தமிழ்மணத்தின் பரிசுத் தொகை குறித்த விளக்கம்

தமிழ்மணத்தின் பரிசுத்தொகை குறித்த சில கேள்விகளைப் பதிவர்கள் சிலர் மறுமொழிகளிலும் மின்னஞ்சல் மூலமாகவும் எழுப்பி உள்ளனர். தமிழ்மணம் வழங்கும் பரிசுத்தொகை மிகவும் குறைவான தொகையாக உள்ளதான ஒரு கருத்து இந்த மறுமொழிகளிலும் கேள்விகளிலும் முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ்மணத்தை நடத்தும் தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம் ஒரு வணிக நோக்கற்ற தன்னார்வ நிறுவனமாகவே செயற்பட்டு வருகிறது. கடந்த இரு மாதங்களாக பெற்றுக் கொள்ளத் தொடங்கி இருக்கும் விளம்பரங்களைத் தவிர்த்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்மணத்தை நடத்தி வரும் தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம் எந்த வருமானத்தையும் ஈட்டவில்லை. வணிக நோக்கிலும் நாங்கள் செயல்பட வில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே நேரத்தில் தமிழ்மணம் போன்ற அதிக பயனர்களைக் கொண்ட திரட்டியை நடத்த பல இலட்சக்கணக்கான ரூபாய்களை நாங்கள் செலவழித்திருக்கிறோம் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம். புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் நண்பர்களின் தமிழ் மொழி ஆர்வத்தினாலும், தனிப்பட்ட உழைப்பினாலும்மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள இயலும் என நம்புகிறோம். ஆனால், நண்பர்கள் சிலரின் கூட்டுமுயற்சியால் மட்டுமே பல்லாண்டுகளாக ஒரு தளத்தினையும் நிறுவனத்தையும் நடத்துவது சாத்தியமானதல்ல. காரணம் இணையத்தளத்தினைத் தொடர்ந்து நடத்துவதற்கு பொருளாதார பலமும் தேவை. தமிழ்மணத்தினை ஓராண்டு நடத்தவே பல ஆயிரம் ரூபாய்கள் தேவைப்படுகின்றன. இத்தேவைக்காகத்தான் தமிழ்மணம் விளம்பரங்களைப் பெற்றுக் கொள்ளத் தொடங்கியிருக்கிறது.

இவ்வாறான சூழலில் வலைப்பதிவர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கில் மட்டுமே ‘தமிழ்மணம் வலைப்பதிவு விருது’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படை நோக்கத்திற்கு ஓர் அடையாளமாகவே பரிசுகளும் பரிசுத் தொகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் மொத்த பரிசுத்தொகை சுமார் 30,000 ரூபாய். எந்த லாபமும் இல்லாமல் செயற்படும் ஒரு நிறுவனத்திற்கு இஃது ஒரு மிகப் பெரிய தொகையே. ஒரு பிரிவிற்கு ரூ1000.00, ரூ500.00 என மிகவும் குறைந்த பரிசாகத் தெரிந்தாலும் தமிழ்மணத்தின் நிதி ஆதாரத்தை பொறுத்தவரையில் மொத்த பரிசுத்தொகையான சுமார் 30,000 ரூபாய் ஒரு குறிப்பிடத்தகுந்த தொகையே ஆகும்.

இந்த ஆண்டு தமிழ்மணம் சில விளம்பரதாரர்களைப் பெற்றிருக்கிறது. அடுத்த வரும் ஆண்டுகளிலும் விளம்பரதாரர்கள் மூலமாக பரிசுகளை வழங்க தமிழ்மணம் முடிவு செய்துள்ளது. இதைத் தவிரவும் தமிழ்மணம் விளம்பரங்கள் மூலம் ஈட்டப்படும் தொகையை தமிழ்மணம் வழங்கிச் செலவுகள் தவிர தமிழ்மணம் விருதுகள் மற்றும் பிற வலைப்பதிவு சேவைகளுக்குப் பயன்படுத்தவே தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம் விரும்புகிறது.

தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம், வணிக மயமான ஊடக வெளியில் இருந்து விலகிச் சாதாரண மக்களின் குரலை ஊடகவெளியில் ஒலிக்கச் செய்யும் பணியைச் செய்வதையே அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஒலிக்கச் செய்வதில் இணையம் தற்பொழுது முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த இணைய வெளியில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஒலிக்கும் ஒரு தளமாகவே தமிழ்மணம் செயல்பட தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம் முயன்று வருகிறது. இந்த முயற்சியில் இது வரை எங்களுக்கு அளித்து வரும் ஆதரவையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து வலைப்பதிவர்கள் மற்றும் வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

நிர்வாகம்,
தமிழ் மீடியா இண்டர்நேசனல்

Comments

14 Responses to “தமிழ்மணத்தின் பரிசுத் தொகை குறித்த விளக்கம்”

 1. kudukuduppai on December 16th, 2010 1:06 pm

  தமிழ்மணத்திற்கு என் முழுமையான ஆதரவு. பரிசுத்தொகை விருதின் ஒரு அடையாளமாக பதிவர்கள் எடுத்துக்கொள்வார்கள்.

 2. பழமைபேசி on December 16th, 2010 3:46 pm

  ஆதரவும் நன்றியும் வாழ்த்துகளும்!!!

 3. jmms on December 16th, 2010 10:11 pm

  இந்த இணைய வெளியில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஒலிக்கும் ஒரு தளமாகவே தமிழ்மணம் செயல்பட தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம் முயன்று வருகிறது//

  மகிழ்ச்சி..

  விருதுகளும் அவ்வாறே அமையட்டும்..

  தகுதியான சமூகத்துக்கு பயனுள்ள கட்டுரைகளுக்கே கிடைக்கட்டும்…

  வாழ்த்துகள்..

 4. கோவி.கண்ணன் on December 16th, 2010 11:58 pm

  ஏற்கனவே எழுதப்பட்ட இடுகைகளுக்கு இந்தப் பரிசு தொகை கூடுதலாக ஒரு அங்கீகாரம் தான். வெற்றியும் அதற்குக் கிடைக்கும் பதக்கமும் தான் முதன்மையானது. தமிழ்மணத்திற்கு எனது ஆதரவு.

 5. pudugaithendral on December 17th, 2010 12:36 am

  தமிழ்மணத்தில் வலைப்பூவை இணைத்ததால்தான் பலரும் வந்து படிக்க ஏதுவாகிறது. அந்த எழுத்துக்களுக்கு ஒரு அங்கீகாரம் தமிழ்மணம் விருது. பரிசுத்தொகையை எல்லாம் அதிகபட்ச பாராட்டு. எது கிடைக்கிறதோ அது போதும். விருது பெறப்போகும் அனைவருக்கும் என் அட்வான்ஸ் பாராட்டுக்கள்.

  ஆமாம் இந்த முறை எனக்கு ஏன் தமிழ்மண விருது அறிவிப்பு பற்றிய மடல் முன்பே வரவில்லை. வாக்களிக்கச் சொல்லி மட்டும் விருது வந்திருக்கிறது. 🙁 🙂

 6. ஜோதிஜி on December 17th, 2010 1:06 am

  நல்ல புரிந்துணர்வு. புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பில் உள்ளவர்களுக்கு மட்டும். என்னுடைய வாழ்த்துகள்.

 7. கபிலன் on December 17th, 2010 3:33 am

  அருமையான விளக்கம் !
  தமிழ்மணத்திற்கு என் ஆதரவுகள்.

  சன்மானம் ஒரு பொருட்டல்ல ! ஆனால், தமிழறிஞர்கள் முன்னிலையில் ஒரு விழாவில் ,அந்த விருதை வழங்கி பதிவர்களை கௌரவித்தால் அதுவே மிகப் பெரிய சன்மானம் ஆகும் !

 8. அமுதவன் on December 17th, 2010 3:35 am

  விருதும் பரிசுத்தொகையும் ஒருபக்கமிருக்க தாங்கள் எழுதுவதை அதிகமான பேர் படிக்கிறார்களே என்பதும், அதிகமான பேர்களுக்குத் தங்கள் எழுத்தும் பெயரும் போய்ச்சேர்கிறதே என்பதும்தான் எழுதுபவர்களின் முதன்மையான மகிழ்ச்சியாக இருக்கப்போகிறது. அதனால் தமிழ்மணம் தனது பயணத்தைச் செவ்வனே நடத்தட்டும்.

 9. shiva on December 17th, 2010 7:09 am

  இதை நீங்கள் லாபமற்ற சேவையாக நடத்துவதே பாராட்டுக்குரிய விஷயம். இது போன்ற விமர்சனங்கள் வருவது இயற்கையே. உங்கள் சேவையை தொடருங்கள்.

 10. அக்பர் on December 17th, 2010 9:00 am

  விருதும் அங்கிகாரமுமே முக்கியம். தமிழ்மணத்திற்கு எனது ஆதரவும்.

 11. சம்ப்ப்ழா on December 17th, 2010 10:38 am

  நல்லா இருக்குடா…….இவ்வளவு காசு செலவு பண்ணி எவண்டா உங்களை தமிழ்மணத்தை நடத்தச் சொன்னது?

  சும்மா பம்மாத்து காட்டவேண்டாம்.
  மூடிக்கொண்டு போகலாமே?

  தமிழ்மணம் இல்லையென்றால் யாரும் சாகமாட்டார்கள்.

 12. நிலாரசிகன் on December 17th, 2010 1:13 pm

  ஆதரவும்,வாழ்த்துகளும்.

 13. மதிசுதா on December 17th, 2010 3:06 pm

  தொகை எவ்வளவ என்பதை விட போட்டியாளர் எண்ணிக்கை தான் முக்கியம்… அதை நாம் சரியாகவே புரிந்து வைத்துள்ளோம்…

 14. நான் கூட பரிசுத்தொகை கம்மி என ஒரு பதிவு போட்டேன்.ஆனால் உங்கள் கட்டுரை படித்ததும் என் முடிவை மாற்றிக்கொண்டேன்.நீங்கள் சொல்வது சரிதான். விருது தான் முக்கியம்,தொகை முக்கியம் அல்ல

Leave a Reply