தமிழ்மணம் மகுடம், வாசகர் பரிந்துரை மாற்றங்கள்

June 5, 2009 – 9:07 pm by தமிழ்மணம்

தமிழ்மணம் மகுடத்திற்கும், வாசகர் பரிந்துரைக்கும் ஒரு இடுகையைத் தேர்ந்தெடுக்கப்படும் விதத்தில் சில மாற்றங்களை தமிழ்மணம் கொண்டு வந்துள்ளது. தற்பொழுது அதிக வாக்குகளைப் பெறும் இடுகைகளே தமிழ்மணம் மகுடத்தில் இடம்பெறுகிறது. இந்த முறை தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது.

தற்போதைய புதிய Algorithm ஒரு இடுகைக்கு எவ்வாறு ஓட்டளிக்கப்படுகிறது (Weightage of Votes, Negative votes, frequency of same openid voting for a blog) என்பதையும் கருத்தில் கொண்டு தமிழ்மணம் மகுடத்திற்கு இடுகையை தேர்ந்தெடுக்கிறது. இவை தவிர முகப்பில் இடம் பெறும் இடுகைகளும் அவை பெறும் வாக்குகளை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் அவை பெறும் வாக்குகள் எவ்வாறு அளிக்கப்படுகிறது என்பதையும் கருத்தில் கொண்டே இயங்கும். இந்தப் புதிய நிரலி(Program) தற்பொழுது சோதனையில் உள்ளது.

இந்த Algorithm தமிழ்மணத்தில் வாசகர்கள் வழங்கும் வாக்குகளை அலசி தேவைக்கேற்ப மாற்றப்படும்.

தமிழ்மணம் வாசகர் பரிந்துரை பக்கம் எந்த மாற்றமும் இல்லாமல் செயல்படுகிறது.
http://tamilmanam.net/readers/choice

நிர்வாகம்,
தமிழ்மணம்

தமிழ்மணம் பரிந்துரை : வாக்களிப்பு முறையில் மாற்றம்

May 31, 2009 – 6:41 pm by தமிழ்மணம்

தமிழ்மணத்தில் இருந்த வாக்களிப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இனி வாக்களிப்பதற்கு OpenIDஐ பயன்படுத்த வேண்டும். OpenIDஐ பயன்படுத்தும் அதே நேரத்தில் முன்பு போலவே சுலபமாக வாக்களிக்கும் வகையிலும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதன் முறையாக ஒரு இடுகைக்கு வாக்களிக்கும் பொழுது மட்டுமே தங்களது OpenIDஐ வாசகர்கள்/பதிவர்கள் தமிழ்மணத்திற்கு அளிக்க வேண்டும். அடுத்த சில வாரங்களுக்கு எத்தனை பதிவுகளுக்கு ஒட்டளித்தாலும் நீங்கள் உங்கள் openidஐ அளிக்க வேண்டிய தேவை இருக்காது. இந்த புதிய தொழில்நுட்பம் மூலமாக இடுகைகளுக்கு விழும் வாக்குகள் நேர்மையானதாகவும், அதன் தரத்தைச் சார்ந்ததாகவும் மட்டுமே இருக்கும் என நம்புகிறோம்.

எவ்வாறு வாக்களிப்பது ?

தமிழ்மணத்தில் வாக்களிப்பதற்கு உங்கள் OpenIDஐ பயன்படுத்த வேண்டும்

OpenID என்றால் என்ன ?

உங்கள் ப்ளாகர், வேர்ட்பிரஸ், யாகூ முகவரிகளே OpenID முகவரி ஆகும். இது குறித்த மேலதிக விபரங்கள் OpenID தளத்தில் உள்ளது .

எப்படி வாக்களிப்பது ?

வாக்களிக்க நுழையும் பொழுது OpenId பெட்டியில் உங்களது ப்ளாகர்/வேர்ட்பிரஸ் முகவரியை இவ்வாறு அளிக்க வேண்டும் - username.blogspot.com அல்லது username.wordpress.com. யாகூ முகவரியை username@yahoo.com என அளிக்க வேண்டும்

அவ்வாறு அளித்தவுடன் ப்ளாகர்/வேர்ட்பிரஸ்/யாகூ தளத்திற்கு நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். அங்கு உங்கள் பயனர்பெயரையும், கடவுச்சொல்லையும் அளிக்க வேண்டும். ப்ளாகர்/வேர்ட்பிரஸ்/யாகூ அதனை சோதித்து அது ஒரு சரியான முகவரியே என்ற தகவலை மட்டும் தமிழ்மணத்திற்கு வழங்கும்

ஒவ்வொரு முறை வாக்களிக்கும் பொழுதும் என்னுடைய OpenID அளிக்க வேண்டுமா ?

இல்லை. முதல் முறை வாக்களிக்கும் பொழுது மட்டுமே OpenIDஐ அளிக்க வேண்டும். தமிழ்மணம் அதனை நினைவில் வைத்துக் கொள்ளும். அடுத்த சில வாரங்களுக்கு எத்தனை பதிவுகளுக்கு ஒட்டளித்தாலும் நீங்கள் உங்கள் openidஐ அளிக்க வேண்டிய தேவை இருக்காது.

என்னுடைய யாகூ, ப்ளாகர், வேர்ட்பிரஸ் பயனர் பெயர், கடவுச்சொல் தமிழ்மணத்திற்கு தெரியுமா ? தமிழ்மணம் அதனை சேமிக்கிறதா ?

உங்கள் பயனர் பெயரோ, கடவுச்சொல்லோ தமிழ்மணத்திற்கு தெரியாது. உங்களது OpenID முகவரி மட்டுமே தமிழ்மணத்திற்கு தெரியும். தமிழ்மணம் உங்களது OpenID தவிர வேறு எந்த விபரங்களையும் கோருவதில்லை. சேமிப்பதும் இல்லை.

இந்த தொழில்நுட்பம் தற்பொழுது சோதனை வடிவத்தில் உள்ளது. சில பிரச்சனைகளை (Bad signature) பதிவர்கள் தமிழ்மணத்திற்கு தெரிவித்திருந்தார்கள். அது சரி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நுட்பத்தில் வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் தமிழ்மணம் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த கேட்டுக் கொள்கிறோம். பதிவர்கள் மற்றும் வாசகர்களின் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம்

Vote

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

தமிழ் சசி,
தமிழ்மணம்

தமிழ்மணத்தில் இருந்து சில பதிவுகள் நீக்கம்

May 29, 2009 – 12:02 am by செல்வராஜ்

தமிழ்மணத்தில் சேர்த்திருக்கும் சில பதிவுகளைத் திரட்டுவதில் இருந்து விலக்கி வருகிறோம். பிற செய்தித்தளங்கள், இணையதளங்களில் இருந்து பெரும்பாலும் வெட்டி ஒட்டிய இடுகைகளைக் கொண்டவற்றையும், பிறரின் காப்புரிமையை மதிக்காதவற்றையும், வெறும் அவதூறு மற்றும் வதந்தி பரப்பும் பதிவுகளையும், தமிழ்மணத்தின் சூழலை மாசுபடுத்துபவையையும் காலப்போக்கில் இனியும் விலக்கி விட முடிவு செய்திருக்கிறோம். அதோடு தமிழ்மணத்தில் இணைந்த தளங்கள் இப்போது தொழிற்படாமல் இருப்பின் (தளமே இல்லாதிருத்தல் போன்றன) அவற்றையும் நீக்க எண்ணியுள்ளோம். இது வாசகர்கள் பதிவர்கள் அனைவருக்கும் நன்மையையே தரும் என்பதோடு, தமிழ்மணத்தின் வழங்கிச் சுமையையும் குறைத்து நுட்ப அளவிலும் பயனுள்ளதாய் அமையும் என நம்புகிறோம்.

இம்முடிவைச் செயல்படுத்துகையில் தவறுதலாக ஏதேனும் பதிவு நீக்கப்பட்டால், மறுபரிசீலனை செய்து ஏற்றுக் கொள்ளவோ தொடர்ந்தும் விலக்கவோ உரிமையைத் தமிழ்மணம் தக்க வைத்துக் கொள்கிறது. இந்தச் செயற்பாட்டின் காரணமாகக் காலதாமதம் ஏற்பட நேரிட்டால் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறோம். முகப்புப் பக்கத்திலும் சில மாற்றங்களைச் சோதித்துப் பார்க்க எண்ணியிருக்கிறோம்.

பதிவர்கள் மற்றும் வாசகர்களுக்கு நல்ல வாசிப்பனுபவம் ஏற்படவும், தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளச் சுதந்திரமான ஒரு தளத்தை அமைத்துப் பேணுவதிலும் தொடர்ந்து தமிழ்மணம் ஈடுபடும்.

புரிந்துணர்வுடன் தொடரும் உங்கள் அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றி.

தமிழ்மணம் ஈழம்

May 18, 2009 – 1:25 am by தமிழ்மணம்

இறுதிப் போர் என சிறீலங்கா அரசால் அறிவிக்கப்பட்டு நடந்த ஈழப் போரில் பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். விமானத்தாக்குதல், ஆர்ட்டிலரி, செல் என பலவகையான கனரக ஆயுதங்களுக்கு பலியான தமிழர்களுக்கு தமிழ்மணம் தனது அஞ்சலியை செலுத்துகிறது. இந்த ’தமி்ழ்மணம் ஈழம்’ தளம் போரில் பலியான மக்களுக்கும், போராளி்களுக்கும் சமர்பிக்கப்படுகிறது
eelam

தொடரப் போகும் ஈழத்தின் அரசியல் போராட்டத்தை இந்த தளம் பதிவும் செய்யும்
eelam

தேர்தல் திரட்டி

March 29, 2009 – 7:23 pm by தமிழ்மணம்

தேர்தல் சார்ந்து பல கட்டுரைகளும், நல்ல தரமான அலசல்களும்
வலைப்பதிவுகளில் தொடர்ந்து எழுதப்படுகின்றன. இதனை ஒரே இடத்தில்
வாசிக்கும் வகையில் தமிழ்மணம் ஒரு தனி திரட்டியை உருவாக்கி இருக்கிறது.

http://therthal.tamilmanam.net

தேர்தல் என்ற குறிச்சொல்லுடன் எழுதப்படும் இடுகைகள் இந்த பக்கத்தில்
திரட்டப்படும்.

நன்றி…

நிர்வாகம்,
தமிழ்மணம்

தமிழ்மணம் சினிமா

March 22, 2009 – 1:17 pm by தமிழ்மணம்

சினிமா தமிழர்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து இருக்கிறது. இந்தியாவிலே
தமிழகம் தான் தொடர்ச்சியாகத் தனது தலைவர்களைத் திரையரங்குகளிலே தேடிக்
கொண்டிருக்கிறது.

தமிழ் வலைப்பதிவுகளில் சினிமா குறித்து பல நல்ல விமர்சனங்களும், ஆய்வுகளும்
வெளி வந்து கொண்டிருக்கின்றன. வெகுஜன ஊடகங்களில் கூட வெளிவராத பல நல்ல
விமர்சனங்களையும், திறனாய்வுகளையும் வலைப்பதிவுகளில் தான் காண முடிகிறது.
இத்தகைய நல்ல விமர்சனங்களைத் தனியாகத் தொகுப்பதன் மூலம் பலரை இந்த படைப்புகள் இலகுவாகச் சென்றடையும் எனத் தமிழ்மணம் நம்புகிறது.

எனவே இதற்கென ஒரு தனிப்பகுதியாக “தமிழ்மணம் சினிமா” என்ற பகுதியை
தமிழ்மணத்தில் உருவாக்கியிருக்கிறோம் -
http://cinema.tamilmanam.net

Tamilmanam Cinema

பதிவர்கள் தங்கள் இடுகைகளுக்கு வழங்கும் குறிச்சொற்களை கொண்டே தமிழ்மணம் இதனை
தனியாக திரட்டுகிறது. இடுகைகளை எழுதி தமிழ்மணத்திற்குச் சமர்ப்பிக்கும் பொழுது
சரியான குறிச்சொல்லுடன் எழுதினால் அந்த இடுகைகள் தமிழ்மணம்
சினிமா
பகுதியில் வெளியாகும்

இந்தப் புதிய பகுதி தமிழ்மணம் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் ஓர் இனிய வலைப்பதிவு அனுபவத்தைக் கொடுக்கும் என நம்புகிறோம்

குறிச்சொற்கள்

சினிமா, Cinema போன்ற குறிச்சொற்கள் பொதுவான சினிமா பகுதிகளில் வெளியாகும்

திரைவிமர்சனம் போன்ற குறிச்சொற்கள் திரைவிமர்சனம் பகுதியில் வெளியாகும்

சினிமாவை அடிப்படையாக கொண்ட தளங்களில் இருந்து திரட்டப்படும் இடுகைகள் சிறப்பு இடுகைகள் பகுதியில் வெளியாகும்

இசை மற்றும் அது சார்ந்த குறிச்சொல்லுடன் எழுதப்படும் இடுகைகள் இசை என்ற பகுதியில் வெளியாகும்

சின்னத்திரை, தொலைக்காட்சி போன்ற குறிச்சொல்லுடன் எழுதப்படும் இடுகைகள் சின்னத்திரை பகுதியில் வெளியாகும்

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

நிர்வாகம்,
தமிழ்மணம்

தமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை

March 5, 2009 – 10:36 pm by தமிழ்மணம்

தமிழ்மணத்தின் முகப்பு பக்கத்தில் தெரியும் புகைப்படங்களை Gravatar மூலமாகவும், கருவிப்பட்டை மூலமாகவும் திரட்டும் வசதியை தமிழ்மணம் வழங்கி வருவதை பதிவர்கள் அறிவார்கள். கருவிப்பட்டை மூலமாக திரட்டுவது தமிழ்மணம் கருவிப்பட்டையின் தறவிறக்கத்தை தாமதப்படுத்துவதால், இனி Gravatar மூலம் மட்டுமே புகைப்படங்கள் திரட்டப்படும். கருவிப்பட்டை மூலமாக திரட்டும் வசதி நீக்கப்படுகிறது.

பதிவர்கள் செய்ய வேண்டியது

பதிவர்கள் தமிழ்மணத்தில் கொடுத்த அதே மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு http://en.gravatar.com/ என்ற தளத்தில் தங்கள் புகைப்படங்களை இணைத்துக் கொள்ளலாம். பதிவுகளை தமிழ்மணத்திற்கு அளிக்கும் பொழுது அந்தப் புகைப்படங்களை தமிழ்மணம் திரட்டிக் கொள்ளும்.

பதிவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது - தமிழ்மணம் தளத்தில் பதிவு செய்யும் பொழுது கொடுத்த மின்னஞ்சல் முகவரியும், Gravatar தளத்தில் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரியும் ஒரே முகவரியாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே உங்கள் புகைப்படம் திரட்டப்படும்

Gravatar என்றால் என்ன ?

நாம் ஒவ்வொரு தளங்களிலும் நம் Profile புகைப்படங்களை நுழைப்பது வழக்கம். உதாரணமாக வேர்ட்பிரஸ் தளத்தில் ஒரு படம், ப்ளாகர் தளத்தில் ஒரு படம், தமிழ்மணத்திற்கு ஒரு படம் என ஒரே படத்தை பல தளங்களில் தரவேற்ற வேண்டும். இதற்கு மாற்றாக உள்ள தொழில்நுட்பம் தான் Gravatar - globally recognized avatar. ஒரே இடத்தில் புகைப்படத்தை வைத்து விட்டு பல்வேறு தளங்களிலும் அந்த புகைப்படங்களை பயன்படுத்தும் வசதி தான் Gravatar. நம்முடைய மின்னஞ்சலுடன் ஒரு புகைப்படத்தை Gravatar தளத்தில் நுழைத்து விட்டால், அந்த மின்னஞ்சலை கொண்டு அனைத்து தளங்களிலும் அந்த புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நிர்வாகம்,
தமிழ்மணம்

செய்திப் பதிவுகள்

March 4, 2009 – 2:08 am by தமிழ்மணம்

வலைப்பதிவுகளின் பெரிய வலிமை யாதெனில், அது சுயமான எழுத்து வெளிப்பாட்டிற்கு உதவுவது ஆகும். ஆரோக்கியமான சமூக மாற்றங்களுக்கு வழி வகுக்கும் வகையில் தமது சொந்த அனுபவங்களையும், கருத்துக்களையும் பகிர்வது வலைப்பதிவுகளின் நோக்கமாக இருப்பது சிறந்தது.

இதனை ஊக்குவிக்கும் பொருட்டு, வேறு இணைய/அச்சுப் பக்கங்களிலிருந்து வெட்டி ஒட்டி வெளிவரும் பதிவுகளைத் தமிழ்மணம் செய்திகள் பிரிவின் கீழ் திரட்டி வருகிறது. பிற தளங்களில் இருந்து ஒட்டி வெட்டப்படும் செய்திகளை மட்டுமே கொண்ட சில பதிவுகளை செய்திகள் பிரிவில் சேர்த்திருக்கிறோம் என்பதை அறியத்தருகிறோம்.

இப் பிரிவின் கீழ் வரத் தகுந்த பதிவுகள் ஏதேனும் விடுபட்டிருந்தால், அப்பதிவுகளை அறியத் தருமாறு பதிவர்களை வேண்டுகிறோம். செய்திகளை மட்டும் தேடி வாசிப்பவர்களுக்கும் இந்த ஏற்பாடு உதவிகரமாக இருக்கும்
என நம்புகிறோம்.

இவைத்தவிர தமிழ்மணம் திரட்டியில் இணைக்கப்பட்டு நீண்டகாலமாக புதுப்பிக்கப்படாத பதிவுகளையும், பழுதான பதிவு ஓடைகளையும் தமிழ்மணம் திரட்டியின் பராமரிப்பிற்காக நீக்க முடிவு செய்துள்ளோம் என்பதையும் பதிவர்களுக்கு அறியத்தருகிறோம்

இது குறித்த தனிப்பட்ட கேள்விகளுக்கு பதிவர்கள் தமிழ்மணத்தை தொடர்பு கொள்ளலாம்.

நிர்வாகம்,
தமிழ்மணம்

முதற்கட்ட மற்றும் கடைசிக்கட்ட முடிவுகள் - தமிழ்மணம் விருதுகள் 2008

February 26, 2009 – 7:50 pm by தமிழ்மணம்

தமிழ்மணம் விருதுகள் 2008 நிகழ்வுகள் இரண்டு கட்டங்களில் நிகழ்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சில தாமதங்களுடன் தொடங்கப்பட்டாலும், பதிவர்களின் மிகச்சிறந்த பங்களிப்புடன் முதலாம் கட்ட வாக்கெடுப்பு நடைபெற்றது. அதற்குப்பின்னர் விரைந்து மாறிய தமிழ்ச் சூழலில் இந்நிகழ்வினை தொடர்ந்து கொண்டு செல்லும் சூழ்நிலையில் எவரும் இல்லை. இன்னமும் கேள்விக்குறியுடன் தொக்கி நிற்கும் நடப்புச் சூழலில், இவ்விருதுகள் நிகழ்வினை முற்றிலும் ஒத்தி வைப்பதே சரியான முடிவாயிருக்க முடியும். எனினும், முதற்கட்ட நிகழ்வுகள் ஏற்கனவே சிறப்புற முடிவுற்ற காரணத்தினால், முதற்கட்ட வாக்கெடுப்பை மட்டும் கணக்கில் கொண்டு ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பெற்ற இடுகைகள் வெற்றி பெற்றவையாக அறிவிக்கப்படுகின்றது. வெற்றி பெற்ற இடுகைத் தொடுப்புகளை விருதுகள் பதிவில் காணலாம்
மேலும் ஏற்கனவே அறிவித்திருந்ததைப் போல ஒவ்வொரு பிரிவிலும் முதல் பத்து இடங்களைப் பெற்ற இடுகைகள் தமிழ்மண முகப்பில் தனியானதொரு பக்கத்தில் முன்னிறுத்தப்படும். தற்சமயம் இச் சுட்டியில் இவ்விடுகைகளைப் பார்வையிடலாம். பல பிரிவுகளில், சமமான வாக்குகளின் காரணமாக பத்திற்கும் மேற்பட்ட இடுகைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. வெற்றி பெற்ற பதிவர்களுக்கு வாழ்த்துக்களையும் ஆவலுடன் பங்குபற்றிய ஏனைய பதிவர்களுக்கு எமது நன்றியையும் உரித்தாக்குகிறோம்.

இத்தருணத்தில் விருதுகள் நிகழ்வின் தொழில்நுட்ப சேவைகளை வடிவமைது வழங்கிய தமிழ்மணம் நிறுவனர் காசி ஆறுமுகம் அவர்களுக்கும், உறுதுணையாயிருந்த ஏனைய தொழில்நுட்பக் குழு நண்பர்களுக்கும், நிகழ்விற்கு உந்துதலாயிருந்து ஒத்துழைத்த அனைத்து தமிழ்மணம் குழு நண்பர்களுக்கும் எமது நன்றி.

தமிழ்மணம் விருதுகள் 2008
ஒருங்கமைப்புக் குழுவிற்காக
பாலு

குறிப்பு:
1. வெற்றி பெற்ற பதிவர்கள் தங்களது முகவரியை admin@thamizmanam.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
2. வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கங்கள் இவ்விணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தங்களது பதிவில் இட விரும்புபவர்கள் உபயோகித்துக் கொள்ளலாம்.

முத்துகுமாருக்கு அஞ்சலியும், வேண்டுகோளும்

January 30, 2009 – 12:19 am by தமிழ்மணம்

ஈழப்பிரச்சனையை முன்னிட்டு தீக்குளித்த தமிழகத்தைச் சேர்ந்த இளம்
பத்திரிக்கையாளர் சகோதரர் முத்துக்குமாருக்கு தமிழ்மணம் தன்னுடைய
அஞ்சலியை செலுத்துகிறது. இவ்வளவு கொடிய முறையில் தம் மகனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு தமிழ்மணம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது

பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஈழத்திலே உயிர் வாழ போராடிக் கொண்டிருக்கும்
தருணத்தில் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ளும் ஒரு போராட்டத்தை
முத்துக்குமார் மேற்கொண்டதை நாம் விரும்பவில்லை. இத்தகைய போராட்டங்கள்
தவிர்க்கப்படவேண்டும்.

அதே நேரத்தில் முத்துக்குமார் மரணம் அடைந்து விட்ட நிலையில் அவரது இறுதி
வேண்டுகோளை நிறைவேற்றுவது நமது கடமை ஆகும். அது தான் அந்த உயர்ந்த
இளைஞருக்கு நாம் செய்யும் சரியான அஞ்சலி.

அவரின் விருப்பப்படியே அவரின் இறுதி அறிக்கையை நகலெடுத்து பலருக்கும்
கொடுப்பது தான் நாம் அவருக்கு செய்யும் சரியான அஞ்சலியாக இருக்கும். இந்த
முயற்சியில் பதிவர்கள் பங்கெடுத்துக் கொள்ளுமாறு தமிழ்மணம் பதிவர்களிடம்
விண்ணப்பித்துக் கொள்கிறது.

நன்றி
தமிழ்மணம்