தமிழ்மணம் விவாதக்களம்
April 22, 2007 – 1:23 pm by தமிழ்மணம்தோற்றம்
“மனித வர்க்கத்தின் அத்தனை வளர்ச்சிக்கும் ஆதாரம், சுழற்சி. பூமியின் சுழற்சியில் உள்ளது நம் உயிராதாரம். சுழலும் சக்கரங்கள் மனிதனின் மன வேகத்தை இயந்திரத்தில் ஏற்றி இயக்கிய முயற்சி. மனித வரலாற்றில் அறிவியல், பொருளாதாரம், அரசியல், சமூகம் ஆகியவற்றில் நிகழும் அத்தனை மாற்றங்களும் இச்சுழற்சியின் வேகத்தினைப் பொருத்தே அமைகின்றன.
மனிதகுலத்தின் எண்ணச்சுழற்சி, அது வாழும் சமுதாயத்தை அப்படியே பெயர்த்தெடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்திவிடும் பேராற்றல் கொண்டது. சிந்தனையில், செயல்களில், விருப்பங்களில், ஏன் வாழும் முறைகளிற்கூட அருகருகே வசிக்கும் இரு மனிதர்களிடையே எண்ணற்ற வேறுபாடுகள். இத்தகைய வேறுபாடுகளை மாற்ற முயலாமல், புரிந்துகொள்ள முயலும் ஒரு சமுகமே உயர்வு நோக்கிப் பயணிக்கும். புரிந்துகொள்ள முயலும் ஒரு சமூகத்தில் எல்லாவித மதிப்பீடுகளும் நம்பிக்கைகளும் விமர்சிக்கப்பட்டு, மறு ஆய்விற்குட்படுத்தப்பட்டு சிதைந்து தேய்ந்து கால ஓட்டத்தில் மீண்டுமொரு புதிய உருவாக்கம் கொள்ளுமே தவிர, தேங்குநீர்க்குட்டையாய் நின்று தீங்கிழைப்பதில்லை. “இதுதான், இதற்குளேதான் எல்லாம், இதுவே கடைசி” என அனைத்தையும் கட்டத்திற்குள் அடக்கும் ஆதிக்க முகம் நோக்கி நகர்வதல்ல வளர்ச்சி.
இத்துணை காலமாக இருந்துவரும் அனைத்து ஆதிக்கத்தையும் விவாதத்திற்குள்ளாக்குவதிலேதான் உள்ளது உண்மையான வளர்ச்சி. எவ்வித அபிமானமும் எதன் மீதுமில்லாமல் சமுதாய நலனை மட்டுமே கருத்திற் கொண்ட விவாதங்கள், திரித்தல்கள், சங்கடங்கள் இல்லா ஒரு பெரும் விவாதமேடையாக வலைப்பதிவுகள் இருக்கவேண்டும். ஆக்கபூர்வமான விவாதங்களை ஊக்குவித்து பயனற்ற வாதங்களை ஒதுக்கி விடுவது சமூகத்தின் ஆற்றல்களைச் சரிவரப் பயன்படுத்துவதற்கு அவசியமானது. அதற்கான ஒரு முன்னோட்ட முயற்சியே தமிழ்மணம் விவாதக்களம்.
முதல் விவாதக்களம் தமிழ்மணம் நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பெற்ற நான்கு வலைப்பதிவர்களால் நடத்தப்பெறும். பதிவுலகிற் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகத் தனது எண்ணங்களை எழுதும் பதிவர் மா.சிவக்குமார் அவர்கள் இவ்விவாதக்களங்களின் பொறுப்பாளராகச் செயற்படுவார்.
* இப்பதிவர்கள் முக்கியமெனக் கருதும் கருத்துக்கள், நம்பிக்கைகள், படைப்பிலக்கியங்கள், சமூகமதிப்பீடுகள், செய்திகள் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் தமிழ்மணம் விவாதக்களத்தில் பதிவிடுவார்.
* பதிவு வெளியிடப்பட்ட பின்னர் ஐந்து பதிவர்களும், பதிவின் மீதான விவாதங்களைத் தொடர்ந்து கொண்டு செல்வர்.
* இந்த ஐந்து பதிவர்கள் மட்டுமல்லாது மற்ற நண்பர்களும் தங்களின் செறிவான, ஆரோக்கியமான வாதங்களை இங்கு வைக்கலாம். விவாதக்கள உறுப்பினர்கள், நெறியற்ற வார்த்தைகள் இருப்பின், அவற்றைத் தவிர்த்து வெளியிடுவர். பதிவர்களின் கருத்துக்கள் எவ்வகையிலும் மாற்றப்படா.
* ஒவ்வொரு மாதமும் நான்கு பதிவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள் அடுத்த மாதத்திற்கான நான்கு பதிவர்களைத் தேர்ந்தெடுப்பர்.
கருத்துக்கள் மட்டுமே மோதும் வெளியாகத் தமிழ்மணம் விவாதக்களம் இருக்கும்.
வரும் சனவரி,1 புத்தாண்டு தினத்திலிருந்து தமிழ்மணம் விவாதக்களம் திறக்கப்படவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
என்ற முன்னறிவிப்புடன் தமிழ்மண விவாதக்களம் ஆரம்பித்து வைக்கப்பட்டு தமிழ்மண விவாதக்களம் ஆங்காங்கே சில வாரங்கள் சில தொய்வுகள் இருந்த போதிலும் தொடர்ந்தும் முன்னோக்கி இயங்கி வருகிறது.
செயற்பாடு
தமிழ்மணம் வெளியில் பொதுவாகவே சில ஆண்டுகளாவது நீடித்திருக்கும் பதிவர்கள் பலரும் தம்முடைய விவாதிக்கும் திறன், விமர்சனங்களுக்கான பார்வை, அங்கத உணர்விலேற்றம், சமரசமில்லாத கேள்விகேட்கும் தன்மை ஆகியன தம்மில் பலருக்கு அதிகரித்து வருவதை பார்த்திருப்பார்கள். இதுவே தமிழின் வெற்றியும் ஒரு விதத்திலே அதைத் தாங்கி அர்ப்பணிப்புடன் இயங்கி வரும் தமிழ்மணத்தின் வெற்றியுமாகும் என்பதில் தமிழ்மணம் பெருமிதம் கொள்கிறது. அப்படியான பதிவர்களுக்குத் தம் வாழ்த்தினையும் அவ்வாறான எழுத்தார்வம்,முனைப்பு, விமரிசனப்பார்வை ஆகியன வளர மற்ற பதிவர்களுக்கும் தம் விழைவையும் ஒத்துழைப்பையும் நல்குகிறது.
இப்படியாக தமிழ்மணத்திற் பங்கேற்கும் அனைத்து பதிவர்களுக்கும் தம்மின் எழுத்தார்வம்,முனைப்பு, விமரிசனப்பார்வை மற்றும் விவாதிக்கும் திறன் ஆகியன விளைய தமிழ்மணம் விழைகின்றது என்பதைச் செயலிற் காட்டி வந்ததே தமிழ்மணம் விவாதக்களம். இவ்வாறே இது இனியும் தொடரும் என்பதையும் தமிழ்மணம் பதிவர்களிடம் சொல்வதில் பெருமிதம் கொள்கிறது. இதுவரை எவரும் விவாதிக்கத் தயங்கும் பல தலைப்புக்களில் விவாதங்கள் நடந்தன. அவற்றின் பின்னூட்டங்களும் காழ்ப்பிலாத, சக பதிவர்களின் மேலான தாக்குதலிலாத எவ்வித முரணான கருத்துக்களையும் பதிவாகும்வண்ணம் இவ்விவாத மன்றம் வெளியிட்டு வந்துள்ளது. கருத்துச்சுதந்திரத்திற்கு முதலிடம் கொடுக்கும் பொறுப்பு இருக்கும் அதே தமிழ்மணம் தம் பதிவர்களின் மீதான தாக்குதல்கள் விவாதக்களமுடே அணுகாவண்ணம் இயங்குவது தமக்கு பொறுப்புள்ளதாகவே கருதுகின்றது. தனியாள்மீதான தாக்குதலைத் தவிர்த்து விவாதத்தினூடாக இக்கருத்துச்சுதந்திரத்தினை வெளியிடும் தன்மையும் வலிமையும் தனக்கிருப்பதாகவே டி.எம்.ஐ திடமாக நம்புகின்றது; கருத்தினைக் கவனத்திலே கொள்ளும் பதிவர்களும் அறிவார்கள்.
நுட்பம்
விவாதக்களத்தின் நுட்பத்தினை மேம்படுத்தும் யோசனைகளைத் தமிழ்மணத்தின் பல பதிவர்கள் முன் வைத்ததை டி.எம்.ஐ அறியாமலில்லை. இவற்றின் மேலான கருத்துப்பரிமாற்றங்களும் டிஎம்ஐ இல் நடந்தன. ஆனால் அண்மையில், தமிழ்மணம் பயனர்கள் அதிகரிப்பும் வழங்கியின் வழங்குதிறன் & இடப்பெயர்வு (migration) குறித்ததான சிக்கல்களும் பேரளவிலான டி.எம்.ஐயின் தொழில்நுட்பக்குழுவின் நேரத்தினை எடுத்துக்கொள்கின்றன. மேலும் பின்னூட்டக்கருத்துக்களத்தினைத் தனியாள்மேலான தாக்குதலுக்கு அப்பாற்பட்டு வைக்கவேண்டி அது மட்டுறுத்தலுக்கு பின்னாகவே வெளியிட வேண்டிய அவசியத்தினாலும், வலைப்பதிவின் மட்டுறுத்தல் சேவையே தற்போதைய தேவையைப் பூர்த்திசெய்யும் என்பதாலும் இப்போதிருக்கும் அமைப்பிலேயே தொடர்ந்து இயங்கி வரும். எனினும், வருங்காலத்தில் தமிழ்மணம் விவாதக்களம் தனது இயக்கம்/நுட்பத்தினை தமிழ்மணத்தின் வருங்காலத்தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அவசியத்தினையொட்டி மாற்றிக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை.
இவ்வேளையிலே தமிழ்மணம் விவாதக்களத்தின் தோற்றத்தில் ஆதாரமாகவிருந்த கற்பகம் கல்யாண் அவர்கட்கும், தமிழ்மணம் விவாதக்களத்தின் முதல் நடத்துனராக பொறுப்பேற்று தொடர்ந்து நடத்தி வரும் மா. சிவக்குமார் அவர்கட்கும் டி.எம்.ஐ. தன் நன்றியினை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளது. இனியும் தொடர்ந்து மா.சிவக்குமார் அவர்களே நடத்துனராகவும், விவாதக்களத்தின் அமைப்பாளராகவும் செயல்படுவார். அவருக்கு தம்மாலான உதவிகளை பதிவர்கள் அளிக்குமாறு டி.எம்.ஐ வேண்டி நிற்கிறது.
முடிவாக, தமிழ்மணம் பதிவர்கள் விவாதங்களினால் தம்மை நிறுத்திக்கொள்ள, பார்வைகளைச் செம்மையுறச்செய்ய தமிழ்மண விவாதக்களம் இணையவெளியில் இன்னுமொரு தூணாய் இருக்குமெனக் கூறி அனைவரை பங்கு பெறவும், ஆர்வலர்களை விவாதச்செயற்பாடுகளிலே தம்மை இணைத்துக்கொள்ளவும் அன்புடன் டி.எம்.ஐ அழைக்கின்றது.
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி.
நிர்வாகம்
தமிழ்மணம்