தமிழ்மணம்: இடுகைகளும் பதிவுகளும் நீக்கம்

தமிழ்மணம் குழுவினரின் செயல்பாடுகள் முழுக்க வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று எண்ணி, அதன் முதற்கட்டமாக கூடுமான வரை எங்களுடைய மின்னஞ்சல்களும், இடுகைகளும் பணியாற்றுபவர்/எழுதுபவர் பெயர் தாங்கி இடப்படவேண்டும் என்று முடிவு செய்தோம். எடுத்துக்காட்டாக தொழில் நுட்பக் குழுவில் பணியாற்றுபவர்கள், அவர்கள் செய்து முடித்த பணி குறித்து நேரடியாக பதிவர்களுக்கு அவர்களுடைய பெயர் தாங்கியே இடுகை எழுத வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்சசி அண்மையில் இரண்டு இடுகைகளை எழுதியிருந்தார். அதுபோலவே இடுகை நிர்வாகப் பணிகுறித்த மின்னஞ்சல்களில் அப்பணியாற்றுபவர்கள் தங்கள் பெயரிட்டு அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். தங்களுடைய பெயர்கள் வெளியிடப்படுவதனால் போலிகள் தங்களை அவதூறு செய்யக் கூடும் என்ற தயக்கம் எங்களிடம் இருப்பதும் உண்மையே. அதைத்தான் இப்பொழுது அனுபவிக்கிறோம். இருப்பினும் இந்த இடுகையையும் என்னுடைய பெயரில் எழுதுகிறேன். சில விசயங்களை பதிவர்களின் முன்பு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நேற்று தமிழ்மணத்திலிருந்து சில இடுகைகளும் பதிவுகளும் நீக்கப் பட்டிருகின்றன. அவை நீக்கப்பட்டதற்கு தமிழ்மண நிர்வாகத்தில் பணிபுரியும் இரமணியுடன் எற்பட்ட தனிப்பட்ட பிரச்னைதான் காரணம் என்று ஒருசிலரால் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையைச் சொல்வதென்றால் நேற்று நீக்கப் பட்ட பதிவுகள் சில வாரங்களுக்கு முன்பே நீக்கப் படவேண்டும் என்று எங்கள் குழுவில் விவாதத்துக்கு வந்தபொழுது அப்பொழுது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்க வேண்டாம், காத்திருந்து புரிய வைக்கலாம் என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் ஒருவர் தற்பொழுது குற்றஞ்சாட்டப்படும் இரமணிதான். அதனாலேயே அப்பதிவுகள் இன்னும் சில வாரங்கள் நீடித்து நின்றன.

எங்கள் குழுவிற்குள் யார் என்ன கருத்துக் கொண்டிருந்தார் என்றோ என்ன விவாதம் நடந்தது என்றோ நாங்கள் இதுவரை பொதுவில் சொன்னது கிடையாது. அனைத்தும் தமிழ் மணம் குழுவினரின் ஒருமித்த முடிவாகத்தான் பொதுவில் வைக்கப்பட்டது. இப்பொழுதும் இது எங்களது ஒருமித்த முடிவுதான் என்றாலும், மேலே சொன்ன சிறுதகவலை மட்டும் நான் தற்பொழுது குறிப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இரமணியின் மீது சுமத்தப் படும் குற்றச்சாட்டினைக் மறுப்பது மட்டுமல்லாமல், தமிழ்மணம் ஒரு தனிப்பட்டப் பதிவரின் சொந்த விருப்பு-வெறுப்பின் படி இயங்குகிறது என்ற குற்றச்சாட்டை மறுப்பதே இதன் நோக்கம். ஒவ்வொரு சிக்கல் வரும் பொழுதும் எங்கள் குழுவில் உள்ள 12 பேரும் இது குறித்து பல முறை விவாதித்துத் தான் முடிவெடுத்து வருகிறோம். இதற்காக நாங்கள் செலவிடும் நேரமும் அதிகம். எனவே எடுக்கப் பட்ட எல்லா முடிவுகளுமே தமிழ்மணத்தின் முடிவுகள்தான். குற்றம் சொல்லுவதாயினும், பாராட்டுவதாயினும் தமிழ்மணத்திடமே அவற்றைச் சேர்க்கவும்.

தற்பொழுது நீக்கப் பட்ட பதிவுகள் நீக்கப் படுவதற்கான காரணங்கள் சில வாரங்களுக்கு முன்பே அறியப்பட்டு, அலசப்பட்டு அதைப் பற்றிய ஒரு முன்னறிவிப்பையும் செய்திருந்தோம். அப்பொழுதே அவை நீக்கப்பட்டிருக்கலாம் என்றாலும் ஒரு பதிவர் தன்னுடைய இடுகைகளில் எழுதுவதற்கான உரிமையை மதித்து அவராகவே சில நாட்களில் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்வார் என்று எதிர்பார்ப்புடன்
காத்திருந்தோம். எனவே இப்பொழுது அவை நீக்கப் பட்டதற்கும் இரமணியுடன் அப்பதிவர்களுக்கு நடந்த தனிப்பட்ட பிணக்குகளுக்கும் எந்த தொடர்புமில்லை. தனிப்பட்ட பதிவராய் இரமணியோ அல்லது தமிழ்மணம் குழுவைச் சேர்ந்த வேறு ஒருவரோ எழுதும் எந்த விசயத்துக்கும் தமிழ்மணம் பொறுப்பாவதில்லை. ஆனால் அவர்கள் எழுதும் இடுகைகளும் தமிழ்மணம் கடைப்பிடிக்கும் விதிகளுக்குள் வராவிட்டால் நீக்கப்பட்டிருக்கின்றன, எதிர்காலத்திலும் நீக்கப்படும்.

இறுதியாக, தமிழ்மணத்திலிருப்பவர்களாகிய எங்களுக்கும் அரசியல் மற்றும் கொள்கை நிலைப்பாடுகள் உண்டு. ஆனால் அதன் அடிப்படையில் பதிவுகளைத் தமிழ்மணம் திரட்டுவதும், நீக்குவதும் கிடையாது. எனவே பெண்ணியம், பெரியாரியம், இந்துத்துவம், பார்ப்பனியம் என்ற அடிப்படைகளில் தமிழ் மணத்தின் நிலைப்பாட்டை அலச வேண்டாம். வழக்கமாக ஊடகங்கள் செய்யும் இந்த அரசியல் கருத்துத் தணிக்கையிலிருந்து விடுபட்ட ஊடகமாக வலைப்பதிவுகள் வளரவேண்டும் என்று தமிழ்மணம் கருதுகிறது, அதற்காக உழைக்கிறது.

தமிழ்ச்சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் மாறுபட்ட கொள்கைகளின் அடிப்படையில் தங்களுடைய கருத்துக்களை சுதந்திரமாகப் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று தமிழ்மணம் கருதுகிறது. அதற்குத் தடையாக இருக்கும் சிலருடைய தனிநபர் விளம்பர விளையாட்டுகளை, அவை கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்படவேண்டும் என்று புரிந்து கொள்ளப்பட்டாலும் தமிழ் மணத்தில் அனுமதிக்க இயலாது என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி – சொ. சங்கரபாண்டி
தமிழ் மணம்

Comments

13 Responses to “தமிழ்மணம்: இடுகைகளும் பதிவுகளும் நீக்கம்”

 1. லக்கிலுக் on March 26th, 2008 6:38 am

  🙂 🙂 🙂

 2. அறிவன் on March 26th, 2008 7:11 am

  தமிழ்மணத்தின் இந்த அறிவிப்பு பல விதமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் பல நண்பர்களுக்கும் தெளிவான ஒரு பதிலைச் சொல்கிறது.
  தமிழ்மணத்தின் பார்வை தனிப்பட்ட பதிவர்களின் கொள்கை நோக்கில் இருக்காது என்ற உறுதி மீள்வைக்கப்பட்டிருப்பதும் பாராட்டப்பட வேண்டியது;இது அப்பதிவர்கள் தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவராக இருந்தாலும் இந்த பொது நோக்கே கைக்கொள்ளப்படும் என்ற வார்த்தை பாராட்டப்படவேண்டியது.
  பொதுவாக தமிழ்மணத்தில் சில பதிவர்கள்,அவர்கள் விரும்பாத,மாற்றுக் கருத்துக்களையோ-உதாரணமாக ஒரு கட்சித் தலைவரை,ஆமாசமோ,தூற்றுதலோ இன்றி கருத்து நோக்கில் விமர்சிக்கும் போதும்-பார்க்கும் போது,மிகக் கீழ்த்தரமான,அப்பதிவரின் குடும்ப நபர்களையும்,பெண்களையும் நோக்கிய படு ஆபாசமான எதிர்வினைகளை முன்வைக்கிறார்கள்.
  இது போன்ற போக்குகள் பின்னூட்டத்தில் நேரும்போது சம்பந்தப்பட்ட பதிவர் மட்டுறுத்தும் செயலியைக் கைக்கொண்டு ஓரளவு சமாளிக்கலாம் என்ற போதும்,அவ்விதமான வசைகள் தனிப்பதிவாக பதிவர்களால் எழுதப்படும்போது,தமிழ்மணத்தின் இவ்விதமான ‘மட்டுறுத்தும்’ நடவடிக்கைகள் பாராட்டப்படவேண்டியது.
  தமிழ்மணம் ஒரு நேர்த்தியான வாசிப்பானுபவத்தைத் தர வேண்டிய நோக்கில் செயல்படவேண்டுமேயொழிய,இணையத்தின் கட்டற்ற சுதந்திரத்தை சோதனை செய்யும் இடமாக இருக்க வேண்டிய அவசியங்கள் இல்லை.
  அவரவர் நோக்கில் அவரவர் கருத்துக்களைச் சொல்ல பொது அரங்கில் உரிமை இருக்கவேண்டும்,அதுவே கருத்து சுதந்திரம் என்பது ஒத்துக் கொள்ளப்படவேண்டியதெனினும்,பதிவர்கள் தான் நினைவில் தாந்தோன்றித்தனமாகத் தோன்றும் அனைத்தையும் வாந்தி எடுத்துவைக்கும் பொதுக்கழிப்பறையாக தமிழ்மணம் இருக்க வேண்டியதில்லை;ஒரு இலக்குவண ரேகை இருக்கவேண்டியது அவசியம்.
  அதை உணர்த்தியுள்ள தமிழ்மணம் நிர்வாகம் பாராட்டப்படவேண்டியது.
  வாழ்த்துக்கள்.

 3. oru Elath thamilan on March 26th, 2008 7:12 am

  வரவேற்க வேண்டிய பதிவு. தமிழ்மணத்தில் ஒரு சிலருடைய பதிவுகள் நீக்கப்பட் வேண்டியது என்பதில் யாரும் முரண்படவேண்டியதில்லை. அத்துமீறீய சுதந்திரமும் அருவருப்பான வார்த்தைப் பிரயோகமும் தலைவிரித்தாடியது. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பதிவுசெய்யப்படும் குப்பைகளை நீக்கவும்.

 4. /நிர்வாகப் பணிகுறித்த மின்னஞ்சல்களில் அப்பணியாற்றுபவர்கள் தங்கள் பெயரிட்டு அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். தங்களுடைய பெயர்கள் வெளியிடப்படுவதனால் போலிகள் தங்களை அவதூறு செய்யக் கூடும் என்ற தயக்கம் எங்களிடம் இருப்பதும் உண்மையே./

  /இரமணியின் மீது சுமத்தப் படும் குற்றச்சாட்டினைக் மறுப்பது மட்டுமல்லாமல், தமிழ்மணம் ஒரு தனிப்பட்டப் பதிவரின் சொந்த விருப்பு-வெறுப்பின் படி இயங்குகிறது என்ற குற்றச்சாட்டை மறுப்பதே இதன் நோக்கம்./

  /தனிப்பட்ட பதிவராய் இரமணியோ அல்லது தமிழ்மணம் குழுவைச் சேர்ந்த வேறு ஒருவரோ எழுதும் எந்த விசயத்துக்கும் தமிழ்மணம் பொறுப்பாவதில்லை./

  /தமிழ்ச்சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் மாறுபட்ட கொள்கைகளின் அடிப்படையில் தங்களுடைய கருத்துக்களை சுதந்திரமாகப் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று தமிழ்மணம் கருதுகிறது./

  🙂

 5. அதி. அழகு on March 26th, 2008 7:52 am

  விமர்சனம் என்ற பெயரில் காழ்ப்பைக் கக்கும் பதிவுகளும் திரட்டியிலிருந்து நீக்கப் படுமா?

 6. ila on March 26th, 2008 8:42 am

  முக்கோணம் அழுத்தி தமிழ்மணத்துக்கு அறியத்தரும் பதிவுகளும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டால், மிக சந்தோசம்

 7. guru on March 26th, 2008 9:06 am

  தமிழ்மணத்தின் சமீபத்திய செயல்பாடுகள் மிகவும் வரவேற்கப்ப்ட வேண்டியது தான். தெய்வமகன் போன்றவர்கள் மிக மிக கேவலமாக தலைப்பு வைத்து எழுதினார்கள். தமிழச்சி இன்னும் ஒரு படி மேலே போய் பார்க்கக் கூடாத படங்களை வெளியிட்டு பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். அவரை தரை செய்ய வேண்டும் என்று ஏற்கணவே பல பதிவர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். அது ஏற்றுக் கொள்ளப்பட இவ்வளவு தாமதம் ஆனது தமிழ்மணத்தின் மீது உள்ள நம்பிக்கையை சிறிது ஆட்டிப் பார்த்தது. ஆனால் இப்போது அத்தகைய இரண்டாம் தரப் பதிவர்கள் நீக்கப்பட்டுள்ளது பெரும் நிம்மதி அளிப்பதாக உள்ளது. தமிழ்மணம் மென்மேலும் வளர்ச்சி காண வாழ்த்துக்கள். தமிழ்மணத்தின் மீது சம்மந்தம் இல்லாமல் சேறு பூசும் தமிழச்சியிடம் படம் காட்ட விரும்பும் ஓசை செல்லா போன்றவர்களும் கவனிக்கப்பட வேண்டும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து

 8. Osai Chella on March 26th, 2008 12:40 pm

  thamizmana history oralavukku therinthavan… poruththirunthu paarungkaL! unmaikal urangaathu!

 9. Prabhu Rajadurai on March 26th, 2008 1:10 pm

  எந்தப் பதிவுகள் நீக்கப்படுகின்றன…எதற்காக நீக்கப்படுகின்றன என்ற சிறு தகவலையும் பொதுவில் தருவது தங்களது முடிவுகள் வெளிப்படையானவை என்பதை நிரூபிக்க வல்லதாக இருக்கும் என்பது எனது ஆலோசனை. நன்றி

 10. Thamizhan on March 26th, 2008 4:25 pm

  விள்க்கத்திற்கு நன்றி.
  கொஞ்சம் விளக்கமாக பதிவுகள் அநாகரீகமாக,தனி மனித,குடும்ப தாக்குதல்களுடன் வந்தால் அதை உடனே தமிழ்மண நிர்வாகத்திற்கு யார் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம்.பதிவு போடுபவர்கள் பின்னூட்டங்களுக்குப் பொறுப்பேற்று இவை பின்னூட்டங்களிலும் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  தமிழ்மண நிர்வாகம் இவ்வாறுள்ள பதிவுகளை நிறுத்தித் தங்கள குழுவில் பேசி முடிவெடுத்து அனுமதிப்பதோ நிறுத்துவதோ செய்யலாம்.விதிகள் பொதுவாகவும் அனைவர்க்கும் ஒன்றாகவும் இருக்க வேண்டும்.
  உடனே அனைவர்க்கும்தெரியும் படி அந்தப் பதிவர் பெயரை வெளியிட வேண்டும்.

 11. மு. சுந்தரமூர்த்தியின் பதில்கள் என்றபடி சில பதிவுகளில் பார்த்து அதிர்ச்சி. அவை அன்னார் வார்த்தைகள் அல்ல, போலி என்று தெளிவை சுந்தரமூர்த்தி பதிவில் கண்டேன். தெளிவு கிடைத்தது.
  நன்றி!

  பார்க்க:
  http://kumizh.blogspot.com/2008/03/blog-post.html

 12. லக்கிலுக் on March 27th, 2008 12:05 am

  தமிழ்மணத்தில் இருந்து என்னுடைய இரு இடுகைகள் தான் நீக்கப்பட்டதாக முதலில் தெரிந்தது. இப்போது என்னுடைய வலைப்பூவையே நீக்கப்பட்டிருப்பதாக காரணம் தெரிவிக்காத ஒரு மடல் ஒன்று வந்திருக்கிறது.“அந்துமணிக்கு மாமா வேலை பார்ப்பவன்” என்ற தொனியில் தமிழ்மணம் நிர்வாகி யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஏனென்றால் அவர் நிர்வாகி. அதே வார்த்தைகளை திருப்பி அதே பதிவர் பயன்படுத்தினால் அவரது இடுகை மட்டுமன்றி வலைப்பூவும் நீக்கப்படும் என்ற தமிழ்மணத்தின் நீதி மனுநீதிச்சோழனின் நீதிக்கு இணையானது.

  நிர்வாகிகளுக்கு மற்ற பதிவர்களின் மீதிருக்கும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி நிர்வாகத்தின் நடுநிலையை பாதிக்கும் என்பதை சந்தேகமற நிரூபித்திருக்கும் தங்களது பண்புக்கு வாழ்த்துக்கள்! இதே போன்ற நீதியினை எதிர்காலத்திலும் வழங்கி திரட்டியை இன்னமும் பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!

  அன்புடன்
  லக்கிலுக்

 13. sankar on March 27th, 2008 8:23 pm

  லக்கிலுக்,

  சர்ச்சைக்குரிய இடுகைகளை மட்டும் தான் நீக்கியிருந்தோம். ஆனால் நேற்று ஏற்பட்ட சில தொழில்நுட்பப் பிரச்னைகளால் நீக்கப்பட்ட இடுகைகள் மீண்டும் தோன்றின. அவற்றை மறுபடியும் நீக்கும் பொழுது மொத்தப் பதிவும் தவறுதலாக நீக்கப்பட்டு விட்டது. உங்கள் பதிவு மறுபடியும் விரைவில் சேர்க்கப் படும்.

  உங்களுடைய பிற கருத்துக்களுக்குள் செல்ல வேண்டுமானால் சர்ச்சைக்குரிய எல்லா இடுகைகளையும் எடுத்துப்போட்டு யார் ஆரம்பித்தார்கள், என்ன சொன்னார்கள், சொன்னவை எப்படியெல்லாம் புரிந்து கொள்ளப் பட்டது, யாரெல்லாம் ஊதிப்பெருக்க உதவினார்கள் என்றெல்லாம பெரிய விவாதத்திற்குள் சொல்ல வேண்டும். தேவைப்படும் பதிவர்கள் அத்தளங்களுக்குச் சென்று தம்மைத் தாமே தெளிவுபடுத்திக் கொள்ளவும். அவ்விடுகைகள் தமிழ்மணத்தில் இல்லை.

  லக்கிலுக்கின் முழுப்பதிவும் நீக்கப்பட்டதால் அவருக்கு விளக்கம் கொடுப்பதற்காக அவரது பின்னூட்டம் மட்டும் அனுமதிக்கப் பட்டுள்ளது. மீதிப் பின்னூட்டங்கள் எவையும் வெளியிடப்படவில்லை. அவை இரு பக்கங்களையும் தாக்கியும், ஆதரித்தும் எழுதப் பட்டவை. அவற்றுள் போலிகளின் துர்நாற்றமடிக்கும் ஆபாசப் பின்னூட்டங்களும் அடங்கும். இப்பிரச்னையைத் தொடர்ந்து விவாதித்து அனைவர் நேரத்தையும் வீணாக்க விரும்பவில்லை. கருத்துரிமை என்ற அளவில் அப்பின்னூட்டங்களைப் படித்தே தீரவேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு மேலே லக்கிக்குச் சொன்ன பதிலையே சொல்ல விரும்புகிறேன். தங்களுடைய வலைப்பதிவுகளில் அவற்றை வெளியிட்டுப் படிக்க உதவவும்.

  என்னென்ன இடுகைகள் நீக்கப் பட்டுள்ளன என்று அறிவிக்குமாறு சிலர் யோசனை சொல்லியிருந்தனர். இடுகைகள/பதிவுகள் நீக்கப் பட்டவர்களுக்குத் தனிப்பட்ட மின்னஞ்சலில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதைப் பற்றி தமிழ்மணம் பொதுவில் வைக்கவில்லை. ஒரு சிலர் அவர்களாக அவற்றை பொதுவில் அறிவித்தது அவர்கள் விருப்பம். தமிழ்மணத்தில் தோன்றுவதற்குப் பொருந்தவில்லை என்பதைத்தவிர வேறு எதுவும நாங்கள் சொல்வதற்கில்லை. அவற்றைப் பட்டியலிட்டுத் தண்டனையளிப்பதைப் போல் காட்டிக்கொள்வதல்ல எங்கள் நோக்கம். அதுபோல் வேறு சிலர் பரிந்துரைத்தது போல் எவையெவை அநாகரீகம் அல்லது தனிப்பட்ட தாக்குதல் என்று முழுமையான வரையறை செய்வதும் கடினம்.

  கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி. இத்துடன் இந்த விவாதம் நிறைவு செய்யப் படுகிறது. வேறு உருப்படியான விவாதங்களுக்குச் செல்வோமே.

  நன்றி – சொ.சங்கரபாண்டி
  தமிழ்மணம்

Leave a Reply