதிவுகளே இருந்தன; ஆனால், இன்றோ தமிழ்மணத்தில் இணைந்த பதிவுகளின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தொடவிருக்கிறது. பத்தாயிரம் பதிவுகளை தினமும் தானியங்கியாக தமிழ்மணம் திரட்டுகிறது. பதிவுகளை மட்டுமில்லாமல் அந்தப் பதிவுகளின் மறுமொழிகள், குறிச்சொற்கள், குறிச்சொற்களைக் கொண்டு தானியங்கியாக பதிவுகளை நகைச்சுவை, தொழில்நுட்பம் என பலப் பரிவுகளாக வகைப்படுத்தும் சேவை, பதிவுகள் வாசகர்களிடம் பெற்றுள்ள பரப்பினை தெரிவிக்கும் “தமிழின் முன்னணி பதிவுகள்”, ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டில் பிரபலமாக உள்ள பதிவுகள் என பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை தமிழ் வலைப்பதிவுகளைச் சார்ந்து தமிழ்மனம் வழங்கி வருகிறது. தமிழில் மட்டுமில்லாமல் பிற தெற்காசிய பிராந்திய மொழிகளில் கூட இல்லாத பல சேவைகளை தமிழ்மணம் வழங்க தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம் உழைத்துள்ளது.

தொழில்நுட்பம் தவிர, டி.எம்.ஐ. நிறுவனத்தின் மற்றொரு முயற்சியான பூங்கா வலையிதழைக் குறிப்பிட வேண்டும். தமிழ்மணத்தில் திரட்டப்படும் வலைப்பதிவுகளில் இருந்து புதிய பார்வைகளையும் பரந்துபட்ட சிந்தனைகளையும் உயிர்ப்பான மொழியிலே வெளிப்படுத்தும் படைப்புகளை அனுமதி பெற்றுத் தேர்ந்தெடுத்து வாரந்தோறும் தொகுப்பது பயனானதெனக் கருதி, “பூங்கா” வலையிதழைத் தமிழ்மணம் செப்டம்பர் 2006 இலே ஆரம்பித்தது. இக்கவனிப்பினூடாக தமிழ்ப்பதிவர்களின் பல்வேறு துறை நிபுணத்துவத்தை அடையாளங் கண்டு பதிவு செய்யத்தூண்டவும் மொழிவெளிப்பாட்டின் பல்வேறு கலைப்பரிமாணங்களைப் பரிசோதனை செய்ய ஊக்குவிக்கவும் சமூக அக்கறையுள்ளவர்களை ஒன்றிணைக்கவும் வேண்டிய தொடர்ச்சியான தேவையை நிறைவேற்றலாமென டி.எம்.ஐ. திடமாக நம்பியது; இன்னமும் நம்புகிறது. ஆனால், கிட்டத்தட்ட ஓராண்டு காலம் வெளிவந்த பூங்கா, தமிழ்மணம் போலத் தானியங்காமல் தனித்து ஓர் ஆசிரியர்குழுவின் கீழே இயங்க வேண்டியிருந்ததால் எங்கள் குழுவினரின் நேரத்தை அதிகம் எடுத்துக் கொள்ள நிறுத்தப்படவேண்டியதாயிற்று. இருப்பினும் இன்றும் பல பதிவர்கள் அம்முயற்சியை நினைத்துப்பார்க்கும்படியாக அமைந்தது பூங்கா என்பதில் மாறுபட்ட கருத்திருக்க முடியாது.
அடுத்து, ஜனவரி 2008 ஆம் ஆண்டு புதிய தமிழ்மணம் 2.0 சிறப்பான முறையில் வெளியிடப்பட்டது. தொடக்கத்தில் புதிய தமிழ்மணத்தின் இடைமுகம் பரிச்சயமின்மையால் முழு வரவேற்பைப் பெறாவிடினும், பழக ஆரம்பித்த சில நாட்களிலேயே அதனுடைய தொழில்நுட்ப மேம்பாட்டினால் பதிவர்களின் ஆதரவைப் பெற ஆரம்பித்தது. புதிய தமிழ்மணம் அளித்த தொழில்நுட்ப வசதிகள் ஏராளம். மறுமொழி திரட்டி, குறிச்சொல் திரட்டி, வாசகர் பரிந்துரை, சூடான இடுகைகள், தனித்தனியேயான துறைசார் பதிவுப்பக்கங்கள், பதிவர்களின் படங்கள் திரட்டல் என பல சேவைகளைக் குறிப்பிட விரும்புகிறோம்.

தமிழ்மணத்தின் இன்னொரு மைல் கல் திரைமணம். திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட பதிவுகள் வாசகர்களின் மத்தியில் அதிக கவனத்தைப் பெறுதலால், புதிய திரைப்படங்கள் வெளிவரும் வேளைகளில் எல்லாம் புதிய சவாலையும் ஏற்படுத்தியது. திரைப்படப் பதிவுகள் அதிகம் வரும் பொழுது மற்ற பதிவுகள் தமிழ்மணம் முகப்பில் அதிக நேரம் நிற்காமையால் பிற துறைகளில் நன்றாக எழுதும் பதிவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. மேலும் திரைப்படங்களைப் பற்றி படிக்க விரும்பும் வாசகர்களுக்கும் புதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நினைத்தோம். அதில் உருவாகியதுதான் திரைமணம். இன்று திரைமணம் பதிவர்களிடையேயும் வாசகர்களிடையேயும் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இறுதியாக, தமிழ்மணம் விருதுகளைக் குறிப்பிட விரும்புகிறோம். பொதுவாகவே வலைப்பதிவு விருதுகள் வழங்குவதில் உள்ள சவால்களையும், குளறுபடிகளையும் எதிர்கொள்ளமுடியாமல் பிறமொழிகளிலெல்லாம் விருதுகள் நிறுத்தப் பட்டிருக்கின்றன. ஆனால், தமிழ்மணம் விருதுகள் செயற்பாடு பல்வழிகளில் ஆராயப்பட்டு தனிநபர் தலையீடு மற்றும் குறைபாடுகள் ஏதுமில்லாமல் கடந்த மூன்றாண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் சுட்டிக்காட்டப்படும் சிறுகுறைகளைக்கூட பின்வரும் ஆண்டிலே பதிவர்களுடைய உதவியுடன் நீக்குகிறோம்.

இருப்பினும், இவையனைத்தையும் விட தமிழ்மணத்தின் வெற்றி வலைப்பதிவர்களாகிய உங்களது தொடர்ந்த ஆதரவில்தான் இருக்கிறது. சில நேரங்களில் எங்களுடைய சேவையில் தொய்வு ஏற்படும்போதுகூட குறைகளைச் சுட்டிக்காட்டி தொடர்ந்து எங்களுக்கு பக்கபலமாக இருந்திருக்கிறீர்கள். அண்மையில் எங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கவும் நன்கொடை அளித்தீர்கள். அவை அனைத்திற்குமான எமது நன்றியை இந்நேரத்தில் தெரிவித்துகொள்வதோடு தொடர்ந்து உங்கள் புரிதலையும் ஆதரவையும் வேண்டுகிறது.

தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம்
(Tamil Media International Inc)

Comments

23 Responses to “ஐந்தாண்டுகளைக் கடந்து டி.எம்.ஐ நிறுவனமும் தமிழ்மணத்தின் தொடரும் பயணமும்”

  1. krpsenthil on September 26th, 2011 12:53 am

    வாழ்த்துக்கள்…

  2. கிரி on September 26th, 2011 1:43 am

    வாழ்த்துக்கள் :-)

  3. செல்வராஜ நிரூபன் on September 26th, 2011 2:20 am

    தமிழ்மண நிர்வாகிகளுக்கும், பதிவர்களுக்கான சேவைகளைத் தொடர்ந்தும் வழங்கி வரும் தமிழ்மணக் குழும உறுப்பினர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள்.

    முதலில் பதிவர்களாகிய எங்களின் பதிவுகளுக்கு ஓர் அங்கீகாரம் கொடுத்து, எம் பதிவுகளை அகில உலகமெங்கும் கொண்டு செல்வதற்கான திரட்டியாகச் செயற்படும் தமிழ்மணத்தின் ஐந்தாண்டு நிறைவிற்கு சிறியேனின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ந்தும் பல காலம் தன் சேவையினை வழங்கித் தமிழ்மணம் தமிழ் வலைப் பதிவுகளைப் பற்றி தமிழ் கூறும் நல்லுலகிலுள்ள அனைத்து மக்களும் அறிந்து பயன்பெறும் வண்ணம் சேவைகளை விரிவாக்கப் பாடுபட வேண்டும்.

  4. soundarapandiann on September 26th, 2011 3:34 am

    வாழ்த்துக்கள்…

  5. துளசி கோபால் on September 26th, 2011 4:20 am

    நட்சத்திரமே இன்று நட்சத்திரமாக ஒளி வீசுகிறதே!!!!!

    .

    தங்கள் சேவைகளைப் பெற்றுவரும் ஆயிரக்கணக்கான பதிவர்களில் ஓருத்தியின் இனிய பாராட்டுகள்.

  6. டோண்டு ராகவன் on September 26th, 2011 4:24 am

    சில பதிவரகள் தமது மென்பொருள் அறிவை தவறாகப் பயன்படுத்தி, தமது இடுகைகள் மட்டும் பல நாட்களாகத் தொடர்ந்து தமிழ்மண முதல் பக்கத்தில் வருமாறு செய்து விடுகிறார்கள்.

    இது பற்றி நான் இட்ட இடுகை, இதோ: http://dondu.blogspot.com/2011/09/bugs.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  7. ராஜ நடராஜன் on September 26th, 2011 8:02 am

    பதிவுகள் பங்கீட்டை விட பெற்றுக்கொண்டதே அதிகம்.

    காசி ஆறுமுகம் மற்றும் இயங்கும் தமிழ்மணம் குழுவினர் உழைப்புக்கு நன்றி.

  8. வலிபோக்கன் on September 26th, 2011 11:17 am

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள், மலரோடு மணக்கும் நாறைப்போல
    உங்களோடு நானும் மணம் பெற்றுக்கொளகிறேன்

  9. ஜோதிஜி on September 26th, 2011 11:39 am

    இது போன்ற ஒரு முயற்சி உங்களிடமிருந்து வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை. நிச்சயம் இந்த வாரம் முழுக்க சுய மீள் ஆய்வு என்கிற ரீதியில் தமிழ்மணம் தனது பாதையை மெருகேற்றும் என்று நம்புகின்றேன்.

    நன்றி.

  10. ஷீ-நிசி on September 26th, 2011 12:16 pm

    வாழ்த்துக்கள் தமிழ் மணத்திற்கு!

  11. Indian on September 26th, 2011 1:24 pm

    தமிழ்மணம் நீடூழி வாழ வாழ்த்துகள்.

  12. ஐடியாமணி on September 26th, 2011 4:24 pm

    தமிழ்மணத்திற்கு என்னுடைய இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்! தமிழ்மணம் தொடர்ந்தும் வெற்றிகரமாக பயணிக்க வேண்டும்! இதற்கு, பதிவர்களாகிய எமது ஆதரவு என்றைக்குமே தொடர்ந்து இருக்கும்!

    வாழ்க தமிழ்மணம்! அவழர்க அதன் சேவை!!

  13. SHANMUGAVEL on September 26th, 2011 8:46 pm

    வாழ்த்துக்கள்.

  14. அழகிரி வேல் on September 26th, 2011 11:00 pm

    வாழ்த்துக்கள்

  15. Sivanesan on September 27th, 2011 12:36 am

    தொடர்து இணைந்திருக்கின்றோம் உங்கள் சேவை எமக்குத் தேவை சிறப்பான சேவை செய்யும் தமிழ்மணத்திற்கு வாழ்த்துக்கள்!

  16. venkatkumar on September 27th, 2011 12:49 am

    வாழ்க தமிழ்மணம்…வாழ்த்துக்கள்

  17. வே.நடனசபாபதி on September 27th, 2011 2:59 am

    வாழ்த்துக்கள்!

  18. YOGA.S.Fr on September 27th, 2011 1:36 pm

    பதிவரல்லாத கருத்துரைப்போனின் வாழ்த்துக்கள்!தொடரட்டும் நற்பணி!குறைகள் களைந்து நடை போடுக!

  19. paramasivam on September 27th, 2011 9:17 pm

    தற்சார்பு இன்றி, தரமான பதிவுகளையே தமிழ் மணத்திற்கு வழங் குவதென அனைத்துப் பதிவர்களும் உறுதி ஏற்க வேண்டும்.

  20. Thamizhan on September 27th, 2011 11:47 pm

    நட்சத்திரங்கள் தான் நீங்கள்
    தமிழ் ஒளி வீசும் நட்சத்திரங்கள் !

    தமிழுக்கு மணமுண்டு கண்டீர்
    தமிழ்மணம் மணக்கும் பூவால் !

    உலகெங்கும் வாழுந் தமிழா நீ
    களைப்பிற்கும் களிப்பிற்கும்
    வரும் இடந்தான் தமிழ்மணம் காண் !

    வளரட்டும் தமிழ்மணம் நன்றாய்
    வாழட்டும் உலகத் தமிழர் நன்றாய்
    பரப்பட்டும் தமிழை நன்றே !

  21. ilavarasan on September 28th, 2011 12:36 am

    தமிழ்மணத்தின் சேவை தமிழ் பதிவர்களுக்கு மிக மிக பயனுள்ளதாகும் ,நான் பயன் பெற்றுக் கொண்டிருக்கிறேன்.

    தமிழ்மணத்திற்கு நன்றியுடன்,வாழ்த்துகளும்.

  22. Amudhavan on September 29th, 2011 1:30 pm

    தங்களின் நிலையான வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள். எந்தெந்த நாடுகளிலோ இருக்கும் தமிழ் உறவுகளையெல்லாம் சட்டென்று ஒரு குடையின் கீழ் கொண்டுவந்துவிடும் அரிய தொண்டிற்காகவே தமிழ் மணத்தினை வாழ்த்துதல் தகும்.

  23. […] நட்சத்திரவார முதல் இடுகையில் கூறியபடி பல்வேறு சவால்களுக்கும், […]

Leave a Reply