Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /homepages/21/d718806694/htdocs/tm_blog/wp-includes/pomo/plural-forms.php on line 210
வாரப்பதிவுகள் தொடுக்கும் பூங்கா வலைஞ்சிகை : தமிழ்மணம்

வாரப்பதிவுகள் தொடுக்கும் பூங்கா வலைஞ்சிகை

April 21, 2007 · Posted in சிறப்பிடுகைகள் 

”தமிழ்மணம் திரட்டும் வலைப்பதிவுகளிலிருந்து, வாரந்தோறும் சிறந்தவையென அடையாளம் காணப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு, “பூங்கா எனும் வாராந்திர வலையிதழாக வெளிவரத் தமிழ்மணம் விரும்புகிறது” என்ற அறிவிப்போடு பூங்காவின் வெளியீடு, உள்ளடக்கம், அதன் நோக்கம் குறித்து விரிவான பதிவு செப்டம்பர் 7, 2006 அன்று வெளியானது. “தன்னிற் திரட்டப்படும் வலைப்பதிவுகளில் இருந்து புதிய பார்வைகளையும் பரந்துபட்ட சிந்தனைகளையும் உயிர்ப்பான மொழியிலே வெளிப்படுத்தும் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து வாரந்தோறும் ‘பூங்கா’ வலையிதழூடாக தொகுப்பது பயனானதெனத் தமிழ்மணம் நோக்குகிறது” என்பது பூங்காவின் செயல்திட்டமென்றால், அதன் நோக்கமாகக் கொள்ளப்பட்டது, “தமிழ்ப்பதிவர்களின் பல்வேறு துறைநிபுணத்துவத்தை அடையாளங் கண்டு பதிவு செய்யத்தூண்டவும் மொழிவெளிப்பாட்டின் பல்வேறு கலைப்பரிமாணங்களைப் பரிசோதனை செய்ய ஊக்குவிக்கவும் சமூக அக்கறையுள்ளவர்களை ஒன்றிணைக்கவும் வேண்டிய தொடர்ச்சியான தேவையை (பூங்கா மூலம்) நிறைவேற்றலாம்” என்பதுதான்.

டிஎம்ஐ நிறுவனத்துக்காக, அதன் இதழ் குழுவின்கீழே ஆசிரியர்குழுமத்தினாலே தொகுக்கப்படும் பூங்கா தானியங்கித்திரட்டியான தமிழ்மணத்தினைத் தனக்கான படைப்புகளை அனுமதி பெற்றுத் தேர்ந்தெடுக்க உதவும் ஒரு தொழில்நுட்பவசதியாக மட்டுமே கொள்கின்றது. அதற்குமேலே, பூங்காவின் தேர்வுகள் எதுவுமே தானியங்கியான தமிழ்மணத்தின் நோக்குகளைத் தெறிப்பனவல்ல.

பூங்காவில் என்ன இருக்கிறது?

பூங்காவுக்காக தேர்ந்தெடுக்கப்படுகிற பதிவுகளில் அரசியற்சார்பு உள்ளதா என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். அரசியல் என்பதை கட்சி அரசியலாக மட்டும் புரிந்துகொள்ளாமல் மக்களின் வாழ்க்கை, அவர்கள் வாழ்கிற சமூகம், கல்வி, பிழைப்பாதாரங்கள் எல்லாமே நடக்கிற அரசியலின் பல்வேறு கூறுகளே என்று பார்க்குமிடத்து அவ்வரசியலையே பூங்கா முன்னெடுப்பதை உணரலாம். அதே போல பூங்கா இந்திய தேசியம் முதற்கொண்டு எந்த தேசியத்துக்கும் எதிரானதல்ல. மாறாக நேற்று இருந்த, இன்று இருக்கிற, நாளை வரப்போகிற எல்லா தேசியங்களுக்கும் மேலாக மனிதன் முக்கியமானவன் என்ற கண்ணோட்டம் கொண்டது என்பதையும் புரிந்துகொள்ளலாம். எப்படைப்பினையும் அதன் கருத்துமூலம் பார்க்காமல், சொல்லும் தரத்தின் அடிப்படையிலேயும் அனுமதி தரப்பட்டதா, பதிவுகள் தவிர்த்து வேறு இதழ்களிலே வெளியாகாத படைப்பா என்பவற்றினை மட்டுமே கண்டு வெளியிடுகின்றோம். இவற்றைத் தவிர அறிவியல், மற்றும் துறை சார்ந்த நல்ல பதிவுகளை வெளியிட பூங்கா பெரிதும் விரும்புகிறது. வெளியிடுகிறது. ஆன்மீகம் என்பதை பூங்கா தனி நபர் சார்ந்த ஒன்றாகப் பார்ப்பதால் பூங்கா நிறுவனப்படுத்தப்பட்ட மதம், தொடர்பான அவற்றிடையேயான தொடரும் வாதங்கள் தொடர்பான பதிவுகளை வெளியிடுவதில்லை; ஆனால் நாட்டார் வழக்குகள், கொண்டாட்டங்கள், விழாக்கள் என்ற அளவில் அவை குறித்த பதிவுகளை வெளியிடுகிறது. மேலும், இவ்வாண்டிலிருந்து பதிவுகள் சாராத வெளியார் படைப்புகளையும் நேர்காணல்களையும் தொடர்ச்சியாக பூங்கா வெளியிடத் தொடங்கியிருக்கின்றது. இச்செயற்பாடுகள் மேலும் விரிக்கப்படுகின்றன.

பூங்காவிலே பல்வேறு துறைகளும் படைப்பாளிகளும் தோன்றவேண்டுமென்பதற்காகவே, தரமானவையாகக் காணப்படுமிடத்து, தமிழ்மணத்தின் முன்னையவார நட்சத்திரப்பதிவரின் தேர்வுகள் இரண்டு, அவ்வார நட்சத்திரப்பதிவுகளிலிருந்து தேர்வுகள் இரண்டு, தமிழ்மணத்திலே இவ்வாரம் புதிதாகச் சேர்ந்துகொண்ட பதிவுகளிலே, சிறப்பானதென ஆசிரியர்குழுவினாலே தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளிலேயிருந்து இரண்டு என பரந்துபட்ட தேர்வுகள் உள்வாங்கிக்கொள்ளப்படுகின்றன.

பூங்காவிலே வெளியாகும் படைப்புகளுக்கும் கருத்துகளுக்கும் அவற்றின் ஆசிரியர்களே உரிமையுடையவர்களாவார்கள்.

பூங்கா – எவ்வாறு உருவாகிறது?

இதுவரை முப்பத்தொரு பூங்கா இதழ்கள் வெளியாகியிருக்கின்றன. பூங்காவுக்கென ஒவ்வொருவாரமும் தமிழ் வலைப்பதிவுகளில் அனுமதி வழங்கப்பட்டவைகளில் இருந்து குறிப்பிடத்தக்கவை என்று கருதப்படுகிற பதிவுகள், மாற்றுக்கருத்துக்களைச் சொல்லுகிற முயற்சிகள், சமூக அக்கறை உள்ள பதிவுகள், அறிவியல், மொழி இவற்றைப் பற்றிய பதிவுகள், கண்டறியப்பட்டு வரும்வார இதழுக்காகத் தொகுக்கப்படுகின்றன. இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டவை போலவே விடுபட்டு போனவை நல்ல பதிவுகளும் உண்டு. தேர்வாளர்களின் எண்ணிக்கை, மனித முயற்சியில் இயல்பாகவே ஏற்படும் தவறுகள், அதிகபட்ச எண்ணிக்கையில் உள்ள பதிவுகள் போன்ற காரணங்களால் சில நல்ல பதிவுகள் தவறிப்போகும் சாத்தியங்கள் இருந்த போதுங்கூட இம்முயற்சி பல நல்ல பதிவுகளை வாரந்தோறும் வாசிக்க விரும்பும் ஒரு வாசகருக்கு பயனுடையதாகவே இருந்து வருகிறது என்று கருதுகிறோம். ஒரு நாளில் சராசரியாக 130 பதிவுகளைத் தமிழ்மணம் திரட்டுகிறது. அதில் நல்ல பதிவுகளைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒரு மிகவும் சிக்கலான, நேரத்தைக் கோருகிற வேலை. இதில் பதிவுகள் பல தேசங்கள், கண்டங்கள் என்று நாளின் எல்லா நேரங்களிலும் வெளியாவது வேறு தேர்ந்தெடுப்பதில் மேலதிகமான வேலைப் பளுவையும், தவறவிடுவதற்கான வாய்ப்பையும் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் கடந்தே பதிவுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படுகிற பதிவுகள், வெள்ளியன்று வலையேற்றப்பட்டவுடன், தன்னார்வலர்களாலே பெரும்பாலும் பிழை திருத்தப்பட்டு, அனுமதி வழங்கப்ப்ட்டிருக்கிறதா, வேறு இதழ்களில் வெளியாகி இருக்கிறதா என்பன சரிபார்க்கப்பட்டு, சுட்டிகள் கொடுக்கப்பட்டு, படங்கள் சரிபார்க்கப்பட்டு, வகை பிரிக்கப்பட்டு, அட்டை, தொகுப்பாளரின் மேசையிலிருந்து ஆகியன தயாரிக்கப்பட்டு, பதிப்புக்கு தயாராகின்றன. இவற்றுடன், அனுமதி பெறப்பட்ட நட்சத்திரப்பதிவுகள், நட்சத்திரத்தின் தேர்வுகள், புதியபதிவுகள், பதிவுகளிலே வெளியாகாத சிறப்புப்படைப்புகள், நேர்காணல்கள் என்பன அவற்றுக்கான சிறப்புத்தேவைகளோடு தயாரிக்கப்பட்டுச் சேர்க்கப்படுகின்றன. பின்னர், இவை வருகின்ற திங்களன்று பூங்காவாக மலருகின்றன.

பூங்காவுக்கான நல்ல படைப்புகளை ஆசிரியர்குழுவுக்குப் பரிந்துரைக்கும்படி முதலாவது பூங்கா இதழிலேயே பதிவர்களையும் கேட்டிருந்தோம். ஆனால், இதுவரை இதிலே நாம் பெருமளவிலே வெற்றிபெறவில்லையெனிலுங்கூட, நடசத்திரப்பதிவுகள், புதியபதிவுகள் போன்றவை ஓரளவுக்கு இதனைத் தெறிக்கச் செய்கின்றன. முன்னைய நட்சத்திரப்பதிவாளரின் சேவை முடியும் நேரத்திலே அவருக்கு அஞ்சல் அனுப்பி அவரது தேர்வுகளை அடுத்த வாரத்துக்காகக் கண்காணிக்கக் கேட்டுக்கொண்டு, அவர் அவ்வார இறுதியிலே தருமிடத்துச் சேர்த்துக்கொள்கிறோம். சீர்திருத்தப்படவேண்டிய படைப்புகள், அவற்றின் ஆசிரியர்களின் அனுமதியோடு சீர்திருத்தப்பட்டு இணைக்கப்படுகின்றன.

பூங்காவின் படைப்புகளுக்கான எதிர்வினை பூங்கா தொடர்பான அஞ்சல்கள், ezine@thamizmaNam.com (இதழ், படைப்புகள் தொடர்பான கருத்துகளைத் தெரிவிக்க), select@thamizmanam.com (படைப்புகளைப் பரிந்துரைக்க) ஆகியவற்றூடாகத் தரப்படலாம். அல்லது, பூங்கா தளத்தின் பின்னூட்ட வசதியூடாக, பூங்கா இதழுக்கான பதிவிலே குறித்த இதழின் கீழே பின்னூட்டப்படலாம் (http://blog.poongaa.com). இவை தவிர, தமிழ்மணத்தின் வேறெந்த முகவரிகளுக்கிடும் பதிவுகள் எம்மை வந்தடையக் காலம் செல்லும். அத்தோடு, கிடைக்கப்பெற்ற அஞ்சல்களுக்கும் பின்னூட்டங்களுக்குங்கூட ஒவ்வொரு பதிவர்களுக்கும் உடனடியாகப் பதில் தரமுடியாத நிலை எமக்குள்ளதைப் பெரும்பான்மையான பதிவர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்கள். இதழ் தொடர்பாக, எமக்குக் கிட்டிய பின்னூட்டங்கள், அஞ்சல்கள் தொடரும் வாரத்தின் பூங்காவிலே பதிவர் எதிர்வினையின்கீழே பதிப்புறுவதோடு, பதில் தரவும் படுகின்றது. எமது மனிதவலு, நேரம் காரணமாக, இவ்வாறான எதிர்வினைகளுக்கு அப்பாலான எவ்விதமான கருத்துகளுக்கும் நாம் பதில் அளிக்கமுடியாத நிலையிலேயிருக்கின்றோம்.

பூங்கா என்ன செய்ய விரும்புகின்றது?

பூங்கா பதிவர்களைக் கடந்து சமீபத்தில் வாசகர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பக்கோரியது. வாசகர்கள் தங்களது உன்னதப் படைப்புகளைப் பூங்காவுக்கு அனுப்பலாம். அதே போல தங்களைக் கவர்ந்த நல்ல பதிவுகளின் சுட்டிகளை வாசகர்கள் பூங்காவுக்கு அனுப்பலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, பூங்காவுக்கு தங்கள் விருப்பங்கள், கருத்துக்கள், பாராட்டுகளை (தங்கள் பதிவுகளில் மட்டும் எழுதாமல்) எழுதலாம். அவ்வவ்வாரத்து பூங்காவின் தேவைக்கேற்ப, தேர்வு செய்வதிலே ஆசிரியர்குழுவின் முடிவே இறுதியாது.
பூங்காவின் தேர்வுகளையும் பார்வையினையும் விரித்துத்தருவதற்காக, இன்னமும் சில எண்ணங்கள் தொடர்ச்சியாக ஆசிரியர்குழுவிலே கருத்தாடப்பட்டிருக்கின்றன. அவற்றிலே சிலவற்றினை இயன்றவரை விரைவிலே நடைமுறைப்படுத்துவோம்.

1. வாரத்துக்கொரு விருந்துப்பதிவாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் பார்வையிலே கடந்த வாரத்துப்படைப்புகளை அலசி/தொகுத்து ஒரு பத்தி.

2. பதிவர்களிலிருந்து பூங்காவுக்கான தேர்வுக்குழுவொன்றை அமைத்து வாராவாரம் பதிவுகளைப் பரிந்துரைக்கக்கேட்டல். இக்குழுவிலே உத்தேசமாக, மாறுபட்ட பார்வைகளுள்ள இருபது பதிவர்களை உள்ளடக்க விரும்புகின்றோம்.

3. ஏற்கனவே பதிவர்கள் பூங்காவுக்கான செய்தியாளர்களாக நட்புணர்விலே உதவி செய்திருக்கின்றார்கள். இதனை இன்னமும் பரந்துபட்ட அளவிலே செய்யவிரும்புகின்றோம்.

பூங்காவிலே வெளியான படைப்புகளை அவற்றின் ஆசிரியர்களின் உரிமை பெற்று, ஆண்டிறுதிகளிலே தொகுத்து ஆண்டுமலராக, பிரிவுகளுக்கேற்ப வெளியிடும் எண்ணமும் பூங்கா இதழின் ஆரம்பத்திலே அறிவித்ததுபோல இருக்கின்றது. மனிதவலு, நேரம் ஆகியவற்றினைப் பொறுத்து இவற்றினை எதிர்காலத்திலே நடைமுறைப்படுத்த எண்ணுகிறோம்.

பூங்காவுக்கு வாசகர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள்?

பதிவர்களினைப் பார்வையாளர், படைப்பாளிகளுக்கு மேலாக பங்குதாரராகவும் எதிர்பார்க்கின்றோம். இதனால், பூங்காவின் முன்னடத்தலுக்கான உங்கள் கருத்துகளை வெளிப்படையாக முன்வையுங்கள்; உள்ளடக்கம், அமைப்பு குறித்த கருத்துகளைத் தாருங்கள். படைப்புகளைப் பரிந்துரையுங்கள்; நேர்காணல்கள், உங்கள் பகுதிகளின் முக்கிய சமூக, கலை நிகழ்வுகளின் ஒலிய,விழியப்பதிவுகளை அனுப்புங்கள்.

நன்றி

இறுதியாக, கடந்த காலத்தில் பூங்காவினைக் கட்டியெழுப்ப மிகவும் உறுதுணையாக நின்ற கற்பகம் கல்யாண், மற்றும் மதி கந்தசாமி, பதிவுகள் சாராத படைப்புகளையும் நேர்முகங்களையும் பெற்றுத்தந்த நண்பர்கள், மேலாக தம் படைப்புகளை, பூங்காவின் தேர்வுக்குத் தர அனுமதி தந்த பதிவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை இச்சந்தர்ப்பத்திலே தெரிவித்துக்கொள்வதோடு, பதிவர்களைப் பூங்காவின் பங்குதாரர்களாக, படைப்புகளைத் தெரிவுசெய்வதிலே ஈடுபட மீண்டும் அழைக்கின்றது.

ஆசிரியர்குழு
பூங்கா

Comments

6 Responses to “வாரப்பதிவுகள் தொடுக்கும் பூங்கா வலைஞ்சிகை”

 1. ல ல தாஸு on April 21st, 2007 1:22 am

  //நேற்று இருந்த, இன்று இருக்கிற, நாளை வரப்போகிற எல்லா தேசியங்களுக்கும்//

  எனக்கு இந்த வாக்கியம் பிடித்திருக்கின்றது

 2. ரவிசங்கர் on April 21st, 2007 4:45 pm

  அது என்ன வலைஞ்சிகை? வலையிதழ் என்று சொல்வதே அழகாகவும் தெளிவாகவும் இருக்கிறதே? தமிழ்நாட்டில் சஞ்சிகை என்பது வழக்கிழந்து வரும் சொல். தமிழென்றும் உறுதி இல்லை. அதை புதுப்பிக்கத் தேவை இல்லையே?

 3. திரு on April 21st, 2007 6:52 pm

  //அரசியல் என்பதை கட்சி அரசியலாக மட்டும் புரிந்துகொள்ளாமல் மக்களின் வாழ்க்கை, அவர்கள் வாழ்கிற சமூகம், கல்வி, பிழைப்பாதாரங்கள் எல்லாமே நடக்கிற அரசியலின் பல்வேறு கூறுகளே என்று பார்க்குமிடத்து அவ்வரசியலையே பூங்கா முன்னெடுப்பதை உணரலாம். அதே போல பூங்கா இந்திய தேசியம் முதற்கொண்டு எந்த தேசியத்துக்கும் எதிரானதல்ல. மாறாக நேற்று இருந்த, இன்று இருக்கிற, நாளை வரப்போகிற எல்லா தேசியங்களுக்கும் மேலாக மனிதன் முக்கியமானவன் என்ற கண்ணோட்டம் கொண்டது என்பதையும் புரிந்துகொள்ளலாம்.//

  நல்ல புரிதல்.

  பூங்கா முன்வைத்திருக்கும் திட்டங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

 4. இரவிசங்கர்:
  உங்கள் கருத்து பொருத்தமுடையதே. நன்றி.
  வலைப்பதிவிதழ் என்றே பூங்கா அட்டையிலே குறித்தும் வருகின்றோம்.

 5. ஜெஸிலா on April 22nd, 2007 5:55 am

  //எல்லாவற்றுக்கும் மேலாக, பூங்காவுக்கு தங்கள் விருப்பங்கள், கருத்துக்கள், பாராட்டுகளை (தங்கள் பதிவுகளில் மட்டும் எழுதாமல்) எழுதலாம். // அப்பப்ப இப்படி குட்டு வச்சிக்கிட்டே இருக்கணும். 😉

  செயல் திட்டங்கள் வெற்றிப் பெற வாழ்த்துகள்.

 6. ஆழியூரான் on April 22nd, 2007 10:11 am

  //எல்லாவற்றுக்கும் மேலாக, பூங்காவுக்கு தங்கள் விருப்பங்கள், கருத்துக்கள், பாராட்டுகளை (தங்கள் பதிவுகளில் மட்டும் எழுதாமல்) எழுதலாம். //

  இந்த வார்த்தைகள் இல்லையென்றால், ‘நல்லா பண்றாங்கப்பா’ என மனதிற்குள் நினைத்தபடியே கடந்து சென்றிருப்பேன்.

  //நேர்காணல்கள், உங்கள் பகுதிகளின் முக்கிய சமூக, கலை நிகழ்வுகளின் ஒலிய,விழியப்பதிவுகளை அனுப்புங்கள்.//

  பதிவர்களின் வலைப்பக்கத்தில் எழுதியபிறகு, வழமைபோல” பூங்காவில் வெளியிட சம்மதம்’ பொத்தானை அழுத்தினால் போதுமானதா…? பூங்காவுக்கென்றே பிரத்தியேகமாக அனுப்பலாமா..? ‘லாம்’ என்றால், அதைப்பற்றி உங்களிடம் முன்கூட்டியே சொல்லி, அனுமதி வாங்கவதுதானே முறை….?

Leave a Reply