டி.எம்.ஐ.யின் எதிர்காலப்பயணம்

April 30, 2007 · Posted in சிறப்பிடுகைகள் 

கடந்த வாரம் நட்சத்திரப் பதிவுகளில் தமிழ் மணத்தைப் பற்றியும், டி.எம்.ஐ. நிறுவனத்தைப் பற்றியும் பல தலைப்புகளில் உங்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டோம். அப்பொழுது வந்த பின்னூட்டங்கள் வாயிலாக பாராட்டுக்களையும், ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் நல்கிய பதிவர்கள் அனைவருக்கும் எங்களது நன்றி.

நாங்கள் சொல்லியபடி தமிழ் மணத்தின் சேவையை மேலும் எவ்வளவு செம்மைப் படுத்த முடியுமோ, அவற்றுக்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம். எடுத்துக்காட்டாக, தமிழ்மணம் முதல் பக்கத்தில் அளிக்கப்படும் “அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்” பகுதிதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகம் சர்ச்சைக்குள்ளான பகுதி எனலாம். எப்பொழுதுமே ஒரு சாராரைத் திருப்தியடையச் செய்த மாற்றம் இன்னொரு சாராரை அதிருப்தியடையச் செய்தது. இருந்தாலும் தமிழ் மணம் எப்பொழுதுமே ஒரு குறிப்பிட்ட பகுதியினரை திருப்திப் படுத்துவதற்காக எதையும் செய்ததில்லை. தமிழ்மண நிர்வாகத்துக்கு வரும் மின்னஞ்சல்களில் வைக்கப் படும் பெரும்பாலான வேண்டுகோள்களின் அடிப்படையில்தான் மாற்றங்களைச் செய்ய முன்வந்தது. எந்த விதமான மாற்றமும் நிரந்தரமானதும் அல்ல, ஒருவகையில் பரிசோதனை முயற்சியே. ஆனால் எதையும் தவறுதலாகப் புரிந்து கொள்ளக்கூடிய அபாயம் வலைப்பதிவுகளில் இருந்து வருவதால் இந்த விசயத்தில் இயன்றளவு அனைத்து தரப்பினரையும் திருப்திப் படுத்த ஏதாவது செய்ய முடியுமா என்று சிந்தித்து தற்போதைய தொழில் நுட்ப மாற்றத்தை நேற்று செய்துள்ளோம். இதற்காக கடந்த சில நாட்களாக உழைத்த எங்கள் தொழில் நுட்பக் குழுவைச் சேர்ந்தவர் பெரிதும் பாராட்டப் பட வேண்டியவர். விரைவில் மேலும் பல தொழில் நுட்ப முன்னேற்றங்களையும் செய்ய இருக்கிறோம் என்று உறுதியளிக்கிறோம்.

அடுத்தபடியாக டி.எம்.ஐ. உலகெங்கிலும் உள்ள தமிழர்கள், குறிப்பாக நம் வருங்கால சந்ததியர், பயன்படுத்துமாறு வேறு பல நல்ல திட்டங்களையும் செய்ய இருக்கிறது. அவற்றைப் பற்றிய விரிவான விளக்கங்கள் அவை ஆரம்பிக்கும் வேளையில் வெளியிடப்படும் என்றாலும் சுருக்கமாக சிலவற்றை அறிவிக்கிறோம். எங்களுக்குத் தெரியாத பல தொடர்புடைய தகவல்களை பதிவர்கள் அறிந்திருக்கக் கூடும். அவற்றை இங்கு பின்னூட்டமாகவோ, தனி மின்னஞ்சல் வாயிலோகவோ எங்களுக்கு தெரிவிக்கலாம் இங்கு அறிவிப்பதன் நோக்கம். மேலும் ஒரு சிலர் அவற்றில் முன் அனுபவம் உள்ளவர்களாகவும், வேறு சிலர் தன்னார்வம் மிக்கவர்களாகவும் இருக்கக் கூடும். இதன் அடிப்படையில் எங்களுடன் சேர்ந்து பணிபுரிய விரும்புவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். இவை எந்த இலாப நோக்கமுமின்றி முழுவதும் வெளிப்படையாக தமிழ்ச் சமூக நோக்கில் செய்யப் பட வேண்டியவை. திற மூல மென்பொருள் தயாரிப்புகள் போலவே இவை சமூதாயப் பங்களிப்பை ஊக்குவிப்பவையாக இருக்கும்.

தமிழ் மொழியை இரண்டாம் மொழியாகக் கற்றுக் கொடுக்கத் தரமான பாட நூல்கள் மற்றும் கருவிகள். தற்போதுள்ள நல்ல நூல்கள் அனைத்துமே தமிழை முதல் மொழியாகக் (அல்லது தாய்மொழியாகக்) கொண்டவர்கள் பயில்வதற்கு வசதியாக இருக்கின்றன. புலம் பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகள் தங்கள் நாட்டில் உள்ள சூழலுக்கேற்றவாறு எடுத்துக்காட்டுகளைக் கொண்ட அந்நாட்டில் பேசும் இயல்பு மொழி (அல்லது ஆங்கிலம்) வாயிலாக கற்பிக்கும் நூல்கள் தரமாகக் கிடைப்பதில்லை.

இணையத்தில் (குறிப்பாக வலைப் பதிவுகளில்) பயன்படுத்தப் படும் தமிழ் சொற்களை சேமிக்கவும், எளிதில் தேடவும் இணையக் களஞ்சியம்.

தமிழறிஞர் பெரியசாமி தூரன் பல பத்து வருடங்களுக்கு முன்பு தொகுத்தளித்த அருமையான கலைக்களஞ்சியம் மற்றும் குழந்தைகளுக்கான களஞ்சியம் போன்றவற்றை கணினிகளுக்குட் கொண்டு வந்து இணையத்தில் மூலம் தமிழர் அனைவரும் பயனடையச் செய்வது.

சிறந்த வலைப் பதிவுகளுக்கான விருதுகள்.

தமிழில் புதியவர்கள் வலைப்பதிவு எழுதுவதை ஊக்குவிக்கும் வண்ணம் நடத்தப்படும் தமிழ்ப்பதிவர் பயிற்சிப்பட்டறை/முகாம்/கூட்டங்களுக்கு ஆதரவு அளித்தல். ஆண்டுக்கு ஓரிருமுறை ஏற்கனவே வலைப்பதிவு செய்பவர்களும், புதியவர்களும் கணிசமான அளவு கலந்து கொள்ளும் இக்கூட்டங்களுக்குப் பயனுள்ள சில பொருள்களை வழங்குதல்.

சில முக்கியமான பொருள்களில் தரவுகளுடன் எழுதப்படும் தரமான எழுத்துக்களை ஆசிரியர்களின் ஒப்புதலுடன் தொகுத்து புத்தகமாக வெளியிடுதலை ஊக்குவித்தல்.

மேற்கூறிய திட்டங்களுக்கு உங்கள் அனைவரின் ஊக்கமும், ஒத்துழைப்பும் தேவை என்று கூறி டி.எம்.ஐ. இந்த கருத்துப் பரிமாற்றத்தைத் தற்போதைக்கு நிறைவு செய்கிறது. அனைவருக்கும் நன்றி!

Comments

24 Responses to “டி.எம்.ஐ.யின் எதிர்காலப்பயணம்”

 1. பொன்ஸ் on April 30th, 2007 1:21 am

  பின்னூட்டப் பெட்டி வடிவமைப்பு உண்மையிலேயே அருமை.. அதை வடிவமைத்தவருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

  யோசனையில் இருக்கும் புதிய முயற்சிகளும் நன்றாக இருக்கின்றன.

  //பயனுள்ள சில பொருள்களை வழங்குதல்.//
  கிராமத்துப் பள்ளிகளுக்குக் கணினிகள் கொடுப்பதன் மூலம் மாணவர்களை வலைபதிவுக்குக் கொண்டுவருவது இன்னும் சுலபமாக சாத்தியமாகலாம்.. அது போன்ற செயல்களைச் சேர்த்துக் கொள்ளலாம்..

 2. யெஸ்.பாலபாரதி on April 30th, 2007 1:23 am

  த்ங்களின் இந்த அறிவிப்பு மிகவும் மகிழ்வளிக்கக்கூடியதாக இருக்கிறது.

  இணைந்து பணியாற்றும் ஆர்வத்துடன்..

  தோழன்
  யெஸ்.பா

 3. நாமக்கல் சிபி on April 30th, 2007 1:35 am

  //மேற்கூறிய திட்டங்களுக்கு உங்கள் அனைவரின் ஊக்கமும், ஒத்துழைப்பும் தேவை என்று கூறி டி.எம்.ஐ. இந்த கருத்துப் பரிமாற்றத்தைத் தற்போதைக்கு நிறைவு செய்கிறது.//

  எங்களால் இயன்ற ஒத்துழைப்பை நிச்சயம் நல்குவோம் என்று உறுதி கூறுகிறேன்.

 4. ஆழியூரான் on April 30th, 2007 2:30 am

  திட்டங்களும், முயற்சிகலும் நிறைவேற வாழ்த்துக்கள்.

 5. ரவிசங்கர் on April 30th, 2007 12:19 pm

  பாடப்புத்தகங்கள், பயிற்சிப் பட்டறை உதவி நல்ல முயற்சிகள். வாழ்த்துக்கள்.

  சிறந்த வலைப்பதிவர் போன்ற விருதுகளால் ஒரு பயனும் இல்லை. விருது ஏதும் இல்லாமலே நல்ல பதிவர் யார் படிப்பவர்களுக்குத் தெரியும். இது போன்ற விருது, போட்டிகள் சர்ச்சைகளுக்கும் இட்டுச் செல்லலாம் என்பதால் கவனம் தேவை.

 6. selvanayaki on April 30th, 2007 9:17 pm

  நல்ல முயற்சிகள்.

 7. Thamizhan on April 30th, 2007 10:20 pm

  குறுகிய கால்ந்தான் தமிழ்மணம் பார்த்துள்ளேன் என்றாலும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  இளைய தலைமுறைக்குச் செய்யும் தமிழறிவு பரப்புதல் தலையாய ஏற்பாடாக இருக்கட்டும்.
  கூத்தடிப்பவர்களின் வேண்டுகோள்களில் நேரத்தை வீணடிக்காமல் யூதர்களைப்போல உழைத்துத் தமிழினமும்,தமிழும் அனைத்துத் துறையிலும் முன்னேற்றமடையச் செய்ய வைக்கவேண்டியது இந்தத் தலைமுறையின் முக்கியக் கடமை.

 8. manathinoosai on May 1st, 2007 9:38 am

  அருமை:-)பின்னூட்டப் பெட்டி வடிவமைப்பு மிக அழகான, அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்க கூடிய ஒரு தீர்வு.

  தங்களின் புதிய திட்டங்களும் நல்லபடியாக செயல்படுத்தப்பட வாழ்த்துக்களும்/ஆதரவுகளும்.

 9. சந்தோஷ் on May 1st, 2007 12:18 pm

  உங்களின் முயற்சிக்கு ஆதரவு உண்டு. பின்னூட்ட பெட்டி முயற்சி அழகாக உள்ளது வாழ்த்துக்கள். அதே போல் சிறந்த வலைபதிவர் தேர்வு முறை சர்ச்சைக்கு உள்ளாவதறகான வாய்ப்புக்கள்.

 10. வெற்றி on May 1st, 2007 5:31 pm

  நல்ல முயற்சிகள். தங்களின் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ஈழத்தில் கல்விகற்கும் சிறார்கள், போரின் வடுவால் மனநோயால் பாதிக்கப்பட்ட மக்கள், ஊனமுற்றோருக்கான கணினி வகுப்புகள்/கணினிகள், புத்தகங்கள் வழங்குதல் போன்ற சில சேவைகள் தேவைப்படுகின்றன. உங்களாலோ அல்லது வேறு யாரேனும் உதவி செய்ய விரும்பினாலோ தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள்.

 11. SP.VR.SUBBIAH on May 1st, 2007 7:17 pm

  த்ங்களின் இந்த அறிவிப்பு மிகவும் மகிழ்வளிக்கக்கூடியதாக இருக்கிறது.

  இணைந்து பணியாற்றும் ஆர்வத்துடன்..

  SP.VR.சுப்பையா

 12. துளசி கோபால் on May 1st, 2007 7:25 pm

  அருமையான திட்டங்கள்.

  உங்கள் நல்ல முயற்சிகள்
  வெற்றி பெற மனமார வாழ்த்துகின்றேன்.

 13. ரவிசங்கர் on May 2nd, 2007 8:55 am

  இடப்பக்கப் பட்டையில் பதிவர்களுக்கு உதவியாக இருக்கக் கூடிய பதிவுகள் மினுக்குவது நல்ல வடிவமைப்பு. இது போல் இன்னும் பல மேம்பாடுகளை எதிர்ப்பார்க்கிறேன். அண்மைய மறுமொழிகள் வடிவமைப்பும் நன்று. நட்சத்திரம் கீற்று மட்டும் firefoxல் கீழிறங்கித் தெரிகிறது. இதை சரி செய்யலாம்.

 14. Manian on May 3rd, 2007 7:45 am

  தமிழ்மண முகப்பு பக்கம் மிக அழகாக சீர்திருத்தப்பட்டு பயனுள்ள பதிவுகளை இடது பக்க பட்டையில் கொண்டு வந்துள்ளது போன்ற மேம்பாடுகள் மகிழ்ச்சியளிக்கின்றன. உங்களின் வருங்கால திட்டங்களும் உற்சாகமூட்டுகின்றன.

  உங்கள் எண்ணங்கள் இனிதே ஈடேற தமிழ்த்தாயை வேண்டுகிறேன்.

 15. உண்மைத்தமிழன் on May 3rd, 2007 7:58 am

  பத்திரிகைகளுக்கு கடிதம் எழுதும் வழக்கமுள்ளவர்களை இணைய வலைத்தளத்தின் பக்கம் இழுக்க வேண்டும். அதற்காக பத்திரிகைகள் மூலமாக தமிழ்மணம், தேன்கூடு இவற்றை வலைத்தமிழர்கள் பிரபலப்படுத்த வேண்டும். கம்ப்யூட்டர் தொடர்பான அனைத்து இடங்களிலும் இந்த வலைப்பதிவர் அமைப்பு செயல்பட்டு வலைத்தளம் பற்றி மக்களிடம் நேரடி செய்முறை செய்து காண்பிக்க வேண்டும். முதலில் வலைப்பதிவர்கள் முறையாக அமைப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டால் தமிழகம் முழுவதும் இதைக் கொண்டு செல்வதற்கு ஏதுவாக இருக்கும்..

 16. வெட்டிப்பயல் on May 3rd, 2007 3:56 pm

  பின்னூட்டம் திரட்டும் முறையை வடிவமைத்தவருக்கு பாராட்டுக்கள்… சூப்பரா இருக்கு 🙂

  உங்களோட முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

  எங்களால் முடிந்த அளவு உதவ நாங்களும் முயற்சி செய்கிறோம்…

 17. ரவிசங்கர் on May 7th, 2007 12:43 pm

  இடப்பக்க சூடான பட்டை, வலப்பக்க துறை சார் பதிவுப் பட்டை இரண்டும் நன்று. அதிகம் பேர் சொடுக்கினா ஒரு பதிவு சூடாகும்னு எடுத்துக்கலாமா? 🙂 இது குறித்து விளக்கினால் நன்று.

 18. ரவிசங்கர் on June 17th, 2007 9:56 am

  தமிழ் விழி அருமை. நல்ல முயற்சி.

  வீடியோ என்பதற்குப் பதில் நல்ல தமிழ்ச் சொல்லை ஆளலாம். விக்கிபீடியாவில் இன்னும் பல களங்களிலும் நிகழ்படம் என்று சொல்கிறோம். உங்களுக்கு ஏற்புடையய வேறு சொல் பயன்படுத்தினாலும் சரி தான்.

  நிகழ்படங்களை கூகுள், யூட்யூப்பில் இருந்து பெறுவதால் நேரடியான சட்டச் சிக்கல்கள் வராது என்றாலும், காப்புரிமை அற்ற முழுத் திரைப்படங்களையும் எந்த ஒரு தளத்திலும் காட்டுவது தார்மீக ரீதியில் தவறாக இருக்கும். தமிழ்மணம் இந்த விதத்தில் நல்ல முன்மாதிரியாக இருக்க முயலலாம்.

 19. […] தமிழ் வலைப்பதிவுகளுக்கென்று விருதுகள் ஏற்படுத்தி சிறந்த பதிவுகளைப் பாராட்டி அங்கீகரிக்கும் நோக்கில் தமிழ்வலைப்பதிவுகளின் முன்னோடித் திரட்டியான தமிழ்மணம் சில திட்டங்களை வரைந்துகொண்டுள்ளது. இதைப்பற்றி ஏற்கனவே தமிழ்மணம் தளத்தை நிர்வகிக்கும் டி.எம்.ஐ. நிறுவனம் சில இடங்களில் இடுகை/மறுமொழி வாயிலாக குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். […]

 20. அபிஅப்பா on December 13th, 2007 5:49 am

  அருமை அருமை வாழ்த்துக்கள்!!

 21. dharumi on December 13th, 2007 9:16 am

  முயற்சிகள் யாவும் திருவினைகளாக வாழ்த்துக்கள்

 22. முர்ஷிட் அஹ்மட் on December 13th, 2007 1:34 pm

  தங்கள் சேவை அளப்பரியது… வாழ்த்துக்கள்

 23. வசந்தம் ரவி on December 16th, 2007 1:46 am

  சிறந்த புது முகங்களுக்கு விருது உண்டா ??? ம் ஹ்ம்ம் எனக்கில்லை எனக்கில்லை

 24. மாயா on December 17th, 2007 4:24 am

  அருமை,
  நல்ல முயற்சி:)

Leave a Reply