மக்கள் தொடர்புக்குழு: தமிழ்மணம் நிர்வாகம், அறிவிப்புகள் & நட்சத்திரம்
April 22, 2007 – 12:25 am by தமிழ்மணம்மக்கள்தொடர்புக்குழு மக்கள்தொடர்புக்குழுவின் கீழான செயற்பாடுகள்
1. டிஎம்ஐ, அதன் பக்கங்கள் தொடர்பான அறிவிப்புகளைச் செய்தல்
2. தமிழ்மணம் அறிவிப்புகள்: வலைப்பதிவுகள் (http://blog.thamizmaNam.com, http://thamizmaNam.blogspot.com)
3. தமிழ்மணம் முகப்பிலே சேர்த்துக்கொள்ளப்படும் அறிவிப்புகள், மாற்றங்கள் தொடர்பான செயற்பாடுகள்
4. தமிழ்மணம் திரட்டி செயற்பாடுகள்: நிர்வாகம் மின்னஞ்சல் (admin@thamizmaNam.com), வலைப்பதிவு நிர்வாகம் (postadmin@thamizmaNam.com), முறையீடுகள் (complaints@thamizmanam.com)
5. தமிழ்மணம் நட்சத்திரம் தொடர்பான நிர்வாகம்: staradmin@thamizmaNam.com
6. தமிழ்மணம்மீதான பதிவர்களின் கருத்துகளையும் பதிவுகளையும் -வேண்டின், பிற டிஎம்ஐ குழுக்களோடும் சேர்ந்து - ஆராய்ந்து முடிவு செய்தல்
தமிழ்மணம் திரட்டி செயற்பாடுகள்
தமிழ்மணம் திரட்டியிலே பதிவுகளைச் சேர்த்தலும் மாறுதல்களைச் செய்தலும் விலக்குதலும் உள்ளிட்ட நிர்வாகச் செயற்பாடுகள் டிஎம்ஐ நிறுவனத்தின் மக்கள்தொடர்புக்குழுவின் கீழே அமைகின்றன.
TMI, தமிழ்மணத்தைப் பெற்றுக்கொண்டவுடன் பதிவுகளைச் சேர்த்ததுக்கொள்ளுதல், தொடர்ந்து வைத்திருத்தல்/நீக்குதல் போன்றவற்றை எப்படி முறைப்படுத்துவது என்பது விவாதிக்கப்பட்டது. பதிவுகளைச் சேர்த்துக்கொள்ளும் முறை முன்பிருந்தபடியே தொடர்வதென்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி தமிழ்மணம் திரட்டியிலே சேர்வதற்கு ஒரு பதிவு/பதிவாளர் தமிழ்மணம் –> பதிவுகள் –> பட்டியலில் சேர்க்க ஊடாகத் தரும் அவரது பதிவு விபரங்கள், தமிழ்மணம் திரட்டி நிர்வாகிகளால், இருநாட்களுள் கவனிக்கப்படுகின்றன. சேர்க்க விண்ணப்பிக்கப்பட்டிருக்கும் பதிவு தமிழ்மணத்தின் அடிப்படைத்தகுதிகளைக் கொண்டிருக்கின்றவா எனக் கவனிக்கப்படுகின்றது. குறைந்தது, வெவ்வேறு நாட்களிலே இடப்பட்ட மூன்று தமிழ்ப்பதிவுகள், பதிவுகளின் உள்ளடக்கம் என்பன இவற்றுள் அடங்கும். அண்மைக்காலத்திலே இவ்விதிகளோடு பதிவுகளை இணைத்துக்கொள்ளும் சிலர், பின்னால் அப்பதிவுகளின் உள்ளடக்கங்களை நீக்கிவிட்டு, தமிழ்மணம் விதிகளுக்குத் தகாத பதிவுகளைச் சேர்ப்பதும் ஆங்காங்கே காணப்படுவதால், சில பதிவுகள் உடனடியாக அனுமதிக்கப்படாது, காலம் தாழ்த்தி அப்பதிவுகளின் தொடர்ச்சியான இடுகைகளைக் கண்டபின்னரே சேர்க்கப்படுகின்றன. பின்னூட்டங்கள் தமிழ்மணத்தின் முன்றலிலே தோன்றுவதும் இதேபோல அங்கீகரிக்கப்படுகின்றது.
தொடர்ந்து வைத்திருத்தல்/நீக்குதல் என்பதற்குச் சில வழிமுறைகள் விவாதிக்கப்பட்டன. தற்போதைக்கு, கீழ்காணும் முறை பின்பற்றப்படுகிறது. இது தவிர வேறு இரண்டு முறைகளும் விவாதிக்கப்பட்டன.
தமிழ்மணத்தில் இன்றைய நிலவரப்படி 1830 பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளன. சராசரியாக நாளொன்றுக்கு 120 இடுகைகளும், 200 பின்னூட்டங்களும் திரட்டப்படுகின்றன. இவையனைத்தையும் வாசித்து நெறிப்படுத்துவதென்பது இயலாதவொன்று. அப்படியான நோக்கமும் எங்களுக்கு இல்லை. தற்போது பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படவேண்டுமென்ற பழைய விதி களையப்பட்டிருக்கிறது என்பதும் பதிவர்கள் அறிந்ததே. இருப்பினும், பின்னூட்டங்களும் பதிவுகளும் தரக்குறைவாக இருந்தாலோ, மிதமிஞ்சிய தனியாள்மீதான தாக்குதலாக காணப்படும்போதோ பொது வாசகர்களிடமிருந்தோ அல்லது தாக்குதலுக்கு உள்ளாகுபவர்களிடமிருந்தோ எங்களுக்கு முறையீடு வரும்போது, மக்கள் தொடர்புக் குழுவும் குறிப்பிட்ட இடுகைகள்/பின்னூட்டங்களை வாசித்து முறையீட்டில் தர்க்க நியாயம் உள்ளதெனக் கருதினால் அத்தகைய இடுகைகளோ, பதிவுகளோ திரட்டப்படுவதிலிருந்து அகற்றப்படுகின்றன. இப்படியாக அகற்றப்படும் இடுகை, பதிவு விபரங்கள் பதிவருக்கு அனுப்பப்படுகின்றன. பதிவுகள் முழுதாக விலக்கப்படுவதற்குமுன், அவை தொடர்பான பிரச்சினைகள் மக்கள்தொடர்புக்குழுவிலே விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இம்முடிவுகள் இனிவரும் பதிவர்களின் செயற்பாடுகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்குமெனத் தோன்றினால் அவ்விவரம் வலைப்பதிவிலே அறிவிக்கப்படுகிறது.
இது தவிர (தற்போது பின்பற்றப்படாத) மற்ற இரண்டு முறைகள்:
1. முற்று முழுதாக மனிதக் குறுக்கீடற்றத் தானியங்கித் திரட்டியாக்கி சமர்ப்பிக்கப்படும் அனைத்து பதிவுகளையும் சேர்த்துக்கொண்டு, எல்லா இடுகைகளையும், பின்னூட்டங்களையும் திரட்டுவது. அவ்வாறு செய்ய முற்படும்போது வரும் முறையீடுகளின் அடிப்படையில் பிரச்சினைக்குறிய பதிவுகளை முதற்பக்கத்தில் காட்டாமல் வேறுபக்கத்தில் திரட்டி, அதன் நுழைவாயிலில் கீழுள்ள கூகுள் எச்சரிக்கையைப் போல எச்சரிக்கை வைக்கலாம். “Some readers of this blog have contacted Google because they believe this blog’s content is hateful. In general, Google does not review nor do we endorse the content of this or any blog.” ஆனால், தமிழ்மணம் போன்ற சில ஆயிரம் பதிவுகளைத் திரட்டும் தளத்துக்குச் சாத்தியமா என்பது தெரியவில்லை. முறையீடுகளின் அடிப்படையில் மட்டும் பதிவுகளைப் பிரிப்பதில் உள்ள அறவியல் சிக்கல்களால் இம்முறையை நடைமுறைப்படுத்த இயலுமா எனத் தெரியவில்லை.
2. எமக்கு வரும் முறையீடுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பதிவுகளை நாங்களே வாசித்து முடிவெடுக்காமல் அம்முறையீடுகளை மூன்று தனிப்பட்ட பதிவர்களுக்கு அனுப்பி, அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் முடிவு செய்வது. இப்படி முறையீடுகளை/பதிவுகளை மீள்பார்வை செய்யவென நீண்டகாலமாக தொடர்ந்து இயங்கும் பல்வேறு பின்னணி/ஆர்வங்கள் கொண்ட பதிவர்கள் 20-30 பேர்களை அனாமதேய மீள்பார்வையாளர்களாக நியமிக்கலாம்.
இம்மூன்று முறைகளிலும் உள்ள நன்மை, தீமைகளைக் குறித்து பதிவர்களின் கருத்துக்களை அறிய விழைகிறோம். தமிழ்மணம் வலைப்பதிவுகளிலே பதிவர்கள் தரும் பின்னூட்டங்கள், தமிழ்மணத்திலே அவர்கள் பதிவு தொடர்பான மாறுதல்கள், ஓரளவுக்கு முறையீடுகள் postadmin@thamizmaNam.com ஊடாகக் கையாளப்படுகின்றன.
தமிழ்மணம் திரட்டியின் பக்கத்திலேயான பதிவர்களின் முறையீடுகள் பதிவுகளுக்குப் பக்கத்திலேயான ஆச்சரியக்குறி கொண்ட முக்கோணத்தினை அழுத்துவதன்மூலம் complaints@thamizmaNam.com இற்கு அனுப்பப்பட்டுக் கையாளப்படுகின்றன.
தமிழ்மணத்தின் மீதான பதிவர்களின் கருத்துகள், பதிவுகள் என்பன இயன்றவரை தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. நாளாந்தம் நிர்வாகத்துக்கு சராசரி ஏழு அஞ்சல்கள் வருகின்றன. ஒவ்வொன்றுக்குமான தீர்வுக்கான காலம், பதிவரின் பிரச்சனையின் தன்மையைப் பொறுத்தும் அத்தீர்வினைத் தர ஈடுபடவேண்டிய மற்றைய டிஎம்ஐ குழுக்களைப் பொறுத்தும் மாறுபடும். இயன்றவரையிலே, பதில் தரவேண்டிய ஒவ்வொரு அஞ்சலுக்கும் பதில் தரப்படும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
திரட்டி தொடர்பான நிர்வாகத்துக்கான மொத்த மனித நேரம் சராசரியாக நாளாந்தம் இரண்டிலிருந்து மூன்று மணிநேரங்களேனும் தேவைப்படுகின்றது. சில சமயங்களிலே இந்நேரம் நிலைமையைப் பொறுத்து ஆறேழு மணிநேரங்களாகவும் ஆவதுண்டு.
தமிழ்மணம் நட்சத்திர நிர்வாகம்
எழுத்தாற்றல் மிக்க ஒரு திறமையான வலைப்பதிவரின் மேல் வாசகர்களின் கவனத்தைத் திருப்பி அந்த வலைப்பதிவருக்கு ஊக்கம் அளிக்கவே ஒவ்வொரு வாரமும் நட்சத்திரப் பதிவராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தனக்குக் கிடைத்த அந்த ஒரு வாரத்தை நட்சத்திரப்பதிவர் செவ்வனே பயன்படுத்தி உலகளாவிய தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு மத்தியில் தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ளலாம்.
நட்சத்திரங்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
தமிழ்மணம்_நட்சத்திர நிர்வாகியாக இருப்பவர், தொடர்ந்து தமிழ்மணத்தில் தோன்றும் பதிவுகளையும், புதிதாக இணையும் பதிவர்களையும் கண்காணித்து, யார் நன்றாக, ஆக்கபூர்வமாக எழுதி வருகிறார்கள் என்பதனை அடையாளம் கொள்கிறார். நட்சத்திரப்பதிவர் குறைந்தது மூன்று மாதங்களாவது தரமான பதிவுகள் எழுதியிருக்க வேண்டும். தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் போன்ற சிறப்பு தினங்களில் மிகவும் அறியப்பட்ட பதிவர்கள் நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒரு மாதத்தில் குறைந்தது ஒரு பெண் பதிவராவது நட்சத்திரமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஏற்கனவே நட்சத்திரமாக இருந்தவர், மீண்டும் நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்படலாம், ஆனால் குறைந்தது ஆறு மாத இடைவெளி இருத்தல் அவசியம். நட்சத்திரப் பதிவாளராக இருக்கவேண்டிப் பதிவர்களுக்கு அழைப்பு மின் அஞ்சல் மூலம் ஒரு மாதத்திற்கு முன்பாக அனுப்பப்படுகிறது. பதிவர் அனுப்பும் புகைப்படமும் குறிப்பும் தமிழ்மணம் நட்சத்திர மேலாண்மை பக்கத்தில் உள்ளிடப்படுகிறது. திங்கள் தொடங்கும் நள்ளிரவு அந்த வார நட்சத்திரத்தின் புகைப்படம், குறிப்பு, அன்றைய நட்சத்திரப்பதிவு ஆகியவை தமிழ்மணம் நட்சத்திரப் பகுதியில் தோன்றும்.
நட்சத்திர நிர்வாகத்தில் என்னென்ன சிக்கல்கள்?
1. ஒரு தேதியில் நட்சத்திரமாக இருக்க ஒத்துக்கொண்ட ஒரு பதிவர், பின்னர் சில தவிர்க்க முடியாத காரணங்களால் பின் வாங்கிவிடும் வாய்ப்பு உள்ளது.
2. சில பதிவர்களை அனுகும்போது, தனக்கு ஒரு குறிப்பிட்ட மாதத்தில் நட்சத்திர வாய்ப்பினைத் தரும்படி அவர்கள் கேட்டுக்கொள்வார்கள். அதனை நினைவில் கொண்டு, அந்த மாதத்தில் மீண்டும் அவர்களை அணுகவேண்டும்.
நட்சத்திரப்பதிவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையினை இன்னும் மேம்படுத்தி ஒழுக்காற்ற தமிழ்மணத்திலே இணைந்திருக்கும் பதிவர்களிடமிருந்து நடைமுறைப்படுத்தக்கூடிய வழிமுறைகளை முழுமையான திட்டங்களாக எதிர்பார்க்கின்றோம். staradmin@thamizmaNam.com முகவரிக்கு அனுப்பி வைத்துதவலாம்.
மேலும் இச்சந்தர்ப்பத்தினை, தமிழ்மணம் நட்சத்திரம் பகுதியினைக் கடந்த ஆண்டுவரை தொடர்ந்து தொய்யாமல் நடத்தி வழியமைத்த மதி கந்தசாமிக்கும் அழைப்பினை ஏற்றுப் பங்காற்றிய நட்சத்திரப்பதிவர்களுக்கும் தமிழ்மணம் தன் நன்றியினைத் தெரிவிக்கின்றது.
மக்கள்தொடர்புக்குழு
டிஎம்ஐ
7 Responses to “மக்கள் தொடர்புக்குழு: தமிழ்மணம் நிர்வாகம், அறிவிப்புகள் & நட்சத்திரம்”
/////அவ்வாறு செய்ய முற்படும்போது வரும் முறையீடுகளின் அடிப்படையில் பிரச்சினைக்குறிய பதிவுகளை முதற்பக்கத்தில் காட்டாமல் வேறுபக்கத்தில் திரட்டி, அதன் நுழைவாயிலில் கீழுள்ள கூகுள் எச்சரிக்கையைப் போல எச்சரிக்கை வைக்கலாம். “Some readers of this blog have contacted Google because they believe this blog’s content is hateful. In general, Google does not review nor do we endorse the content of this or any blog.”//////
This is the route you should take.
இப்படி செய்வதனால், தமிழ்மணம் யாருக்கும் சாதகமாக செயல்படுகிறது என்ற பிரச்சனை எழாது.
இப்பொழுதுள்ள ‘முக்கோண’ complaints registering போல், இன்னொரு thumbsup/thumbsdown icon வைத்து (web2.0), அதை, தமிழ்மணத்தில் சேர்ந்துள்ள பதிவர்களுக்கு மட்டும் காட்டலாம் (if they are logged in to thamizmanam). வாக்களிப்போர் யார் யார் என்பதை தமிழ்மண நிர்வாகம் அறியும் என்பது தெரிந்தால், எந்த பதிவரும், ‘கும்மி வாக்கு’ போட மாட்டார்கள்.
75% க்கு மேல், thumbs down ஒரு பதிவுக்கு கிட்டினால், அந்த பதிவுக்கு பின்னூட்டம் திரட்டுவதை நீங்கள் தவிர்க்கலாம்.
இன்னும் சிறப்பாக இதை கொண்டு செல்ல, 75%க்கு மேல் thumbs down பெற்ற பதிவுகளை ஒரு சிறப்பு ஆசிரியர் குழுவுக்கு அனுப்பி, அவர்களின் வாக்கடிப்படையில், தூக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்யலாம்.
சிறப்பு ஆசிரியர்களாக ஒரு 10 பதிவர்களை நீங்களே தேர்ந்தெடுத்து, அதை பப்ளிக்காக அறிவிக்க வேண்டும்.
நெறைய வழி இருக்கு இத மெருகேத்த, but, you have to start this, before its too late.
சமீபத்திய செயல்பாடுகளால் (தார்மீக அடிப்படையில் தமிழ்மண நண்பர்களுக்கு பதிவர்களின் விவரங்கள் கொடுப்படும்னு எங்கேயோ சொல்லியிருக்கீங்க???? what???? hello????), எனக்கே கூட தமிழ்மணத்தின் எதிர்காலத்தின் மேல் நம்பிக்கை குறைவு ஏற்பட்டுள்ளது.
You have a bright future as an ‘alternative’ media.
This will earn you both $s and good fame.
so, act, before its too late.
:)))))))
By Surveysan on Apr 22, 2007
உங்களின் இந்த வாக்கியம் குழப்பத்தை விளைவிக்கறது. (எனக்கும், இன்னும் பலரூக்கும்).
“எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும்”
my interpretation was this “தார்மீக அடிப்படையில் தமிழ்மண நண்பர்களுக்கு பதிவர்களின் விவரங்கள் கொடுப்படும்”
Can you clarify it in bit more detail, when you get a chance.
Its your show. You can ignore my question too.
நன்றி.
By Surveysan on Apr 22, 2007
//எழுத்தாற்றல் மிக்க ஒரு திறமையான வலைப்பதிவரின் மேல் வாசகர்களின் கவனத்தைத் திருப்பி அந்த வலைப்பதிவருக்கு ஊக்கம் அளிக்கவே ஒவ்வொரு வாரமும் நட்சத்திரப் பதிவராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்//
கொள்கை ரீதியில் இந்த வாக்கியம் சரியாய் இருக்கலாம். ஆனால், நடைமுறையில் இது பய்ன்படுத்தப் பட்டது போல் தெரியவில்லை.
By அருண்,சென்னை. on Apr 23, 2007
//அண்மைக்காலத்திலே இவ்விதிகளோடு பதிவுகளை இணைத்துக்கொள்ளும் சிலர், பின்னால் அப்பதிவுகளின் உள்ளடக்கங்களை நீக்கிவிட்டு, தமிழ்மணம் விதிகளுக்குத் தகாத பதிவுகளைச் சேர்ப்பதும் ஆங்காங்கே காணப்படுவதால், சில பதிவுகள் உடனடியாக அனுமதிக்கப்படாது, காலம் தாழ்த்தி அப்பதிவுகளின் தொடர்ச்சியான இடுகைகளைக் கண்டபின்னரே சேர்க்கப்படுகின்றன. //
இதனுடன் கூட, ஏற்கனவே தமிழ்மணத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பதிவரின் referenceஉடன் வருபவர்களை இப்படிக் கவனிக்காமல், சோதிக்காமல் சேர்த்துக் கொள்ளவும் வழி செய்யலாம். புதுப் பதிவரைப் பரிந்துரைக்கும், அல்லது வழிகாட்டி அழைத்துவரும் பதிவர் யார் என்பதையும் புதுப் பதிவர் சேரும் பக்கத்தில் பட்டியலிட்டுக் காட்டலாம். இதன் மூலம்,
1. தொடர்பில்லாத ஆட்களின் பெயர்களைப் புதுப் பதிவர் இட்டு உள்நுழைதலைத் தவிர்க்கலாம்
2. புதுப் பதிவரின் பதிவுகளை மிகுந்து கண்காணிக்கும் பொறுப்பையும் உழைப்பையும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.
3. நண்பர்களை அழைத்து வரும் போது அவர்களின் ஆர்வம் குறையுமுன் தமிழ்மணத்தில் சேர்த்துவிட எங்களுக்கும் உதவியாக இருக்கும்.
4. புதுப் பதிவரைப் பரிந்துரைத்தவரின் பெயரும் வெளிப்படையாக சொல்லப்படுவதால், நம்பகமற்ற பதிவர்களைப் பரிந்துரைக்கும் பிரச்சனையும் இருக்காது.
—-
பிகு: பரிந்துரைக்க நண்பர்களற்ற புத்தம் புது பதிவர்களுக்கு இந்த யோசனை ஒத்துவராது. எனவே, இப்போது இருப்பது போன்ற தனிச்சையான பதிவு முறைகளுடன் கூட, இது போன்ற பரிந்துரை முறையையும் அதிகப்படியாக சேர்த்துக் கொண்டால், genuine நண்பர்களை நாங்கள் சேர்த்துவிட வசதியாக இருக்கும்..
+/- குத்துவதை தமிழ்மணப் பயனர்களுக்கு மட்டுமே உரிய வழியாக்குவது பற்றி சர்வேசன் சொல்லும் யோசனையும் வரவேற்கத் தக்கதே. குத்துவது இன்னார் என்று யாரோ பார்க்கிறார்கள் என்கையில் அதைத் தவறாக பயன்படுத்துவதும் குறையும்.
By பொன்ஸ் on Apr 23, 2007
கருவிப் பட்டையில் +/- குத்துவது என்பது எந்த அடிப்படையில் என்பதை பதிவர்கள் இன்னும் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.உடன்பாடற்ற கருத்துக்கள் இருக்கும் போது - குத்தலாம்.ஆனால் சாதாரண நகைச்சுவைக்குக்கூட - விழுகிறது. யாரையும் புண்படுத்தாத எந்த ஒரு பதிவுக்கும் - குத்துவது விளையாட்டாகவோ வேண்டுமென்றோ செயல்படுத்தும் பட்சத்தில் 75% - விழுந்தால் பின்னூட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்ற வாதம் எப்படிச் சரியாகும்.பொன்ஸ் சொல்வதுபோல் பயனர்களுக்கு மட்டுமானதாக்குவதோடு இன்னார் எனத் தெரிய வகை செய்தலோ அல்லது சிறப்பான மாற்று வழியோ மட்டுமே சரியான தீர்வாகும்.
By கண்மணி on Apr 24, 2007
தமிழ்மண முகப்புல, என்னோட படம் தெரியலியே? ஏன்?
கொஞ்சம் பாத்து சொல்லுங்கோ.
By Surveysan on Apr 28, 2007