தமிழ்மணத்தில் இருந்து சில பதிவுகள் நீக்கம்

தமிழ்மணத்தில் சேர்த்திருக்கும் சில பதிவுகளைத் திரட்டுவதில் இருந்து விலக்கி வருகிறோம். பிற செய்தித்தளங்கள், இணையதளங்களில் இருந்து பெரும்பாலும் வெட்டி ஒட்டிய இடுகைகளைக் கொண்டவற்றையும், பிறரின் காப்புரிமையை மதிக்காதவற்றையும், வெறும் அவதூறு மற்றும் வதந்தி பரப்பும் பதிவுகளையும், தமிழ்மணத்தின் சூழலை மாசுபடுத்துபவையையும் காலப்போக்கில் இனியும் விலக்கி விட முடிவு செய்திருக்கிறோம். அதோடு தமிழ்மணத்தில் இணைந்த தளங்கள் இப்போது தொழிற்படாமல் இருப்பின் (தளமே இல்லாதிருத்தல் போன்றன) அவற்றையும் நீக்க எண்ணியுள்ளோம். இது வாசகர்கள் பதிவர்கள் அனைவருக்கும் நன்மையையே தரும் என்பதோடு, தமிழ்மணத்தின் வழங்கிச் சுமையையும் குறைத்து நுட்ப அளவிலும் பயனுள்ளதாய் அமையும் என நம்புகிறோம்.

இம்முடிவைச் செயல்படுத்துகையில் தவறுதலாக ஏதேனும் பதிவு நீக்கப்பட்டால், மறுபரிசீலனை செய்து ஏற்றுக் கொள்ளவோ தொடர்ந்தும் விலக்கவோ உரிமையைத் தமிழ்மணம் தக்க வைத்துக் கொள்கிறது. இந்தச் செயற்பாட்டின் காரணமாகக் காலதாமதம் ஏற்பட நேரிட்டால் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறோம். முகப்புப் பக்கத்திலும் சில மாற்றங்களைச் சோதித்துப் பார்க்க எண்ணியிருக்கிறோம்.

பதிவர்கள் மற்றும் வாசகர்களுக்கு நல்ல வாசிப்பனுபவம் ஏற்படவும், தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளச் சுதந்திரமான ஒரு தளத்தை அமைத்துப் பேணுவதிலும் தொடர்ந்து தமிழ்மணம் ஈடுபடும்.

புரிந்துணர்வுடன் தொடரும் உங்கள் அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றி.

Comments

32 Responses to “தமிழ்மணத்தில் இருந்து சில பதிவுகள் நீக்கம்”

 1. துளசி கோபால் on May 29th, 2009 12:37 am

  தகவலுக்கு நன்றி.

  முகப்புப் பக்கத்தில் வரும் அனுபவம் என்ற தலைப்பில் ஜீவரத்தினம் தங்கராசா அவர்கள் பதிவு 2008 முதல் அங்கேயே இருக்கிறது. அதையும் கொஞ்சம் என்னன்னு பாருங்க.

 2. vallisimhan on May 29th, 2009 12:43 am

  நன்மை பயக்கும் எந்த ஏற்பாடுமே வரவேற்கப்பட வேண்டியதுதான்.
  வாழ்த்துகள்.

 3. செய்தித்தளங்கள், இணையதளங்களில் இருந்து பெரும்பாலும் வெட்டி ஒட்டிய இடுகைகளைக் கொண்டவற்றையும்,
  //

  என்னால்
  அனைத்து இணையதளங்களையும் பார்வையிட முடிவதில்லை தமிழ்மணம் வந்தால் அனைத்து செய்திகளையும் வாசிக்கலாம் என்ற நிலைமையில் இந்த முடிவு எனக்கு ஏமாற்றமே !!!!

  //

  முகப்புப் பக்கத்திலும் சில மாற்றங்களைச் சோதித்துப் பார்க்க எண்ணியிருக்கிறோம்.

  //

  வரவேற்கிறேன்..!!

 4. தமிழ் பிரியன் on May 29th, 2009 1:53 am

  தேவையான முடிவு.. மிக்க நன்றி!

 5. கார்க்கி on May 29th, 2009 1:57 am

  இது சரியெனவே படுகிறது. ஆனால் தவறுதலாக நீக்கப்படும் தளங்கள் வேண்டுகோளின்படி சீக்கிரமே இணைக்கப்பட வேண்டும்.இல்லையேல் வேறு விதமான பிரச்சினைக்கு இட்டு செல்லும் அபாயம் உள்ளது.

  எனக்கும், இன்னும் பலருக்கும் பெயர் தெரிவதில் பிரச்சினை உள்ளது. இடுகையின் தலைப்பு மட்டுமே முகப்பில் வருகிறது. எங்களது பெயர் தெரிவதில்லை. இதற்கு ஏதாவ்து வழி இருக்கிறதா?

 6. லக்கிலுக் on May 29th, 2009 2:10 am

  // வெறும் அவதூறு மற்றும் வதந்தி பரப்பும் பதிவுகளையும்//

  இதுபோன்ற பதிவுகளை விலக்குவது மிக முக்கியமானது 🙂

 7. எம்.ஏ.சுசீலா on May 29th, 2009 2:15 am

  தமிழ் மணத்தின் தரத்தை மேம்படுத்தும் சீரிய முடிவு இது. வரவேற்கிறேன்.
  எம்.ஏ.சுசீலா

 8. tamilnathy on May 29th, 2009 5:05 am

  தமிழ்மண நிர்வாகிகளுக்கு,

  சில விடயங்களைச் சுட்டிக்காட்டவேண்டுமென்று நானும் நினைத்திருந்தேன். அண்மைய நாட்களில் தனிப்பட்ட குடும்ப விடயங்களைக் குறித்தான பதிவுகள் வலையேற்றப்படுவதை அவதானித்தேன். இது தவிர்க்கப்படல் வேண்டும். ‘எம் பொண்டாட்டி மச்சினன்கூட ஓடிப்போயிட்டா”என்றும் நாளை பதிவுசெய்யப்படலாம். படைப்பிலக்கியங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும்.

  தவிர, Hits கிடைக்கவேண்டும் என்னும் குறுகிய நோக்கத்திற்காக ஈர்க்கத்தக்க தலைப்புகளைப் பதிவுகளுக்கு இடுவது உவப்பானதாக இல்லை. தலைப்பைத் தொடர்ந்துபோனால் சாரமே இல்லாமல் சப்பென்று சிலவற்றைப் படிக்கநேரிடுகிறது. சில சமயங்களில் தலைப்பே பதிவாகவும் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. இது மற்றவர்களின் நேரத்தை மறைமுகமாகத் திருடுவதற்கு ஒப்பானது.

  நீங்களும் இவற்றைக் கவனித்திருக்கக் கூடும். நன்றி.

 9. PazamaiPesi on May 29th, 2009 6:18 am

  முன்னறிவித்தலுக்கு நன்றிங்க! கூடவே குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு தடவை நினைவூட்டல் இடுகையும் இடுங்க… நாங்க, அல்ல, நான் என்னை நெறிப்படுத்திக்கத்தான்….

 10. அடியார் on May 29th, 2009 9:15 am

  இம்முடிவை நான் வரவேற்கிறேன்…

  அதே நேரம் கார்க்கி அவர்கள் கூறியது போல பதிவுகளை தமிழ்மணத்திற்கு அனுப்பி அவை இணைக்கப்படும் போது எனது பெயரும் தெரிவதில்லை. தலைப்பு மட்டுமே தெரிகின்றது.

 11. நா. கணேசன் on May 29th, 2009 9:28 am

  // என்னால் அனைத்து இணையதளங்களையும் பார்வையிட முடிவதில்லை தமிழ்மணம் வந்தால் அனைத்து செய்திகளையும் வாசிக்கலாம் என்ற நிலைமையில் இந்த முடிவு எனக்கு ஏமாற்றமே !!!!//

  செய்திகள் பக்கத்தை இதற்குத் தமிழ்மணம் பயன்படுத்தலாமே.

  கூகுள் நியூஸ், பிபிசி, … ஆர்எஸ்எஸ் ஓடைகள்,
  தமிழ்நாடு, ஈழம், … பற்றிய ஆங்கிலச் செய்திகள்
  (முக்கியமானவை மட்டும்) செய்திகள் பக்கத்தில் காணச் செய்யலாமே.

 12. புருனோ on May 29th, 2009 10:01 am

  //இம்முடிவைச் செயல்படுத்துகையில் தவறுதலாக ஏதேனும் பதிவு நீக்கப்பட்டால், மறுபரிசீலனை செய்து ஏற்றுக் கொள்ளவோ தொடர்ந்தும் விலக்கவோ உரிமையைத் தமிழ்மணம் தக்க வைத்துக் கொள்கிறது. //

  நல்லது

  அதற்கு இந்த பதிவு இந்த காரணத்திற்காக நீக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று ஒரு (பட்டியல்) லிஸ்ட் (இந்த பதிவிலேயே இன்னொரு இடுகையாக) போட்டால் எளிது

  அந்த பட்டியலை நீங்கள் மறுபரிசீலனை செய்யலாம். அதன் பிறகு பதிவை நீக்குவது அல்லது தொடர்வது என்று முடிவு எடுத்தபின்… நீக்க வேண்டிய பதிவுகளை நீக்குவது நடைமுறையில் சிக்கல் குறைவான வழி என்று தோன்றுகிறது

 13. இளா on May 29th, 2009 10:04 am

  நல்ல முடிவு.

 14. DHANA on May 29th, 2009 12:26 pm

  IS

 15. யட்சன் on May 29th, 2009 1:50 pm

  என்னுடைய பதிவுகளை தமிழ்மணத்தில் இனைக்க இயலவில்லை. ஒரு வேளை என்னுடைய பதிவுகள் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறியத்தர வேண்டுகிறேன்.

  நான் என்ன அவ்ளோவ் மோசமாவா பதிவெழுதிட்டு இருக்கேன்….ஒன்னும் புரியலை!

  தவறாக நீக்கப்பட்டிருப்பின்….சரிசெய்திடுமாறு வேண்டுகிறேன்.

 16. மாயாவி on May 29th, 2009 2:02 pm

  பயப்படாதீங்க புருனோ சார். பரிந்துரையில் நீங்க போடுற கள்ள ஓட்டுகளுக்காக உங்களை தடை செய்துட மாட்டாங்க

 17. நம்பி.பா on May 29th, 2009 7:16 pm

  நிச்சயம் நல்ல முடிவு, நீக்கப்படும் பதிவுகளின் பட்டியலை பகிர்வதுடன், அதே போல் தவறுதலாக நீக்கப்பட்ட பதிவுகளை உங்கள் கவனத்திற்கு வந்தவுடன் விரைவில் திரும்பக் கொணர வேண்டும்.

 18. கானா பிரபா on May 29th, 2009 8:37 pm

  தமிழ் மணம் முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் இருக்கின்றது என்பதை பூரணமாக ஏற்றுக்கொள்ளும் அதேவேளை இது ஒரு திரட்டி என்றவகையில் கடந்த 3 வருசங்களாக முன்னுரிமை கொடுத்து வரும் வாசகனாக இருக்கின்றேன். தனியே படைப்பாளிகளின் பதிவுகள் மட்டுமன்றி நடப்புச் செய்திகளும் என் கவனத்தில் முதலில் வருவது தமிழ்மணம் மூலமே. எனவே உங்களின் இந்த முடிவை எல்லாத் தளங்களுக்கும் கொள்ளாமல் தேர்ந்தெடுத்த நம்பகமான செய்தித்தளங்களை விட்டுவைக்கலாம். வெட்டி ஒட்டல் என்பது 100 இல் 90 பதிவுகளாகத் தான் இருக்கு, அதை வாசிப்பதும் விலக்குவதும் வாசகன் முடிவு என்று எண்ணுகிறேன்.

 19. வருண் on May 29th, 2009 8:38 pm

  ***முகப்புப் பக்கத்தில் வரும் அனுபவம் என்ற தலைப்பில் ஜீவரத்தினம் தங்கராசா அவர்கள் பதிவு 2008 முதல் அங்கேயே இருக்கிறது. அதையும் கொஞ்சம் என்னன்னு பாருங்க.

  By துளசி கோபால் ***

  “அனுபவ”த்தில் இப்படி ஒரு பிரச்சினை இருப்பதே இப்போத்தான் ரியலைஸ் பண்ணுறேன், டீச்சர் 🙂

  —————————–

  **பிற செய்தித்தளங்கள், இணையதளங்களில் இருந்து பெரும்பாலும் வெட்டி ஒட்டிய இடுகைகளைக் கொண்டவற்றையும், பிறரின் காப்புரிமையை மதிக்காதவற்றையும், வெறும் அவதூறு மற்றும் வதந்தி பரப்பும் பதிவுகளையும், தமிழ்மணத்தின் சூழலை மாசுபடுத்துபவையையும் காலப்போக்கில் இனியும் விலக்கி விட முடிவு செய்திருக்கிறோம்.**

  பாதிக்கபடுகிற பதிவர்களுக்கு மட்டும்தான் இது என்ன மாற்றம் என்பது புரியும் 🙂

  தமிழ்மணம் மென்மேலும் மணக்க செய்யும் எந்த மாற்றமும் நல்லதுதான் 🙂

 20. மு.இளங்கோவன் on May 29th, 2009 9:10 pm

  வரவேற்கத்தக்க முடிவு.
  மு.இளங்கோவன்
  புதுச்சேரி

 21. VENKAY on May 29th, 2009 9:31 pm

  Please remove Tamil Oviya. The only motive of this blog is to attack Tamil brahmins and Hindu religion. Add to this, some other blogs where also, we find such attack on particular community of TN

 22. .கவி. on May 29th, 2009 9:46 pm

  தேர்தல் 2009 சமயத்தி்ல், கலைஞரை தரக் குறைவாக எழுதிய பதிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டது, தற்செயலான நிகழ்வா?

  இலக்கியம்-இலக்கிய ஆர்வலர்கள் என்று ஒரு தனிப் பிரிவு நல்ல இலக்கியச் செய்திகள் முதல் பக்கத்தில் இருக்க வழி வகை செய்யும். இலக்கியப் பதிவுகளைக் காண்பது மிகவும் அறிதாக உள்ளது.

  தமிழ்த் தொழில்நுட்பப் பதிவுகளுக்கும் இதே நிலையே….

  அனுபவம்-புனைவுகள் இரண்டும் ஒரே பகுதியில் இணைப்பதும் நலம்.

  நட்புடன்
  .கவி.

 23. தமிழநம்பி on May 30th, 2009 1:55 pm

  “தமிழ்மணத்தில் இணைந்த தளங்கள் இப்போது தொழிற்படாமல் இருப்பின் (தளமே இல்லாதிருத்தல் போன்றன) அவற்றையும் நீக்க எண்ணியுள்ளோம்”

  – காலக்கெடுவுடன் அறிவிப்பு செய்தபின் நீக்குதல் பலருக்கும் ஒர் இறுதி வாய்ப்பளித்ததாக இருக்கும். எண்ணிப் பார்த்து முடிவெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
  பிற அறிவிப்புகள் வரவேற்கத் தக்கனவே.

 24. சீரா on May 30th, 2009 2:32 pm

  நீக்கப்பட்ட பதிவுகளின் அரசியல், தமிழ்மணத்தை நடத்துபவர்களின் அரசியலுக்கு எதிராக இருக்கிறது என்ற காரணத்தால் அவை நீக்கப்பட்டுள்ளனவா என்பதையும் குறிப்பிட்டால் நலம்.

  தங்களது அரசியலுக்கு எதிராக இருக்கிறது என்பதால் நீக்கினால் பரவாயில்லை. அது உங்கள் விருப்பம். ஆனால், அதனை தெளிவு படுத்துதல் தமிழ்மணத்தில் நீடிக்கலாமா வேண்டாமா என்று மற்றவர்கள் தெளிவு பெற உதவும்.

  நன்றி
  சீரா

 25. பதி on May 30th, 2009 7:16 pm

  தமிழ்மண கருவிப்பட்டையில் சில கோளாறுகள் இருக்கின்றன. சரி செய்யவும்.

  உதராணத்திற்கு, ஒரு பதிவர் தனது சில குறிப்பிட்ட பதிவினை தமிழ்மணத்தில் இணைக்காமல் இருப்பினும் அவரது பதிவினை கூகுள் ரீடர் மூலமாகவோ அல்லது அவரின் வலைப் பக்கத்திற்கோ சென்று வாசிக்கும் எவரும் அவருடைய பதிவினை தமிழ்மணத்தில் இணைக்க முடிகின்றது. இதனை நானே சிலரின் பதிவில் இருந்த கருவிப்பட்டையின் “அனுப்பு” விசையை அழுத்திப் பார்த்ததின் மூலம் கண்ணுற்றேன்… அதனை நான் வேண்டுமென்றே செய்யவில்லை.. அதனால் யாருடைய பதிவுகளில் அது நிகழ்ந்தது என குறிப்பிட விரும்பவில்லை.. ஆனால், அது தேவையற்ற சிக்கல்களை உருவாக்க சாத்தியமுள்ளது.

 26. சகோதரி தமிழ்நதியின் கூற்று வரவேற்கத்தக்கது. தமிழ்மணத்தின் நடவடிக்கை சிறப்பானதாக இருக்குமென நம்பிக்கையுண்டு.
  பாராட்டுக்கள் !

 27. லதானந்த் on May 31st, 2009 9:09 am

  தமிழ் மணத்தின் இம்முடிவு வரவேற்கத் தக்கது

 28. somee on May 31st, 2009 4:46 pm

  வணக்கம் ஐயா,
  என்னுடைய வலைப்பூவில் இருந்த பதிவுகளின் கீழ் இருக்கும் தமிழ்மணம் கருவிப் பட்டையைக் காணவில்லை. நான் டெம்ளற்றில் நிறங்களை மாற்றினேன். அதன் காரணமா? என்ன காரணம் எனத் தெரியவில்லை. மற்றது மீண்டும் அதை இணைக்கும் உங்கள் வழிமுறையையும் பின் பற்றினேன். என்ன ஏதேன்று சொல்லுங்கள். இல்லை தவறுதலாக ஏதும் நிகழ்ந்து விட்டதோ? தகவல் தரவும்.

  நன்றி

 29. aruna on June 1st, 2009 9:37 pm

  என்னுடைய பதிவுகள் இன்றுவரை ஒரு போதும் கீழே வரும் நகைச்சுவை,அனுபவம்…மற்றும் பிரிவுகளின் (category)கீழ் பிரித்து வந்ததேயில்லை…இதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை.அறியப் படுத்தினால் சரி செய்து கொள்கிறேன்!

 30. பதி on June 3rd, 2009 10:57 am

  தமிழ்மண தொழில்நுட்பக் குழுவினருக்கு,

  //தமிழ்மண கருவிப்பட்டையில் சில கோளாறுகள் இருக்கின்றன. சரி செய்யவும்.

  உதராணத்திற்கு, ஒரு பதிவர் தனது சில குறிப்பிட்ட பதிவினை தமிழ்மணத்தில் இணைக்காமல் இருப்பினும் அவரது பதிவினை கூகுள் ரீடர் மூலமாகவோ அல்லது அவரின் வலைப் பக்கத்திற்கோ சென்று வாசிக்கும் எவரும் அவருடைய பதிவினை தமிழ்மணத்தில் இணைக்க முடிகின்றது. இதனை நானே சிலரின் பதிவில் இருந்த கருவிப்பட்டையின் “அனுப்பு” விசையை அழுத்திப் பார்த்ததின் மூலம் கண்ணுற்றேன்… அதனை நான் வேண்டுமென்றே செய்யவில்லை.. அதனால் யாருடைய பதிவுகளில் அது நிகழ்ந்தது என குறிப்பிட விரும்பவில்லை.. ஆனால், அது தேவையற்ற சிக்கல்களை உருவாக்க சாத்தியமுள்ளது.//

  இதே நிலை தான் இன்னமும் நீடிக்கின்றது….

 31. beermohamed on October 29th, 2009 5:45 am

  தமிழ் மனம் செய்வது தவறுதான் இதை சுட்டிகாட்ட விரும்புகிறேன், இதனால் என் பிளாக் நீக்கப்பட்டாலும் பரவாயில்லை, செய்திகள் என்பது ஒன்று தான் அது பத்திரிக்கையில் வந்தாலும், தொலைகாட்சியில் வந்தாலும், மற்றவர்களால் சொல்லப்பட்டாலும் ஒன்றுதான், ஒரே செய்தி தான் ஆனைத்து பத்திரிக்கைகளில் வருகிறது, அதை எப்படி சொல்வது என்பது தான் மாறுபட்ட கருத்து இருக்கிறது,இதை தான் சில பதிவர்கள் செய்கிறார்கள், தங்கள் சொல்வது போல செய்தால் பல பதிவர்கள் இல்லாமலே போவார்கள் தான்
  beermohamed@gmail.com

 32. SARAVANAN on October 30th, 2009 5:35 pm

  ஐயா,

  தங்களின் இந்த முடிவு வரவேற்கத்தக்கதே, ஆனால் அதற்கான விதிமுறையில் தான் மாற்றம் வேண்டும். பொதுவாக செய்திகளை திரட்ட எங்களை போன்ற வலைபூக்கள் அனைத்தும் நிருபர்களை கொண்டு செய்திகளை திரட்டுவதில்லை, செய்திதாளில்,வார இதழ்களில் வரும் செய்திகளை கொண்டே நாங்கள் செய்திகளை போடமுடியும். அதை எப்படி நீங்கள் நீக்கம் செய்ய எண்ணுகிறீர்கள்..? நாங்கள் இதை செய்வது ஒரு பொழுதுபோக்காக எங்களுக்கு யாரும் பணம் தருவதில்லை, மாறாக நாங்கள் எங்களது நேரத்தினை செலவு செய்கிறோம். தயவு செய்து இதையும் கருத்தில் கொள்ளுங்கள். செய்தியை நாங்கள் எங்கிருந்து பெற்றோம் என்பதை சுட்டிக்காட்டவேண்டும் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் அப்படி போடும் பட்சத்தில் நீங்கள் இந்த நீக்கத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

  இது மட்டுமின்றி எனக்கு ஒரு கேள்வியும் இருக்கிறது, என்னுடைய புதிய இடுகைகளை தமிழ்மணத்தில் சேர்த்த வுடனேயே, அதற்கான நட்சத்திரங்கள் வழங்கப்பட்டு விடுகின்றன அது எப்படி..? நான் இதுவரை மற்றவர்கள் படித்து ஓட்டளித்த பிறகே இந்த நட்சத்திரங்கள் வழங்க படுவதாக நினைத்திருந்தேன்.தயவுசெய்து விளக்குங்கள்.

  –நன்றி

  சரவணன்.பி

Leave a Reply