தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2007: விரிவான அறிவிப்பு

December 25, 2007 · Posted in அறிவிப்புகள் 

தமிழ் வலைப்பதிவுகள் எண்ணிக்கையிலும் தரத்திலும் வளர்வதற்கும், அவை பரவலான வாசகர்களைச் சென்றடையவும் தேவையான கட்டமைப்பை அளிப்பதையும், வழமையான ஊடகவெளிக்கு வெளியே வலைப்பதிவுகளில் எழுதப்படும் தரமான படைப்புகள் உரிய அங்கீகாரம் பெறவும், அதன் மூலம் அத்தகைய படைப்புகள் மேலும் அதிகரிக்கவும் தன்னாலானதைச் செய்வதையுமே தமிழ்மணம் தன் அடிப்படையான பணிகளாகக் கொண்டுள்ளது.

தமிழ்மணத்தின் அடிப்படை நோக்கங்களின் மீது நம்பிக்கை வைத்து இயங்கும் வலைப்பதிவர்களுக்கு நன்றி செலுத்துமுகமாக தமிழ் வலைப்பதிவுகளுக்கென்று விருதுகள் ஏற்படுத்தும் திட்டம் பல மாதங்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும், ஒரு ஆண்டுக்கான விருதுகளை அந்த ஆண்டின் இறுதியில் வழங்குவதே சரியெனத் தோன்றியதால் இவ்வறிவிப்பு தற்போது தான் வெளியிடப்படுகிறது.

வலைப்பதிவுகளின் ஜனநாயகத் தன்மையைப் போலவே, தமிழ்மணத்தின் அமைப்பில் உள்ளவர்கள், நியமிக்கப்பட்ட, நடுவர்கள் போன்ற சிறு குழுக்களின் சாய்வுகளை மீறி, பதிவர்களே தாங்கள் எழுதியவற்றுள் சிறந்த படைப்புகள் எனக் கருதுபவற்றை அடையாளம் காட்டும் ஒரு peer selection/recognition முறையாக இதை ஜனநாயக வழியில் நடத்த வேண்டுமென்பதே எங்கள் நோக்கம். தமிழ்மணத்தை நிர்வகிக்கும் டி.எம்.ஐ. அதை செயல்படுத்தும் ஒரு கருவியாக மட்டுமே விளங்கும்.

ஒவ்வொரு பதிவரும் தன்னுடைய பதிவே சிறந்தது எனப் பெருமிதம் கொள்ளும் உரிமையைப் பெற்றிருந்தாலும், இடுகைகளுக்கு உடனுக்குடன் கிடைக்கும் சக பதிவர்கள்/வாசகர்களின் பின்னூட்டங்கள் மூலமான அங்கீகாரமும் பதிவர்களை மேலும் ஊக்குவிக்கும் சக்தியாகத் திகழ்கிறது. அப்படிப்பட்ட இடுகைகளை வாசகர்கள் மீண்டுமொருமுறை திரும்பிப் பார்க்க வைத்து அங்கீகரிப்பதே இந்த விருதுத் தேர்வுக்கான அடிப்படை. அறிவிக்கப்பட்ட போட்டிகளுக்காக எழுதப்படும் படைப்புகளாக அல்லாமல், தன்னெழுச்சியாக வெளிப்பட்ட படைப்புகளே இந்தத் தேர்வுகளுக்கு கணக்கிலெடுக்கப்படுவதால் இதில் போட்டியோ, ஏமாற்றமோ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்குமென்றே நம்புகிறோம். இவ்வாண்டின் தேர்வுகள் கீழ்காணும் பிரிவுகளில் இருக்கும்:

 1. படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)
 2. காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், திரைப்படம்)
 3. நூல், திரைப்படம் அறிமுகம்/திறனாய்வுகள்
 4. அறிவியல், தொழில்நுட்பக் கட்டுரைகள்
 5. பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
 6. செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்
 7. அரசியல், சமூக விமர்சனங்கள்
 8. பெண்கள் பிரச்னைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள்
 9. ஈழ மக்களின் சமூக-பொருளாதாரச் சிக்கல்கள்
 10. தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல்

தேர்வு நடைமுறை:

1. தனிப்பட்ட இடுகை (post) அல்லது இடுகைத் தொடர்களே விருதுக்கு தேர்வு செய்யப்படும். வலைப்பதிவு முழுமைக்குமான விருது என்று எதுவும் இல்லை.

2. இடுகையை எழுதிய பதிவரே பரிந்துரை செய்யவேண்டும். ஒரே பதிவர் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளுக்குப் பரிந்துரை செய்யலாம். ஆனால் ஒரு பிரிவுக்கு ஒரே இடுகையை மட்டுமே பரிந்துரை செய்ய வேண்டும். குறிப்பிட்ட இடுகையை ஒரு பிரிவுக்கு மட்டுமே பரிந்துரை செய்ய இயலும்.

3. பரிந்துரைக்கப்படும் படைப்புகள் 2007 ஆம் ஆண்டில் முதல் முறையாகப் பதிவுகளில் எழுதப்பட்டிருக்கவேண்டும். பரிந்துரைகள் 2007 ஆண்டில் வெளியிடப்பட்ட முந்தைய ஆண்டுகளின் படைப்புகளின் மீள்பதிவுளாகவோ அல்லது வேறு அச்சிதழ் அல்லது இணைய தளங்களில் வெளியிடப்பட்ட படைப்புகளின் மீள்பதிவுகளாகவோ இருத்தலாகாது.

4. விருதுத் தேர்வுக் குழு (நடுவர் குழு) என்று எதுவும் இல்லை.தமிழ்மணத்தில் இணைந்துள்ள அனைத்துப் பதிவர்களும் முதற்கட்ட நடுவர்களே. ஒரு பதிவருக்கு ஒரு பிரிவுக்கு ஒரு வாக்கு என்னும் அடிப்படையில் வாக்குரிமை இருக்கும்.

5. முதற்கட்ட வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்கள் பெறும் இடுகைகள் இரண்டாம் கட்டப் பொது வாக்கெடுப்புக்குத் தெரிவு செய்யப்படும். இரண்டாம் கட்டத்தில் அனைத்து வாசகர்களும் (பதிவு இல்லாதவர்களும்) வாக்களிக்கலாம்.

6. பதிவர் வாக்குகளும் வாசகர் வாக்குகளும் 2:1 என்ற விகிதத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மொத்த வாக்குகள் கணக்கிடப்படும். இதில் முதலிடம் பெறும் இடுகை அந்தந்தப் பிரிவில் 2007-இன் சிறந்த இடுகையாக அறிவிக்கப்படும்.

7. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த இடுகைகள் தமிழ்மணம் வெளியிட எண்ணியிருக்கும் நூலில் அச்சு வடிவம் பெறவும் வாய்ப்பிருக்கிறது. இதற்குப் பதிவரிடம் முதலிலேயே ஒப்புதல் கோரப்பட்டு படைப்பை மேலும் செம்மைப்படுத்தவும் வாய்ப்பளிக்கப்படும்.

8. ஒவ்வொரு பிரிவிலும் முதல் கட்ட வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்படும் முதல் 10 இடுகைகளும் (மொத்தம் 100 இடுகைகள்), தமிழ்மணம் தளத்தில் புதிதாக உருவாக்கப்படும் சிறப்புப் பக்கத்தில் நிரந்தரமாக இடம் பெறும். தமிழ்மணம் புகழ் அரங்கு (Hall of Fame) என்ற இந்தப் பக்கம் ஒவ்வொரு வருடமும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த இடுகைகளை நிரந்தரமாக முன்னிறுத்தும்.

9. தமிழ்மணத்தில் இணைந்துள்ள பதிவர்களுக்குப் பரிந்துரைகள் அனுப்புவதற்கான வேண்டுகோள் வெளியிடப்படுவதுடன் விருது தெரிவுப் பணி தொடங்கும். பரிந்துரைகளுக்கான காலகட்டம் 7 நாட்கள், முதற்கட்ட வாக்கெடுப்புக்கு 7 நாட்கள், இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்கு 7 நாட்கள் அளிக்கப்பட்டு அடுத்த நாளில் விருது அறிவிப்பு வெளியாகும்.

10. முன்னதாக விருதுகளுக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பதக்க மாதிரிகளும், அவற்றைப் பதிவில் இணைக்கும் நிரல்துண்டுகளும் வெளியிடப்படும்.

முதல் ஆண்டு என்பதால் இந்த நடைமுறையில் சில சிக்கல்கள் ஏற்படலாம் அவை இயன்றவரையில் களையப்பட்டு, வரும் ஆண்டுகளில் இன்னும் மேம்படுத்தப்பட்ட, இவ்வாண்டு காணப்படும் உற்சாகம், பங்கேற்பின் அடிப்படையில் விரிவாக்கப்பட்ட வகையில் தமிழ்மணம் விருதுகள் நிர்வகிக்கப்படும் என்றும் உறுதி கூறுகிறோம். அடுத்த ஆண்டு முதல் டிசம்பர் -ஜனவரியில் நடத்தப்பட்டு தைத்திங்கள் முதல் நாளில் விருது அறிவிக்கப்படும். இந்த ஆண்டு சில தொழில்நுட்ப, மற்றும் நடைமுறைக் காரணங்களால் விருது நடைமுறை தொடங்குவது சில வாரங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பரிசு:
வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் அதிக வாக்குப் பெற்று முதலிடம் பெறும் பதிவுகளுக்குத் தலா ரூ.500ம் (ஐநூறு), இரண்டாம் இடம் பெறும் பதிவுகளுக்குத் தலா ரூ.250ம் (இருநூற்றி ஐம்பது) வழங்கப்படும். இவை பணமாகவோ, அதன் மதிப்பான புத்தகங்களாகவோ வழங்கப்படும்.

-தமிழ்மணம் விருதுத் தேர்வு ஒருங்கமைப்புக் குழு

Comments

21 Responses to “தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2007: விரிவான அறிவிப்பு”

 1. Osai Chella on December 25th, 2007 11:01 am

  Thanks and best wishes. but you disappointed me cause we thought you will employ some experts to judge than the mokkai online votes were it can be cooked via our famouse cokie culler firfoxplug in and a dynamic IP connection! Hope u will listen to my criticsm!

 2. நண்பன் on December 25th, 2007 11:12 am

  தமிழ்மணத்தின் வலைப்பதிவர்கள் மீதான அக்கறையையும் அர்ப்பணிப்பையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சிறந்த இடுகைகளைத் தேர்வு செய்வது – பரிசு அளிப்பது என்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய முயற்சியாகும். இம்முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

  இந்த முயற்சியின் மூலம், பதிவுகளின் தரம் இன்னமும் உயரும் என்று எண்ணுவதற்கு இடமிருக்கிறது. இதற்கென தனிப்பட்ட இடுகைகளைக் கோராமல் ஏற்கனவே பதிந்த பதிவுகளிலிருந்தே தேர்ந்தெடுக்க வேண்டுமென்பது சிறப்பு.

  பதிவர் / வாசகர் பொறுப்புணர்வுடன் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையுடனும், வாழ்த்துகளுடனும்,

  நண்பன்

 3. Baby Pavan on December 25th, 2007 11:51 am

  சூப்பரு, குட்டீஸ்காக பிரிவு எதுவும் இல்லையே, ம்ம்ம் சரி அடுத்த வருசம் நாங்களும் போட்டிக்கு வருகிறோம், எல்லா மாமா, அத்தை, அக்கா, அண்ணா அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 4. அன்புடையீர் வணக்கம்.
  தமிழ்மணப்பதிவுகள் தரமானவை
  தங்கள் பகுப்பிற்குள் அடங்கிவிடும்.
  தரமான படைப்புகளை வெளிக்கொணரும் தங்கள் முயற்சி
  வெல்க.
  மு.இளங்கோவன்,புதுச்சேரி

 5. jeevee on December 25th, 2007 7:15 pm

  எந்த நல்ல முயற்சியும் தொடங்குதல் தான் முக்கியம்.
  ஏற்படும் அனுபவங்களுக்கு ஏற்ப, இன்னும் செழுமைபடுத்துதல் தேவைப்படின், அடுத்தடுத்து அவற்றை அமுல் படுத்தி, மாற்றங்கள் செய்து கொண்டால் போயிற்று.
  தங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

 6. Cheena (சீனா) on December 25th, 2007 8:51 pm

  நல்வாழ்த்துகள். நல்லதொரு இடுகையைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கி, பதிவர்களை ஊக்குவிக்கும் நற்செயல் புரியும் நல்லவர்களுக்கு நன்றிகள் நவில வேண்டும்

 7. Sathanga on December 25th, 2007 8:55 pm

  தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 8. இ.கா.வள்ளி on December 25th, 2007 11:25 pm

  தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 9. லக்கிலுக் on December 26th, 2007 12:07 am

  விருதுக்கான படைப்புகளை தேர்ந்தெடுக்கும் முறை அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் பிரிவுகளை காணும்போது நானெல்லாம் கலந்துகொள்ளவே முடியாதா என்ற ஏக்கம் ஏற்படுகிறது 🙁

 10. கானா பிரபா on December 26th, 2007 12:32 am

  நன்றாகத் திட்டமிட்டுச் செயற்படுத்துகின்றீர்கள் என்பதை இந்த விரிவான பதிவு மெய்ப்பிக்கின்றது. வாழ்த்துக்கள்.

 11. kusumbuonly on December 26th, 2007 12:41 am

  லக்கி சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டேய். பொழுது போக்கு நகைச்சுவை என்று ஒரு தலைப்பு இருந்திருக்கலாம்.

 12. நெல்லை சிவா on December 26th, 2007 1:09 am

  நல்ல முயற்சி.செல்லாவின் கருத்துக்களையும் கருத்தில் கொண்டு,முயன்ற அளவில் ‘கள்ள ஓட்டு’க்களைத் தடுத்து, விருது சிறக்க வாழ்த்துக்கள்!

 13. MC Jaya kumar on December 26th, 2007 2:05 am

  தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்து

 14. மஞ்சூர் ராசா on December 26th, 2007 2:06 am

  //இடுகைகளுக்கு உடனுக்குடன் கிடைக்கும் சக பதிவர்கள்/வாசகர்களின் பின்னூட்டங்கள் மூலமான அங்கீகாரமும் பதிவர்களை மேலும் ஊக்குவிக்கும் சக்தியாகத் திகழ்கிறது//

  பின்னூட்டத்தை அதிகரிக்கவேண்டும் என்ற நோக்கில் பல குப்பை பதிவுகளுக்கு ஏராளமான பின்னூட்டங்கள் விழுகின்றன. குறிப்பாக பதிவிட்டவரே பின்னூட்டங்களிலும் புகுந்து விளையாடுவார். இவை சிறந்த பதிவுகள் வரிசையில் வந்தால் இந்த போட்டியின் அர்த்தமே மாறிவிடும் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

 15. ஆசிப் மீரான் on December 26th, 2007 7:18 am

  மனம் நிறைந்த வாழ்த்துகள்!! நடத்தும் உங்களுக்கும் வெற்றி பெறப் போகும் பதிவர்களுக்கும்.

  சில வாக்குகள் அப்படி இப்படி விழ வாய்ப்புகள் இருப்பினும் நல்ல முயற்சி தொடர வாழ்த்துகள்

  நட்புடன்
  ஆசிப் மீரான்

 16. எம்.ரிஷான் ஷெரீப் on December 26th, 2007 12:21 pm

  மிக அருமையான விளக்கம்.முதல் முயற்சி வெற்றி பெற எனதினிய வாழ்த்துக்கள்.

 17. அபிஅப்பா on December 26th, 2007 1:19 pm

  ம்! தமிழ்மணம் எது செய்தாலும் சம்மதமே! நகைச்சுவை நையாண்டி என்னும் பிரிவை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருவது ஏனோ???

 18. Kannabiran Ravi Shankar (krs) on December 26th, 2007 1:30 pm

  வெற்றி பெறப் போகும் பதிவர்களுக்கும், தமிழ்மணத்துக்கும் வாழ்த்துக்கள்!

  //தமிழ்மணம் புகழ் அரங்கு (Hall of Fame) என்ற இந்தப் பக்கம் ஒவ்வொரு வருடமும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த இடுகைகளை நிரந்தரமாக முன்னிறுத்தும்//

  இது மிக அருமையானதொரு திட்டம். சில பதிவுகள் காலத்தால் அழியாதவை. அவற்றை ஒவ்வொரு முறையும் தோண்டிக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லாது, இப்படி முன்னிறுத்துவது படைப்புக்குச் செய்யும் நல்ல மரியாதை!

  விருதினை விட, இது இன்னும் நெகிழ்ச்சியானது!

  முக்கியமான சில பிரிவுகள் விடுபட்டு போயுள்ளன என்பதையும் சுட்டிக்காட்ட விழைகிறேன். லக்கி, குசும்பன் சொன்னது போல் நகைச்சுவை கட்டாயம் ஒரு பிரிவில் வேண்டும்!
  இசை, இலக்கியம், ஆன்மீகம், துறை சார்ந்த வணிகம், மருத்துவம் இவை இல்லாது வகைப்பட்டியல் முழுமை பெறுமா என்பது ஐயம் தான்!

 19. அழகப்பன் on December 26th, 2007 2:21 pm

  வாழ்த்துக்கள்.

  சிறப்பான தேர்வு நடைமுறையையும் வகுத்துள்ளீர்கள். எனினும் கீழ்க்கண்ட சந்தேகம் எனக்குத்தோன்றியத. (இது எனக்கான சந்தேகம் அன்று; இவ்வாண்டு நான் வாசகனாக மட்டுமே இருந்துள்ளேன்.) விளக்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன்.

  பதிவர்கள் தங்களின் நட்சத்திர வாரத்தில் எழுதிய பதிவுகளும் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படுமா? ஏனெனில் பதிவர்கள் தங்களின் நட்சத்திர வாரத்தில் எழுதும் பதிவுகளுக்கு சிறப்புக் கவனம் எடுத்துக் கொள்கின்றனர். அதனால் குறிப்பிட்ட வாரத்தில் அமைந்த அவரது பதிவுகளும் சிறப்பாக அமைகிறது. இது தமிழ்மணம் நட்சத்திரமாக இவ்வாண்டு தேர்வு செய்யப்படாதவர்களுக்கு ஒரு பின்னடைவே.

 20. Surveysan on December 26th, 2007 8:27 pm

  10 categories romba jaasthi.

  adha surukki, innum ‘open’ categories vaikkalaam.

  comedy, time-pass idhellaam illaama eppadi? 90% adhudhaana irukku namma padhivugalla?

 21. Kasi on December 27th, 2007 12:23 am

  அறிவிப்பு சரி. அதற்குப்பின் வந்த மறுமொழிகளுக்கு உடனுக்குடன் பதிலிறுக்காவிட்டாலும், 24 மணி நேரத்துக்கு ஒருமுறையாவது தமிழ்மணம் தன் பதில்களைச் சொன்னாலே உயிர்ப்புடன் இருக்கும்.

Leave a Reply